மாத்தா ஹரி அத்தியாயம் -39

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


கடந்த ஒரு மணிநேரமாக ஹரிணி பாரீஸின் கிழக்கு இரயில்வே சந்திப்பில் காத்திருக்கிறாள். ஐநூற்று இருபத்தைந்து கி.மீட்டர் தூரத்திற்கு, இரண்டு மணிநேரம் இருபது நிமிடங்களைப் பயண நேரமாக எடுத்துக்கொண்டு பாரீஸில் இறக்கியிருந்தது. ஏமாற்றம், சொல்லியதுபோல அரவிந்தன் வரவில்லை. காத்திருந்து அலுத்துவிட்டு காப்பி பாருக்குச் சென்று, ஒரு எஸ்பிரஸ்ஸோ என்றாள். ஆவி பறக்கவந்தது. எடுத்து மெல்ல உறிஞ்சினாள். தவறு அவளுடையது. அரவிந்தனிடம் தொலைபேசியில் தன் வருகையை உறுதிபடுத்தியிருக்கவேண்டும். இரண்டு நாட்களுக்கு முன் அவனோடு பேசியிருந்தாள். தன்னால் மறுநாள் வர இயலாதென்றால், ஞாயிறன்று வருவேனென்று அவனுக்குத் தெரியுமில்லையா என நினைத்துக்கொண்டாள். அவ்வப்போது தொடருந்துகள் வந்து நிற்பதும் பயணிகள் இறங்கி எதையோ தவறவிட்டவர்கள்போல ஓடுவதும் நடக்கிறது. பயணிகளை வரவேற்க வந்திருந்தவர்கள் தழுவிக்கொள்கிறார்கள். அதோ அங்கே, இவளுக்கு பத்து மீட்டர் தூரத்தில் நிற்கிற ஜோடி கடந்த இருபது நிமிடங்களாக முத்தமிடுவதும், ஒரிரு விநாடிகள் உரையாடுவதும், பின்னர் மீண்டும் முத்தமிட்டுக்கொள்வதுமாக இருக்கின்றது. கியோஸ்க்குகளில் செய்தித்தாளை உருவி நாசூக்காய் நின்றபடி வாசிக்கும் கனவான்களின் தடித்த கம்பளியாலான கறுப்பு அங்கியில் மழைத்துளிகள் முத்துமுத்தாய் ஒட்டிக்கிடக்கின்றன. அவர்கள் தலையில் அணிந்திருந்த இறகுபோன்ற மெல்லிய தொப்பிகளிலும் ஈரத்தினைப் பார்க்க முடிந்தது.

அரவிந்தன் வரவில்லை, மணி ஒன்பதரையைத் தொட்டிருந்தது. குழப்பமாக இருந்தது. கைத்தொலைபேசியை எடுத்து, பதிவு செய்து வைத்திருந்த அவனது எண்ணைக் கண்டுபிடித்து முயற்சிசெய்தாள். மறுமுனையில் பதிலில்லை. என்ன செய்வதென்று யோசித்தாள். தேவையில்லாமல் மனதில் பதட்டத்தினை வளர்த்துக்கொண்டிருந்தாள். இரயிலைவிட்டு இறங்கி பெருங்கூடத்துக்கு வந்தவுடன் வலது புறம் கண்ணிற்படுகிற காப்பி பார் அருகே காத்திருப்பேன் என்றான். அங்குதான் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக இவளிருந்தாள்.

