யமுனா ராஜேந்திரன்
1.
கவிதையின் பாலான எனது வேட்கையின்; பின்னிருந்த காரணம் அதன் அந்தரங்க மொழி தவிர வேறில்லை. நாரணோ ஜெயராமன், ஆத்மாநாம், புவியரசு ( மிகக் குறிப்பாக அவருடைய இதுதான் எனும் பெயரிலான கவிதைத் தொகுதி : பிரபஞ்சமளாவிய காதல் அவருடைய மனிதநேயம்)) மனுஷ்யபுத்திரன் போன்றவர்களை எனக்குப் பிடித்திருந்தது. மார்க்சிய அரசியலில் அதீத ஈடுபாடு கொண்டிருந்தாலும் எனக்குப் பிடித்த கவிகள் இவர்கள்தான். அந்தரங்க அனுபவம், சமூக அனுபவம், அரசியல் அனுபவம் எனப் பிளவுபடாதன இவர்களது கவிதைகள்.
பிரபஞ்சன் வைத்திலிங்கமாக இருந்து பாண்டிச்சேரியிலிருந்து நடத்திய வண்ணங்கள் இதழில் வானம்பாடி பாதிப்பில் அசுரவித்து என முதல் கவிதையை எழுதினேன். அநேகமாக மார்க்சியச் சார்புள்ள அனைத்து இதழ்களிலும், தாமரை, செம்மலர், மனிதன், விடியல், ஜனசக்தி, ஜீவா முழக்கம் என எனது (யமுனா புத்திரன் என்பது புனைபெயர் : வானம்பாடி அக்னிபுத்திரன்தான் எமது கல்லுாரி நாட்களின் ஆதர்சக் கவி) கவிதைகள் வெளியாகின. பொதுவுடமை இயக்கப் புாடகனும் கவியுமான கேசிஎஸ் அருணாச்சலம் பாதிப்பில் நாட்டுப் பாடல்கள் வடிவிலும,; நீலக்கண்ணுகள் திரைப்பட பாதிப்பில் வழிந்த வயலாரின் (குறிப்பாக மரிக்கான் எங்கள்க்கு மனசில்லா, இனி கரையான் எங்கள்க்கு மனசில்லா, முதலாளிததுவமே நின் முன்னில் இனி முட்டு மடக்கான் மனசில்லா எனும் எக்காளப் பாடல்;) வரிகள்; மலையாள நடிகை ஜெயபாரதியின் விரகம் துதும்பும் கொழுத்த இடுப்பின் மீதும், மணிப்பிரவாளத்தின் மீதும் எனக்கு மட்டுமீறிய காமத்தையே உருவாக்கின. மனோரதியமான நினைவுகளுடனும் உலகைப் புரட்டிவிடுவோம் எனும் எக்காளத்துடனும் திரிந்த நாட்கள் அவை. காதலும் உயிர்வாதையும் கொண்டுவந்த ஈழக்கவிதைகள் பிற்பாடு சிலிர்ப்பதாக இருந்தது.
படைப்புக்கும் படைப்பாளிக்குமான உறவை எப்போதுமே தேடுகிற நான், கவிதை எழுதுவதை எப்போது நிறுத்திக் கொண்டேன் என நினைக்க, எமது நண்பன் ஸாகுல் ஹமீது காணால் போன அன்றுதான் என்று நினைவுகூரமுடிகிறது. வுாழ்வின் மீது தீவிரமான கோபமும் நேசமும் கொண்ட அவனது நிழலைக் கூட எவரும் இன்று வரை காணமுடியாது நிரந்தரமாகக் காணாது போய்விட்டான் அவன். அவனது நினைவில் எழுதிய தொகையான இறுதிக் கவிதைகள் அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சனபூர்வமாக அணுகிய இளைஞுர்களால் நடத்தப்பட்ட புதிய சகாப்தம் இதழில்; வெளியானது. அந்தக் கவிதைகளிலொன்றை திருப்பூரில் நடந்த கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் வாசிக்க மாநாட்டுத் தலைவர் தொ.மு.சி.ரகுநாதன் ஒப்பவில்லை. அதற்குப் பிறகு நான் கவிதைகள் எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டேன்.
பிற்பாடு நான் எழுதிக்கொண்டிருந்ததின் பிரதிமொழியோ எனத் தெரியாமலேயே மஹ்முத் தார்வீஸ், சேகுவேரா, நெருதா, ஆரியல் டார்ப்மென், ரோச் டால்டன், தஸ்லீமா நஸ்ரீன், விஸ்லாவா ஸிம்போர்ஸ்க்கா, கிஸ்வர் நஹித், சுஜாதா பட், ஸர்கே பேகஸ்;, சா அதி யூசுப் என கவிகளை மொழிபெயர்த்துக் கொண்டேயிருக்கிறேன். தார்வீஸின் கவிதை மொழிபெயர்ப்புகள் மனுஷ்யபுத்திரன் நடத்திக் கொண்டிருந்த கவிதை இதழொன்றில் வெளியாகியது. நிதானமாக யோசித்துப் பாரக்க நான் மொழிபெயர்த்த கவிகளில் ஸிம்போர்ஸ்க்கா தவிர எவருமே ஐரோப்பியர்கள் அல்லர். தமிழகத்தின் பிரதான சிறிறேடுகள் சார்ந்த இலக்கியப் பரப்பிற்கு நான் மொழியாக்கம் செய்த கவிகளிடம்; அதிகமும் அக்கறையில்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன். சிற்றேட்டுக்காரர்களின் அக்கரையெல்லாம் எப்போதுமே ஐரோப்பிய மையத்தன்மை வாய்ந்ததுதான். இலத்தீனமெரிக்க இலக்கியத்தின் அறிமுகம் கூட இவர்களுக்கு ஐரோப்பிய மையப் பார்வையிலிருந்தே அறிமுகமானது.
தமிழகத்தை விடவும் நான் மொழியாக்கிய கவிதைகள் அதிகமும் ஈழ வாசகர்களையே எட்டியிருக்கின்றன. இந்த நுால்கள் பெரும்பாலுமானவற்றை ஈழ நண்பர்கள்தான் வெளியிட்டனர். இலண்டன் தமிழத்தகவல் நடுவம், பாரிஸ் எக்ஸில் பதிப்பகம் போன்றன இந்த நுால்களை வெளியிட்டன. கவிதையுடனான எனது கடந்த 15 ஆண்டுகளிலான உறவில் சில பொதுத் தன்மைகள் இருப்பதை இப்போது என்னால் உணரமுடிகிறது. நாடோடித் தன்மை, சித்திரவதையின் பின்னான உடல் வலி, காதலின் தனிமை, பிரிவு, உயிர்வாதை போன்றவையே நான் மொழியாக்கிய கவிதைகளின் பொதுத் தன்மையாக இருப்பதை யதேச்சையாக உணரமுடிகிறது. நான் கவிதை குறித்து எழுதியது வெகு சொற்பம். மொழியாக்கங்களுக்கான முன்னுரைகள், ஈழக்கவிகள் குறித்த குறிப்புகள்;( வ.ஐ.ச.ஜெயபாலன், நட்சத்திரன் செவ்விந்தியன், ஸ்விஸ் ரவி, றஸ்மி), வானம்பாடிகள் குறித்துக் காட்டமாக எழுபதுகளின் இறுதியில் எழுதிய கருத்தியல் தோய்ந்த கட்டுரை போன்றனதான் கவிதை குறித்து பதிவான எனது கட்டுரைகள். தற்போது வெகுநாட்களுக்குப் பின்னாக முழுமையாகப் படித்த தமிழ் கவிதைத் தொகுதி மு.புஷ்பாரஜனின் மீண்டும் வரும் நாட்கள்.
2.
ஈழப்படைப்பாளிகள் குறித்த தமிழக விமர்சகர்களின் அணுகுமுறைகளின் பால் எனக்குக் கடுமையான விமர்சனம் உண்டு. ஈழ இலக்கியத்தின் சமூகப் பின்புலம் குறித்த எந்தவிதமான தேடலும், படிப்பும், அறிதலும் அற்றவையே பெரும்பாலுமான தமிழக விமர்சகர்களின் அவதானம் என்பது என் கருத்து. திராவிட இயக்கங்களின் தேசியம் குறித்த தமிழக அரசியல் அனுபவங்களின் அடிப்படையில்; ஈழ இலக்கியங்களைப் பார்த்ததாகவே தமிழக இலக்கியவாதிகளின் விமர்சன அணுகுமுறைகள் இருக்கிறது. ஈழ இலக்கியவாதிகள் தமிழக அரசியலையும் இலக்கியத்தையம் ஈழு இனத்தேசிய நெருக்கடியின் அனுபவ அடிப்படையில் புரிந்து கொள்ள விளைவதைப் போல, ஈழ இலக்கிய சமூகப் பிரச்சினைகளை இந்திய-தமிழக இன விவாதங்கள், அரசியல் மதிப்பீடுகள், திராவிட இயக்கங்கள் மீதான தமது விமர்சனம் எனும் அடிப்படையிலேயே தமிழக இலக்கியவாதிகள் வியாக்யானப்படுத்துகிறார்கள். புிரம்மராஜன், ஜெயமோகன், தமிழவன் போன்ற அனைவருமே தமிழக அரசியல் அவசியங்களின் அடிப்படையிலேயே ( pre or post rajiv neceesities ) ஈழ இலக்கியப் பிரதிகளை வாசிக்கிறார்கள். கூடுதலாக ஸ்டாலினிச இலக்கிய மதிப்பீடுகள் மீதான வாசிப்பும் ஈழ இலக்கியங்களை அணுக இவர்களுக்கு வழிசமைத்துத் தருகிறது. புிரதியின் மீதான வாசிப்பு என்பது தற்போது பல்துறைசார் ஊாடாட்டப் பார்வையாகப் பரிமாணம் பெற்றிருக்கிறது. ஈழ இலக்கியம் பற்றிய விமர்சனம் என்பது எதிர் ஸ்டாலினிய விமர்சனம், பிரதியின் வெளிப்பாட்டு நேர்த்தி பற்றிய அழகியில் விமர்சனம் என்பதாக மட்டுமே இருப்பது அரைகுறைப் புரிதல் கொண்டதாகும்..
ஈழ இலக்கியம் பற்றிய புரிதலுக்கான முன்நிபந்தனைகளாக இரண்டு அடிப்படைப் புரிதல்கள் இருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்து வந்திருக்கும் உலகளவிலான தேசியம் குறித்த விவாதங்கள், ஈழ தேசிய விவாதங்கள் அவற்றில் விளைந்த அனுபவங்கள் முதலாவது அடிப்படை. நிலத்தோடு பிணைந்த, முதலாளித்துவ பொருளியல் வளரச்சி சார்ந்த அனுபவம்; அற்ற கிராமிய சமூகமாக ஈழ தேசியம் உருவாக்கிய வெகுமக்கள் உளவியல் இரண்டாவது அடிப்படை. ஜெயமோகன், பிரம்மராஜன் போன்றவர்களிடம் செயல்படுவது பின்-ஸ்டாலினிய அனுபவங்களும் அவர்களது இந்திய தேசிய உணர்வும் என்பதற்கு சோபாசக்தியின் கெரில்லா நாவல் குறித்த அவர்களது வாசிப்பே சான்றாக இருக்கிறது. தமிழகத்தில் நடந்து வரும் வைகோ, திருமாவளவன் அடியொற்றிய தமிழ்த்தேசிய விவாதங்களின் நீட்சியாகவே சோபா சக்தியின் ‘ ம் ‘ நாவல் குறித்த மனுஷ்யபுத்திரனின் பார்வை இருக்கிறது. சோபா சக்தி, சேரன் போன்றவர்களின் படைப்புகள் தொடர்பான தமிழக இலக்கியவாதிகளின் பாராட்டுணர்வக்கான கருத்தியல் அடிப்படையை தமிழ்த் தேசிய விமர்சகராக அ.மார்க்சும், அரசியல் அடிப்படையை ஈழப்பிரச்சினை தொடர்பான பின்-ராஜீவ் இந்தியா டுடே இலக்கிய அணுகுமுறையம் வழங்குகிறது. காலச்சுவடு விமர்சகர் தேவிபாரதி முதல் தலித் கோட்பாட்டாளர் ராஜ்கெளதமன் வரையிலான ஈழ இலக்கிய விமர்சனங்களின் அடிநாதம் இவ்வாறுதான் அமைகிறது.
ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான ஒருவிதமான கருத்தியல் சார்ந்த,. மொழி சார்ந்த கூடார்த்த உணர்வை வெளிப்படுத்தும் படைப்பாளிகள் அதிகமும் தமிழக இலக்கியவாதிகளின் நுட்பமான விமர்சனத்துக்குள் வருவதில்லை. ஈழ இலக்கியத்தின் 25 ஆண்டுகால படைப்புத் தாரைகள் என்பது இரு பிரதான வகையினதாகும். ஓன்று ஈழ மண்ணிலேயே வாழ்ந்து போரட்டத்தின் வலிகளையும் அனர்த்தங்களையும் உன்னதங்களையும் படைப்புக்களில் வெளியிடுவது ஒரு வகை. அகதிளாகப் புலம் பெயர்ந்த அம்மக்களின் அனுபவம் பிறிதொரு வகை. தமிழகத்தில் இந்த இரு அனுபவங்களையும் உக்கிரமாக வெளிப்படுத்தாத படைப்பாளிகான இருவர்தான் அதிகமும் தற்போது முன்னிறுத்தப்படுகிறார்கள். ஈழப்போராட்டம் உக்கிரமடைவதற்கு முன் மரணமெய்திய தளையசிங்கம், ஈழப்போராட்ட அனுபவங்கள் எதுவும் தீண்டாத அ.முத்துலிங்கம், போனற்வர்களே அப்படைப்பாளிகள். இப்படிச் சொல்வதானது இவர்களது பிறிதொரு வகையிலான இலக்கியப் பங்களிப்பகளை மறுத்துவிடும் நிலைபாடல்ல. அம்பை, சுரா, ஜெயமோகன் போன்ற தமிழக இலக்கியவாதிகளின் சமூக இலக்கிய அரசியல் அக்கறைகளை இவர்கள் பகிர்ந்து கொள்வதாலேயெ இப்படைப்பாளிகள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். இவர்களைத் தவிரவும் பிறிதொரு வகையான படைப்பாளிகள் ஈழ இலக்கியப் பரப்பில் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.. இவர்களது படைப்புகள் ஈழ சமூகத்தின் தற்போதைய கூடார்த்த நிலைமையை முன்வைக்கும் படைப்புகள். வுில்வரத்தினம், புஷ்பராஜன், நட்சத்திரன் செவ்விந்தியன்;, செழியன், திருமாவளவன் போன்றவர்களை இவ்வாறான படைப்பாளிகள் எனலாம்.
தேசிய விடுதலைப் போராட்டம் என்பது இரு வகைகளில் அணுகப்படுகிறது. முதலாவதாக ஓடுக்கப்பட்ட மக்களின் கலாச்சார அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான ஜனநாயகக் கோரிக்கை என்பதாக இதனைப் பாரப்பது. இரண்டாவதாக பின்-புரட்சிகர சமூகங்கள்,பின்-சோவியத் சமூகங்கள் போன்றவற்றின் அதிகாரமையம், சீரழிவு, ஒடுக்குமறை போன்றவற்றின் அடிப்படையில் இதனகை¢ காண்பது. நடசத்திரன் செவ்விந்தியன் விடுதலைப் போராட்;டத்தினால் இழந்து பட்ட வாழ்வின்; அனுபவங்களை முன்னிலைப்படுத்துகிறார். செழியனும் திருமாவளவனும் பின்-புரட்சிகர சமூகங்களின் ஒடுக்குமறைத் தன்மை தற்போதைய நிலையிலேயெ ஈழத்தில் தோன்றியிருப்பதை விமரி;சனத்துக்கு உள்ளாக்குகிறார்கள். வில்வரத்தினம், மு.புஷ்பராஜன் போன்றவர்கள் தமது கருத்தியல் நிலையாமையை கவிதையில் கூடார்த்த மொழியில் ( ( ideological uncertanity in to poetic obscurity) வெளியிடுகிறார்கள். ஆதிக்கம் பெற்றிருக்கும் இயக்கத்தின் மனித உரிமை மீறல்களை சில கவிதைகளில் இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். சமவேளையில் ஈழவிடுதலைப் போராட்டம் என்பதனை ஜனநாயத்திற்கான அவா எனும் வகையில் திட்டமாகத் தமது கவிதைகளில் முன்வைக்கிறார்கள்.
3.
துரோகங்கள், வலிகள், தோல்விகள், மனவிகசிப்பு, தரிசனம் போன்றன சொந்த வாழ்வுக்கு மட்டும் உரியதல்ல. எமது நம்பிக்கைளுக்கும் உரியது. நம்பிக்கைகளை அரசியல் என்று சொன்னாலும் சரி, கருத்தியல் என்று சொன்னாலும் சரி, அர்த்தங்கள் மாறுபடுவதில்லை. அகமும் புறமும் பிரிவுபடாத கவிதைகள் இவ்வகையிலான விடுதலையை அல்லது விமோசனத்தையே மேவிச்சென்று எமக்குள் கொண்டு தருகிறது. புஷ்பராஜனின் கவிதைகளையும் இந்தப் பின்புலத்திலிருந்துதான் என்னால் பார்க்கமுடிகிறது.
இன்னமும் எத்தனை நாட்கள்
யன்னல் ஓரமும்
வீதியில் தேடிடும் விழிகளும்
என்கிற மு.புஷ்பராஜனின் கவிதை வரிகளை அவரது மீண்டும் வரும் நாட்கள் தொகுப்பிலிருந்து வாசிக்கிறபோது அவரது அறை தெரிகிறது. இலண்டன் பின்ஸ்பரி பார்க் சுரங்க இரயிலில் இறங்கி, குரோச் என்ட் போகிற பேருந்தில் அமர்ந்து, கவனமாக நியூ பீகன் புத்தகக் கடையின் கண்ணாடி ஜன்னலில் ஏதேனும் புதுப் புத்தகம் தெரிகிறதா எனப் பார்க்கத் தலைசாய்த்து இயலாமல் கடந்து, தலைநிமிர்கிறபோது மணிக்கூண்டு அருகில் பேருந்து தரிக்கும். பாதையின் அப்புறம் நடந்து கடந்தால், இரண்டு நிமிடத்தில் இலைகள் பரப்பியிருக்கும் வாசல் கடந்து மணியடித்தால் சொன்னபடி கதவைத் திறந்து விட்டு, சுழல் படியேறி அறைக்குச் சென்று கொண்டிருப்பார் புஷ்பராஜன். போனவர்தான் அவரிடம் முதலில் பேச்சுக் கொடுக்க வேண்டும். பிறகு பொறி பற்றிக் கொள்ளும்.
மு.புஷ்பராஜன் ஈழக் கவிஞர் சிறுகதையாசிரியர், சினிமா விரும்பி, உலக இலக்கிய வாசிப்பு அனுபவம் மிக்கவர், ஸ்டாலினியம் குறித்து, பின் புரட்சிகர சமூகத்தின் மனித உரிமை மீறல் குறித்துப் பேசுபவர் என்பன அனைத்துக்கும் அப்பால் முதலில் எனக்கு அவர் நண்பர். படைப்பிலக்கியத்தைப் புறநிலையில் வைத்து அணுகுதல் என்கிறதில் ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கு நம்பிக்கையில்லை. எழுத்தை விட வாழ்க்கைதான் பிரதானம். அருகிருந்து பார்க்கும் போது சில வேளை சம்பந்தப்பட்ட மனிதர் தொடர்பான பிரம்மைகள் கலைந்த போதும், மனிதனைப் புரிந்துகொள்ளவும், அதன்வழி அவன் படைப்பினை இன்னும் ஆத்மார்த்தமாகப் புரிந்து கொள்ளவும் அது உதவுகிறது என்பது எனது அனுபவம்.
புஷ்பராஜனுக்கு தான் பிறர் பால் மேற்கொள்ளும் லெளகீக நடைமுறைகள் சார்ந்து திட்டவட்டமாக வரையறைகள் உண்டு. அதனை அவர் சம்சயமற்று தெளிவாகச் சொல்லிவிடுவார். அந்நிலைபாடு அவரிடம் துாரத்தை உருவாக்குவதை விடவும், நெருக்கத்தையே உருவாக்கியிருக்கிறது. நெருக்கடி காலங்களில் மெளனம் கொடுமையானது. புஷ்பராஜன் அப்படியான சங்கடங்களை எனக்குத் தந்ததில்லை. வெளிப்படையாகப் பேசுவதற்கு நெஞ்சுரமும் வஞ்சகம் இல்லா மனமும் தெளிந்த சிந்தையும் வேண்டும். இதுவெல்லாம் நண்பராகப் புஷ்பராஜனிடம் நான் கண்ட ஆதார குணங்கள். அவருடைய காதல்கள், அவருக்கு விருப்பமான ஏழுத்தாளர்கள், விருப்பமான தமிழ் நடிகை, தான் பார்த்த படங்கள் என உடனுக்குடன் என்னிடம் பகிர்ந்து கொள்வார்.
கலைஞுர்களின் சுதந்திரம், பின் புரட்சிகர சமூகங்களில் அதிகார வர்க்கத் தோற்றம் போன்றவை குறித்தெல்லாம் ஆழந்த பிரக்ஞை கொண்டவர் அவர். கடலோடும் வாழ்க்கையை நெஞ்சுருகச் சொல்வார். நிலம் உயிரோடும் நினைவோடும் நம்மைப்பிணைக்கிறது. ஈழ விடுதலைப் போராட்டம் அடிப்படையில் நிலத்திற்கானது. இழந்துபட்ட நிலத்திற்கானது. இதன் பொருட்டே நிலமும் தாவரங்களும் நிலவும் சோளகக் காற்றும் ஈழக் கலைஞுர்களால் மறக்கமுடியாததாக ஆகிறது. கவிதையை தொப்பூழ்க்கொடியின் வீச்சத்துடன் நம்மை உணரச்செய்ய இதனால்தான் அவர்களால் முடிகிறது.
இற்றுப்போகும் விதைகளுள்ளே
இடுங்கி இருந்த தளிர்கள் விரிந்தன
பொய்யாய் உறைந்த படிவுள்;
பொசியும் நீரின் அசைவு
என நிலத்தின் ஈரமும் பொசிவும் அவரது பெரும்பாலுமான கவிதைகளில் வெளிப்படுகிறது. பிரிவு இந்தத் தொகுதியின் கவிதைகளில் பிரதானமான பிரச்சினைகயாக இருக்கிறது. நிலம், மனைவி, காதலி, நண்பன், தோழன், என பிரிவு குறித்த கவிதைகள் புகலிட வாழ்விலிருந்து மீட்டப்பெறுகிறது..
ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் நிரந்தரமாக மு.புஷ்பராஜனுடன் உறைபவர்கள். மனிதர்களோடு அன்பு பாராட்டவும், சிக்கலான மரபு மீறிய தருணங்களில் மனிதர்களிடம் பரிவு கொள்ளவும் இலக்கியம் மிக நுட்பமாக சொல்லித் தருகிறது. சாதாரணமாகத் தோன்றும் நொடிகளின் இடையில் பிரபஞ்ச வெடிப்பாகவே கலைஞனின் மனம் செயல்படுகிறது. ரோஜா பூப்பதைப் பார்ப்பதற்காக விடிய விடிய விழித்திருக்கும் சிறுமியின் மனம் போன்றது கலைஞனின் மனம். புஷ்பராஜனின் கவிதைகளில் அவரது காதல் தெரிகிறது, கடலோடும் வாழ்வில் அவர் பெற்ற தாள லயம் புரிகிறது. ஏழ்மையின் உள்ளில் கசியும் பாசமும் ஈரமும் தெரிகிறது. அழிவுக்கு எதிரான வஞ்சினம் தெரிகிறது. பீனிக்ஸ் பறவையின் சிறகடிப்பு தெரிகிறது. இருள் அழிந்து ஒளி பெருகி பேய்களின் கொண்டாட்டம் அடங்கி மறுபடி சத்தியம் வாகை சூடும் எனும் நம்பிக்கையும் தெரிகிறது.
நம்பிக்கை நோக்கிய நொடிகளின் இடைவெளியில் தோன்றும் ரணமும் சோகமும் அறிந்தவர் புஷ்பராஜன். ஸ்டாலினியத்தின் நீட்சி குறித்து அறிந்தவர் புஷ்பராஜன். ஒளிக்கு நிழலும் உண்டு என்பதனை அறிந்தவர் புஷ்பராஜன். நிழலின் தடம் இந்தக் கவிதைகளில் திட்டமாகப் பதிவுபெறவில்லையோ எனத் தோன்றுகிறது. இதற்கான காரணம் கருத்தியல் கூடார்த்தத்தின் தொடர்ச்சி கவிதையின் கூடார்த்தமாக வெளிப்படுவதுதான் எனச் சொல்லமுடியும். செங்கோல், மீண்டும் வரும் நாட்கள், வெல்பவர் பக்கம் போன்றன இத்தகைய அனுபவம் தரும் கவிதைகள். இந்தக் கூடார்த்தம்தான் புஷ்பராஜனின் கவிதைக்கு நிரந்தரத்தனமையையும் வழங்குகிறது.
இடிபாடுகளிடையிலும்
ஏரிந்த கருகிய
புராதனச் சின்னங்களிடையிலும்
கபாலங்களால் சமைந்த
சிம்மாசனத்திற்காய்
எலும்புகளால் உருவான
செங்கொல் அமைந்தது
என அவர் எழுதுகிறபோது கவிஞனின் தீரக்கதரிசனம் இது எனப் புரிந்து கொள்ள முடிகிறது. இனம் மொழி மதம் என அனைத்தும் தாண்டிய காரணங்களினால் அமையும் நிறுவுனங்கள் அனைத்தும்; குறித்த காலம் மீறிய தூர தரிசனம் இது. புிரிவு, புகலிட வாழ்வின் துயர், நிலம் குறித்த நினைவகள் போன்ற பொதுவான ஈழக்கவிதைகளின் தன்மைகளுடன் புஸ்பராஜனின் கவிதைகள் கொண்டிருக்கும் பிறிதொரு மிக முக்கியமான பண்பு அவரது காத்திரமான கவிதைகள் சிலவற்றில் வெளிப்படுகிறது. அப்பின்பின் அடிநாதம் கருத்தியல் நிலையாமை என்பதனை நான் அழுத்தமாகச் சொல்ல வேண்டும். புஷ்பராஜனின் கவிதைகள் பிற ஈழக் கவிகளிடமிருந்து வேறுபடும் புள்ளியும் இதுதான் என்று நினைக்கிறேன்.
