மின்சாரக் கூட்டமைப்புக் கோப்பு துண்டிப்பாகி வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் நீண்ட இருட்டடிப்பு (2003 August 14 Power Grid Failure)

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா


ஒளிமின் விளக்கைக் குருடாக்க,

ஓடும் நகர் யந்திரத்தை முடமாக்க

மின்னல் காத்திருக்கும் விண் கூரையில்!

சூறாவளி நீந்திவரும் கடற் பாதையில்!

பூகம்பம் கூத்தாடும் அடித்தள மீதினில்! அன்றி

மூர்க்கர் ஒளிந்திடுவர் முடுக்கு மூலையில்!

பனிப்புயல், பனிமழை, மனிதப் பிசகு, யந்திரப் பழுது

தவிர வேறினி இடர்கள் உண்டா ?

முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் உதயம் முதல், உலகெங்கும் வாழும் நவீன நாகரீக மக்கள் யாவரும் மின்சக்தி பூதத்தின் விந்தை விசைகளுக்கு அடிமைகளாகி விட்டோம்! மின்சக்தியின் தொடர்பு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப் படாத மாந்தர் பூமியில் பார்க்கப் போனால் மிக, மிகக் குறைவு! மின்சார ஓட்டம் அற்றுப் போனால் நகரத்தை அல்லும் பகலும் இயக்கிக் கொண்டிருக்கும் அனைத்து யந்திரச் சக்கரங்களின் நாடித் துடிப்புகள் நின்று விடும்! மனித உயிர்கள் நிலைத்திட உடலில் இரத்த ஓட்டம் எப்படி முக்கியமானதோ, அப்படி அவசியமானது ஒரு நகரின் நாடித் துடிப்புக்கு மின்கம்பிகளில் ஓடும் மின்சக்தி பரிமாற்றம்! மின்சாரத்தைப் பரிமாறும் கூட்டனுப்புக் கோப்புகள் [Power Transmission Grids] ஏதோ ஒரு விபத்தால் துண்டிக்கப் பட்டால், நகரின் அனுதின வாழ்க்கை நாசமாகி, நகரம் நரகம் ஆவது உறுதி!

இதுவரை வட அமெரிக்க வரலாற்றில் குறிப்பிடத் தக்க முறையில், மின்சக்தி திடாரென இழப்பாகி நான்கு பெரும் இருட்டடிப்புகள் நேர்ந்துள்ளன! 1965 ஆம் ஆண்டில் நவம்பர் 9 இல் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட மாபெரும் மின்சக்தி இழப்பும், இருட்டடிப்பும் நியூ யார்க் நகர மக்களை பெரும் இடர்களில் தள்ளியது! அதனால் நியூ யார்க், நியூ ஜெர்ஸி, நியூ இங்கிலாந்து, பென்ஸில்வேனியா ஆகிய மாநிலங்களில் 25 மில்லியன் மக்கள் இன்னலுற்றனர். 1977 ஜூலை 13 இல் நேர்ந்த மின்சார இழப்பில் நியூ யார்க் நகரில் 9 மில்லியன் மாந்தர் 25 மணி நேரம் துன்புற்றனர். அடுத்து 1996 ஆம் ஆண்டு ஆகஸ்டு 11 இல் மேற்கு மாநிலங்கள் ஒன்பது, மெக்ஸிகோ நாட்டின் சில பகுதிகள் பாதிக்கப் பட்டன! சுமார் 4 மில்லியன் மக்கள் 10 மணி நேரம் மின்சக்தி இன்மையால் சிரமப்பட்டார்கள்! ஆனால் சமீபத்தில் 2003 ஆகஸ்டு 14 இருட்டடிப்பில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, கனடா அமெரிக்க ஆகிய இரண்டு நாடுகளிலும் எல்லாவற்றுக்கும் சிகரமாக 50 மில்லியனைத் தாண்டிவிட்டது! இருட்டடிப்பால் உண்டாகிய நிதி இழப்பு பல பில்லியன் டாலரைத் தாண்டும் என்று மதிப்பிடப் படுகிறது!

வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் மாபெரும் இருட்டடிப்பு!

