க. நாகராசன்
முக்கிய கன்னட எழுத்தாளர்களில் ஒருவரான சாந்திநாத் தேசாய் எழுதிய ஓம் நமோ என்கிற நாவல், நவீன தமிழ் எழுத்தாளர் பாவண்ணனால் மொழிபெயர்க்கப்பட்டு சாகித்திய அகாதெமி வெளியீடாக வந்துள்ளது. இந்த நூல் சாந்திநாத் தேசாயின் ஏழாவது மற்ற இறுதி நாவல் ஆகும். இந்த நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருது மறைவுக்குப் பிந்தைய விருதாக தேசாய்க்கு வழங்கப்பட்டது.
பல வகைகளில் இந்த நாவலை முக்கியமானதாகக் கருதத் தோன்றுகிறது. முழுக்கமுழுக்க ஒரு பழைமையான மதமாகிய ஜைன மதத்தின் கோட்பாடுகளையும் வெளிப்பாடுகளையும் மையச் சரடாகக் கொண்டு நவீன ஆய்வு நோக்கில் நாவல் உற்றுநோக்குவது முதற்காரணம். எந்த முன்முடிவையும் வாசகனிடம் திணிக்காமல், மதத்தைப் பற்றிய ஆய்வின் வாயிலாகவே வழ்க்கையைப்பற்றிய பல நோக்குப் பார்வையை முன்வைப்பது இரண்டாவது காரணம். ஏறக்குறைய கட்டுரைத் தொகுப்பைப்போன்ற கருவையும் செய்திகளையும் உள்ளடக்கத்தில் பெற்றிருந்தாலும் மிகமிக சுவாரஸ்யமான நாவலாக சுமார் 400 பக்கங்களுக்கு விரிவடையும் கதையின் பாங்கு மூன்றாவது காரணம். இப்படி பல காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவியான ஆன், தனது நண்பன் ஆடம் என்பவனுடைய துணையோடு ஜைன மதத்தைப்பற்றிய ஆய்வை மேற்கொள்ள இந்தியா வருகிறாள். அவள் அடையும் அனுபவங்களே நாவலாக விரிகிறது. ஜைனமதத்தின் சிறப்பியல்புகளால் ஈர்க்கப்பட்டு ஆன் தன்னுடைய கிறித்துவ மதத்திலிருந்து ஜைன மதத்துக்கு மாறுகிறாள். பல ஜைன புனிதத்தலங்களுக்கும் பயணிக்கிறாள். கிருஷ்ணாபுரத்தில் இருக்கும் ஆடமின் குடும்பத்தாருடன் பழகுகிறாள். தார்வாடில் இருக்கும் பேராசிரியர் நிர்மல்குமார் குடும்பத்தாருடன் பழகுகிறாள். சிரவணபெலகொலாவில் துறவியாகவே மாற அநேகமாக முடிவெடுக்கிறாள். ஜைனத்தைப்பற்றிய உயர்ந்த எண்ணங்களில் மிதந்து கொண்டிருக்கும் அவளுடைய உள்ளம், மதத்தின் நடைமுறை நெருடல்களால் அதிர்ச்சிக்கு உள்ளாக நேருகிறது. இறுதியில் அனைத்தையும் விடுத்து ஆடத்தைத் திருமணம் செய்துகொள்ள உத்தேசித்து இருவரும் இங்கிலாந்து திரும்புகின்றனர்.
நாவல் பல தளங்களில் இயங்குகிறது. முற்றிலும் வேறுபட்ட கோட்பாடுகளை உடைய கதைமாந்தர்கள், நாவலுக்கு சுவாரஸ்யத்தையும் பல பரிமாணங்களையும் தருகின்றனர். ஜைனத்தில் பெரிதும் தோய்ந்த தேவேந்திரப்பா, பேருக்கு ஜைனராக தோற்றம் தந்து வெற்றிகரமான சுயநலவாதியாகவும் வியாபாரியாகவும் விளங்கும் தேவேந்திரப்பாவின் இளைய சகோததர் அப்பாசாகிப், எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கையின் இன்பத்தை முழுக்கமுழுக்க நுகரத் துடிக்கும் அப்பாசாகிபின் மகன் பரத், மார்க்சிய ஆதரவாளரான ரோஜா , ஆய்வு நோக்கில் அனைத்தையும் கிரகித்தாலும் சட்டென்று மாறுகின்ற மனோபாவம் கொண்ட ஆன், எதிலும் ஈடுபாடு இல்லாதவன் போல் காட்சி அளித்தாலும் வாழ்க்கையை உள்ளபடியே நேசிக்கிறவனாகவும் மனசாட்சிக்கு நேர்மையானவனாகவும் இருக்கும் தேவேந்திரப்பாவின் பேரனும் இங்கிலாந்தைச் சேர்ந்தவனுமாகிய ஆடம் என கதைமாந்தர்கள் வேறுபட்ட இயல்புகளை உடையவராக உள்ளார்கள். பிரதான பாத்திரங்களான ஆன் மற்றும் ஆடம் வெளிநாட்டினராக இருப்பது நாவலின் பார்வைக்கு வலிமை சேர்க்கிறது. ஜைன மதத்தை வெளிநாட்டினிரின் பார்வையில் ஆராய்ந்து சகநோக்கில் எடைபோடும் சாத்தியக்கூறை அது உருவாக்கித் தருகிறது.
ஜைன மதத்தின் சடங்குகளும் பூசைகளும் மிகத்துல்லியமாக நாவலில் சித்தரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அப்பாசாகிப் இதய நோயிலிருந்து பூரணநலமடைய நடக்கும் சாந்தி ஹோமம் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாவலின் இறுதிப்பகுதிகளில் விவரிக்கப்பட்டிருக்கும் கோமட்டீஸ்வரரின் மகாமஸ்தாபிகேஷகமும் விரவரணையும் மிகக்குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சிறு விஷயங்கள்கூட விட்டுப்போகாமல் மிகவிரிவாகவே அபிஷேக நிகழ்ச்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. சடங்குகளை விமர்சிக்கும் அதே நேரத்தில் மதத்தின் கோட்பாடுகளையும் நாவல் விட்டுவைக்கவில்லை. கோட்பாடுகளில் உள்ள நடைமுறை சிக்கல்களை கதாபாத்திரங்களின் மூலம் ஓர் இடத்தில் முக்கிய இரு கேள்விகளை தொடுக்கும் இடத்தைச் சொல்லலாம். “உலகத்துக்கே அகிம்சையைப் போதிக்கின்ற மதத்தில் சும இம்சை ஏன் இருக்கிறது? திகம்பரர்களும் சுவேதாம்பரர்களும் ஏன் இணையக்கூடாது?” வேறு ஓர் இடத்தில் ஆனைப் பார்த்து பரத் கூறுகிறான். “ஜைன மதத்தை தலையில் வைத்து கொண்டாடுகின்றாயே? இது ஓர் எதிர்மறையான மதம். வாழ்க்கையை மறுத்து சுய இம்சைகள்மூலம் தற்கொலைக்கு தூண்டும் மதம். பெண்களை இரண்டாம் தரமாக நடத்துகிறது இம்மதம்.”
நூலில் குறிப்பிடத்தக்க இன்னொரு செய்தி ஆசிரியரின் குறுக்கீடு. நாவலின் நடுப்பகுதி வரை அடிக்கடியும், இறுதிப்பகுதியில் ஒரு முறையும் நாவலாசிரியர் வாசகர்களிடம் நேரடியாக உரையாடுகிறார். பொதுவாகப் பார்க்கும்போது ஆசிரியரின் குறுக்கீடு என்பது வாசிப்பனுபவத்தை தடை ஏற்படுத்துவதும், ஆயாசம் தரக்கூடியதும் ஆகும். ஆனால் வியப்பளிக்கும் வகையில் ஆசிரியரின் குறுக்கீடு இங்கே நாவலுக்கு பெரிதும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. வாசகனை புதிய தளங்களுக்கு பயணிக்க ஊக்கப்படுத்துவதாகவும் உள்ளது.
நாவலை முடிக்கும்போது ஜைனமதத்தைப்பற்றிய அலசல் மடைமாற்றம் பெற்று வாழ்க்கையைப்பற்றிய அலசலாக மாறுகிறது. வாழ்க்கையை நெறிப்படத்த அவதாரம் எடுத்த மதங்கள் தங்களின் சாரத்தை இழந்து சக்கையான ஏன் மாறிப்போயின..? இன்பத்தையே மறுக்கும் ஒரு மதம், ஆடம்பரத்துக்கும் வெற்று சடங்குகளுக்கும் கூடாரம் ஆனது ஏன்? அன்பை போதிக்கும் மதங்கள் இனப்படுகொலைக்கும் பயங்கரவாதத்துக்கும் புகலிடமாக விளங்குவது ஏன்? நோக்கத்தைவிட்டு வெளிவந்து நெடுங்காலம் ஆகிவிட்ட இம்மதங்கள் எந்த வகையில் இன்றைய வாழ்க்கைக்குத் தேவையாக இருக்கக்கூடும்? மதங்கள் தவறவிட்ட கருணையும் அன்பும் இன்றும் மனிதகுலத்தை வழிநடத்திச் செல்ல இன்றியமையாத தேவைகளாக இருக்கின்றன. பரஸ்பர அன்பும் நம்பிக்கையும் சுதந்திரமுமே அனைத்து கட்டுகளில் இருந்தும் மனித குலத்தை விடுவிக்க வல்லதாக இருக்கினறன என்கிற பல சிந்தனைகளை இந்த நாவல் வாசகனிடம் விதைக்கிறது.
எஸ்.எல்.பைரப்பாவின் பருவம் நாவலை மொழிபெயர்த்த பாவண்ணன் இந்த நாவலையும் மொழிபெயர்த்துள்ளார். மிக நேர்த்தியான மொழிபெயர்ப்பு இந்த நாவலை நேரடியான நாவலாகக் கருதத் தோன்றுகிறது. கதை மாந்தர்கள் மற்றும் கதை நிகழும் இடங்களின் பெயர்கள்மட்டுமே இதைக் கன்னட நாவல் என்று நினைவுப்படுத்துகின்றன.
இருளைக் கடந்த ஒளியின் பின்புலத்தில் நின்றுகொண்டிருக்கும் அயல்நாட்டுப் பெண்மணி இடம்பெற்றிருக்கும் அட்டைப்பட ஓவியம் கதைக்குப் பொருத்தமானதாகவும் நாவலின் ஆழத்தை உணர்த்த வல்லதாகவும் உள்ளது. ஜைன மதத்தின் பிரதான மந்திரச் சொல்லான ஓம் நமோ நாவலுக்கு தலைப்பாக இடப்பட்டது இன்னொரு பொருத்தம். நல்லதொரு நாவலை மொழிபெயர்த்ததற்காக பாவண்ணன் தமிழ்கூறும் நல்லுலகத்தின் நன்றிக்கு உரியவராக ஆகிறார்.
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் (கட்டுரை 47)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -4
- தந்தை- மகள் – தமிழ் உறவு
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: லெ க்ளேஸியோ- 2008 ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றவர்.
- எழுத்து எழுதுகிறது
- அந்த கொடிய பகலின் வேதனை
- பூனைகள்…
- கடவுளுக்கு ஒரு கடிதம்
- மதம், மனிதன் மற்றும் வாழ்க்கை ( ஓம் நமோ – மொழிபெயர்ப்பு நாவலைமுன்வைத்து )
- அரவ¨ணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்…..
- குண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது
- தமிழ் மீடியாவும் கூப்பாடும்
- தமிழ் ஸ்டுடியோ.காம்
- காஞ்சி இலக்கிய வட்டம் வெ. நாராயணன் மறைவு
- ஏ ஜே நூல் வெளியீடு
- இடஒதுக்கீடு விமர்சனம் பற்றி திரு அப்துல் ரஹ்மானின் கடிதம் பற்றி…
- கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -4)
- வேத வனம் விருட்சம் 16
- கடவுளின் காலடிச் சத்தம் (கடைசிப் பகுதி) கவிதை சந்நிதி
- விட்டு விடுதலையாகி….
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -16 << பருவத்தின் பளிங்கு மேனி >>
- தாகூரின் கீதங்கள் – 61 படகில் இடமில்லை !
- தத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்
- மீண்டெழுந்த வாழ்க்கை (முத்துமீனாளின் “முள்”-சுயசரிதை)
- டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள் – 2
- ‘க்ரியா’ வின் அகராதி முயற்சியில் ஈழத்தவரின் பங்களிப்புப் பற்றிய இரண்டு குறிப்புகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபது
- நான் நிழலானால்
- கிறிஸ்துமஸ் பரிசு
- காலிமண்டபமும், கடவுள்களும்…..
- ஞயம் பட உரை