முல்லைப்பாட்டென்னும் நெஞ்சாற்றுப்படை

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசி¡¢யர், மா.மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை,
E.Mail. sethumalar68 yahoo.com
சங்கத்தமிழ் ஓர் இலக்கியப் பேழையாகும். இஃது மக்கள் படித்துப் பயன்பெறும் வற்றாத செல்வமாகவும் விளங்குகிறது. ‘‘இலக்கணச் செறிவும் இலக்கியத் தகுதியும் உடையவர்களாக விளங்கிய சங்ககாலப்புலவர் பெருமக்களால் பாடப்பெற்றவையாக இன்று நமக்குக் கிடைக்கும் பாடல்கள் மொத்தம் 2381’’ ஆகும்.
ஒரு காலக்கட்டத்தில் எஞ்சிய பாடல்களையெல்லாம் தொகுத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு தோன்றியிருக்கிறது. அதன் காரணமாகச் சங்க காலத்தைச் சார்ந்த அரசர் பெருமக்களும் ஆர்வலர்களும் சங்கப் பாடல்களைத் தேடித் தொகுத்து முறைப்படுத்தும் பணியைத் தொடங்கினர். இந்த தேடுதல் பணியின் விளைவாகக் கிடைத்த பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டன.
சங்க இலக்கிய நூல்களைப் பதினெண்மேல்க்கணக்கு என்றும், சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய நூல்களைப் பதினெண்கீழ்க்கணக்கு என்றும் பாகுபாடு செய்துள்ளனர். பிற்காலத்தில் தோன்றிய பன்னிருபாட்டியல் என்ற இலக்கண நூல் மேல்க்கணக்கு,என்பதற்கு.
‘‘ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா
ஐவகைப் பாவும்; பொருள் றெறிமரபில்
தொகுக்கப்படுவது மேல்க்கணக்காகும்’’
என்று விளக்கமளிக்கின்றது.
சங்க இலக்கியத்தில் கலித்தொகை, பரிபாடல் தவிர பெரும்பான்மையான பாடல்கள் ஆசிரியப்பாவால் அமைந்துள்ளன. இத்தகைய பாடல்களை மூன்றடி முதல் முப்பத்தொரு அடிவரையுள்ள பாடல்களைத் தொகையாகத் தொகுத்தனர்.
103 அடிகளுக்கு மேலுள்ள ஆசிரியப்பாவால் அமைந்த பாடல்கள் பத்தினைப் பத்துப்பாட்டு எனத் தொகுத்தனர். பாட்டும், தொகையும் என்பது பழங்கால உரையாசிரியர் வழக்கு. நச்சினாக்கினியர் உரைச் சிறப்புப்பாயிரத்தில்,
‘‘ஆன்றோர் புகழ்ந்த அறிவினில் தெரிந்து
சான்றோர் உரைத்த தன்தமிழ் தெரியல்
ஒருபது பாட்டும்’’
எனக் கூறப்பெறுவதும், பத்துப்பாட்டுக் கற்பனைகளும், கதைகளும் நிறைந்த காவியமன்று. கண்ணாற் கண்ட காட்சிகளை அப்படியே எழுதியிருக்கும் சொல் ஓவியமாகும். ஆசிரியர் சுந்தரம்பிள்ளை. பத்துப்பாட்டின் பெருமையை,
‘‘பத்துப்பாட்டாதி மனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்டு இசையும் இலக்கணமில் கற்பனையே’’ என்று மனோன்மணீயத்தில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டு நூல்களாகும். இதனை,
‘‘முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக்காஞ்சி – மருவினிய
கோலநெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து’’
என்ற பழஞ்செய்யுள் தெளிவுறுத்துகிறது.
இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என்ற ஐந்தும் ஆற்றுப்டை என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தன. இவ்வைந்தும், மதுரைக்காஞ்சியும் புறப்பொருள் பற்றிக் கூறுவன. முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்ற மூன்றும் அகப்பொருள் பற்றியன. நெடுநல்வாடை, அகமும், புறமும் பற்றியது ஆகும். பத்துப்பாட்டு முழுமைக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.
முல்லைப்பாட்டு ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். இவருடைய இயற்பெயர் பூதனார் என்பது ஆகும். கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கிய சான்றோர்களின் இயற்பெயருக்கு முன்னர் ‘ந’ என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச்சொல்லைச் சேர்த்து வழங்குதல் மரபு. இவர் வணிகர் குடித் தோன்றலாயினும் மன்னருடன் மற்றும் அவர்தம் படைகளுடன் பெரிதும் பழகியவர் எனலாம்.
இவர் தந்தையார் பொன்வாணிகர் என்பதும் இவர் சோழ நாட்டுத் தலைநகரில் பிறந்து வளர்ந்தவர் என்பதும், இவரின் பெயரிலிருந்து அறிந்து கொள்ளலாம். இவரைப்பற்றி நச்சினார்க்கினியர் கூறியதாவது, ‘‘எட்டுத்தொகை முதலியவற்றில் இவரியற்றியதாக ஒன்றும் காணப்படவில்லை. காவிரப்பூம்பட்டினத்திற் சதுக்கத்துப்பூதம் முதலிய பலரால் வழிபடத் தக்கனவாகவும் இருந்து வந்தமையின் அவற்றுள் ஒன்றை நினைந்து பூதனென்னும் பெயர் இடப்பட்டது போலும், கூறியிருத்தலால் இவர் நல்ல வீரம் பொருந்திய அரசர்களோடு பழகியவரென்று தோன்றுகிறது’’6 என்று கூறியுள்ளார்.
முல்லைப்பாட்டு ஆசிரியரின் காலத்தை அறிய உறுதியான சான்றுகள் இல்லை. முல்லைப்பாட்டில் யவனரைப்பற்றியும், மிலேச்சரைப்பற்றியும் குறிப்புகள் வருகின்றன. நெடுநல்வாடையிலும் இதுபோன்ற குறிப்புகள் வருகின்றன. நெடுநல்வாடையிலும் இதுபோன்ற குறிப்புகள் காணப்படுவதால் நெடுநல்வாடை தோன்றிய காலத்தை அடுத்து முல்லைப்பாட்டு தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர் இராஜமாணிக்கனார் முல்லைப்பாட்டின் காலத்தைக் கணித்திருக்கிறார். நற்றிணையில் உள்ள 26-ஆம் பாடலை இயற்றிய நப்பூதனாரும், முல்லைப்பாட்டின் ஆசிரியர் நப்பூதனாரும் ஒருவரே என்ற ஒரு கருத்தும் உள்ளது.
பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தன்னைப் பகைத்து எதிர்த்த சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருகன் என்னும் அரசர் எழுவரோடும் போர்புரிதற்பொருட்டுச் சென்றபோது அவன்றன் மனைவி கொழுநன் பிரிந்த துயரத்தை ஆற்றிக் கொண்டிருந்த அருமையும் அவன் அவ்வரசரை எல்லாம் வென்று தான் சொன்ன வண்ணம் கார்காலத் துவக்கத்திலே மீண்டு வந்ததையும் கண்டு நப்பூதனார் முல்லைப்பாட்டைப் பாடினார்.
முல்லைப்பாட்டின் அமைப்பு
முல்லைப்பாட்டு பத்துப்பாட்டுள் ஐந்தாம் பாட்டாக விளங்குகிறது. இது நூற்று மூன்று அடிகளைக் கொண்டு விளங்கும் சிறு நூல். முல்லைத்திணையின் ஒழுக்கத்தைச் சிறப்பித்துப் பாடுவது முல்லைப்பாட்டாகும். முல்லைக்குரிய உரிப்பொருள் இருத்தல், இருத்தல் நிமித்தமும் பாட்டில் கூறப்பட்டுள்ளது.
இருத்தல் என்றால் ஆற்றிக் கொண்டிருத்தல் என்பது பொருளாகும். தலைவன் பிரிந்து சென்றால் ஏற்படும் வருத்தத்தைத் தலைவி பொறுத்துக் கொண்டிருத்தல் என்பதாகும். கற்பின் விளக்கம் கூறுவோர் எத்தகைய துன்பம் வரினும் தன்னிலையில் தளராது விளங்கும் ஒருத்தியை முல்லை சான்ற கற்பினள் என்பர். அத்தகைய முல்லை சான்ற கற்பினள் ஒருத்தியின் கற்புத்திறத்தை விளக்குவதாக முல்லைப்பாட்டு அமைந்துள்ளது.