அவன் இனி வரமாட்டான் என்று உள் மனம் சொன்னது. என்ன செய்யலாம் என்று யோசித்தாள். பேச்சு வாக்கில் வாங்கி வைத்திருந்த அவன் முகவரி டைரியில் இருந்தது. கையிலெடுத்துக்கொண்டாள். டாக்சி பிடித்து போய் பார்க்கலாம் எனத் தீர்மானித்தவளாக கைப்பையை தூக்கி முதுகில் மாட்டிக்கொண்டு வெளியில் வந்தாள். டாக்ஸி நிறுத்தத்தில் ஹரிணி வந்து நின்றதும் மற்றொரு டாக்ஸி டிரைவருடன் உரையாடிக்கொண்டிருந்த டிரைவர் வேகமாய் நடந்து வந்து காரில் அமர்ந்தான். இவள் பின் கதவைத் திறந்துகொண்டு அமர்ந்தாள். டிரைவரிடம் கையிலிருந்த முகவரியைப் படித்துக்காட்டினாள். ‘அய்யோ அந்தப் பகுதியா? கடந்த இரண்டு நாட்களாக கலவரப்பட்டுக் கிடப்பது தெரியாதா?- என்று பதில் வந்தது. வேறு வழியில்லை நான் அவசியம் போயாகவேண்டுமென்றாள். தமுளா? என்றுகேட்ட டாக்ஸிடிரைவருக்கு தலையை ஆட்டி ஆமாம் என்றாள். எந்த ஊர்? என்று மறுபடியும் கேட்டான். இந்தியா என்றாள். எனது மனைவிகூட தமுள்தான், மொரீஷியஸ்காரி, அவள் கொஞ்சம் கொஞ்சம்’ தமுள் பேசுவாள். அடுத்தவருடம் இந்தியாவுக்குப் போகிறோம், அவளுடைய மூன்னோர்கள் தஞ்சாவூர் பக்கமாம். எனக்கு ஐஸ்வர்யராய் நடித்த படங்களென்றால் விரும்பிப்பார்ப்பேன், தொணதொணவென்று பேசிக்கொண்டிருந்தான். ஹரிணியின் நினைவுகளில் முழுக்க முழுக்க அரவிந்தன் இருந்தான்.

வில்லியெ-லெ-பெல் பகுதி வந்ததும், டாக்ஸி டிரைவர் பயந்ததில் நியாயமிருப்பதுபோல தெரிந்தது. எரிக்கப்பட்ட வாகனங்கள், கருகிய நிலையில் இரும்புக் கழிவுகளாகக் குவிந்திருந்தன, கடைகளின் அலங்கார முகப்புகக் கண்ணாடிகள் நொறுங்கிக் கிடந்தன, பாலர் பள்ளியொன்றும், நூலகமுமுங்கூட தீக்கிறையாகி இருந்தன. வழியெங்கும் நடந்து முடிந்த கலவர யுத்தத்தின் சிதைவுகள், அர்த்தமற்ற கோபத்தின் பின் விளைவுகள், தங்கள் இருப்பை உதாசீனப்படுத்தும் சமூக நீதிக்கெதிரான வக்கற்றவர்களின் கொந்தளிப்பு. அடிவயிற்றில் நுரைத்துக்கொண்டு பதட்டம் பொங்கி உடலெங்கும் வழிகிறது. இருக்கையின் முனையில் உட்கார்ந்திருந்தாள். இழப்புக்குத் தயாராக இரு என்கிற மனதின் எச்சரிக்கை இப்போது தெளிவாகக் கேட்கிறது.

டாக்ஸி ஒரு நான்குமாடி கட்டிடத்திற்கெதிரே நின்றது. மீட்டரைப் பார்த்தாள். 30 யூரோவைக்காட்டியது. அவனிடம் கொடுத்துவிட்டு இறங்கினாள். அரவிந்தன் ஆறாவது மாடியிலிருப்பதாகச் சொல்லி இருந்தான். லிப்ட் இல்லை. நான்காவது மடியை அடைந்தபோது சிறிது நேரம் நின்று மூச்சுவாங்கிக்கொண்டாள். மீண்டும் தளங்களை எண்ணியவாறு மேலே மேலே என்று நடந்தாள் குறைந்தது பத்துமுறையாவது அழைப்பு மணியை உபயோகித்திருப்பாள். திறக்கப்படவில்லை, கதவைத் தட்டினாள். இவளுக்குப் பின்புறமிருந்த ஜாகையின் கதவு சட்டென்று திறந்து பாதியில் நின்றது. ஹரிணி திரும்பிப் பார்த்தாள். ஒரு அரபுநாட்டு ஆசாமி, நாற்பது வயதிருக்கலாம்.. எதற்காக இப்படி ஞாயிற்றுக்கிழமை அதுவுமா தொந்தரவு கொடுக்கிற. அங்கே ஒருத்தருமில்லை. எல்லாம் முடிஞ்சுது.

– அரவிந்தன்

– ஆமாம் அந்தப் பேர்கொண்டவந்தான்.

– என்ன நடந்தது? எப்படி?

– இராத்திரி ஒன்பது மணிக்குமேலே டூ வீலர்ல வந்திருக்கிறான். ஏதோ திருட்டுலே சம்பந்தப்பட்டதாகவும், போலீஸ் துரத்திவந்ததாகவும் சொல்றாங்க.

– அவன் அப்படிபட்ட ஆளில்லை மிஸியே.

