முக்கியமான வேலை

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

கிரிஜா மணாளன்



‘ஹலோ…….யாரு? நடராஜனா?”

‘ஆமாம் சார்!”

‘நான் மேனேஜர் பேசறேன்பா! ஆராவமுதன் வந்துட்டானா?”

‘இன்னம் வரலையே சார்!..வந்தா உங்க ரூமுக்கு வரச்சொல்லட்டுமா சார்?”

‘இன்னம் வரலையா?…..என்னப்பா இது, சுத்த விளக்கெண்ணெயா இருக்கானே …………ஒரு முக்கியமான வேலை குடுத்தா இப்படியா இழுத்தடிக்கறது? ‘பெர்சனல் வேலை”க்காக கேட்டானேன்னு ஒரு மணி நேரம் பர்மிஷன் குடுத்தா இன்னும் ஆளையேக் காணோம்! உடனே ஆளைப் பிடிச் சாகணும்…………… கையில ஏதும் ~செல்ஃபோன்~ வச்சுருக்கானாப்பா?”

‘தெரியலீங்க சார்! ……..ஏதும் அர்ஜெண்ட் வேலையா சார்?”

‘;ஆமாம்பா., நேத்து அவன்கிட்ட ஒரு முக்கியமான வேலைய சொல்லிட்டு நான் இப்ப அல்லாடிக்கிட்டு இருக்கேன்!……..ஏம்பா நடராஜா, அவன் வந்ததுமே உடனே என்னை வந்து பார்க்கச் சொல்லு! ரொம்ப அர்ஜெண்டுப்பா!”

‘சரி சார்!”

‘………நம்ப டெஸ்பாட்ச் கிளர்க் ஆபீஸ் லெட்டர்ஸை எடுத்துக்கிட்டு ஹெட் போஸ்ட் ஆபீசுக்கு எப்ப போவான்?”

‘மூணரைக்கெல்லாம் கிளம்புவார் சார்!”

‘………..சரி, ஆராவமுதன் வந்தவுடனே என் ரூமுக்கு வரச்சொல்லுப்பா! அவசரம்..! நீ ஸீட்ல இல்லாம எங்கேயும் ~தம~; அடிக்கக் கிளம்பிடாதே! புரியுதா?”

‘ஹி…ஹி…. அதெல்லாம் இல்லே சார்!”

0 0 0

‘குட் மார்னிங்க் சார்!”

‘வாப்பா ஆராமுதா!.. இப்பத்தான் செக்ஷனுக்கு ஃபோன் பண்ணினேன்.. ஏம்பா லேட்?.. ஒரு மணி நேரம் பர்மிஷன் குடுத்தா நீ ரெண்டுமணி நேரம் எடுத்துக்கிட்டே போலிருக்கே? வேலையை எல்லாம் முடிச்சிட்டியா?”

‘ஸாரி சார், நீங்க குடுத்த அந்த நாலு மேட்டருக்கும் விசாரிச்சு ஃபைனலா ஒருத்தர்க் கிட்ட கன்ஃபார்ம் பண்ணிட்டு வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு சார்!”

– 2 –

‘மேடம் நாலு தடவை ஃபோன் பண்ணிட்டாங்க! உன்கிட்ட இந்த வேலையைக் குடுத்துட்டு, நான் அவங்களுக்கு சால்ஜாப்பு சொல்லவேண்டியிருக்கு! அந்த நாலும் ரெடியா?”

‘ரெடி சார்!.. நீங்க குடுத்த இந்த பேப்பர்லேயே நோட் பண்ணிட்டு வந்துருக்கேன் ………….. இந்தாங்க!”

‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… அப்பாடா! இந்தா, நீயே ஒரு தடவை படிச்சு எல்லாம் கரெக்டான்னு பார்த் துட்டு நீட்டா டைப் பண்ணி, நீயே போய் போஸ்ட் பண்ணிட்டு வந்துடு! யார் கைலேயும் தந்துடாதே! நாளைக்கு மெட்ராஸ்ல கிடைச்சாகணும், …….புரிஞ்சுதா?”

‘ஓகே சார்!”

‘அடுத்த வாரமும் இப்படி டிலே ஆயிடக்கூடாது. என்னப்பா சிரிக்கிறே?.. என்ன பண்றது, நாள் பூரா என் ஒய்ஃப் டி.வி.சீரியல் பார்க்க வேண்டியது……. அதுல கேள்வி கேட்டு பரிசு தர்றான்னு இப்படி கேள்விகளை என் தலையில கட்டிடுறா! எனக்கென்ன தெரியும் இந்த இழவெல்லாம்? அந்த கண்ணறாவியை எல்லாம் நானா உக்காந்து பாக்கறேன்? உங்க ஆபீஸ் ஸ்டாஃப்க்கிட்ட கேட்டு விடையை எழுதி இன்னிக்கே போஸ்ட் பண்ணிடுங்கண்ணு நாலு தடவை ஃபோன் பண்ணிட்டாள்! என் தலையெழுத்து! சரி சரி,…………இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்குள்ள ரகசியமா இருக்கட்டும்பா! பேச்சுவாக்குல கூட யார்க்கிட்டேயும் சொல் லிடாதே!……………உன் டி.ஏ. பில்லை இன்னிக்கு பாஸ் பண்ணிடுறேன். போஸ்டாபீசுக்கு போயிட்டு வந்துட்டு உக்காந்து ஒழுங்கா ஆபீஸ் வேலையைப் பார்! …………….கொழந்தைங்க புஸ்தகத்துக்கு அட்டை போடறது……. நோட்டு தைக்கறது இது மாதிரி சொந்த வேலைகள பார்த்துக்கிட்டு உக்காந்திருக்காதே.. புரிஞ்சுதா?”

‘…………………..”


Series Navigation

கிரிஜா மணாளன்

கிரிஜா மணாளன்