மலட்டுத்தனம் என்ற குறியீடு : செம்பனே ஓஸ்மனே அவர்களது க்ஸாலா நாவலில் ஆண் பெண்கள் பாத்திரப் படைப்பு பெறும் தலைகீழ் மாற்றம்

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

ஃபீபீ கோச்


மொழிபெயர்ப்பாளர் முன்குறிப்பு: செம்பனே ஓஸ்மனே (Sembene Ousmane வயது 81) ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குனராக அறியப்படுபவர். செனகல் நாட்டுக்காரர்.

***

ப்ரெஞ்ச் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெறும் ஆப்பிரிக்க உலகத்தில் இருக்கும் முரண்களை செம்பனே ஓஸ்மனே அவர்களது நாவல் க்ஸாலா (Xala- மலட்டுத்தனம்) ஆராய்கிறது. ‘வியாபாரிகளின் குழு ‘ என்ற ஒரு கூட்டமைப்பு பல வியாபாரிகள் தொழிலதிபர்கள் இணைந்து உருவாகிறது. இந்த குழுவின் நோக்கம் ‘நாட்டின் வளத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதும் ‘, ‘வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துப் போராடுவதும் ‘ ஆகும். இந்த குழுவில் எல் ஹாஜி அப்து காதர் பெயே என்ற இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம் இணைகிறார். இந்தக் குழு வெள்ளை வியாபாரிகள் எந்த முறைகளையும் கொள்கைகளையும் பயன்படுத்தினார்களோ அதே முறைகளையும் கொள்கைகளையும் பின்பற்றி மேல் தட்டு வர்க்கமாகிறது. ‘சொத்து வளமைக்குச் செல்லும் வழியில் ‘ எல் ஹாஜி மற்றும் அவரது குழுத்தோழர்கள் அதே நியாயமற்ற நேர்மையற்ற மற்றும் ஊழல் நிறைந்த பாதையையே எடுத்துக்கொண்டு தாங்கள் தற்போது இருக்கும் பதவிகளை அடைகிறார்கள். செனகல் நாட்டு பொருளாதாரத்தின் பலவீனம், ஓஸ்மனே காட்டும் சமூக உலகத்தில் பிரதிபலிக்கிறது. முக்கியமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவுகளில்.

சுதந்திரமடைந்த புதிய சந்தையில் எல் ஹாஜி அவர்களது பொருளாதார ஆசைகள் மற்றும் அவரது முஸ்லீம் சமயம் அவர் உலகத்தை எவ்வாறு பார்க்கிறார் என்பதைத் தீர்மானிக்கிறது. அவர் எதை வேண்டுமானாலும் கைக்கொண்டு முன்னேறுவார். அவரது மனைவியரும் அவரது வீடுகளும் அவரது அந்தஸ்து குறியீடுகளாக ஆகின்றன. ஆனால் க்ஸாலா நாவலின் முடிவில், எல் ஹாஜி அவர்கள் இதுவரை கைக்கொண்ட சமயம் மற்றும் பொருளாதார கட்டுமானங்கள் பொய்யானவையாக காட்டப்படுகின்றன. இஸ்லாமிய மதமும், அதன் பலதார மணத்தையும் எல் ஹாஜி உபயோகப்படுத்திக்கொள்வதே அவரது வீழ்ச்சிக்கும் காரணமாகிறது. செனகலில் இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான உறவுகளின் உண்மை நிலையை ஓஸ்மனே வெளிக்காட்டுகிறார். பெண்கள் ஆணாதிக்கச் சமூகத்தில் வலிமையற்று இருக்கிறார்கள் என்று வெளிநாட்டுக்காரர்கள் கருதுவதின் பொய்மையை உடைக்கிறது. க்ஸாலா நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்கள் முக்கியமாக, எல் ஹாஜி அவர்களது மனைவிமாரும், அதில் அழுத்தமாக தன்னுடைய இடத்தை தெளிவுபடுத்தும் யே பினேட்டா என்ற மனைவியின் கதாபாத்திரமும் ஆண்கள் மேல் செலுத்தும் அதிகாரத்தையும் காட்டுகிறது.

எல் ஹாஜி அவர்களது மூன்றாவது மனைவியான ந்கோன் (N ‘Gone) உடனான திருமணம் அவர் விரும்பி நடப்பதல்ல. பேய்டன் (யே பினேட்டா)வின் சதித்திட்டத்தாலாயே நடக்கிறது. தலைக்கனமும் திறமையான பேச்சும் உடைய யே பினேட்டா. தன் கணவன் எல் ஹாஜியை வளைத்து மூன்றாவது மனைவியை ஒப்புக்கொள்ள வைக்கிறாள். எல் ஹாஜியுடன் அவள் நடத்திய போராட்டம், பழமையான மொழியில் வழக்கமான சாடைபேசும் பேச்சு வார்த்தைகளில் அவள் ஆடும் ஆட்டம் , மிகுந்த திறமையுள்ளதாய் வெளிப்படுகிறது. எல் ஹாஜியுடன் அவள் பேசும் போது தளுக்கு மினுக்கு என்று ஒரு புறமும், குற்றஞ்சாட்டுதல் இன்னொரு புறமுமாக, அவள் தான் நினைத்ததைச் சாதிக்கிறாள். ஒரு முறை அவனுக்கு அவள் போடும் தூண்டில் இது : ‘ உனக்கு பெண்களைக் கண்டு பயம். உன் மனைவிகள் உனக்காக முடிவுகளை எடுக்கிறார்களா ? நீ கால்சராய் போட்ட ஆண்பிள்ளை தானே ? ‘ வலிமைகொண்ட பெண்ணுக்கு இன்னொரு உதாரணம் ந்கோனின் தாயார். அவளுடைய கணவனே சொல்கிறான் : ‘அவள் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. ‘ அவனுடைய வீட்டில் கால்சராய் அணிவது அவன் மனைவியே என்று நண்பர்கள் கிண்டல் செய்கிறார்கள். ஆண்மையற்றவன் என்று தம்மை வெளியுலகம் கணிக்கும் என்ற ஒரு அச்சுறுத்தலே மற்றவர்கள் கையில் ஓர் ஆயுதமாகிவிடுகிறது.

முஸ்லீம் பெண்கள் பெரும்பாலும் ஆணாதிக்க ஆணுக்கு எளிமையான வேலைக்காரியாகவே சிந்திக்கப்படுகிறார்கள். எல் ஹாஜி நிச்சயமாக தன் மனைவிகளுக்கு கட்டளைகள் கொடுத்துக்கொண்டு இருந்தாலும், அந்தப் பெண்கள் மேற்கத்திய எதிர்பார்ப்பில் இருப்பதுபோன்று அடங்கி ஒடுங்கியோ அல்லது கீழ்ப்படிந்தோ இருக்கவில்லை. எல் ஹாஜியின் இரண்டாவது மனைவி ஓயிமி ந்டோயே வற்புறுத்தியும் மனத்தாலேயே சித்திரவதைகள் புரிந்தும் தன் கணவனிடமிருந்து தனக்கு வேண்டியதைப் பெற்றுகொள்கிறாள். பல தடவைகள், இந்த மூன்று குடும்பங்களுக்கும் பொருளாதார ரீதியில் உதவுபவராக இருக்கிறாரே தவிர அங்கிருந்து அன்பையோ அல்லது தோழமையையோ மனைவியரிமிருந்தும் குழந்தைகளிடமிருந்தும் எல் ஹாஜி பெறுவதில்லை என்றே காட்டப்படுகிறது. தன்னுடைய இரண்டு குடும்பங்களையும் எந்த அளவு ஒரே மாதிரியாக அவர் கவனித்துக்கொள்கிறார் அல்லது கவனித்துக்கொள்ளவில்லை என்பதே இவரது பெரும் தலை வேதனையான விஷயமாக இரண்டு குடும்பங்களின் உறுப்பினர்களும் அவரை சித்திரவதை செய்கிறார்கள். எல் ஹாஜிக்கும் அவரது இரண்டு குடும்பங்களுக்கும் இடையே இருக்கும் ஒரே உறவு அவர் கொடுக்கும் பொருளாதார உதவி மட்டுமே என்பதே ஓஸ்மனேயின் கதையின் இறுதியில் தெளிவாகிறது. எல் ஹாஜி தன் பணத்தை இழக்கும்போது தன் இரண்டு குடும்பங்களையும் சேர்த்தே இழக்கிறார். அவரது முதலாவது மனைவி மட்டுமே, அதுவும் அவளது வீட்டை அவள் சொந்தமாக வைத்திருப்பதாலேயெ அவருடன் இறுதிவரை இருக்கிறாள்.