– அப்படித்தான் இங்கே எல்லோரும் சொல்றாங்க. இதற்கு முன்னாலேயும் இந்தப் பகுதியிலே அநியாயமா ஆப்ரிக்கப் பையன்கள் இரண்டுபேர் செத்துபோனாங்க. வெள்ளிகிழமை இரவு நடந்தது. இன்றைக்கு மத்தியானம் அடக்கம் செய்யறாங்க, வரவேண்டிய நேரத்துக்குத்தான் வந்திருக்க.

– விபத்தென்றால் எங்கேயாவது மருத்துவமனையிலே அல்லவா சேர்த்திருக்கணும்.

– எதற்கு? அதனாலே என்ன லாபம். விபத்து நடந்த இடத்திலேயே இறந்திட்டதாகச் சொல்றாங்களே.

– அடக்கம் எங்கே நடக்க இருக்கிறது?

– இங்கே தான் பக்கத்துலே. வடக்குக் கல்லறைண்ணு ஒன்றிருக்கிறது, இங்கிருந்து ஒரு கி.மீட்டர் தூரம் போகணும். அநேகமாக இந்நேரம் சர்ச்சில இருந்து பிணம் கல்லறைக்குப் போய்கொண்டிருக்கணும். நேற்று அவனுடைய சகோதரியென்று கூறிக்கொண்டு ஸ்ட்ராஸ்பூரிலிருந்து பெண்மணியொருத்தி வந்து தங்கியிருந்தாள், உன் பேரு ஹரிணியா?

– ஆமாம்.

– எப்படியும் நீ வருவேண்ணு சொன்னாங்க. சாவி கொடுத்துவிட்டுப்போனாங்க. செய்தியைச் சொன்ன அரபு நாட்டவன் குடித்திருந்தான். அவன் சொல்வது கற்பனையாக இருக்கக்கூடாதா, முன் கதவு திறக்கபட்ட, கதவின் இடைவெளியில் புன்னகைத்தபடி அரவிந்தன் நிற்கிற அதிசயம் நடக்காதா? நாம் நினைத்தபடி நடக்கமுடியுமெனில் வாழ்க்கையில் சுவாரஸ்யமேது. கதவினில் கைவைக்க, திறந்துகொண்டது. மசாலாக்கள் வெள்ளம்போல வெளிப்பட்டு கூடத்தை நிறைத்தது.

– இனி இதுபோன்ற மசாலாக்களின் வாசத்தை நாங்கள் நுகரமுடியாது, அரபுநாட்டவன் தனக்குள்ள கவலையை அவளிடத்தில் தெரிவிக்கிறான். கதவு திறந்திருப்பதற்கு அவன் காரணமல்லவென்று சொல்லவந்தவன்போல,”

கதவுக்குபின்னே இருந்த அறை அத்தனை பெரிதாக இல்லை, அதுவே வரவேற்பு கூடமாகவும் இருந்தது, சுவர் அருகே படுக்க, உட்காரவென இரட்டை உபயோகநோக்குகொண்ட ஒரு சோபா. அதன்மேல் ஆண்களுக்கான உள்ளாடையொன்றும் லுங்கியொன்றும் கிடந்தது. மேசைமேல், சிறியதொரு தொலைகாட்சிபெட்டி, பக்கத்திலேயே, கணிப்பொறிக்கான திரை, மேசைமுழுக்க ஒழுங்கற்று சிதறிக்கிடந்த கடிதங்கள், பில்கள், இரண்டொரு இந்தி, தமிழ் டிவிடிக்கள்.. வெள்ளி பிரேமிட்ட கண்ணாடிக்குள் பற்கள் தெரிய அரவிந்தன் புன்னகைக்கிறான்

– ஹரிணி..

– ம்..

– உன்னோடு கொல்மாருக்கு வரமுடியாது அவசரமாக நான் பாரீஸ் போகவேண்டியிருக்கிறது அதைச் சொல்லிவிட்டுப் புறப்படலாமென்றுதான் வந்தேன் அங்கே என்ன செய்துகொண்டிருக்கிற? வெளியில் வா..

– நான் உடைமாற்றிக்கொண்டிருக்கேன். இரண்டு நிமிடம்பொறு?

