மீளத்துடிக்கும் மனம்

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

ஆரூர் புதியவன்


விமானம் கண்டுபிடித்த
மானுடம்
வெட்கப்படுகிறது
இறக்கை விரிக்கின்றன
போர் விமானங்கள்

**

நிரம்பி வழிகின்றன
ஆயுதக்கிடங்குகள்
காலியாய்க் கிடக்கின்றன
உணவுக்களஞ்சியங்கள்

**

அணுவைப்பிளந்து
காட்டிவிட்டு
தலை நிமிர்ந்தது அறிவியல்
தலைகுனிந்தது மனிதம்

**
கற்கால மக்களைக்
காட்டுமிராண்டிகளாய்க்
காட்டாதீர்கள்
எந்தக் காட்டுமிராண்டியும்
பிஞ்சுக்குழந்தைகளை
குண்டுவீசிக்
கொன்ற தகவல் இல்லை

***
மண்ணை அலங்கரித்தபோது
அறிவியல் வரமாயிருந்தது
ஆயுதங்களைக்
கருத்தரித்தபோது
அதுவே சாபமாகிவிட்டது

இணைய யுகம்தான்
ஆனால்
இணைய மறுக்கின்றன
இதயங்கள்

***
போர் மேகம்
குண்டுமழை பொழிய
வளமாய் வளர்கின்றன
மரணப் பயிர்கள்

**
கற்காலத்தில்
நாகரீகமில்லை என்பதை
நம்ப முடியாது
நாகரீகத்தின் தொட்டிலை
சுடுகாடாக்குபவர்களால்
வரையறுக்கப்பட்ட நாகரிகம்
‘புஷ் ‘வாணமாகட்டும்
***
புதிய ஆயுதங்களைக்
கண்டுபிடிக்கும் நாகரிக
மனிதன்
பழைய அமைதியைத்
தொலைத்துவிட்டான்
**

காக்கும் அறிவியல்
கண்டுபிடிப்புகள்
தூக்குமரத்தின்
தொழிலைச் செய்கின்றன

மரண ஆயுதங்களால்
மண்ணகமெங்கும் ரணம்
மின்சாரம் கண்டுபிடிக்காத
காலத்திற்கு
மீளத்துடிக்கிறது மனம்

***
unarvu@eth.net

Series Navigation

ஆரூர் புதியவன்

ஆரூர் புதியவன்