சின்னக் கண்ணன்
‘வெளி ‘யில் இருக்கும் கடவுளர்க்கு
…வீட்டிற் கெதிரோர் கோவிலுண்டு
வெளியில் வந்து நின்றாலே
..வருவோர் போவோர் தெரிவதுண்டு
உளியால் வரைந்த ஓவியங்கள்
…ஒன்றா யிரண்டா பலவுண்டு
நளினங் கொண்ட நல்லவர்கள்
…நன்றாய் அதனை நடத்தி வந்தார்
இடையில் இருக்கும் குழவிமுதல்
…இனிதாய்ச் சிரிக்கும் மங்கையரும்
கடைசிக் காலம் தனையெண்ணிக்
…கசிந்தே யுருகும் கிழவியரும்
விடையைக் கேட்கும் சிறுவனென
…விடையைத் தேடும் கிழவருமாய்
நடையைத் திறந்தால் தெரிந்திடுமே
…நன்றாய் ஏதோ புரிந்திடுமே
வாசலதைத் திறந்துவிட்டால் வழியி லெல்லாம்
…வாசமலர் நறுமணங்கள் மனதை அள்ளும்
காசதனைக் காண்பதற்கு யிரண்டு பூக்கள்
…கரங்களிலே தொடுத்திடுமே உயிராய்ப் பூக்கள்
பாசமுடன் மக்களுந்தான் வாங்கிச் செல்வர்
…பக்தியுடன் கோவிலினுள் வேண்டு தற்கு
நாசமென வருகின்ற தீமை எல்லாம்
…நலமுடனே விலகுதற்குப் பூவால் சொல்வர்
வளைந்த முதுகைக் கண்டுவிட்ட
…வயதில் மூப்பூ ஒன்றதனின்
இளைய பருவம் இழைத்துவிட்ட
…இளம்பூ ஒன்று அதுவோதான்
மழைபோல் சிரிக்கும் பேசாது
… மனதுள் பேசும் கேட்காது
களையாய்ப் பூவைத் தொடுத்தேதான்
…கட்டும் பூவால் பேசிவிடும்
ஊமையாய் இருந்த பூவின்
…உணர்வதைத் தூண்டச் செய்ய
ஆமையாய்ச் சொந்த மொன்றை
…அன்னையும் கட்டி விட்டாள்
ஊமையை மணந்த மாறன்
…ஊரிலே உள்ள எல்லாத்
தீமையைத் தன்னுள் கொண்டு
…குடியிலே மூழ்குந் தீரன்
சக்கரம் மூன்று கொண்ட;
…சாலையில் அழகாய் ஓடும்
வக்கணை யான வண்டி
…வசத்தினில் வைத்தி ருந்தான்
திக்கெலாம் சென்றால் தானே
…திரவியம் கிடைக்கு மன்றோ
மக்கெனச் சோம்பி நின்று
…மங்கையை வாட்டி வந்தான்
ஒரு நாள் கோவிலினுள்:
கலையாமல் மேகங்கள் ஒன்று கூடி
…கண்களையும் கருத்தினையும் குளிர வைத்தே
நிலையாக நீர்நிலைகள் நிரம்பும் வண்ணம்
…நல்லமழை வரவேண்டித் தேவர் மீது
வளையாத எண்ணத்தில் வேதி யர்கள்
…வளமான யாகத்தைச் செய்யுங் காலம்
சிலைபோன்ற கல்மனதும் உருகும் வண்ணம்
…சிறப்பாக மந்திரங்கள் சொல்லி வந்தார்
கோவிலின் வெளியே ஊமைப் பெண்ணின் கணவனோ:
இலவு காத்த கிளிபோல
…இருக்கின் றாயோ நீயடியே
செலவுக் கெனக்கோ பணம்வேண்டும்
…சொர்க்கம் தன்னைப் பார்ப்பதற்கு
களவு ஏதும் செய்தாயோ
…காசோ எங்கே எனக்கேட்டு
நிலவைத் தரையில் போட்டடித்தான்
…நுதலில் வண்ணம் வரவழைத்தான்
பூவதனை நசுக்கிவிட்டே திரும்பியவன் மீது
…புலம்வந்த வாகனந்தான் மோதிவிட்டுச் சற்றும்
பாவமென எண்ணாமல் பார்க்காமல் மேலும்
…வேகத்தைக் கூட்டிவிட்டு விரைந்தோடிச் செல்ல
ஆவென்றே அலறியந்த அணங்கவளும் ஓடி
…காலதனில் அடிபட்டக் கணவனையும் நாடி
தாவித்தான் தன்சேலைத் துணிகிழித்துக் கட்டி
…தக்கபடி மருத்துவரைப் பார்ப்பதற்குச் சென்றாள்
சற்றுமுன்னே அடித்தவந்தான் என்று ஏதும்
…சங்கடமாய்ச் சிந்தனைகள் கொள்ளா மென்மை
பற்றுடனே அவனருகில் பதறிச் சென்று
…பரிவுடனே கட்டிவிட்ட பாசத் தன்மை
கற்றவர்க்குக் கிடைத்திடுமோ இந்த ஞானம்
…கன்னியவள் வாய்மொழியாய்ச் சொல்லா உண்மை
நற்றமிழில் பெண்மையதன் சிறப்பைச் சொல்ல
…நாலுபக்கம் போதாதே என்ன செய்ய
கண்பல வாயிரங் கொண்டசெவ் வானமக் காட்சியினை
மண்ணிலே கண்டுவிட்டு நெஞ்சு மயங்கிட மேகத்தை
விண்ணிலே கூட்டியே வேகமாய் நல்ல இடிமுழக்கப்
பண்ணை இசைக்க மழையதும் பாரினில் பெய்ததுவே
வீட்டிற் கெதிரே கோயிலுண்டு
…வேண்டும் தெய்வம் வெளியி லுண்டு
நீட்டும் கரத்தை அழகாக
…நேசங் கொண்டே அணைப்பவளைத்
தீட்ட நினைத்தே கேட்டேன்நான்
…தங்கப் பெயரை மனைவியிடம்
பாட்டில் வல்ல பாரதியால்
…பாவை அவளை அழைப்பாராம்
****
- மகப்பேறு
- திண்ணை அட்டவணை – டிசம்பர் 21 , 2001
- வீட்டிலே நிஜமாகவே கேட்ட கடி ஜோக்குகள்
- அமெரிக்காவில் தமிழன்னைக்கு சமாதி!
- ரிப்பன் பக்கோடா
- முட்டை சீஸ் பரோட்டா
- முட்டைசாட் மசாலா
- இந்திய விவசாயத்தின் பிரச்னைகள்
- சிவப்பு ஒயின் ஏன் உடலுக்கு நல்லது ?
- டி.என்.ஏ. கணினிகள்
- சீர்குலைந்த செர்நோபிள் அணுஉலை
- கரும்பு உற்பத்தியாளர்களுக்கு இனிப்பாக இருக்கும் எத்தனால் கார்கள்.
- மதுர… பாரதி…
- மதுர… பாரதி…
- சொப்பன வாழ்வினில் மயங்கி…..
- சுழியங்களின் இட மாற்றம்
- காலம் விழுங்கிய காலன்.
- நீயும் நானும்
- சீர்குலைந்த செர்நோபிள் அணுஉலை
- இந்த வாரம் இப்படி : டிசம்பர் 21 2001
- நம்புபவர்களும் நம்பாதவர்களும்
- கண்ணகியும் திருவனந்தபுரம் மெயிலில் வந்த சேர நாட்டு இளம் பெண்ணும்.
- அமெரிக்காவில் தமிழன்னைக்கு சமாதி!
- ஒளவை 11, 12, 13
- மெளன ஒலி