மகிழ்ச்சி என்பது ஒருமை..

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue

சேவியர்.


நான்
நினைத்திருந்தவை
நிலைத்திருக்கவில்லை.

மகிழ்கிறேன்.

யாரேனும் அளிக்கும்
அன்பளிப்புப் பொதிகளோ,
வாங்கிக் குவித்த
வங்கிக் கணக்குகளோ,
எனக்குள்
நிலையாய் எதையும் நட்டுவிடவில்லை.

மழலை மாலைகளில்
முந்திரித் தோட்டத்தில்
தும்பிக்குப் பின்
துரத்தி நடந்த நாட்களிலும்,

கால்வாய்க் கரைகளில்
சகதிக்குள் சிப்பி பொறுக்கிய
அரை டிராயர்
அழகு நாட்களிலும்,

பள்ளிக்கூட கூரைகளில்
பட்டம் விட்ட பொழுதுகளிலும்,
கல்லூரிக் கன்னியர் முன்
பட்டம் பெற்ற பொழுதுகளிலும்,

எப்போதும்
எனக்குள் இருந்தது
இது தான்.
இதே மகிழ்ச்சி தான்.

மகிழ்ச்சி வளரும் எனும் கனவின்
பின்
மகிழ்ச்சி தொலைத்து
நான் வளர்த்த
கனவுகளே அதிகம்.

தூண்டில்,
வலை,
என்று எல்லை விரித்தாலும்
நீர் இல்லா குளத்தில்
மீன்கள் சிக்குவதில்லையே.

ஜீவனும்,
சந்தோசமும்,
விலைக்குக் கிடைப்பதில்லை.
அது
தீண்டுவதால் தூண்டப்படும்
அதிசய சுரப் பேழை.

மகிழ்ச்சி மனம் சார்ந்தது,
அது
லாட்டரிச் சீட்டுகளில்
பொதிந்து தரப்படுபவையல்ல.

நான்
ஓடிய போதெல்லாம்
அது புலப்படவில்லை,
என்
திரும்பிப் பார்த்தலில் தெரிகிறது.

உண்மையில்,
மகிழ்ச்சி
பெறுவதில் பெறப்படுவதல்ல.
தருவதில் வளப்படுவதே.

சேவியர்.

xavier@efunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்