மனித நாகரீகம் கண்ணிமைப் பொழுதில் நூறு வருடத்துக்கு முன்பு பின்னோக்கிச் செல்ல ஒன்பது வினாடிகள்தான் எடுத்தன! அமெரிக்காவின் ஓஹையோ மாநில மின்சாரப் பரிமாற்றுக் கம்பிகளில் மின்னழுத்தம் [Voltage] ஏறி இறங்கி, அமெரிக்கா கனடாவின் வடகிழக்கு கூட்டமைப்பு துண்டிக்கப் பட்டது! 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி மாலை 4:11 மணிக்கு அமெரிக்கா, கனடா ஆகிய இரண்டு நாடுகளிலும் ஒரே சமயத்தில் 50 மில்லியன் மக்களுக்குப் பல மாநிலங்களில் மின்சாரப் பரிமாற்றம் திடாரென அற்றுப் போய் பெரும் இன்னலுக்குள் சிக்கினர்! எதிர்பாராதவாறு அந்த மின்சாரக் கம்பிகளில் எதிர்மின்னோட்டம் [Reversal Flow of Current] ஓட ஆரம்பித்து, முன்னோட்ட மின்னழுத்தை முற்றிலும் நிறுத்தி விட்டதாக அறியப்படுகிறது! மின்கணனி கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் [Computer Controlled Systems] சட்டெனக் குறுக்கிட்டுக் கனடா, அமெரிக்கா நாடுகளில் 100 மின்சார உற்பத்தி நிலையங்களை ஒன்றன் பின் ஒன்றாய் வெட்டி விட்டன!

அதன் பின் பல மணி நேரங்கள் கழித்து மெதுவாகத்தான் மின்சாரத் தொடுப்புகள் அளிக்கப் பட்டன. மின்சாரக் கூட்டனுப்புக் கோப்பு [Power Transmission Grid] அற்று விட்டதால், ஓடிக் கொண்டிருக்கும் மின்சக்தி நிலையங்கள் மின்னாற்றலை அனுப்ப வழியின்றி நிறுத்தப் பட்டன! அமெரிக்காவில் 7 அணுமின் நிலையங்கள், கனடாவில் 12 அணுமின் நிலையங்கள் நின்றன! அணுமின் நிலையங்கள் அணுப்பிளவு நஞ்சுகள் மிகையாகிச் சுய நிறுத்தமாகும் போது [Reactor Poison Shutdown], மீண்டும் ஆரம்பிக்க 36 மணி நேரம் தாமதமாகும்! கூட்டமைப்புக் கோப்பு மின்னாற்றலை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ள சமயத்தில் சாதாரண ஆயில், நிலக்கரி மின்சக்தி நிலையங்களை திரும்பவும் இயக்க ஆரம்பிப்பது எளிது!

பாதிக்கப்பட்ட மாநிலங்கள் அமெரிக்காவில் ஏழு: நியூ யார்க், நியூ ஜெர்ஸி, ஓஹையோ, பென்ஸில்வேனியா, மிச்சிகன், மாஸசுஸெட்ஸ், கனெக்டிகெட், கனடாவில் அண்டாரியோ ஒரு மாநிலம். அமெரிக்காவில் ஒரே சமயத்தில் 21 மின்சார நிலையங்கள் அற்று விடப்பட்டு, மின்சக்தி அனுப்ப வழியற்றுப் போயின! அமெரிக்காவில் ஒரே சமயத்தில் 21 மின்சார நிலையங்கள் அற்று விடப்பட்டு, மின்சக்தி அனுப்ப வழியற்றுப் போயின! அண்டாரியோ மாநிலத்தில் மட்டும் 10 மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டனர்! ஆட்டவா முதல் வின்ட்ஸர் வரை மின்சக்தி நிறுத்தம் ஆனது! அமெரிக்காவில் பெரிய நகரங்கள் நியூ யார்க், டெட்ராய்ட், கிளீவ்லாண்டு [New York, Detroit, Cleveland] ஆகியவை முற்றிலும் மின்சாரப் பரிமாற்றம் இழந்தன! வட அமெரிக்காவில் உள்ள மொத்த மின்சார நிலையங்கள்:10,000. அவற்றில் பாதிக்கப் பட்டு நின்றவை: 100. மின்சக்தி நிலையங்களில் 22 அணுமின்சார நிலையங்கள். மின்சாரக் கூட்டிணைப்புகளின் சந்திப்பு எண்ணிக்கை: 37. மிகை மின்னழுத்தப் [High Voltage] பரிமாற்றக் கம்பிகளின் நீளம்: சுமார் 1 மில்லியன் கி.மீடர்.

அந்த மாநில வீதிகளில் மின்விளக்குகள் அணைந்து போயின! ஆபீஸ் அறைகளில் ஏர்கண்டிஷனர் சாதனங்கள் நின்று குளிர்ந்த காற்றடிப்பு மக்களுக்கு இல்லாமல் போனது! டெலிவிஷன் காட்சிகள், ரேடியோ அறிவிப்புகள் தடைப் பட்டு ஊமையாயின! நகரங்களில் அடித்தள வீதி ரயில்கள், மேல்தள மின்சாரக் கார்கள், மாளிகைகளில் தூக்கிகள் [Subway Trains, Street Cars, Elevators] யாவும் நிறுத்தமாயின! நியூ யார்க்கில் மூன்று விமான நிலையங்கள், டெட்ராய்ட், கிளீவ்லாண்டு, டொராண்டோ ஆகிய பெரு நகரங்களின் விமான நிலையங்கள் யாவும் முடமாகி விமானப் போக்கு வரத்துகள் தடைப்பட்டன! நியூ யார்க், டொராண்டோவில் ஓடிக் கொண்டிருந்த அடித்தள ரயில்கள் அப்படியே நின்று போனதால், ஆயிரம் ஆயிரம் பயணிகளை இருண்ட இடங்களிலிருந்து, போலீஸார் காப்பாற்ற வேண்டியதாயிற்று!

இருட்டடிப்பால் நகரங்களில் ஏற்பட்ட சிக்கல்கள், சிரமங்கள்

இருட்டடிப்பு ஏற்பட்டது இது முதல் தடவை அன்று! மக்கள் சங்கட நிலைமைகளைச் சிறிது நாட்கள் சகித்துக் கொள்ளக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்! இதுபோல் மின்சக்தி எத்தனையோ தரம் அற்றுப்போய் உள்ளது! இதன் விளைவால் என்ன நிகழும் என்று மக்கள் ஓரளவு அறிந்திருந்த ஓர் இன்னல்தான் இது! ஆனால் நகர் நடுவே பணிபுரியும் ஆயிரம் ஆயிரம் புறநகர் நபர்கள் இருபது, முப்பது மைல்கள் மின்சார வண்டிகளின்றி எப்படிப் பயணம் செய்து, இல்லங்களை அடைவது ? தெருக்களில் எச்சரிக்கை நிற விளக்குகள் இல்லாமல், எப்படிக் கார்களை வீதியில் பாதுகாப்பாக ஓட்டிச் செல்வது ? நூற்றுக் கணக்கான அடுக்குத் தளங்களில் பணிபுரிவோர் கூட கோபுர, மாட மாளிகைத் தூக்கிகளில் எப்படி இறங்கித் தரைக்கு வருவது ?

அதுபோல் பல்லடுக்குத் மாடிகளில் குடியிருப்போர் ஆயிரக் கணக்கான படிகளில் எப்படி மூச்சைப் பிடித்துக் கொண்டு ஏறிச் செல்வது ? உண்டி விற்கும் கடைகள், உணவு தயாரிக்கும் ஓட்டல்கள் எவ்விதம் மின்சார மில்லாமல் உண்ணும் பண்டங்களைச் சமைப்பது ? அங்காடிகள் அனைத்தும் மின்சாரம் இல்லாமல் விற்பனைத் தொகையை எப்படி கூட்டுவது, கழிப்பது! வங்கிகளின் சுய இயக்க யந்திரங்களை எப்படிப் பயன்படுத்தி பணத் தொகுப்புகளைக் கணிப்பது ? சுருங்கச் சொல்லின் எல்லாச் சாதனங்கள் இருந்தாலும், இந்தக் கலியுகத்தில் மின்சக்தி இன்றேல் அவற்றை இயக்கிப் பயனடைய முடியாது! மனிதர் வாழ முடியாது!

2001 ஆண்டு செப்டம்பர் 11 இல் அமெரிக்கா பாதிப்பானதால், மின்சக்தி அறுப்பு பயங்கரவாதிகளின் துணிவுச் செயலாக இருக்கலாம் என்று பலர் முதலில் அச்சமுற்றார்கள்! ஆனால் அவர்களது அடாத செயலன்று எனப் பின்னால் தெரிய வந்தது! பெரிய நகரங்களில் ஆயிரக் கணக்கான பேர் தூக்கிகளில் மேலே போக முடியாமலும், கீழே இறங்க முடியாமலும் சிக்கிக் கொண்டு சிறையில் அடைபட்டார்கள்! அடித்தள வீதி ரயில்கள் நடுவே இருட் குகைகளில் நின்று போய், எப்புறமும் நகல முடியாமல் மாந்தர் மாட்டிக் கொண்டார்கள்! இருபது நிமிடங்களில் ரயில் பெட்டிகள் வெப்பமுற்று பலர் மூச்சு விட முடியாது திண்டாடினார்கள்! பிறகு பாதுகாப்புப் படையினர் வந்து அவர்களை மீட்க வேண்டியதாயிற்று.

அண்டாரியோவில் 200 மேற்பட்ட தொழிற்துறைச் சாலைகள் தற்காலியமாக நிறுத்தப்பட வேண்டிக் கொள்ளப் பட்டன! டொராண்டோ நகர வீதிகளில் கூட்டம் பெருகி மக்கள் பீதி, மனக் குழப்பம் அடைந்தனர்! நகரத்தின் 1773 போக்குவரத்து எச்சரிக்கை விளக்குகள் [Traffic Light Signals] குருடாகிக் கார்கள், பஸ்கள், மற்ற வாகனங்கள் தமது திசையில் செல்ல முடியாமல் தடங்கலாகித் தவித்தன! திரள் திரளாக மக்கள் நடை மேடைகளில், நடு வீதிகளில் ஆயிரக்கணக்கில் நடந்து செல்ல வேண்டியதாயிற்று! இருள் சூழ ஆரம்பித்தவுடன் காலித்தனமும், களவுக் குற்றங்களும் பெருகின. நியூ யார்க் புருக்லினில் சில இடங்களில் களவு போயின. அதன் ஆளுநர் [Governor] ஜார்ஜ் படாகி நியூ யார்க் மாநில மெங்கும் ‘அபாயக் காலநிலை அறிவிப்பு ‘ [State of Emergency] செய்தார்! கனடாவின் தலைநகரான ஆட்டவாவில் 23 குற்றக் களவுகள் பதிவாயின. டொராண்டோவில் 208 உடைப்பு நுழைவுகள் [Break-in-Entrances] போலீஸாரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன. டெட்ராய்ட்டில் இரவு 11 மணிக்கு மேல் வாலிபருக்குத் ‘தடைநடமாட்ட உத்தரவு ‘ [Curfew] அறிவிப்பாகி யிருந்தது!

ஓஹையோ கிளீவ்லாண்டில்தான் மிகப் பெரும் இன்னல் விளைந்தது. நீர்ச் சுத்திகரிப்புச் சேமிப்புக் கலன்களில் குடிநீர் மட்டம் கீழாகி, 1.5 மில்லியன் மாந்தருக்கு குடிநீர் வசதி கிட்டாமல் போனது. தேசிய பாதுகாப்பணி [National Guard] அழைத்து வரப்பட்டு, 6.3 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டியதாயிற்று! மின்சக்தி இருட்டடிப்பால் நகரத்தில் விமானப் பயணிகள் பலர் பாதிக்கப் பட்டார்கள்! அமெரிக்காவிலும் கனடாவிலும் 12 பெரும் விமான நிலையங்கள் மூடப்பட்டன! உள்நாட்டுப் பறப்புப் பயணங்கள் நிறுத்தப்பட்டு, வெளிநாட்டு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பம் செய்யப் பட்டன! ஏர் கனடாவின் மின்கணனிக் கட்டுப்பாடு மையம் [Computerized Control Centre] முடக்கமாகி, 500 பயணப் பறப்புகளுக்கு மேற்பட்டு நிறுத்தம் செய்யப்பட்டன. மருத்துவ மனைக்கு அனுப்பப்படும் அபாய நிலை நோயாளிகள், அபாய கால ஜனனிகள் அமைக்கப் பட்டுள்ள மனைகளுக்குத் திருப்பப் பட்டனர்.

மின்சாரம் பரிமாறும் கூட்டமைப்புக் கோப்பு எப்படி துண்டிக்கப்பட்டது ?

நூற்றுக் கணக்கான மின்சார நிலையங்கள் மின்சக்தி உற்பத்தி செய்து, தங்கு தடையின்றி, தவறின்றி பரிமாற்றக் கம்பிகளில் தொடர்ந்து அனுப்புவது, ஒரு தீரப் பொறியியற் கண்காணிப்புச் செயல்! அவ்வாறு மின்சக்தி அனுப்பும் பத்து இருபது கூட்டமைப்புக்களை ஒரு கோப்புக்குள் சேர்த்து இணைப்புத் தொடராக்கி [Power Grid Integration] மின்கணனிகள் மூலமாகக் கட்டுப்பாடு செய்து வருவது இன்னும் அரிய, கடினமான தீரச்செயல்! இந்த கூட்டமைப்புக் கோப்பு பல மாநிலங்களுக்கு, நாடுகளுக்கு மிஞ்சிய மின்சக்தியை விற்கலாம்; தேவையான சமயத்தில் பற்றாக்குறை மின்சக்தியை வாங்கிக் கொள்ளலாம்.