மாற்றானை வென்று தன்னடிக்கீழ் வாழும் மன்னுயிர்க்கு நல்வாழ்க்கை தரும் பொருட்டு போர் மேற்சென்ற தலைவன் தான் வரும் வரையில் ஆற்றியிருக்க வேண்டும் என்று அன்புடன் தன் தலைவியிடம் வேண்ட அவளும் அவ்வாறே ஆற்றியிருந்தாள். தலைவனும் தான் குறித்த காலத்தில் திரும்பி வந்து அவளைக் கூடி இன்புற்றான். இவ்விருவரின் கடமைகளையும் திறத்தையும் இந்நூல் எடுத்தியம்புகிறது.
தலைமகன் ஒருவன் தன் மணக்கிழத்தியைப் பிரிந்து பகை மன்னரோடு போர் செய்யப் போகிறான். அவ்வாறு சேர்பவன் போர் வினை முடித்துக் கார் காலத் தொடக்கத்தே வந்து விடுவேன் நீ ஆற்றியிருப்பாய் எனக் கூறிச் செல்கிறான். தன் தலைவன் கூறியதுபோல் மிக அருமையாக ஆற்றியிருந்த தலைவி கார் காலம் தொடங்கிவிட்டதை அறிந்ததோடு வரவேண்டிய தலைவன் வராமையறிந்து தலைவி வருந்துகின்றாள். அவ்வாறு வருந்தும் அவளுக்காகச் செவிலித்தாயர் நற்சொல் கேட்கின்றனர். அவ்வாறு கேட்டவர் ‘நின் தலைவர் இப்போதே வருவார் நீ இன்னும் சற்று ஆற்றியிருத்தல வேண்டும் எனத் தேற்றுகின்றனர். தலைவி பெருமூச்சு விட்டாள். இந்நிலையில் அவள் மகிழுமாறு தலைவன் வரும் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளின் ஆரவாரம் கேட்டு தலைவி மகிழ்கிறாள்.
இம்முல்லைப் பாட்டு யாரைக் குறித்தும் பாடப்பட்டதன்று. இதில் அகம், புறம் ஆகிய இருதிணைகளும் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தலைவனைப் பிரிந்து தலைவி தனித்திருப்பதைப்பற்றிக் கூறுவது அகத்திணையாகிய முல்லைத் திணையைச் சார்ந்த்து.
போர்க்களத்தைப் பற்றியும், தலைவன் பாசறையிலே இருப்பதைப் பற்றியும் கூறுவது புறத்திணை. இம்முல்லைப் பாட்டில் முதலில் அகவொழுக்கம் முதலில் கூறப்படுவதால் இதற்கு முல்லைப்பாட்டு என்று பெயர் வைக்கப்பட்டதென்று இந்நூலுக்குமுல்லைப்பாட்டு என்ற பெயர் ஏற்பட்ட காரணத்தை சாமிசிதம்பரனார் தெளிவுறுத்துகின்றார்.
முல்லையும் வஞ்சியும்
தொல்காப்பியனார் தம் தொல்காப்பிய அகத்திணையில் அகப்பொருட்குரிய திணைகளை,
‘‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை யென்ப’’
என ஏழாகக் கூறுகின்றார். அக ஒழுக்கமாகிய கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என்ற ஏழுதிணைகளுக்கும் புறனான பாடாண், வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்ற புறத்திணைகள் ஏழனை இயைந்த ஒழுக்கமாகப் புறத்திணை இயலில்,
‘‘வஞ்சிதானே முல்லையது புறனே’’
என்று கூறுகின்றார். வஞ்சி என்பதற்குக் காரணம் கூற வரும் இளம்பூரணர், ‘‘காடுறை உலகமாகிய முல்லைப்புறம் மண்ணாசை வேட்கையால் எடுத்துச் செலவு புரிந்த வேந்தன் மேல் அடல் குறித்துச் செலவு புரிதலால், அவ்விரு பெரு வேந்தரும் ஒரு குறி பெற்றது’’ எனக் கூறுகின்றார். இவற்றின் இயைபு பற்றிக் குறிக்கின்ற நிலையில்,
‘‘மாயோன் மேய காடுறை உலகமும்’’
என்று கூறி, கார்காலமும் முல்லைக்கு முதற் பொருளாதாலாலும் பகைவயிற் சேறலாய வஞ்சிக்கு நிழலும் நீருமுள்ள காலம் வேண்டுமாதலானும் பரு மரக் காடாகிய மலை சார்ந்த இடம் ஆகாமையானும் அதற்கு இது சிறந்ததாகும் எனக் குறிக்கின்றார்.
தலைவி தலைவனைப் பிரிந்து காட்டின் நடுவே அமைந்த தன் மனைக்கண் இருப்பது போலத் தலைவனும் தலைவியைப் பிரிந்து பகைவர் நாட்டிற்கு அரணாண காட்டின்கண் அமைந்து பாடிவீட்டில் தங்கி இருப்பான். ஆதலால், முல்லையும் வஞ்சியும் தம்முள் இணைந்து காணப்படுகிறது.
முல்லைப்பாட்டில் முல்லைத்திணை
முல்லை என்னும் அகத்திணைக்கு இயைந்த புறத்திணை ஒழுக்கமான வஞ்சி முல்லைப்பாட்டின் இடையில் அமைவுறப் பொருந்தி வருகிறது. தலைவியின் இருப்பினையும் கார்காலத்தில் வருவதாகக் கூறிச் சென்ற தலைமகனின் தேர் காணாமல் வருந்துகின்ற பிரிவுத் துயரினையும் திறம்படக்கூறி தலைவன் தங்கியிருக்கும் பாசறையின் அமைப்பினையும் அங்கு நிகழும் செயல்களையும் பொருத்தமுற விளக்குகின்றார் நப்பூதனார்.
இம்முல்லைப் பாட்டில் முல்லைப் பொருள் இடையீடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தலைமகன் தான் வருவதாக்க் கூறிய கார்காலம் வருதலை உணர்ந்து ஆற்றாமல் அழுது வருந்தும் தலைவிக்கு நற்சொற்கேட்டு வந்த பெருமுது பெண்டிர், ” நாங்களும் படைத்தலைவருங் கேட்ட நற்சொல்லால் உன் தலைவன் தான் மேற்கொண்டு சென்ற போர் வினையை விரைவில் முடித்துத் திரும்பி நின்னுடன் வந்து சேர்வன்; அவன் வரும் வரையில் நீ துன்பத்தை ஆற்றிக்கொண்டு இருத்தல் வேண்டும்” என்று பலவாறு தலைவிக்குக் கூறி வற்புறுத்தவும், அவள் அதனைக் கேளாது, மைதீட்டிய பூப்போன்ற கண்ணினின்றும் நீர் முத்துப் போல் துளித்துளியாய் விழக் கலங்கி வருந்தினாள் என இருபத்து மூன்றாவது வரியில் முல்லைத் திணையின் பாடுபொருள் முழுவதும் முடிவு பெறாமல் இடையறுந்து நிற்பதனைக் காணலாம். இது படிப்போரைக் கவருவதற்காக ஆசிரியர் அமைத்துக் கொண்டுள்ள வெளியீட்டு உத்திமுறையாகும்.
இப்பாட்டினைக் படிப்போர் படிப்பதை நிறுத்திவிடாமல், வருந்திய அத்தலைவி பின்னர் எவ்வாறு அத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டாள் என்பதனை அறிந்து கொள்ள விரும்புவர். இங்ஙனம் அவர் முடிவறியும் விருப்பத்தால் மேலுங் கற்பதற்கு ஆவல் கொண்டு நிற்கும் பொழுது பிறபொருள் இடையே இணைத்துச் சொல்லப்படுமாயினும் அதனால் படிப்போர் சிறிதும் களைப்படையாது, அவ்விடைப்பட்ட பொருளையுங் கற்று மேற்சென்று பொருள்முடிவு காண்பாரென்பது தெளிவுற விளங்கும். இங்ஙனம் முல்லைப்பொருள் இடையீடிட்டு நிற்கும் இடங்கண்டு அங்கே முல்லைப் பொருளை மறித்து, அதனோடு தொடர்புடைய வஞ்சிப் பொருளைக் கொண்டுவந்து நுழைத்துப், பின் இடையிலே விடுத்த முல்லைப்பொருளை எண்தாவது வரியிலே “இன்துயில் வதியுநற்காணாள் துயர் உழந்து ” என்பதுடன்கொண்டு போய் இணைக்கிறார்.