60 இந்திய ரூபாய்கள் விலையில், சந்தோஷின் உயிர்ப்பான அட்டை வடிவமைப்புடன், தமிழியல் இப்புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகத்துடன் இணைந்து மிக நேர்த்தியாகப் பதிப்பித்திருக்கிறது. மு.புஷ்பராஜனையும் அவரது படைப்பு மனம் பிரவேசிக்கும் பிரதேசங்களையும் அறிந்தவன் எனும் அளவில், தொகுப்பிலுள்ள அவரது கவித்துவத்தின் பன்முக பரிமாணங்களை அறிந்தவன் எனும் அளவில், மு. பொ. தன் முன்னுரையில் வகுக்கும் எல்லைகள் கவிதைகளை அனுபவிப்பதில் பாதிப்பை உருவாக்காதிருக்க வேண்டும் என வாசகனாக நான் விரும்பினேன். அதனை நான் கடந்து வந்திருக்கிறேன் என்பதனை என் வாசிப்பின் இறுதியிலும் நான் உறுதிப்படுத்திக் கொண்டேன்.
—-
yamunarn@yahoo.com
- தொடர்ந்து ஒலிக்கும் குரல் – (வெங்கட் சாமிநாதனின் உரையாடல்கள் )
- பெரியபுராணம் – 36
- நினைவிருக்கிறதா ?
- உயிர்த்தேன்
- வடகிழக்கில் ஒரு புதிய குரங்கினம் -100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு-
- மனிதகுலம்: உலகின் மிகக்கொடிய சுரண்டல் கும்பல்-குற்றஞ்சாட்டுகின்றனர் விஞ்ஞானிகள்
- பூகோள காந்த துருவங்கள் இடமாற்றம், துருவ முனையில் விண்ணிற ஒளித் தோரணங்கள் [Geomagnet Poles Reversal, Arctic Auroras] (8)
- மீண்டும் வரும் நாட்கள் :மு.புஷ்பராஜன் கவிதைகள்
- அதிர்ச்சியும் ஆற்றாமையும் (சுகுமாரனின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
- பார்த்திப ஆண்டு உதயம்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-6
- கீதாஞ்சலி (18) உன்னைத் தேடும் போது … ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- என்ட வீடும் அப்புன்டேயும் கறுப்பு
- அவளால்…!
- பரிமளத்திற்குப் பதில்மடல்
- தமிழவன் கட்டுரை பற்றி…
- இனவாத ஈவெரா ?
- அன்புள்ள ஆசிரியருக்கு
- பால்வினைத் தொழில்
- ஹினா- மட்சுரி
- ஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்
- கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 1
- ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது!
- இருந்ததனால்….
- பாம்புகள்
- சேதி வந்தது
- சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை
- பிம்ப உயிர்கள் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- மழலைச்சொல் கேளாதவர் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- Pope John Paul II
- தமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்
- கண்கள்
- தமிழ் அறியாத தமிழர்கள்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – சுபாஷ் சந்திர போஸ்
- சிந்திக்க ஒரு நொடி – விட்டு விடுதலையாகி
- சிந்திக்க ஒரு நொடி – சாஸனம் பொய்த்ததா, மானுடம் பொய்த்ததா ?
- இதற்காக இருக்கலாம்!
- பயணம்
- முன்னேறு
- மகள்…
- உயிரினினும் இந்தப் பெண்மை இனிதோ ?