மலராகி மருந்தாகி….

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

வேதா


சொல்லி அழத் தெம்பில்லை
சுகமா ? ஏதும் தெரியவில்லை
அழுதுபுலம்ப வழியுமில்லை
ஆனதென்ன அறியவில்லை!

சோர்ந்திருக்கும் பூவுக்கும்
சுகம் காணா வண்டுக்கும்
சுமைகளே இன்று சுகங்களாய்!

என் கண்ணீர் துடைக்க
கண்ணீரே, பதிலுக்கு கங்கையாய்!

காத்திருந்தால் பாவமா ? இல்லை,
காணாததால் பாரமா ?
கவலைகள் கட்டவிழ்க்கும் ; நேரம்
கனிந்து காத்திருந்தும், நீ
கனியாத காரணத்தால்!

காற்று வந்து உன் மணம் பரப்பும்!
என்னைக் காத்திருக்க வைத்திருக்கும்!
நடந்ததெல்லாம் இனி போதும்,
நாளை முதல் புதிதாக,
நடக்கட்டும் இனிதாக…..

நீ
பார்த்திருந்த பக்கங்களிலும்
படர்ந்திருந்த இடங்களிலும்
பதியம் இட்டுப் போகிறேன்,
என் பாசப் பதிப்புகளை….

பசுமைதேடி ஓடி வந்தால்- என்
பதியங்கள் பூத்திருந்தால்,
எங்காவது
பக்கத்தில் தான் தவம் கிடப்பேன்,
தவறாமல் பறித்துவிடு,
தயங்காமல் பருகிவிடு,

ஒரு மடி தேடிய என் சுமைக்கு
மலராக வந்ததற்கோ,
மருந்தாகி நின்றதற்கோ
மறக்காமல் நான் தருவேன் – உன்
முகமெல்லாம் முத்துக்கள்!
மாலை முதல் காலை வரை!

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா