மலர்மன்னனின் உள்ளுணர்வும், உண்மைக்கு மாறானதும்

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

கற்பக விநாயகம்


பெண்ணியப் பார்வையில் விவிலியத்தைப் படிக்கிறார்களாம் கிறிஸ்தவ சகோதரிகள். அதே பார்வையில் நம்ம புராணங்களை எல்லாம் படிக்கச் சொன்னால், ஒண்ணாவது பெண்ணியப் பார்வையில் தேறுமா ?

கிருஷ்ணன் ஆடிய கோகுல மன்மத லீலைகள், பார்வதி போதாதென்று கங்கையைத் தலையில் சுமந்து திரிந்த சிவன், சிவனின் மனைவியைப் பெண்டாள வந்து ஒரு தலையை இழந்த பிரம்மா, உடம்பெல்லாம் யோனியாகப் போகும் வரம் வாங்கிய இந்திரன் எனச் சொல்லச் சொல்ல வந்து விழுமே கதைகள். இதை எல்லாம் நம் குலப் பெண்கள், பெண்ணியப் பார்வையில் படிக்க ஆரம்பித்தாலே போதும்.

சவுந்தர்ய லஹரி, கனக தாரா ஸ்தோத்திரம், ஜெயதேவரின் அஷ்டபதி யினை மொழி பெயர்த்து மலிவு விலையில் நம் பெண்களிடம் கொடுத்தாலே போதும். இந்து மக்கள் தொகையில் சரி பாதி இம்மதத்தை விட்டு ஓடி விடுவர் என்பது மலர்மன்னனுக்குத் தெரியும்தானே!

உள்ளுணர்வில் கனன்று கொண்டிருக்கும் இந்து எனும் பிரக்ஞைதான், இறையைத் தாயின் வடிவில் காண விரும்புகிறதென்றால், படமெடுக்கும் நாகத்தை ஆதி சங்கரர் உவமைப்படுத்தும் விஷயம் எல்லாம் தாயைக் காணும் இந்து எனும் பிரக்ஞையில்தானா ?

ஓவியர் உசேனை உச்சி முகர்ந்து அவரின் நிர்வாண ஓவியத்தைப் புகழ்வதெல்லாம் இருக்கட்டும்!

அவரின் ஓவியக்கண்காட்சியில் புகுந்து ரகளை செய்த சங் பரிவாரத்தை என்றாவது மலர்மன்னன், கண்டித்ததுண்டா ?

மாறாக, பெரும்பான்மையினரின் உணர்வுக்கு மதிப்புக் கொடுக்க அவருக்கு உபதேசம் வேறு!

ஆக, ஒரு கலைஞன் எதை வரையலாம், எதை வரையக் கூடாது என்று கலாச்சார போலீசாக இவர்கள் இருப்பார்கள். இவர்களின் கட்டளைகளைக் கலைஞர்கள் ஏற்று நடத்தல் வேண்டும். கலைஞனின் சுதந்திரம் என்பதே இவர்களின் உணர்வுகளைத் தாண்டி இருக்கக்கூடாது என்பதுதானே ?

ஹிந்துஸ்தானத்தில் கால் பதித்து இருப்பதால் பிஸ்மில்லாகானுக்கு ஹிந்து உணர்வு கனன்று கொண்டிருந்தால், அமெரிக்காவில் செட்டில் ஆனவர்க்கு என்ன உணர்வு கனன்று கொண்டிருக்கும் ?

உங்கள் லாஜிக் படி அவர்களுக்கு இந்து உணர்வு கனன்று கொண்டிருந்தால், அவர்கள் அந்நாட்டின் தேசத் துரோகிகள்தானே!

ஐரோப்பாவில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இன்றும் முன்னோர் நம்பி வழிபட்ட தொன்மையான தெய்வங்களின் சொரூபங்கள் மறைவாக வைக்கப்பட்டுள்ளனவாம்.

இங்கே என்ன கதியில் இருக்கின்றன எங்களின் நாட்டார் தெய்வங்கள் ?

மறி அறுத்துச் சோறுண்ட முருகனை என்ன செய்தீர்கள் ?

எங்கள் தாய் தெய்வமான கொற்றவையை என்ன செய்தீர்கள் ?

எண்ணிறந்த அம்மன்களைக் கபளீகரம் செய்து ‘அபய முத்திரை ‘ தெய்வங்களாய் ஆக்கி எமது தொன்மத்தை அழித்தீர்கள்தானே!!

****

1948ல் காந்திஜி இறந்தாராம். பெரியார் பார்ப்பான்களைத் திட்டினாராம்.

காந்தியை இறந்தார் எனச் சொல்பவர் நிச்சயமாய் உண்மையை மறைத்துப் பேசுபவர்தானே.

உலகமே அறியும்-காந்தியை, மராத்திய சித்பவன் பார்ப்பன சாதியை சேர்ந்த கோட்சே கொன்றான் என்பது.

இப்போது கோட்சே எனும் பார்ப்பனருக்கு பெரியார் என்ன செய்திருக்க வேண்டும் என ம.ம. விரும்புகிறார் ?

இவரை மாதிரி பெரியார் ‘காந்தி இறந்தார் ‘ என்றெல்லாம் உண்மையை மறைத்து எழுத முடியாது. உள்ளதைச் சொல்லும்போது இந்த மாதிரி ஆள்களெல்லாம், ‘பார்ப்பானை திட்டித் தீர்த்தாங்க ‘ என அரைகுறை வரலாற்றுண்மைகளை எழுதுவது எவ்வகை தர்மமோ ?

அக்கால சூழலில், ஒருத்தன் கூட தமிழ் தேசத்தில் தம்மை ஆர் எஸ் எஸ் என அழைத்துக் கொள்ளத் தயங்கி ஓடி ஒளிந்துள்ளான். ஒவ்வொரு இடத்திலும் பொது மக்கள் தாக்கியுள்ளனர், இவர்களை.

****

குடும்ப சொத்தில் விதவையான மருமகளுக்குப் பங்கு போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் சதி எனும் உடன்கட்டை இருந்தது எனக் கூசாமல் சொல்கிறார் மலர்மன்னன்.

முதலில், இந்து லா படி பெண்ணுக்கு சட்டப்படி சொத்தில் உரிமையே இருந்ததில்லை.

இதைக் கொண்டு வர அம்பேத்கர் முயற்சி செய்தார். ஆனால் அச்சட்டத்திற்கு காஞ்சி சங்கராச்சாரியில் இருந்து நேருவின் கட்சி உறுப்பினர்கள் வரை கடும் எதிர்ப்பிருந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இச்சட்ட முன் வரைவினை அனைத்து ஆதிக்க சாதி உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டு தோற்கடித்து அம்பேத்கரை பதவி விலக வைத்தனர்.

இச்சட்டத்திற்கு அன்று மகா பெரியவர் காட்டிய எதிர்ப்பை, அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார், தமது ‘இந்து மதம் எங்கே போகிறது ‘ நூலில் கோடிட்டுக் காட்டுகிறார்.

‘டெல்லியில் நேரு ‘ஹிந்து கோடு பில் ‘லில் பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என கொண்டு வந்த செய்தி பேப்பர்களில் வந்தது ‘ என்றும்

‘அன்றைய பேப்பரை எடுத்துக் காட்டிய மகா பெரியவர் ‘லோகமே அழியப்போறது ‘ எனப் படபடப்பாகப் பேசினார். ‘ஸ்திரீகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா ? இஷ்டப்பட்டவா கூட ஸ்திரீகள் ஓடிப்போயிடுவா. அபாண்டமா, அபச்சாரமா போயிடும் ‘ என்றும்

‘இச்சட்டம் வந்தா ஸ்திரீ தர்மமே பாழாயிடும். ஸ்திரீகளுக்கு பாத்யமோ, சம்பாத்யமோ இருக்கக் கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையா இருக்கறதுதான் ஸ்திரீக்கு அழகு. நாம இதை எதிர்த்து போராட்டம் நடத்தணும். ஸ்திரீ தர்மத்தைப் பாதுகாக்கறதுக்காக அந்த ‘பில் ‘லை எதிர்த்து ஊரெல்லாம் கூட்டம் போடணும். அதுக்கு ஸ்திரீகளை நிறைய திரட்டணும் ‘ என்றும் சொல்லியதோடு நின்று விடாமல் பெண்களை வைத்தே ‘எங்களுக்கு சொத்துரிமை வேண்டாம் ‘ எனத் தீர்மானம் நிறைவேற்றச் செய்தார் அப்பெரியவர் ‘

(அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் ‘இந்து மதம் எங்கே போகிறது ‘ பக்கங்கள் 104, 105)

மகாப் பெரியவர், மறைந்த சங்கராச்சாரி ‘சந்திரசேகரேந்திரர் ‘தான்.

****

பின்னாளில், கலைஞர்தான் மாநில அளவில் (1989-90 ல்) பெண்ணுக்கு சொத்தில் உரிமை உண்டு எனும் சட்டம் கொண்டு வந்தார்.

உண்மை இவ்வாறு இருக்கையில், மலர்மன்னன் கனவு காணும் சமூகத்தில், விதவைகளுக்குக் கூட சொத்தில் உரிமை இருந்திருக்கின்றதாம்.

சதி என்பதை ஏன் இந்து மதம் உருவாக்கியது என்பதை அம்பேத்கரின் ஆய்வுப்படி பார்ப்போம்.

ஆண்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் சாதியில் (போரின் காரணமாகவோ, நோய்கள் காரணமாகவோ ஆண்கள் மாண்டிருப்பர்) பெண் விதவை ஆனால், எத்தனை விதிகள் போட்டாலும் அவளின் இயற்கையான பாலுணர்வைத் தடுக்க வாய்ப்பு இல்லை. அவளின் இச்சை வேறொரு சாதி ஆணால் தீர்க்கப்படலாம். இதனால் சாதிக் கலப்பு ஏற்படலாம். இந்த இனக் கலப்பைத் தடுத்து ஒழிக்க இந்து மதம் கண்டுபிடித்த ஒன்றே உடன்கட்டை ஏறுதல் எனும் சதி.

இந்து எனும் உரிமையுடன் சதியை ராசாராம் மோகன் ராய் ஒழிக்க முயன்றார்தான்.

சட்டப்படி ஒழிக்கப்பட்ட சதியை இன்னமும் சங்க பரிவார் வட இந்தியாவில் கொண்டாடிக் கொண்டிருக்கிறதே! அதற்கு சங் பரிவாரத்து மலர்மன்னனின் எதிர்வினை என்ன ?

****

பெளத்தத்தின் தன்மையை விலாவாரியாகச் சொன்னாலும், பெரியார் பற்றிய இவரின் கருத்துக்களை மறுத்து எழுதினாலும் அவற்றினைக் கண்டு கொள்ளாமலே ஏதேச்சையாக எழுதிச் செல்லும் மலர்மன்னனிடம் இருந்து ஒரு சிறு அசைவையும் எதிர்பார்க்க முடியாது.

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்