முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


உலக வீதியில்
தமிழிலக்கிய தேரோட

இதயம் இணையம் இணைய
முரசு கொட்டும்
“ முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி ”
முழக்கத்தோடு மலர்கிறது முகம்…

கல்தோன்றி மண்தோன்றா
காலத்துத் தமிழ்

கணினியில் யுனிக்கோட்டில்
கால் பதித்த தமிழ்

இன்று
செம்மொழி மகுடம் சூடி
எம்மொழி தலை நிமிர்ந்து.
மீண்டும்
உயர்கிறது உலகமொழியாய்.

கீழ்த்தள்ளப் பட்ட
கீழ்த்திசை மொழியல்ல
தமிழ்.

பல்கலைக்கழகத் தடாகங்களில்
தாமரை பார்க்க இறங்க
பயில்தலுக்கும் ஆய்தலுக்கும்
தமிழ்த்துறை…தனித்துறை…

கண்டெடுத்த கல்வெட்டை
எழுதிய மொழியிலேயே
எடுத்தாய்ந்து இயம்பும் இனி.

காலக் கறையான் அரித்து மிஞ்சிய
ஓவியங்களை ஓலைச்சுவடிகளை
வேறொரு
கலாச்சாரக் கை கொண்டு
திருத்தப்படுவது நிறுத்தப்படும் இனி.

பண்பாட்டில்
பண்பட்ட முதல்மொழி
உலகமொழிகளின் பயன்பாட்டில்
பதினெட்டாவது இடத்திலிருந்து மேலே
படியேறட்டும்.

முகவரிகள்
மொகஞ்சதாராவிலும் கரப்பாவிலுமிருக்க
தெற்கே ஒதுங்கிய தீந்தமிழ் முகங்கள்
திசையெட்டும் எட்டட்டும்.

ஆறரை கோடிகளிலிருக்கும்
அகதி முகங்கள் மாறி
இழந்த மண் ஏற்கட்டும்.

கடை இடை முதல் சங்கங்கள்
கண்ட மண்
கடல் கொண்ட மண்
எங்கள் லெமுரியா எனச் சொல்லட்டும்.

உலக வீதியில்
தமிழிலக்கிய தேரோட

இதயம் இணையம் இணைய
முரசு கொட்டும்
“ முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி ”
முழக்கத்தோடு மலர்கிறது முகம்.

முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி….

/ “ யூனிகோட் ” என்பது கணினியில் உலகத்தில் புழக்கத்திலிருக்கும் மொழிகளுக்கு நிரந்தர குறியியீட்டு இடம் கொடுக்கப்பட வகுக்கப்பட்ட விதிமுறை. இந்த குறியீட்டு முறையில் தமிழுக்கு நிரந்தர இடம்.

“ முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி ”— சிங்கப்பூர் நாளிதழ் தமிழ்முரசில் செய்தித் தலைப்பு /

பட்டுக்கோட்டை தமிழ்மதி
சிங்கப்பூர்
tamilmathi@tamilmathi.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி