மாந்தரென்றால்….

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

கி. சீராளன்.


விளக்கில் திரி ஏறி

சுடரொன்று ஒளிர

சுற்றிலும் மாந்தரெல்லாம்

வாய்பொத்தி

கூழை உடல் செய்து,

விட்டில் பூச்சிகளாய்

வீணாய் போனீரே,

சுடருக்குள் ஓர்

இருள் மையம் அறியீரோ.

மட்டில் மதியின்றி

முன்னேரு போனவழி

மொத்தமாய் போனவரே

சாமியே இல்லையென்ற

சான்றோனுரை புரிந்ததில்லை.

மானிடரை தெய்வமென்னும்

மடமைக்கும் துணிந்தீரே.

பட்டத்து யானை

மாலையிட்ட குழந்தை

அரசவை செல்லவில்லை

ஆலயத்தில் பிரதிஷ்டை.

வெயில் முகம் பார்த்ததில்லை

வேர்வைத்துளி அறிந்ததில்லை

கூலிசெய் வாழ்வில்லை.

பசியொரு சொல் தெரியாது

அவமானங்கள் புரியாது

கொழுத்த சோறும்

நிறைந்த காசும்

அனுபவங்கள் தருவதில்லை,

அறிவென்பதோ ஏட்டு சுரை.

உறவுகள் கிடையாது

பொறுப்பென்பதோ யாது விலை.

ஒரு மந்திரக் காரனுக்கு கூட

சில தந்திரம் வேணுமடா.

எளியோரே

எதனினின்று ஏமாந்தீர்!

கூடொருமுறை மாறி

காமம் கற்றதாய் சொன்னீரே

வித்தையை சொன்னீரால்

கூடுகள் பலப்பல தேவையய்யா,

கொலு வீற்றிருக்கும்

தூய சரீரம்

கறைபட தேவையில்லை.

(punnagaithozhan@yahoo.com)

punnagaithozhan@yahoo.com

Series Navigation

கி.சீராளன்

கி.சீராளன்