எல் ஹாஜியின் துயரங்களை ஓஸ்மனே காட்டும் முறை பலதார மணத்தில் இருக்கும் பலவீனங்களை காட்டுவதாக இருக்கிறது. ஒரு சமயத்தில் அவரது வீர்யம் அவரிடம் திரும்பி வரும்போது, வண்டியோட்டுபவன் அவரிடம் ‘எந்த வீட்டுக்கு திரும்பிப்போகவேண்டும் ‘ என்று கேட்கும் சமயத்தில் அவர் திடுக்கிடுகிறார்.

அந்தக் கேள்வி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. உள்மனத்தில் தோன்றிய சந்தோஷத்தை குறைப்பதாக இருக்கிறது. அவரிடம் மூன்று வீடுகள் இருக்கின்றன மூன்று மனைவியர் இருக்கிறார்கள். ஆனால் எது அவரது உண்மையான வீடு ? அவரது மூன்று வீடுகளில் அவர் மூன்று இரவுகள் கடந்து செல்கிறார். எந்த வீட்டிலும் அவருக்கென்று ஒரு அறையோ அல்லது அவர் தனியாக இருக்க ஒரு மூலையோ கூட இல்லை. ஒவ்வொரு மனைவியரிடமும் எல்லாமும் படுக்கையில் ஆரம்பித்து படுக்கையிலேயே முடிந்துவிடுகின்றன. இறுதியில் இருப்பது வருத்தத்தின் எச்சமே.

மிகவும் போற்றப்படும் வீடும் குடும்பமும் எந்த ஒரு உள்ளடக்கமும் இல்லாத ஒரு பலவீனமான ஆகிவிடுகின்றன. எல் ஹாஜி தன் மனைவியருடன் பேசும் பேச்சுக்கள் எந்த ஒரு ஆழமும் இல்லாத மேம்போக்கானவையாகவும் தூரத்தில் தள்ளி வைப்பவையாகவும் இருக்கின்றன. அவரது ஒரு மகள் ராமா மட்டுமே தன் தந்தையுடன் பொருளார்ந்த பேச்சுக்களையும் ஆன்மாவைத்தேடும் பேச்சுக்களையும் பேச விழைகிறாள் இருப்பினும் இரண்டுமுறையும் உதாசீனப்படுத்தப்படுகிறாள். ஒரு தடவை எல் ஹாஜி அவளை கன்னத்தில் அறைகிறார். மறுமுறை தனக்குத்தானே சிந்திக்கிறார் ‘ சீ இவள் பெண்ணாக இருக்கிறாள். இவள் ஒரு பையனாக இருந்தால் இவளை எதேனும் உருப்படியாக ஆக்கலாம் ‘ ராமா ஒரு மருத்துவராக படித்துக்கொண்டிருப்பதுகூட எல் ஹாஜியின் மனத்தில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. பெண்களைப் பற்றிய பழமை தோய்ந்த பார்வையும், இறுக்கமான மத சிந்தனையும் அவரை அவரது மகள்களின் வலிமையை பார்க்கமுடியாமல் குருடாக்குகின்றன. அதுவே அவரை வீட்டிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் அன்னியராக்குகிறது.

செல்வமும், நிலைத்த தன்மையும் கொண்டதாய்த் தெரிந்தாலும், நம் கண் முன்பாகவே எல் ஹாஜியின் பொருளாதார நிலை சிதந்து போகிறது. அவருடைய பொருளாதார நிலை சரியும்போது அவருடைய வியாபாரப் பங்குதாரர்களும், மனைவியரும் விட்டு விலகி விடுகின்றனர். அவருடைய ஆண்மையும் கேள்விக்குள்ளாகிறது. ‘க்ஸாலா ‘ என்ற ஆண்மையின்மை அவருடைய அதிகாரக் குலைவிற்குக் குறியீடாகிறது.

—-

http://www.thecore.nus.edu.sg/landow/post/africa/senegal/ousmane/xala.html

Series Navigation

ஃபீபீ கோச்

ஃபீபீ கோச்