மன்னிப்பு (மலையாளக் கவிதை )

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

அப்துல் கபூர் தமிழில்: எல்.பி.சாமி


எட்டாம் வகுப்பு படிக்கும்போது
அரபு நாடு செல்லும் ஆசையில்
ஊரைவிட்டு ஓடியதால்
இருப்பத்தெட்டாவது வயதில்தான்
பள்ளி இறுதி வகுப்பு தேர்வை எழுத முடிந்தது.
உத்திர பிரதேசத்திலும் அரியானாவிலும்
பேசுகிற இந்திக்கு இடையிலிருக்கிற வித்தியாசத்தை
என்னால் சொல்லிட முடியும்.
அரியானாவில் நான் படித்த ஆங்கிலத்தை
நான் எழுதிய ஆங்கிலம் இரண்டாம் தாளைப்
பார்த்தாலே தெரியும்.
எழுத்துப் பிழைகளுக்கு மட்டும்
மதிபெண்ணைக் குறைக்காமல் இருந்திருந்தால்
நிச்சயமாக தேர்ச்சி பெற்றிருப்பேன் .
வேதியல் தாளோடு ஒரு நூறு ரூபாயை
இணைத்து வைத்திருந்ததை
ஹேமாமாலினியைப் போல சிவப்பாகவும்
கொஞ்சம் தடித்தும் இருக்கிற டீச்சர்
டி.வி சேனல்வரை கொண்டு போனதற்கு
நான்தான் பொறுப்பு.
எனக்கு கணக்கு போட வராததை
விளக்கி தேர்ச்சிக்கான
மதிப்பெண் போடும்படி எழுதியிருந்ததை
ஜார்கண்ட் போலீசைப் போல இருந்த
கணக்கு ஆசிரியர்
எல்லோரிடமும் காட்டி கிண்டலடித்ததை
என்னால் தாங்கிகொள்ளவே முடியவில்லை.
நான் முதன்முதலாக தேச படம் வரைந்தபோது
விவேகானந்தர் பாறை இருக்கிற குமரிமுனை
தாதாக்களும் செல்வ சீமான்களுமுள்ள மும்பை
கலவரத்தின்போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள
பயந்தோடிய குஜராத்தின் கச்
சுதந்திர தினத்தன்று கொடியேற்றப்படும்
செங்கோட்டை உள்ள டில்லி
ஆகியவற்றை பென்சிலால் குறித்து வைத்தேன்.
சத்தியமாக சொல்கிறேன்
நான் இதுவரைக்கும் காஷ்மீருக்குப் போனது கிடையாது.
ஓவியம் வரைய கற்றதுமில்லை
வரைபடத்தில் காஷ்மீர் விடுபட்டுப் போனதற்கு
எனது அறியாமைதான் காரணம்
வேறு நோக்கம் எதுவுமில்லை .
நீங்கள் நினைக்கிற மாதிரி ஆளில்லை ஐயா!
நான் ஒரு அப்பாவி
நமது தேசப் படத்தில் நடுவிலிருக்கிற போபாலில்
சிமிண்ட் மூட்டைகள் தூக்கியதால்தான்
எனது முதுகில் தழும்புகள்.
இதைக்கொண்டு என்னைத் தீவிரவாதியாகக் கருதி
ஜாமீனில் வெளிவராதவாறு சிறையில் தள்ளிவிடாதீர்கள் !
பிள்ளைக்குட்டிக்காரன் நான்
வாழ வேண்டியிருக்கிறது.
அவர்களுக்காக ……

Series Navigation

அப்துல் கபூர் தமிழில்: எல்.பி.சாமி

அப்துல் கபூர் தமிழில்: எல்.பி.சாமி