இவ்வாறு இணைக்கும் ஆசிரியரின் வெளிப்பாட்டுத்திறன் மகிழ்தற்ரியதாகும். மேலும் முல்லைத்திணை ஒழுக்கத்தினை அவ்வாறு வளர்த்துக் கொண்டு சென்று எண்பத்தெட்டாவது வரியில் “இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்” என்பதுடன் முடிக்குமிடத்தும் வினைவயிற்பிரிந்த தலைமகன் மீண்டு வந்தமை சொல்ல வேண்டுதலின், அங்ஙனஞ் சொல்லப்படும் பொருளையுங் கற்போர் உற்றுநோக்கும் பொருட்டு ‘இவ்வாறு கிடந்தோளுடைய அழகிய செவி நிறைய ஆரவாரித்தன’ என்று மேல் ஓட்டப்படுஞ் சொற்றொடரின் பயனிலையான ‘ஆரவாரித்தன’ என்பதை, முடிக்கப்படும் அகப்பொருளின் இறுதிச் சொல்லான ‘கிடந்தோள்’ என்பதுடன் சேர்த்து, அதன் எழுவாயான ‘வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே’ என்பதை இறுதியில் நிறுத்தி, அவ்விரண்டற்கும் இடையில் தலைவன் மீண்டு வந்தமையை விளக்கமாகக் கூறி அமைத்தார்.
முடிக்கின்ற இடத்திற் ‘கிடந்தோள் செவிநிறைய ஆலின’ என்று உரைப்பின், எவை ஆலின? என்னும் வினாத் தோன்றி அடுத்துவரும் பொருளை அறிய விருப்பம் மிகும். ஆதலால், ஆசிரியர் தொடர்களை முன்னும் பின்னுமாக வைத்துக் கூறினார் எனலாம். இவ்வாறு ஆசிரியர் கூறுவதற்குக் காரணம், பாடலில் பொருட்செறிவு தோன்றுதற்காகவும், கற்பார்க்கு மேலும் மேலும் ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவுமேயாகும்.
முல்லைப்பாட்டு நெஞ்சாற்றுப்படையா?
முல்லைப் பாட்டை “நெஞ்சாற்றுப் படை“ எனவும் கூறலாம். ஆற்றுப்படை என்பது வழிப்படுத்தல் என்பது பொருளாம். நெறிப்படுத்தல் என்றும் மொழியலாம். தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியானவள் வருந்தும் தனது நெஞ்சை தன்வழிப்படுத்துகின்றாள். அதாவது முல்லைத்திணைக்குரிய ஒழுக்கத்தின் வழியே தனது நெஞ்சை ஆற்றுப்படுத்துகின்றாள். ஆதலின் இம் முல்லைப்பாட்டை நெஞ்சாற்றுப்படை என்று மொழிவது பொருத்தப்பாடுடையதாய் அமையும்.
தலைவியினது மனமானது தலைவனையே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறது. அவளால் அவளது மனத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. பலரும் பல்வேறு காரணங்களைக் கூறினாலும் அவற்றைக் கேட்டு அவளது உள்ளத் துன்பம் மிகுதிப்படுகின்றதே தவிர குறையவில்லை. தலைவன் பால் செல்லும் தனது நெஞ்சினை அவளே ஆற்றுவிக்கின்றாள். ஆற்றுப்படுத்தவும் செய்கின்றாள்.
அவளது நெஞ்சு அவன் சென்ற வழிச் சென்றது. அவள் தலைவன் எப்போது வருவான் என்று நெஞ்சத்து வேட்கையுடன் கிடந்தாள். அவ்வாறு கிடந்தவளினது நெஞ்சம் நிறைவது போன்று வெற்றிச் செய்தியை குதிரையின் குழம்பொலி கொண்டு வந்தது. தலைவி தன்நெஞ்சினை தலைவன்பால் ஆற்றுப்படுத்தி அவன் வரவறிந்து மகிழ்ந்தாள். இவ்வகையில் முல்லைப்பாட்டினை நெஞ்சாற்றுப்படை என்று குறிப்பிடல் சாலப் பொருத்தமுடையதாய் அமையும்.
இவ்வாறு முல்லைப்பாட்டில் முல்லைத் திணையை நுணுக்கமாக அமைத்திருக்கும் நப்பூதனாரின் புலமைத் திறம் போற்றுதற்குரியதாகவும் வியப்பிற்குரியதாகவும் அமைந்துள்ளது. மேலும் முல்லைப்பாட்டு நெஞ்சாற்றுப்படையாகவும் அமைந்து கற்போருக்கு இன்பந் தருகிறது.

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.