மஞ்சள் மகிமை- உணவு மஞ்சள் பொடி அல்ஜைமர் நோய்க்கு மருந்தாகலாம்.

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

அமி நார்ட்டன்


மசாலாவில் மஞ்சள் நிறம் வரவழைக்க உபயோகப்படுத்தப்படும் மஞ்சள்தூள் (turmeric), அல்ஜைமர் வியாதி உடையவர்களின் மூளையில் இருக்கும் அழுக்குக்களை நீக்குவதாக ஆரம்ப ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மஞ்சள்தூளில் இருக்கும் குர்குமின் curcumin என்ற ஒரு மூலக்கூறு, வயதான பரிசோதனைச்சாலை எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரோட்டான் சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

மூளையில் அல்ஜைமர் உருவாக்கும் அழுக்குளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரோட்டான்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரோட்டான்கள் ஒன்று சேரவிடாமல் நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது.

பீட்டா-அமைலோய்ட் புரோட்டான்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்ஜைமர் வியாதியாக உருவாகிறது.

ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்ஜைமர் வியாதியை குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்குமின் உதவும் என்பதை பரிந்துரை செய்கின்றன.

‘இப்போதைய கேள்வி, எந்த அளவு குர்குமின் அல்ஜைமரை குணப்படுத்த கொடுக்க வேண்டும் என்பதும், எந்த அளவு அது முதிய நோயாளிகளுக்கு பாதுகாப்பானது என்பதை அறிவதுமே ‘ என்று இந்த ஆராய்ச்சியை செய்த டாக்டர் கிரிகோரி எம் கோல் அவர்கள் தெரிவித்தார்.

குர்குமின் என்ற இந்த மஞ்சள் மூலக்கூறின் மருத்துவ குணங்களை வெளிப்படுத்து ஏராளமான பரிசோதனைகளில் இந்த பரிசோதனையும் இணைந்திருக்கிறது. இந்த கட்டுரை Journal of Biological Chemistry இல் வெளிவந்திருக்கிறது. இந்திய மருத்துவத்தில் வெகுகாலமாக பயன்படுத்தப்படும் மஞ்சள்தூள், கான்சர் போன்ற வியாதிகளுக்கும் மல்டிபிள் செலெரோஸிஸ், சிஸ்டிக் பைபரோஸிஸ் போன்ற வியாதிகளுக்கும் மருந்து என்ற அடிப்படையில் பல பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

வயது முதிர்ந்த இந்தியர்களிடம் அல்ஜைமர் வியாதி மிக மிகக்குறைவான அளவில் இருப்பதை அடித்தளமாக வைத்துக்கொண்டு இந்த பரிசோதனை செய்யப்பட்டது. இந்தியாவில் மஞ்சள்தூள் கறிமசாலாவில் அதிகம் சேர்க்கப்படுவது அறிந்ததே.

காங்கோ சிவப்பு Congo red என்று வழங்கப்படும் ஒரு நிறத்தூளுடன் மிகவும் நெருங்கிய மூலக்கூறு அமைப்பு கொண்டது குர்குமின். இந்த காங்கோ சிவப்பு அல்ஜைமர் வியாதியை இறந்த நோயாளிகளிடம் இருக்கிறதா என்பதை அறிய உதவுகிறது.

குர்குமினும் அமைலோய்ட் அழுக்குக்களை நிறமாற்றிக் காட்டுகிறது. ஆனால், அத்தோடு கூடவே, இது உண்ணப்பட்டாலும், ரத்தத்தில் நேராக செலுத்தப்பட்டாலும், மூளைக்குச் சென்று அங்கிருக்கும் அமைலோய்ட் அழுக்குக்களோடு வேதி வினையில் இணைகிறது.

மேலும், குர்குமின் ஒரு ஆண்டி-ஆக்ஸிடெண்டும், ஆண்டி இன்ஃப்ளமேட்டரி என்று சொல்லப்படும் எரிச்சல் குறைக்கும் மருந்தும் ஆகும். அமைலோய்ட் சேர்வதினால் உருவாகும் எரிச்சலையும் அதனால் உருவாகும் செல் உடைவுகளைகளையும் சரிப்படுத்தவும் செய்கிறது.

இது அமைலோய்டையும் தாக்குகிறது, அதே போல அமைலாய்டால் உருவாகும் பக்க பாதிப்பையும் சரி செய்கிறது ‘ என்று கோல் கூறினார்.

முடக்குவாதம் (arthritis), இருதயத்தில் அழுக்கு சேர்வது ஆகியவைகளை குர்குமின் தடுக்கலாம் என்று கோல் குறிப்பிடுகிறார்.

SOURCE: Journal of Biological Chemistry, online Dec. 7, 2004.

Series Navigation

அமி நார்ட்டன்

அமி நார்ட்டன்