அவனுக்குப் பொறுமையில்லை, கதவினைத் திறக்கிறான்- அறையிலிருந்த மின்சார விளக்கின் ஒளி சட்டென்று அவனது முகத்தில் விழுந்தது: மேலாடையைப் பற்களில் கடித்திருந்தாள், இடுப்பில் அணிந்த சட்டைக்கான பொத்தான்களை, இவனைக் கண்ட தடுமாற்றத்தில் இரண்டாவது முறையாக போடுவதற்கு அவளுடைய மெல்லிய விரல்கள் முயற்சிக்கின்றன, கைகள் அசைவுக்கேற்ப தோள்கள் வலப்புறமும் இடப்புறமும் அலைபோல எழுந்து அடங்குகின்றன. அவனுடைய கண்கள்; கால்கள், இடுப்பு, வயிறு, மார்பென்று ஒருமரமேறியின் லாவகத்துடன் ஊர்ந்து மஸ்காரா உலராத பெரிய கண்களில் வந்து நின்றன. அவனை உள்ளே அனுமதிப்பதா கூடாதா என்ற குழப்பத்தில் அவள். என்னவோ சொல்கிறாள், அவள்தான் வாய்திறந்து ஏதேனும் சொன்னாளா? இவனுக்குத்தான் மயக்கத்தில் காதில் விழவில்லையா? வெட்டவெளியில் கேட்கும் ஓசைபோல, ஏதோவொன்று அங்கே சத்தமில்லாமல் முழங்குகிறது. உடல்களிரண்டும் அதிர்கின்றன- அவள் உடல், கழுத்தையும் அதைத் தாங்கிய முகத்தையும் பிரதானமாக வைத்து அழகாய் வளைந்து திரும்புகிறது. நீல நிற ஜீன்ஸ்பேண்ட், இடுப்பிலணிந்திருந்த கறுப்பு நிற பெல்ட்டுக்குள் பருத்தியாலான வெள்ளை சட்டை, கழுத்துக்குக் கீழே திறந்திருந்த சட்டையூடாகத் தெரிந்த மார்புடன் உதயசூரியன்போல நேற்றைக்கும் பார்க்க பிரகாசமாயும் இதமாகவும் இருக்கிறான். அவனது வலது கை கதவின் மீது படிந்திருக்கிறது, அக்கதவு மெல்ல அசைந்துகொடுத்து எழுப்பும் முனகலில் இவளது உணர்வுகள் தளும்புகின்றன, நெஞ்சில் அலை அலையாய் தாபம் சுரக்கிறது, தனது வீழ்ச்சியை ஒப்புகொள்ள விருப்பமில்லாமல் பேசினாள்:

– உன் பார்வை சரியில்லை. போய் சலோன்ல உட்காரு, இரண்டு நிமிடத்துலே வந்திடறேன்- பற்களிடுக்கில் ஊஞ்சாலாடிய மேலாடை அவள் காலடியில் விழ, சுரத்தில்லாமல் குரல் வெளிப்பட்டது.

– இல்லை இப்பவே சொல்லியாகணும், உன்னை விரும்பறேன் ஹரிணி., ழே தேம். நீ இல்லையென்றால் எனக்கு வாழ்க்கை இல்லைண்ணு தோணுது. பலமுறை ஒத்திகை செய்துபார்த்தவன்போல தடுமாற்றமில்லாமல் பேசினான். இவள் பதில் சொல்லியிருந்தாள், என்னவென்று இப்போது ஞாபகத்திலில்லை, ஆனால் இவள் வாக்கியந்தை முடிப்பதற்கு முன்பு அறைக்குள்ளே இருந்தான், அருகிலிருந்தான், இவளுடைய எதிர்ப்பின்மையை சம்மதமென்று எடுத்துக்கொண்டான், ஒட்டிக்கொண்டான். அவளது இருகைகளையும் எடுத்து தன்னுடலைச் சுற்றச் செய்தான், அவள் கீழ்ப்படிந்தாள், அணைத்தான், தலையைத் திருப்பினாள், திருப்பினான். கன்னத்தில் முத்தமிட்டான், பிறகு, தலை, நெற்றி, கண்கள் என பசித்த பாம்புபோல ஊர்ந்து தனது அதரங்களை அவளுடைய அதரங்களில் கச்சிதமாக நிறுத்தினான். அவளுடைய ஆடைகளை ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து எறிய இவள் எதிர்ப்பேதும் காட்டவில்லை. ஒரு கை அவளது இடுப்பின் பின்புறம் படிந்து மேலும் நெருக்கமாயிருக்க உதவி செய்தது. மற்றொரு கையின் சேட்டையில் மார்பகங்கள் தவிக்கின்றன, அவற்றை மேலும் வருத்தும் எண்ணமேதும் தனக்கில்லை என்பதுபோல அவளது வயிற்றுக்குக் கீழே இறங்கிய கையை விலக்கினாள், நிதானமாய் நடந்துசென்று அருகிலிருந்த கட்டிலிற் படுத்தாள். இனிமையான கனவொன்றில் திளைப்பதுபோல முகத்தில் சந்தோஷ களை. ஒரு சில விநாடிகள் காத்திருந்திருப்பான். அவள் மெல்லக் கண்திறக்கிறாள் சலனமற்ற முகத்தில் இவனது அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பினை உணர்ந்த துணிச்சலில்,கட்டிலுக்கருகே வருகிறான். அவளுடைய இரு கைகளும் உயர்ந்து இவனது திசைக்காய்த் திரும்ப, அதிகப் பலத்தைப் பிரயோகிக்காமல் அவளுடைய உடல்மீது படிந்தான்..

– மத்மசல் நான் வெளியே போகணும்.

– அரவிந்தன் நில்லு …

– மத்மசல் என்ன சொல்ற எனக்குப் புரியலை.

ஹரிணி எதிரே, அரவிந்தன் நிழற்படத்தில் இன்னமும் சிரித்துக்கொண்டிருக்கிறான். குரல் இவளுக்குப் பின்னாலிருந்து வந்திருந்தது. திரும்பினாள். அரபு நாட்டவன்.

– மிஸியே நான் கல்லறைக்குத்தான் போகணும், நீங்க உங்க அப்பார்ட்மெண்ட்லே ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்க நான் வந்திடறேன்.

அறையப் பூட்டி சாவியை அரபு நாட்டவனிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் டாக்ஸிபிடித்து கல்லறை¨க்குவர அரைமணிநேரம் தேவைப்பட்டிருந்தது. பைன் மரங்கள் சூழ இருந்த கல்லறையின் விஸ்தீரணம் மலைக்க வைத்தது. வானம் தூறலிட்டுக்கொண்டிருந்தது. வாயிலில் தெரிந்த அலுவலகத்தில் விசாரித்தாள், “அரவிந்தன் என்ற பேரில் ஏதாவது..” ஆமாம் சீக்கிரம், அரை மணி நேரமாகுது தெற்கு வாசலுக்குப் போகணும்”- நல்லவே¨ளை டாக்ஸிக்காரனை அனுப்பாமலிருந்தது நல்லதாயிற்று. தெற்கு வாசலில் இறங்கிப் பார்க்க ஒரு கும்பல் தெரிந்தது. பனிபெய்ய ஆரம்பித்திருந்தது. பாதிரியார் தனது பேச்சை முடித்திருக்கவேண்டும்; சவப்பெட்டியைக் குழிக்குள் இறக்கிக் கொண்டிருந்தார்கள். வந்திருந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பைன் மரமொன்றின் அருகே மதாம் ஷர்மிளா நின்றிருந்தாள், ஹரிணியைப் பார்த்ததும் தலையாட்டினாள், அருகிலேயே சற்றேறக்குறைய அவளுடைய வயதில் மற்றொரு பெண்மணி, பத்மாவாக இருக்கக்கூடுமென்று ஹரிணி சந்தேகித்தாள். குளிர் அதிகரித்திருந்தது. மோசமான காற்றுவேறு. இலைகளை உதிர்த்திருந்த மரங்கள் தலையாட்டிக்கொண்டிருந்தன. சுற்றியிருந்த கழுத்துக்குட்டையை தளர்த்திக்கொண்டு, வலது கையிலிருந்த கையுறைய உருவியபடி நின்றிருந்த பெண்கள் அருகில் வந்து நின்றாள்.

– வாம்மா.. இப்பத்தான் வறியா.. உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தோம், பரவாயில்லை. காரியம் முடியறதுக்குள்ள வந்துட்டே. இவங்க பத்மா-

– ம். வணக்கங்க என் பேரு ஹரிணி..

– ஷர்மிளா எல்லாவற்றையும் சொன்னாள். வீட்டில் போய் பேசலாம். எப்படி வந்த? -பத்மா.

– டாக்ஸி பிடித்து.

– டாக்ஸி காத்திருக்குதா?

– இல்லை அனுப்பிட்டேன்.

– நல்லது நாம மூணுபேரும் என் காருலேயே வீட்டுக்குத் திரும்பலாம்.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா