முடிந்த தொடக்கம்…

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

நந்தா, வேலூர்


விண்வெளி தொட்ட கலம்
பூமி தொட மறுத்ததை
விசைக்கலம் ஏவிய
வித்தகர்கள் அறியவில்லையோ ?

மனிதகுல மேம்பாட்டிற்காய்
வாழ்வை அர்ப்பணித்த
சாதனை வல்லுநர்களே !
உம்
இதயத் துடிப்பு
இறுதியாய் துடித்ததை
அனுமதித்ததேனோ ?

தொலைக்காட்சிகள்
உங்கள் உருவப்படங்களை
உலகுக்கு அறிமுகப்படுத்தும்

நாளேடுகள்
உங்கள்
வாழ்க்கையை விளக்கும்,
சாதனைகளை பட்டியலிடும்

உங்கள்
பூர்வீகம் அகழ்ந்தாராய்ந்து
அரசியல் கட்சிகள்
அதிலும் ஆதாயம் தேடும்

அரசாங்க அலுவலகங்கள்
அவசரமாய் ஒரு நிமிட
அனுதாபம் தெரிவிக்கும்

அறிவியல் தொழில்நுட்ப
வரலாற்றில்
சில பக்கங்கள்
வெற்றிடம் சுமக்கும்.

நாளைய சந்ததி
நிலவுக்கு
உல்லாசப் பயணம் செல்லும்
உங்கள்
உயிர் பயணத்தின்
பரீட்சார்த்த முயற்சியால்…

இத்தனைக்கும் நடுவே
உறவு தொலைத்து
உறக்கம் மறந்து
உணவு துறந்து
கண்ணீர் வறண்டு
உங்களுக்காய் உயிர் வதைக்கும்
… உங்கள் குடும்பம் மட்டும்

நிர்பந்த நிதர்சனங்களூடே
உங்களின்
ஆன்ம சாந்திக்கும்
குடும்ப மனஅமைதிக்கும்
பிராத்திக்கும்
உங்களை அறிந்த, அறிந்திராத
ஒவ்வொரு மனிதமனமும்

அவர்களுடனூடே சேர்ந்து பிராத்திக்கும்
– சக மனிதன்

ngknanda@yahoo.com

Series Navigation

நந்தா, வேலூர்

நந்தா, வேலூர்