மார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து.

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

நரேந்திரன்.


ஏறக்குறைய எழுநூற்றி சொச்ச (1271) வருடங்களுக்கு முன்னால், தகப்பனார் நிக்கோலோ (Nicolo) மற்றும் தாய் மாமன் மாஃபேயோவுடன் (Maffeo), சீனாவை ஆண்டு கொண்டிருந்த குப்ளாய் கானின் (Kublai Khan) அரசவைக்குச் செல்லும் உத்தேசத்துடன், தேசாந்திரம் புறப்படுகையில் மார்க்கோ போலோவிற்கு பதினேழு வயது. கிட்டத்தட்ட இருபத்து நான்கு ஆண்டுகள் ஆசியாவெங்கும் சுற்றித் திரிந்துவிட்டுத் தனது தாய்நாடான வெனிசுக்கு வந்த போது (1295) அவரின் சொந்த வீட்டைக் கூட கண்டுபிடிக்க இயலாமல் தடுமாறுமளவுக்கு எல்லாமே உருமாறிப்போயிருந்தது. வெவ்வேறு ஆசிய மொழிகளில் பேசிப் பேசி, தாய்மொழி மறந்து போய், வார்த்தைகள் வராமல் தடுமாறிய மார்க்கோ போலோவை உறவினர்கள் நம்ப மறுத்ததுடன், வீட்டுக்குள் நுழையவிடாமல் விரட்டினார்கள்.

கடல் வழியாகவும், இன்றைக்கு வழக்கொழிந்து போன ‘Silk Road ‘ வழியாகவும் மத்திய ஆசியாவின் பல பகுதிகளைக் கடந்து சீனாவிற்குப் போன மார்க்கோ போலோ, குப்ளாய் கானின் விருந்தினராக பல ஆண்டுகள் அங்கு தங்கியிருக்கையில், தான் கடந்து வந்த பகுதிகளில் கண்ட, கேட்ட, உணர்ந்த பல்வேறு விஷயங்களைப் பற்றி விளக்கமாக எழுதி வைத்திருக்கிறார். 1298-ஆம் ஆண்டுவாக்கில் புத்தகமாக வெளிவந் த அவரின் பயணக் குறிப்புகள் (Marco Polo ‘s Description of the World) ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் விரும்பி வாசிக்கப்பட்டதுடன், அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் போன்றவர்கள் புதிய உலகத்தைக் கண்டறிய புறப்பட உதவும் ஒரு தூண்டுகோலாகவும் இருந்தது.

அந்நாட்களில் கீழை நாடுகள் பற்றிய அறிவு அதிகம் இல்லாதிருந்த பெரும்பாலான ஐரோப்பியர்கள், மார்க்கோ போலோ புளுகுவதாக நம்பினார்கள். எரியும் கருப்புக் கற்கள் (நிலக்கரி), காகிதப் பணம், மனிதத் தலையளவு இருந்க்கும் பருப்புகளைச் (தேங்காய்) சாப்பிடும் மனிதர்கள் போன்ற தகவல்கள் அவர்களுக்குக் கதைகளாகவே தெரிந்தன.

சுவாரசியமான பல அரிய தகவல்கள் மார்க்கோ போலோவின் குறிப்புகளில் விரவிக் கிடக்கின்றன. அத்தனையையும் பற்றி இங்கு எழுதுவது இயலாத காரியம். தென்னிந்தியா பற்றி அவர் எழுதியவற்றை மட்டும் இங்கு அளித்திருக்கிறேன். பகுத்தறிவது அவரவர் பொறுப்பு (Hey, I ‘m just a messenger!).

கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் குப்ளாய்கானின் விருந்தாளிகளிகளாக சீனாவில் தங்கி இருந்து விட்டு, 1292 தென் சீனாவிலிருந்து புறப்பட்ட மரக்கலங்கள் மூலம் இன்றைய சிங்கப்பூரைத் தொட்டுக் கொண்டு, சுமத்ரா தீவுகள் வழியாக, இலங்கையைச் சென்றடைந்தார் மார்க்கோ போலோ.

இலங்கையில் தங்கியிருக்கையில், மிக அரிதான, பெரியதொரு மரகதக்கல்லைத் தான் கண்டதாக மார்க்கோ போலோ எழுதுகிறார். ஒரு சராசரி மனிதனின் கையளவு பருமனும், உள்ளங்கையளவு நீளமும் கொண்டிருந்ததாம் அந்த மரகதக் கல். இலங்கை அரசனுக்குச் சொந்தமான அக் கல்லைப் பற்றி, மார்க்கோ போலோவிற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் அங்கு பயணம் செய்த சீன யாத்திரிகர் யுவான் – சாங் (Hsuant-Sang) எழுதிய குறிப்புகள் தெரிவிக்கின்றன. புனிதமாக் கருதப்பட்ட ஒரு புத்த மத பகோடாவின் உச்சியை அலங்கரித்த அந்தப் பெரிய மரகதக் கல்லிலிருந்து வீசிய ஒளி இரவு நேரங்களில் நட்சத்திரத்தைப் போல மினுக்கியதாகக் குறிப்பிடுகிறார் மார்க்கோ போலோ. இக்கல்லைப் பற்றிக் கேள்விப்பட்ட குப்ளாய் கான் அதனைக் கேட்டதாகவும், எந்த விலை கொடுத்தாலும் அக்கல்லைக் கொடுக்க இயலாெ தன இலங்கை அரசன் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.

இலங்கையிலிருந்து புறப்பட்ட மார்க்கோ போலோவின் மரக்கலம், இந்திய தீபகற்பத்தின் தென்முனையைச் சுற்றி, மேற்குக் கரையோரமாக பயணித்தது. தென்னிந்தியாவின் பல பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட மரக்கலத்திலிருந்து கரைக்கு இறங்கிய மார்க்கோ போலோ, அங்கு தான் கண்டவற்றைக் குறித்து பின் வருமாறு எழுதுகிறார்,

‘இந்த அரசாட்சியில் (kingdom) வாழும் மக்கள் உருவ வழிபாடு செய்பவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலோனோர் காளை மாடுகளைத் (ox) தொழுகிறவர்களாகவும், அங்ஙனம் தொழுவது மிகவும் புனிதமானது என்ற நம்பிக்கையும் உடையவர்களாகவும், எக்காரணத்தைக் கொண்டும் காளை மாடுகளைக் கொல்வது மிகவும் பாவச் செயலாகக் கருது வருகிறார்கள். உலகின் செல்வத்தையெல்லாம் ஈடாகக் கொடுத்தாலும் மாட் டிறைச்சியை உண்ணுவது மிகவும் கொடுஞ்செயல் என்ற எண்ணம் இம்மக்களிடம் பொதுவாகக் காணக்கிடைக்கின்றது.

காளைகளை அலங்கரிக்க அதன் கொம்புகளுக்கு நடுவே, முன் நெற்றியில், வெண்கலத்தால் செய்யப்பட்ட அழகிய, சிறிய காளை உருவங்களைத் தொங்கவிடுகிறார்கள். அம்மாட்டின் சாணத்தை எரித்து, அதன் சாம்பலை உடலின் பல பகுதிகளில் பூசிக் கொள்கிறார்கள். நமது நாட்டில் கிறிஸ்துவர்கள் தெளித்துக் கொள்ளும் புனித நீருக்கு (holy water) எவ்விதத்திலும் அது குறைவானதில்லை. உலகில் வாழும் எந்த ஜீவரா சியையும் துன்புறுத்தவோ அல்லது கொல்லவோ நினைக்காதவர்கள் அம்மக்கள் என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும். சின்னஞ்சிறிய ஜீவராசிகளான ஈ, எறும்பு போன்றவற்றிற்கும் ஆத்மா இருப்பதால் அவற்றைக் கொல்வது மகாபாவம் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும், ஜீவகாருண்யம் மிக்கவர்களாகவும் இருப்பதைக் கண்டேன்.

அதையும் விட, நிலத்தில் புதிதாக விளைந்த எந்த ஒரு பொருளையும், அது காய் கறிகளோ அல்லது வேர்களில் விளைந்த பொருட்களையோ, அவர்கள் உட்கொள்வதில்லை. புதிய காய்கறிகளுக்கும் ஆத்மா உண்டு என்ற நம்பிக்கையினால். எனவே, எல்லா விளை பொருட்களும் உலர்த்தப்பட்ட பின்பே உண்ணப்படுகிறது அந்நாட்டில்.

அனைத்து மக்களும் தரையில் அமர்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நாட்டை ஆளும் அரசர்களும், பிரபுக்களும் கூட தரையில் அமர்ந்தே தங்களின் அன்றாட பணிகளைச் செய்கிறார்கள். அவ்வாறு அமர்வது, அம் மண்ணில் பிறந்த, மண்ணால் ஆன, மண்ணிற்கே திரும்பச் செல்லும் சாதாரண மனிதர்கள், பூமித்தாய்க்குச் செய்யும் மிகப் பெரிய மரியாதையாக அது கருதப்படுகிறது. ‘

எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பாக மார்க்கோ போலோவால் கண்டெழுதப்பட்ட பல இந்து சமயச் சடங்குகள் இன்றும் தொடர்வதுதான் ஆச்சரியமானதொரு செய்தி. இந்திய துணைக்கண்டத்தின் மேற்குக் கடற்கரையில் முதல் முதலாக கடலுக்குள் முத்துக்குளிப்பதைத் தான் கண்டதாகக் குறிப்பிடுகிறார் மார்க்கோ போலோ.

தென்னிந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரமாக, மலபார் பகுதிகளில் பயணித்த மார்க்கோ போலாவின் கப்பல் ‘மோட்டுப்பள்ளி ‘ (Motupalli) என்ற இடத்தில் நங்கூரமிட்டது. அப்பகுதியில் காணப்பட்ட பள்ளத்தாக்குகளிலிருந்தும், குகைகளிலிருந்தும் அளவிட முடியாத அளவிற்கு வைரங்கள் கிடைத்து வந்தன. மனிதர்கள் எளிதில் இறங்கவியலாத சில ஆழமான பள்ளத்தாக்குகளுக்குள் இருந்தும் கூட மிக நூதனமான முறையில் வைரம் எடுக்கப்பட்டது என்கிறார்.

‘முதலில், இரத்த்தில் ஊற வைக்கப்பட்ட மிகப் பெரிய இறைச்சித் துண்டங்கள் வைரம் இருக்கும் பள்ளத்தாக்களுக்குள் எறியப்பட்டன. அவ்வாறு எறியப்பட்ட இறைச்சித் துண்டுகளுக்குள் வைரங்கள் பொதிந்து கொள்ளும். அப்பகுதி மலைகளில் வசித்து வந்த ஏராளமான வெண் கழுகுகள், அவ்விறைச்சித் துண்டங்களைக் கால்களில் கவ்விக் கொண்டு தங்களின் கூடுகளை நோக்கிப் பறந்து செல்லும். தன் கூடு நோக்கிப் பறந்து   செல்லும் கழுகுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள், அங்கு விரைந்து செல்வார்கள். கழுகு இறைச்சியைத் தின்று முடிக்கும் முன் அக் கழுகுகளை விரட்டி விட்டு, இறைச்சியில் பொதிந்திருக்கும் வைரங்களை எடுத்து வருவார்கள். சிலர் கழுகின் எச்சங்களைத் தேடி எடுப்பார்கள். இறைச்சியுடன் விழுங்கிய வைரங்களை அவ்வாறு கைப்பற்றப்பட்டன. ‘

தென்னிந்தியாவின் மலபார் கடற்கரை வழியாக பயணிக்கையில், அங்கு வாழ்ந்த முனிவர்களைப் பற்றி அவர் எழுதிய குறிப்புகள்.

‘மலபார் நாட்டிற்குப் பொதுவான மதச் சம்பிரதாயம் இருந்தது. கடுமையான விரத அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்த அவர்கள் யோகிகள் என அழைக்கப்பட்டனர். சாதாரண மனிதர்களை விடவும் அதிக ஆண்டுகள், 150இலிருந்து 200 ஆண்டுகள் கூட, உயிர் வாழ்ந்தார்கள். அத்தகைய வயதிலும் அவர்களின் உடலில் தளர்ச்சி எதுவுகில்லாமல் இளைஞர்களைப் போல உற்சாகத்துடனும், சுறு சுறுப்புடனும் இறைவனுக்குத் தொண்டு செய்வதிலும், ஆலயங்களுக்கும், மடங்களுக்கும் தேவையான பணிகளைச் செய்வதிலும் இடையறாது ஈடுபட்டிருந்தார்கள். சிறிதளவே உணவு உட்கொள்வதாலும் (சிறிதளவு அரிசியும், பாலும் மட்டும்), மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்வதினாலும் அவர்களுக்கு இந்த சக்தி வந்திருக்க வேண்டும்.

தினமும் காய்ந்த பெரிய இலைகளில் அவர்கள் உணவு உண்டார்கள். பச்சை இலைகளுக்கு உயிர் இருப்பதாக அவர்கள் நம்புவதால் அவற்றை உபயோகிப்பது பாவச் செயலாகக் கருதப்பட்டது. எனவே காய்ந்த இலைகளை மட்டுமே உபயோகப்படுத்தினார்கள். பல வித சக்திகள் அவர்களுக்கு இருந்தாலும் பாவமான காரியங்கள் எதனையும் செய்ய அவர்கள் துணிவதில்லை. பாவ காரியங்கள் செய்வதை விடச் செத்து மடிவதே மேல் என்று எண்ணம் கொண்டவர்களாக அந்த யோகிகள் இருந்தார்கள்.

இயற்கை உபாதைகளின் போது அவசியமேற்படுகையில் அவர்கள் கடற்கரைக்குச் சென்று, தண்ணீருக்கு அருகில் இயற்கை உபாதைகளைத் தீர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். காரியம் முடிந்த பின், கடல் நீரிலால் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டபின், ‘சங்கதி ‘யின் மீது கடற்கரை மணலைப் தூவி, ஒரு சிறிய குச்சியின் உதவியுடன் அதனைச் சுவடு தெரியாமல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். காரணம் வினவியபோது அவர்கள் அளித்த பதில் எனக்கு வியப்பேற்படுத்தியது. மேற்படி ‘சங்கதி ‘ புழுக்களை உருவாக்குகிறது. அவ்வாறு ஏற்பட்ட புழுக்களைச் சூரியனின் கதிர்கள் கொன்றுவிடும். மனிதனின் உடலிலிருந்து உண்டான ஒரு பொருளால் உண்டான புழுக்கள் இவ்வாறு மடிவது பாவமான காரியமாகும். அதனைத் தவிர்க்கவே நாங்கள் இவ்வாறு செய்வது அவசியமாகிறது. எனவே, புழுக்கள் உருவாவதைத் தடுப்பதே சாலச் சிறந்த காரியம். அப்புழுக்கள் மடிவதைத் தடுத்து மனச்சாந்தியடைவதே இக்காரியத்தின் முக்கிய நோக்கம் ‘ என்றார்கள் அந்த யோகிகள்.

**

ஆரம்பத்திலேயே குறிப்பிட்டபடி, மார்கோ போலோ எழுதியவற்றை அனைவரும் நம்பி விடவில்லை. வெனிஸ் நகரத் தெருக்களிலே அவர் நடந்து செல்கையில், சிறுவர்கள் அவரைப் பின் தொடர்ந்து, ‘மார்கோ போலோ இன்னொரு பொய் சொல்லு! ‘ என்று கேலி செய்வார்களாம். மார்கோ போலோ சொன்னவை அனைத்தையும் பனிரெண்டாம் நூற்றாண்டைச் சாதாரண வெனிஸ் நகரத்து மனிதர்களால் புரிந்து கெ ாள்ள இயலவில்லை. அவரின் மரணத்திற்குப் பின்னால் (ஜனவரி 8, 1324) வெனிஸ் நகரக் கோமாளிகள் மார்க்கோ போலோவைப் போல உடையணிந்து, நம்பவியலாத பல கதைகளைச் சொல்லித் திரிந்தார்களாம்.

மரணப்படுக்கையில் இருந்த மார்க்கோ போலோவை அணுகி, ‘இப்பொழுதாவது நீங்கள் சொன்னவை அனைத்தும் பொய் என்று உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்; அப்பொழுதான் உங்களின் ஆத்மா சாந்தியடையும் ‘ என வேண்டிய அவரின் நண்பர்களுக்கு அவர் சொன்ன, ‘I have not told half of what I saw ‘ என்ற பதில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. எது எவ்வாறாயினும், அவரின் Description of the World புத்தகம் பிற்கால ஐரோப்பிய சந்ததியினருக்கு உலகைப் புரிந்து கொள்ள உதவியாயிருந்தது என்பதே வரலாறு.

(ஆதாரம்: The Travels of Marco Polo By Mary Hull)

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்