மாத்தா- ஹரி முற்றும்) அத்தியாயம் -47

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


– ஹரிணியைக் கடைசியா நீ எப்போ பார்த்த கிருஷ்ணா!

– கடந்த ஜனவரிமாதம் 6ந்தேதி. கிட்டத்தட்ட மூன்றுவாரங்கள் ஆகப்போகுது. அவள் தேவசகாயத்தைச் சிறையில் சென்று பார்த்த அன்றைக்கு என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். அன்க்கிள் உங்களைப் பார்க்கணுமே என்றாள், ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வாயேன் என்றேன், சொன்னதுபோல காலையில் வந்தாள். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நடந்ததனைத்தையும் சொன்னாள், நீ எழுதி வைத்திருந்த குறிப்புக்களையெல்லாம் கொடுத்தாள். சாப்பிட்டுவிட்டுப் போம்மா, என்று நானும் என் ம¨னைவியும் வற்புறுத்தினோம், இன்னொரு முறை அவசியம் வருகிறேனென்று சொல்லிவிட்டுப் போனவள்தான். பத்தாம் தேதி காலையில் போலிஸார் என்னைத் தொடர்புகொண்டு விசாரித்தார்கள், அவர்களிடம் என்ன நடந்ததென்பதைத் தெரிவித்தேன். ஹரிணி பணிபுரிகிற டிராக்குலா.கம் அலுவலகத்தைச் சார்ந்தவர்கள்தான் காவல்துறைக்குத் தெரிவித்திருக்கிறார்கள், திங்கட்கிழமை அவள் அலுவலகத்திற்கு வந்திருக்கவேண்டும், வராமற் போகவே அவளது மொபைலில் தொடர்பு கொள்ளலாமென்று நினைத்திருக்கிறார்கள், முடியவில்லை. செவ்வாய்க் கிழமையும் அதுதான் நிலைமை. அவளுடன் பணியிலிருக்கிற கமிலியென்ற பெண் ஹரிணியின் அப்பார்ட்மெண்ட்டுக்குச் சென்று பார்த்திருக்கிறாள், பக்கத்தில் குடியிருப்பவர்களை விசாரித்திருக்கிறாள், அந்நேரத்தில் ஹரிணியைத் தேடிக்கொண்டு, கிரைம் பிரான்ச்சிலிருந்து இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்திருக்கிறார். அவரிடம் கமிலி விஷயத்தைத் சொல்லியிருக்கிறாள். ஹரிணி விரும்பியேகூட தலைமறைவாகியிருக்கலாமென போலீஸ் நினைக்கிறது.

– தேவாவை விசாரித்தார்களாமா?

– விசாரித்திருக்கிறார்கள், அவன் தனக்கெதுவும் தெரியாதென்கிறானாம். “அவள் வளர்ந்த பெண், எதிலும் தெளிவாக இருக்கிறாள். அவள் வளர்ச்சியில் என் பங்கென்று எதுவுமில்லை. திடீரென்று என்னைப் பார்க்க வருவாளென்று எதிர்பார்க்கவில்லை, ஒன்றிரண்டு நிமிடங்கள் இருவருமே மௌனமாக இருந்தோம். எங்களுக்குள் பெரிய இடைவெளி இருந்தது, எனக்கு அவள் மகள், அவளுக்குக்கு நான் தந்தை என்ற உணர்வு இருவருக்குமேயில்லை, எங்கள் உரையாடலும் கைதியொருவனுக்கும், உறவினரல்லாத பார்வையாளர் ஒருவருக்குமான உரையாடல் போலத்தானிருந்தது, அதனடிப்படையில் பொதுவாகச் சில விஷயங்களைப் பறிமாறிக்கொண்டோம், எனது தரப்பில் சொல்லவேண்டியதைச் சொன்னேன், அவள் பேசியது குறைவு, ஆனால் தீடீரென்று காணாமற் போனது, வியப்பாக இருக்கிறது, அதற்குக் காரணம் என்னவாக இருக்குமென்று என்னால் ஊகிக்கவும் இயலவில்லை.”, என்று முடித்துக்கொண்டானாம்.

– நீ என்ன நினைக்கிற கிருஷ்ணா?

– நான் என்ன நினைக்கிறது பவானி.. போலீஸ் நினைக்கிறமாதிரிதான் நானும் நினைக்கிறேன். அவள் சின்னக் குழந்தை இல்லை. பயப்படுவதுபோல எதுவும் நடந்திருக்காதென்று நம்புவோம்.. எங்க வீட்டுக்குத்தான் ஹரிணி கடைசியா வந்ததாச் சொல்றாங்க. அவளுடைய கார் வீட்டில் இருக்கின்றது, அவள் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாகத் தெரியவில்லை. கமிலிங்கிற பெண்கிட்டே, இந்தியாவுக்குப் போகணுங்கிற ஆசை நிறைய இருக்கென்று சொன்னாளாம், போலீஸாரால்கூட எந்த முடிவுக்கும் வரமுடியலை.

– எங்க குடும்பம் சபிக்கப்பட்டதென்று, அடிக்கடிப் பாட்டி புலம்பிக்கொண்டிருப்பாள். அவளைக் கிண்டல் பண்ணுவேன், அது உண்மையா கிருஷ்ணா?

– இதிலே சொல்வதற்கு என்ன இருக்கிறது. கேள்வி கேட்கிறபோதே உனது குரல் சுரத்தின்றி ஒலிக்கிறது. உன்னை மாதிரியே ஹரிணியும் தைரியசாலியானப் பெண்ணென்று என்னால உறுதியாச் சொல்லமுடியும், வீணா எதையாவது கற்பனை செய்துகொண்டு எதற்காகச் சஞ்சலப்படணும். .

– ஞாயிற்றுக்கிழமை உன் வீட்டிற்கு வந்திருந்த ஹரிணி, தேவாவைச் சந்திச்சதைப் பற்றி எதுவும் சொல்லலியா?.

– சொல்ல விரும்பவில்லை. ஆனா நிச்சயம் முக்கியமானதொரு சந்திப்பாக அது இருந்திருக்கணும், எனக்கேக்கூட தேவாவை பார்க்கணும் போலிருந்தது. இக்கதைப் புனைவில் உங்களுக்கெல்லாம் என்ன பங்களிப்புண்டோ அதற்கு ஈடான பங்களிப்பு அவனுக்கும் இருக்கிறது, அவனைக் குறித்து இதுவரை நான் எழுதியதெல்லாமே பிறர் சொல்ல கேட்டதுதான், பவானி, எலிஸபெத், பிலிப்பென்று- நீங்கள் சொன்னதைவைத்தே வாசக நண்பர்களுக்கு தேவ சகாயத்தைப் பற்றிய ஒரு தவறானப் பிம்பத்தை உருவாக்கிவிட்டேனோ என்ற குற்ற உணர்வு எனக்கு இருக்கிறது. குற்றவாளியென்று ஒருவனைச் சொல்ல நமக்கு உரிமையுண்டு, ஆனால் தண்டிக்கிறபோது அவன் தரப்பு சாட்சியங்களையும் கணக்கில் எடுத்துகொள்ளவேண்டும், தவறிவிட்டேன். வாசக நண்பர்களில் யாரேனும் ஒருவர், இக் கடைசி அத்தியாயத்திலிருந்து கதையை ஆரம்பித்து முதல் அத்தியாத்திற்குச் செல்வாரென்றால், எனக்கு மகிழ்ச்சி, உங்கள் கூட்டத்திலிருந்து விலகிக்கொண்டு நான் சார்பற்றுச் சொல்லியிருக்கிறேனென திருப்தியுறலாம். ஹரிணி ஏன் தேவசகாயம் சந்திப்பைக் குறித்து வாய் திறக்கவில்லை, அவன் தரப்பிலும் சொல்ல இருக்கிறது சொல்லி இருக்கலாம், ஆனால் நாம் என்ன செய்யறோம், உண்மையின் அடிப்படையில் எவரையும் தண்டிப்பதில்லை, சாட்சிகளைத் தயாரித்து அதற்கேற்பச் சட்டங்களைத் தேடி, தண்டிக்கிறோம். ஏதோ தேவசகாயத்துக்கு ஆதரவா நான் பேசுவதாக நினைத்திடாதே. மாத்தா ஹரிக்கு விதிக்கபட்டத் தண்டனையும் சரி, உனக்கான தண்டனையும் சரி, எல்லாமே உண்மைக்கு எதிரானதுதான், சாட்சிகளை அடிப்படையாகவைத்து வழங்கப்பட்ட தீர்ப்புதான். இக்கதையில் ஹரிணியுமொரு ஜூரி, ஆனால் பெரும்பான்மை ஜூரிகளின் அபிராயத்திலிருந்து வேறுபட்டவள். தொடக்கத்தில் தேவ சகாயத்தைப்பற்றிய அவளது கருத்து பிறரால் திணிக்கப்பட்டது, பிறகு கதையின் இறுதியில் உண்மை அவளுக்குத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறது, தொட்டாளா என்பது கேள்வி. ஹரிணி தேவா சந்திப்புச் சம்பந்தமா நான் எதுவும் எழுதாதற்குக் காரணம் ஹரிணி என்னிடத்தில் எதுவும் சொல்லலை. சுவாரஸ்யத்துக்காக ஆங்காங்கே சில பொய்களைச் சொல்லியிருந்தாலும், முடிந்தவரை, உங்களிடத்திலும் வாசக நண்பர்களிடத்திலும் ஓரளவு நேர்மையாக நடந்துகொண்டிருக்கிறேன். உண்மை இல்லாத புனைவு ஏது. அடுத்த மாதத்தில் தேவசகாயத்திற்கு விடுதலண்ணு கேள்விபட்டேன், பத்மாவோடு சேர்ந்து வாழப்போவதாக, ஹரிணி சொன்னாள். வேறு என்னவெல்லாம் தந்தையும் மகளும் பேசியிருப்பார்கள் நிறைய கேள்விகளுக்குத் தேவசகாயத்திடம் விடையிருக்கலாம், ஹரிணியுடைய எதிர்பாராத இம் முடிவுக்கு தேவசகாயம் சந்திப்பு ஏதோவொரு வகையில் காரணமென்றுமாத்திரம் இப்போதைக்குச் சொல்ல முடியும்..

– தேவ சகாயத்தை அன்றைய தினம் சந்தித்த வேறொரு பெண்மணி யார் தெரியுமா?

– யார் மத்மஸல் எலிசபெத் முல்லரா?

– ஆமாம், ஆனால் அச்சந்திப்பின் நொக்கம் என்ன என்பதுதான் புரியலை.

– ஏன்..

– கடந்த இரண்டு வாரங்களா அவளும், விதவையான மதாம் குளோதும் சேர்ந்து வாழ்வதாகக் கேள்விபட்டேன்.. மாத்தா ஹரிச் சங்கத்துக்கு இப்போது தலைவர் யாரென்று நினைக்கிற, மத்மஸல் எலிசபெத் முல்லர். பவானி! உன்னுடைய இறப்பு எப்படித்தான் நடந்தது? யார்தான் காரணம்?

– குளோது அதிரியனைக் கொலை செய்தவர்கள்தான் என்னையும் செய்திருக்கவேண்டுமென்று நீதானே எழுதியிருந்த?

– அப்படித்தான் நம்பினேன். மதாம் குளோது தனது கணவன் கொலைக்குக் காரணமான, தன்னுடைய சகோதரன் பிலிப் பர்தோவும், அவனது கூட்டாளி அருணாசலமுமே பவானியின் கொலைக்கும் காரணமென்று விசாரணையில் சொல்லியிருந்தாள். நீ தீக்கிரையானபோது, உனது கைப்பிடியிலிருந்த கொலையாளியின் தலை முடியை DNA பரிசோதனைக்கு அப்போது உட்படுத்தத் தவறியிருக்கிறார்கள், அதைச் செய்து, பவானி கொலையாளிகளைத் தீர்மானிக்கமுடியுமென்று போலீஸ் நம்பியது. ஆனால் சோதனைச் சாலையில் கிடைத்த முடிவு பிலிப் பர்தோவையும், அருணாசலத்தையும் பவானி கொலையிலிருந்து விடுவித்துவிட்டது, இப்போது மதாம் குளோது, தன் சகோதரன் பிலிப், பவானியிடம் கொண்டிருந்த காதலால் அவனைக் கொலைசெய்திருக்கலாமென நினைத்தாளாம்.

– ஆக என்னைக் கொலைசெய்தவர்கள் யாரென்ற மர்மம் இன்னமும் நீடித்திருக்கிறதென்று சொல்.

– நீதான் சொல்லேன்.

– என்னுடையக் குறிப்புக்களையெல்லாம் ஹரிணி உன்னிடத்தில் கொடுத்தாகச் சொன்னாயே, அதிலே நான் எதுவும் எழுதிவைக்கவில்லையா?

– இருந்தால் உன்னை ஏன் கேட்கிறேன்?

– அக்குறிப்புகளில் என்ன எழுதி வைத்திருக்கிறேனோ, அதைத் தவிர வேறு தகவல்கள் என்னிடத்திலில்லை.

– ஹரிணி காணாமற்போனதுமட்டுமல்ல, வேறு இரண்டு கேள்விகளுக்கும் எனக்கு விடை கிடைக்கவில்லை

– சொல்லேன்..

– ஒன்று: பவானியின் இறப்புக்கு யார்தான் காரணம்? தற்கொலையா? கொலையா? கொலையென்றால் யார்காரணம்? தேவசகாயம், குளோது, பிலிப், அருணாசலம் நால்வருக்குமே காரணங்கள் இருக்கின்றன. இரண்டு: தேவசகாயம் குளோது அதிரியனிடம் கொடுத்தது உண்மையென்றால் மாத்தா ஹரியின் மண்டையோடு எங்கே, யாரிடத்தில் இப்போது இருக்கிறது? இங்கே குளோது அதிரியனுக்கு இடமில்லை, தேவசகாயம், பிலிப் பர்தோ, அருணாசலம் அல்லது இந்த மூவருமே அல்லாத வேறொருவன்

– பவானி எதற்காக இப்போ சிரிக்கிற?

– சித்த முன்னேதான் ஏதோ உண்மையை ஆதாரமாகக்கொண்டு எவரையும் தண்டிப்பதில்லையென்று சொன்ன, அதை நியாயப்படுத்துவதுமாதிரி இப்போ வரிசையாப் பேர்களை சொல்ற, மத்மஸல் எலிஸபத்தை மறந்துட்டியே

– உண்மைதான் எலிஸபெத்தைப்பத்தி நாம யாருமே சரியாகப் புரிஞ்சுக்கலைண்ணுதான் சொல்லணும். எல்லாத்துக்குமே அவள்கூட காரணமாக இருக்கலாம்.

– பார்த்தியா சட்டென்று அவளை பலிகொடுக்கப் பார்க்கிற, இந்தப்பழக்கம் நம்ம எல்லோருக்கும் இருக்கிறது, நி¨றைய பேசின, உன்னாலேலேயே நேர்க்கோட்டுலே நிக்க முடியலைப் பாரு. எலிஸபெத்தையும் பட்டியலில் சேர்க்கணுமென்றுதான் சொன்னேன், தீர்ப்பை வழங்கச் சொல்லலை.

– கிருஷ்ணா.. என்ன தனியாக நின்றுகொண்டு புலம்பற.

– வா பவானி, இத்தனை நேரம் உன்னோடுதான் பேசிக்கொண்டிருந்தேன். வாழ்க்கை முழுதும் இரண்டு உரையாடல்களைத் தொடர்ந்து நடத்துகிறோம். இரண்டாவது உரையாடல், பொய்கலவாதது, அந்தரங்கமானது. நாமே நமக்கென்று நடத்தும் உரையாடல், இங்கே பரஸ்பர புரிதல்களில் சிக்கல்கள் இருப்பதில்லை, மறுப்புகள் இடம்பெறுவதில்லை. மழையின்போது ஒரு குடையின்கீழ் ஆணும் பெண்ணும் நடப்பதுபோல, நனையவும் கூடும், நனையாமல் இருக்கவும் கூடும். மனமும் உடலும் சிலிர்த்துக்கொள்ளும் அனுபவம் முக்கியம். சட்டென்று குறுக்கிட்டுவிட்டாய். வந்ததும் நல்லது, புறப்படலாமா, இப்போதே புறப்பபட்டால்தான் விடிவதற்குள் போய்ச்சேரமுடியும். மற்றதைப் பயணத்தின்போது பேசலாம்

– எங்கே புறப்பட்டுட்ட?

– நமது மண்ணுக்கு. இருவருமே மேற்கில் இருக்கிறோம், கிழக்குத்திசைக்காய்ப் பயணிக்கவேண்டும். அந்த மண்ணுக்கு உன்னையும் என்னையும் நன்றாகத் தெரியும், வழித்துணைக்கு யாருமில்லையே என்று நினைத்தேன், தனித்த பயணியாக எத்தனை நாட்களுக்கு? இங்கே காட்சிகள் செல்லரித்துவிட்டன, சொற்கள் மௌனித்துவிட்டன, சப்தம் பாழ்பட்டுவிட்டது. காடு கரம்பை என்றாலும் அது நமக்கான வெளி., திண்ணையென்றாலும், இருக்கவே இருக்கிறது வேப்பமரக்காற்று.

பவானி இம்முறை வாய் திறக்கவில்லை, நான் பேச மௌனமாக தலை அசைத்தபடி நிற்கிறாள். நிலவொளியை மறைத்த மேகம், அவள் முகத்தில் வழிந்தது, கண்கள் தளும்பி இருந்தன. நிச்சயமற்ற உடல், பின்புலத்தில் மின்விளக்கு கம்பங்கள், ஒளியில், பிர்ச், மிமோசா மரங்களின் கலப்பில் கல்லறை. “முட்புதர்கள் மண்டிய, கருவேல மரங்கள் படர்ந்த மயானத்தின் சுகம் அதிலுண்டா? நிதானமாக இது குறித்து வழியில் அவளிடம் பேசவேண்டும்…”

(முற்றும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா