மரபும் புதிதும் : இரு கவிதைகள்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

தேனிரா பாண்டியன் , தேவதேவன்


====

எது கவிதை ?

தேனிரா பாண்டியன்.

இலைக்கனத்தை தாங்குகின்ற மரத்தைப்போல
இலக்கணத்தை தாங்குவதே கவிதையாகும்
மலைக்கனத்தை தாங்குகின்ற தரையைப்போல
மரபுதனை தாங்குவதே கவிதையாகும்
அலைக்கனததை தாங்குகின்ற கரையைபோல
அணிநயத்தை தாங்குவதே கவிதையாகும்
முலைக்கனத்தை தாங்குகின்ற இடையைப்போல
மோனைமுதல்தாங்குவதே கவிதையாகும்

புதுக்கவிதை என இங்கே எழுத்தைக்கூட்டி
புரியாமல் எழுதுவதா கவிதையாகும் ?
எதுகவிதை ? மரபுதனில் சிந்தை தோய
எழுதுகின்ற வீச்சிங்கே கவிதையாகும்
மதுக்கவிதை தந்திட்ட மாக்கவிஞர்தம்
மரபுதனில் புதுக்கருத்தின் விதைகள்தூவி
பொதுமையெனும் பயிர்வளர்த்துபுரட்சிசெய்யும்
போர்பாட்டே புதுக்கவிதை என்று சொல்வென்

எதுகவிதை என்பதிலே இரண்டுபோர்கள்
எதுகவிதை ? ‘விதை ‘ ப்பதுதான் கவிதையாகும்
புதுக்கவிதை மரபு எனும் இரண்டில் வெற்றுப்
புலம்பெனில் இரண்டினிலும் கவிதை இல்லை
புதுமைகளை நெஞ்சினிலே பதியவைக்கும்
புதுநோக்கின் வித்தொன்றே கவிதையாகும்
புதுக்கவிதை நல்மரபோ எதிலும் சொல்லும்
புரிதலில்தான் கவித்துவத்தின் வெற்றி நிற்கும்.

[நன்றி : முல்லைச்சரம் மார்ச் 95]

முன்னுரை
====

தேவதேவன்

இவை கவிதைகள்
ஏனெனில்
இவை உண்மையை பேசுகின்றன
நானல்லாத நான் சாட்சி
இவற்றை நீ உணரும்போது
நீயே சாட்சி
இவற்றை நீ பின்பற்றும்போதோ
வற்புறுத்தும்போதோ
நீ ஒரு பொய்யன் ,துரோகி ,கோழை!
ஏனெனில்
உண்மை உன் விருப்பத்துக்கும் வசதிக்குமாய்
காலத்தின் முளைகளில் கட்டிப்போடப்படுவதற்கு
பணிந்துவிடும் பசுமாடு அல்ல.
அது
நித்யத்துவத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள்

அப்போது கவிதைகள்
தியாகத்தின் இரத்ததில் நனைந்த
போர்வாட்கள்

[நன்றி . நட்சத்திரமீன் 1994 ]
====

Series Navigation

தேனிரா பாண்டியன் , தேவதேவன்

தேனிரா பாண்டியன் , தேவதேவன்