மதுபானக் கம்பெனியால் நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்!

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

என்.வி.சுப்பாராவ்


ாபே

அன்புடையீர்,

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் வணக்கம்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அரசாங்க சார்பற்ற, ஆதாயம் கருதாத ஒரு தொண்டூழிய அமைப்பாகும். கடந்த 30 வருடங்களாக ஆய்வு, கல்வி மற்றும் பிரதிநிதித்துவ பணிகளின் மூலம் பயனீட்டாளர்களின் நலன்களுக்காக இந்தச் சங்கம் போராடி வருகிறது. இந்நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் இந்தியர்களின் பயனீட்டு உரிமைக்கும், சுகாதாரம் சம்பந்தமான பிரச்னைகளிலும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அக்கறை காட்டி அதற்கான தக்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

கடந்த 14.3.2004ல் மலேசியாவின் இரண்டு தமிழ் நாளேடுகளில் வெளியான விளம்பரம் தொடர்பாகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறோம். ‘கோல்டன் ஸ்டார் மியூசிக்கல் நைட் 2004 ‘ என்ற பெயரில் நடக்கவிருக்கும் கலைநிகழ்ச்சியில் இந்தியப் பாடகர்கள் பங்கேற்கவிருப்பதாக அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கலைநிகழ்ச்சியில் எஸ்.பி.பாலா, விவேக், அபிராமி, எஸ்.பி.சரன், கார்த்திக், மதுமிதா போன்றோர் பங்கேற்கவிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் மனதை உறுத்தும் விஷயம் என்னவென்றால், மிகவும் பிரபலமான மதுபானக் கம்பெனியான கின்னஸ்தான் இந்த கலைநிகழ்ச்சியை ஏற்று நடத்துகிறது.

மலேசிய இந்தியர்களிடையே மதுபானம் உட்கொள்வது ஒரு பெரிய பிரச்னையாக வளர்ந்து வருகிறது என்று எங்களுடைய சங்கத்தின் ஆய்விலிருந்து தெரிய வந்திருக்கிறது. சமுதாயத்தில் காணப்படும் பலதரப்பட்ட žர்கேடுகளுக்கு இந்த மதுபானம் வழிவகுத்துக் கொடுத்துள்ளது. நிறைய இந்திய இளைஞர்கள் இளம் வயதிலேயே மதுபானத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். மதுபானத்திற்குப் பழக்கமான குடும்பத் தலைவர்களால் நிறைய குடும்பங்கள் சிதைந்துள்ளன. இந்தப் பிரச்னை தீவிரமாகிப் போனதால், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மதுவுக்கு எதிராக மகளிர் என்ற இயக்கத்தைத் தோட்டப்புறங்களில் துவங்கி நிறைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பீர் மற்றும் ஸ்டெளட் கம்பெனிகள் தங்கள் விற்பனையை அதிகரிக்க இந்திய சமுதாயத்தை தத்தெடுத்துக்கொண்டுள்ளன. இந்தியாவிலிருந்து சினிமா நடிகர்களையும், பாடகர்களையும் கொண்டு வந்து இங்கு உள்ள பெரிய நகர்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்தி தங்கள் கம்பெனியின் மதுபான விற்பனையை அதிகரிக்கும் உத்தியாக பயன்படுத்தி வருகின்றன இந்தக் கம்பெனிகள். இந்திய அமைப்புக்கள் நடத்தும் பல நிகழ்ச்சிகளையும் இந்த மதுபானக் கம்பெனிகள் ஏற்று நடத்தி தங்கள் ஆக்கிரமிப்பை தொடர்ந்து வருகின்றன.

இப்பொழுது, இன்னும் ஒரு முறை கல்வி நோக்கத்திற்காக நிதி திரட்டுகிறேன் என்று கூறி செய்யப்படும் இந்த கலைநிகழ்ச்சிகளிலும் மதுபானத்தை விளம்பரப்படுத்த கின்னஸ் முந்திக்கொண்டுள்ளது.

ஆபாச, வக்கிர வரிகளைக் கொண்ட பாடல்களைக் பாடமாட்டேன் என்று பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முடிவு செய்துள்ளதாக பத்திரிகை செய்திகளில் ஓரிரு வருடங்களுக்கு முன்பு படித்து மகிழ்ந்தோம். இப்படிப்பட்ட பாடல்கள் இளம் தலைமுறையினரின் ஒழுக்கத்தைச் சீர்குலைக்கும் என்ற நன்னோக்கத்தால் எஸ்.பி.பாலா இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். ஒரு மதுபானக் கம்பெனி ஏற்று நடத்தும் கலைநிகழ்ச்சிக்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பை ஏற்று தமிழக பாடகர்கள் மலேசியா வரும் பட்சத்தில் இங்குள்ள இளைஞர்களின் எதிர்காலத்தைச் சிதைப்பதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்றே பொருள்படும்.

கல்வி நிதிக்காக பணம் திரட்டுவது கலைநிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தாலும், அதையும் மீறி, கின்னஸ் கம்பெனி தன்னுடைய மதுபான விற்பனையை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் யுக்திதான் இது. அதற்கு பலிகடா ஆக்கப்படுபவர்கள் இந்திய சமுதாய இளைஞர்கள்.

ஆகையால் மலேசிய இந்திய சமுதாயத்தின் நலன் கருதி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதிலிருந்து பின்வாங்கிக்கொள்ள வேண்டும் என தமிழகக் கலைஞர்களுக்கு, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது. கலை வழி கலாச்சாரத்தை வளர்ப்போம்; குடியை வளர்க்க வேண்டாம் என அச்சங்கத்தின் கல்வி இயக்குநர் என்.வி.சுப்பாராவ் கூறியுள்ளார்.

என்.வி.சுப்பாராவ்

பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

email : Subba_cap@hotmail.com

Series Navigation

என் வி சுப்பாராவ்

என் வி சுப்பாராவ்