Cellular Phones Dead

மின்சாரம் கூட்டமைப்புக் கோப்பு எப்படி துண்டிப்பாது என்பது ஆராயப்பட்ட போது, கண்டறிந்தது இதுதான். முக்கியாகத் தூண்டியவை மூன்று தவறுகள்: 1. தொடர்பு கொள்ளாமை [Communication Failure] 2. மின்கணனி மென்னுழைச் சாதனப் பிசகு [Software Misuse]. 3. மின்சக்திப் பரிமாற்ற இழப்பு [Powerline Shutdowns]. இருட்டடிப்பு நாளான ஆகஸ்டு 14 இல் ‘மின்சக்தி உறுதிப் பரிமாற்றக் கூட்டாளி ‘ மிஸோ இயக்குநர் [Electricity Reliability Coordinator, Midwest System Operator (MISO)] இரண்டு முக்கிய முன்னுழைச் சாதனப் புகுத்தலில் [Two Softwares Installation: 1. Voltage State Estimator (VSE) 2. Real Time Contingency Analysis (RTCA)] தவறு செய்தார். VSE கூட்டமைப்புக் கம்பியில் உள்ள மின்சார அழுத்தத்தை அனுமானிக்கிறது. RTCA ஒரு கூட்டமைப்புக் கம்பி அறுந்திடும் போது, கோப்பில் மின்னழுத்தம் எப்படி மாறுபடும் என்பதைக் கணிக்கிறது.

அமெரிக்காவின் ஓஹையோ கிளீவ்லாண்டுக்கு அருகில் இருக்கும் ஒரு நிலக்கரி மின்சக்தி நிலையத்தில், இருட்டடிப்பு நாளான 2003 ஆகஸ்டு 14 ஆம் தேதி பகல் 1:30 மணிக்கு நின்று போய், கோப்பிலிருந்து விடுதலை அடைந்தது! முக்கியமான இந்த நிறுத்தம் மிஸோ இயக்குநருக்கு அறிவிக்கப் படாமல் போனது முதல் தவறு! அதைத் தவறாக மதிப்பிட்டு, பிழையான எண்ணிக்கையை RTCA இல் புகுத்தவே, பிழையான புது எண்ணிக்கை கிடைத்தது. இது இரண்டாவது செய்யப்பட்ட தவறு! பிழையான புது எண்ணிக்கையைப் புகுத்தி, இறுதியில் கூட்டமைப்பு நிறுத்தம் உட்படுத்தப் பட்டது! ஆனால் மிஸோ இயக்குநர் RTCA மீண்டும் தூண்ட மறந்து, பகலுணவு தின்னப் போய்விட்டார்! அதுதான் அன்று நிகழ்ந்த மூன்றாவது தவறு! ஆகவே இயக்குநர் செய்த மாறுபாடுகள் பூரணமாக உட்செலுத்தப் பட்டு இயங்க வில்லை!

அதே சமயம் FE இயக்குநர் [FirstEnergy Electricity Operator Companies] ஏக்ரன் ஓஹையோ கூட்டமைப்புக் கம்பிகளில் ஏற்பட்ட மின்னழுத்த ஏற்ற இறக்கங்களைச் [Voltage Fluctuations] சரியாகப் பதிவு செய்யவில்லை. நிலையம் நின்று இந்த ஏற்ற இறக்கங்கள் ஓஹையோ முழுவதிலும் இடர்களை உண்டாக்கி வருவதை, இயக்குநர்கள் அறியாமல் போனார்கள்! முடிவாக மாலை 1605 [EDT] மணிக்கு ஓஹையோ சாமிஸ்-ஸ்டார் கூட்டமைப்புக் கம்பி [OHIO Sammis-Star Line] நிறுத்த மடைந்ததுதான், ஒட்டகத்தின் முதுகை உடைக்க இறுதி வைக்கோல் [Final Straw] ஆனது! அதுவே சங்கிலித் தொடரியக்கமாகி நியூ யார்க், ஓஹையோ, மிச்சிகன், பென்ஸில்வேனியா, நியூ ஜெர்ஸி, அண்டாரியோ ஆகிய மாநிலங்களை இணைத்த கூட்டமைப்புக் கோப்பு முழுவதும் ஒவ்வொன்றாக அற்றுப் போக ஏதுவானது.

எதிர்கால மின்சக்திக் கூட்டமைப்புக் கோப்புகளின் சீரமைப்பு

வியாழக் கிழமை மாலையில் அற்றுப் போன மின்சக்திப் பரிமாற்றம் அமெரிக்காவின் பல நகரங்களில் அடுத்த நாள் வெள்ளிக் கிழமையே மீண்டது! ஆயினும் மின்சாரம் மீளாத நகர மக்கள் பலர் கனடாவின் அண்டாரியோவில் ஒரு வாரம் வரைப் படாதபாடு பட்டனர்! நின்று போன பனிரெண்டு அணுமின் நிலையங்களில் எட்டு நிலையங்கள் மூன்று நாட்களுக்குள் மீண்டும் இயங்க ஆரம்பித்தன.

மின்னாற்றல் கோப்புகள் திடாரென துண்டித்துப் போக வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க மாநிலங்களில் எங்காவது ஒரு பகுதியில் 13 நாட்களுக்கு ஒருமுறை மின்சக்தி முடையோ, பற்றாக்குறையோ ஏற்பட்டு மின்சாரம் அற்று விடப்படுகிறது! சென்ற 25 ஆண்டுகளில் நான்கு பெரும் இருட்டடிப்புகள் வட அமெரிக்கக் கண்டத்தில் ஏற்பட்டுள்ளன! கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்காவின் மின்சக்தித் தேவை 30% பெருகி யிருக்கிறது! அதன் ஆற்றல் திற மிகுதி 15% ஏறியுள்ளது! பழுதுபட்டுள்ள வட அமெரிக்க மின்சக்திக் கூட்டமைப்புக் கோப்பைப் [North American Power Grid] புதுப்பிக்கத் தேவையான நிதி மதிப்பீடு: 100 பில்லியன் டாலர்! நிதி ஒதுக்கப் பட்டாலும், காலம் இன்மையால் பெரும்பான்மையான மேம்பாடுகள் சேர்க்கப் படாமலே மின்சாரக் கோப்புகள் இயங்கி வருகின்றன! ஆகவே பழைய மின்சாரக் கூட்டமைப்புக் கோப்புகள் எப்போது புதுபிக்கப்படும் என்று அறிந்து கொள்வது கடினம்!

அமெரிக்க எரிசக்திச் செயலாளர், வில்லியம் ரிச்சர்டுஸன் [US Energy Secretary, Bill Richardson], கூறியது, ‘அமெரிக்கா சூபர் பவர் தேசம்! ஆனால் நமது மின்சக்தி பரிமாறும் கோப்புகள் மூன்றாம் மட்டநிலை உடையவை! நமக்குத் தேவை ஒரு புதிய கோப்பு ஏற்பாடு. ‘ பாதகம் அடைந்த கனடாவின் அண்டாரியோ மாநிலம், அமெரிக்க மாநிலங்கள் ஒன்று கூடி, மின்சாரக் கோப்புகளில் உள்ள பழுதுகளை நீக்கிப் புதுப்பிக்கப் படவேண்டும் என்றும், கோப்புகள் துண்டிக்கப் படாமல் நிலைத்து நிற்கப் பல்லடுக்குப் பாதுகாப்பு அமைப்புகள் இணைக்கப்பட வேண்டு மென்றும் சில தொழில் நிபுணர்களும், எரிசக்தி திட்ட ஆதரவாளிகளும் கருதுகிறார்கள்.

தகவல்கள்:

1. Power Unplugged Canada ‘s Weekly News Magazine, Maclean ‘s [Aug 25, 2003]

2. Time Weekly Magazine [Sep 1, 2003]

3. Ontario Blackout Blues Maclean ‘s Weekly [Sep 1, 2003]

4. Major Power Outage Hits New York, Other Large Cities [Aug 15, 2003]

5. Power Outage Reportedly Started in Cleveland Suburb in Ohio www.newsnet5.com/

6. Cleveland City Asks Residents to Conserve Energy www.newsnet5.com/

7. Lightning Blamed for Blackout, news24.com [Aug 15, 2003]

8. Power Cut, Nuclear Plants Closed www.news24.com/

9. Preventable Failures Caused US Power Blackout www.newscientist.com/ [Nov 20, 2003]

10 Blackouts Inherent in Power Grid By: Philip Ball [Nov 8, 2002]

****

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா