போனதும், போனவைகளும்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

நரேந்திரன்


History is a guide to navigation in previous times. History is who we are and why we are the way we are.

– Historian David C. McCullough

மேலே தொடருமுன், இது கொஞ்சம் dry subject என்பதை ஆரம்பத்திலேயே உங்களுக்குச் சொல்லிவிடுவது நல்லது என நினைக்கிறேன். கொஞ்சம் வரலாறு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால்தான் இந்த எச்சரிக்கை. உலக வரலாறு தொடர்பான நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் புத்தகங்கள் எனக்குப் பிடித்தமானவை. அது, ஆனந்த விகடனின் மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்களாக ‘ இருந்தாலும் சரி அல்லது லெமூரியாக் கண்டம் மற்றும் பஃறுளியாறு பற்றிப் பேசும் ‘கடல் கொண்ட தென்னாடாக ‘ இருந்தாலும் சரி. படிக்காமல் விடுவதில்லை. வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன என்பது என் எண்ணம்.

அந்த வகையில், அமெரிக்கரான Donovan Webster என்பவர் எழுதிய ‘The Burma Road ‘ என்ற புத்தகம் சமீபத்தில் படிக்கக் கிடைத்தது. இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் பங்கு பற்றி இதுவரை நான் அறிந்திராத பல ஏராள ஆச்சரியச் செய்திகள் அதனில்.

இரண்டாம் உலகப் போரில் இந்தியா அதிகம் பாதிக்கப் படவில்லை. காலனி ஆதிக்க நாடாக இருந்தாலும், போர் நடக்கும் எல்லைகளை விட்டுத் தள்ளி இருந்ததனால் இந்தியர்கள் இ.உ.போரின் தாக்கம் குறித்து அறிய இயலாமலேயே போயிற்று எனலாம். சென்னை, மற்றும் கடலூர் துறைமுகங்களின் மீது, புகழ் பெற்ற ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலான ‘எம்டன் ‘ வீசிய குண்டுகளை இன்றுவரை சென்னைவாசிகள் மறக்கவில்லை. குண்டு வீசப்பட்ட சமயத்தில் சென்னை ஏறக்குறைய காலியாகிப் போனதாகவும், சென்னைவாசிகள் அத்தனை பேரும் வீடுகளை விற்றுவிட்டுக் கிராமங்களுக்குப் போய்விட்டதாகவும் சொல்வார்கள். ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ். வாசன் போன்றவர்கள் கூட இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அவரின் ஸ்டுடியோ சாமான்களை தஞ்சையில் இருக்கும் அவரின் நண்பர் வீட்டில் வைத்துப் பின், அந்த நண்பரின் வீட்டிலேயே மூன்று மாதங்கள் வரை தங்கி இருந்ததாகச் சமீபத்தில் வெளியிடப்பட்ட வாசன் நூற்றாண்டு மலரில் எழுதப்பட்டிருக்கிறது.

இரண்டாம் உலகப் போரால் நமக்கு நடந்தது அவ்வளவுதான் என்றுதான் இதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன். இந்தியா, ஜப்பானியர்களால் ஏறக்குறைய கைப்பற்றப்பட்டு, ஜப்பானிய ஆக்கிரமிப்பிலிருந்து மயிரிழையில் தப்பி இருக்கிறது என இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பது எனக்குப் புதிய செய்தியாக இருந்தது. அந்த சமயத்தில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே ‘The Ledo Road ‘ எழுதப்பட்டிருக்கிறது.

‘ஆசிய நாடு ஆசியர்களுக்கே ‘ என்ற முழக்கத்துடன், ஆசியாவின் பெரும்பகுதியைப் பிடித்த ஜப்பானியர்கள், தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் வாழும் மக்களுக்குச் செய்த கொடுமைகளின் காரணமாக அவர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தார்கள். குறிப்பாக சீன நாட்டின் பெரும்பகுதியைப் பிடித்த ஜப்பானிய ராணுவத்தினர், சீனர்களுக்கு எதிராக மனித வரலாற்றின் ரத்தமயமான கொடுஞ் செயல்களை அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர். குறிப்பாக, லட்சக்கணக்கான சீனர்கள் கொன்று குவிக்கப்பட்ட ‘Nanking massacare ‘ என அறியப்படும் நான்கிங் நகரப் படுகொலைகள். இன்றளவும் சீனர்கள் அதனை மறந்துவிடவில்லை. இந்த ஆக்கிரமிப்பின் காரணமாகச் சீன அதிபராக இருந்த சியாங்-கை-ஷேக் (

Siang-Kai-Sheik) ஜப்பானியர்களால் தெற்கு நோக்கி விரட்டப்பட்டார்.

இந்தியாவிற்கு மிக அருகிலிருக்கும் பர்மாவைக் கைப்பற்றிய ஜப்பானியர்கள், பர்மியக் காடுகளின் வழியாக இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு ஜப்பானியப் படையணி, ஆக்கிரமிக்கப் பட்ட சீனா வழியாக இந்தியாவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த ஒரே வழி, இந்தியாவின் வட கிழக்குப் பகுதியான கோஹிமா (Kohima)வையும், சீனாவின் ‘குன்மிங் ‘ (Kunming) மற்றும் பர்மாவின் ‘லஷியோ ‘ (Lashio) நகரங்களை ஒரு புதிய சாலையின் மூலம் இணைப்பது (சீனாவின் தென் மேற்கில் அமைந்த நகரமான ‘குன்மிங் ‘ சியாங்-கை-ஷேக்கின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது). புதிதாக அமைக்கப்படும் இச்சாலையின் முக்கிய நோக்கம், சியாங்-கை-ஷேக்கின் சீனப் படையுடன், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகளை இணைப்பது. இரண்டாவது நோக்கம், அந்தப் படைகளுக்குத் தேவையான தளவாடங்கள் இந்தியாவிலிருந்து தொடர்ந்து தடங்கலின்றி கிடைக்கச் செய்வது.

அதன் நோக்கத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டதுதான் புகழ் பெற்ற(!) Ledo Road. அமெரிக்க ராணுவ ஜெனரலான Joseph W. Stillwell முயற்சியால் ஒரு வருட காலத்திற்குள் போட்டு முடிக்கப்பட்ட 800 மைல் நீளமுள்ள இந்தச் சாலை பற்றிய தகவல்கள் பல பிரமிக்கத் தக்கவை. பத்திற்கும் மேற்பட்ட பெரிய ஆறுகளும், நூற்றி ஐம்பத்தைந்திற்கும் மேற்பட்ட சிற்றாறுகளும் பாயும் இந்த மலைப் பாங்கான பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பாலங்களின் எண்ணிக்கை 700. மழைக்காலங்களில் 45 அடிக்கும் அதிகமான அகலத்தில், காடுகளையும், மலைகளையும் ஊடறுத்துப் பாயும் காட்டாறுகள் அவை. கறுப்பர்கள் நிறைந்த அமெரிக்க 858வது ஏவியேஷன் பேட்டாலியனும், வெள்ளையர்கள் அதிகமான mechanized படையணிக்களும், கூர்க்காக்களும், கச்சின் மற்றும் நாகா பழங்குடிகளும், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சீனர்களும் லிடோ சாலை போடும் பணியில் ஈடுபடுத்தப் பட்டார்கள்.

Ledo Road போடும் பணிக்குப் பயன் படுத்தப் பட்ட மொத்த மண்ணைக் கொண்டு, அமெரிக்காவின் கிழக்கே நியூயார்க் நகரத்திலிருந்து, மேற்குப்பகுதி நகரமான சான்ஃபிரன்சிஸ்கோ வரை பத்து அடி உயரமும், மூன்று அடி அகலமும் கொண்ட ஒரு உறுதியான மண்சாலையை அமைக்க முடியுந்திருக்குமாம். மொத்தம் 13.5 மில்லியன் cubic yard அல்லது 14,850,000,000 பவுண்ட் நிலப்பகுதி இந்த சாலை அமைப்பதற்காகச் சமனப்படுத்தப்பட்டது என்கிறது ஒரு தகவல்.

இவ்வளவு சிரமங்களுக்கு இடையில் அமைக்கப் பட்ட Ledo Road எந்தக் காரணத்திற்காக அமைக்கப் பட்டதோ அந்தக் காரணத்திற்காக கடைசிவரை உபயோகப்படுத்தப் படவில்லை. இந்தச் சாலை போட்டு முடிவதற்கும், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வருவதற்கும் சரியாக இருந்ததால், உபயோகமற்றுப் போய்விட்டது. இன்றைக்குக் காடுகள் மூடி இந்தியப் பகுதியில் அமைக்கப் பட்ட இச்சாலையின் உபயோகம் நின்று போய் விட்டாலும், பர்மாவில் Ledo Road இன்றும் உபயோகத்தில் இருப்பதாகத் தெரிய வருகிறது.

லிடோ சாலை போடப்படுவதற்கு சிறிதுகாலத்திற்கு முன், ஜப்பானியப் படையணி ஒன்று இந்தியாவின் கோஹிமா நகரைத் தாக்க ஆரம்பித்து ஏறக்குறைய கைப்பற்றிய நிலையில், அதிர்ஷ்டவசமாக அத் தாக்குதல் முறியடிக்கப் பட்டது. ஜப்பானிய கமாண்டர் கோஹிமாவைத் தாக்காமல், பிரிட்டிஷ்-அமெரிக்கப் படைகளுக்கு தளவாடங்கள் வரும் ஒரே ரயில்பாதைத் தொடர்பான இன்றைய மணிப்பூரின் இம்ஃபால் (Imphal) நகரைத் தாக்கி இருந்தால் மிக எளிதாக இந்தியாவை வென்றிருக்க முடியும் என்கிறார் இந்நூலின் ஆசிரியர். அந்த நேரத்தில் பாதிக்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் துருப்புகள் பர்மாவின் காடுகளுக்குள் இருந்தனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஆயுதங்கள் இம்ஃபால் நகரம் மூலமாகத்தான் வரவேண்டியிருந்ததால் அது உண்மையென்றே படுகிறது.

இந்தியாவிற்கு அருகில் இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் மும்முனைத் தாக்குதல்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஜப்பானிய படையணிகள் ஒருபுறம், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் இன்னொரு புறம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் I.N.A எனப்படும் Indian National Armyயை இன்னொரு திசையிலும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது போன்ற விபரங்கள் மிகத் துல்லியமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் The Burma Road புத்தகத்தை எழுதிய Donovan Webster.

இது போன்ற சில விஷயங்களைப் படிக்கும் போது ஏற்படும் ஆச்சரியங்களுக்கு அளவேயில்லை. இவ்வளவு விஷயங்கள் நமக்கு அருகில், நமது நாட்டிலேயே நடந்திருக்கின்றன. இத்தனை நாள் நமக்குத் தெரியாமல் போய் விட்டதே என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. நமக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் எங்கோ வாழும் அமெரிக்கர் இதனைப் பற்றி ஆராய்ந்து எழுதுகிறார். அதனை இந்தியர்களாகிய நாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதுதான் வருத்தமளிக்கவே செய்கிறது.

இந்திய ராணுவ வீரர்கள், இரண்டாம் உலகப் போரின் போது, தொலை தூர நாடுகளில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் படை வீரர்களாகப் போர் புரிந்து இருக்கிறார்கள். ஆப்பிரிக்கா, ருமானியா போன்ற தொலைதூர நாடுகளில் கூட அவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் இன்றும் உண்டு. தலை நகரான புது தில்லி, ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இருக்கும் ‘இண்டியா கேட்டில் ‘ இரண்டாம் உலகப் போரில் உயிர்துறந்த இந்திய ராணுவத்தினரின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் I.N.Aவில் ஏராளமான தமிழர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். முத்துராமலிங்கத் தேவர் போன்ற தமிழ்நாட்டுத் தலைவர்கள் கூட நேதாஜியுடன் பணியாற்றியவர்களே.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல செய்திகள் இந்தியர்களுக்குத் தெரியாமலிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்பது எண்ணம். அதையும் விடக் கேவலம், நமது வரலாற்றாளர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் இதைப் பற்றிய சுரணையே இல்லாமலிருப்பது. உப்பு, சப்பில்லாத, ஏமாற்றுத்தனமான ‘திராவிட வரலாறு ‘ மட்டுமே நமது வரலாறில்லை. இந்தியாவின் கடந்தகாலம் அதையும் விட உன்னதமானது. தனிச் சிறப்பு வாய்ந்தது. இந்தியாவின் கடந்த கால வரலாறு எதிர்காலச் சந்ததியினருக்குத் தேவையான ஒரு முக்கியப் பாடம் என்பதை இவர்கள் எப்போது உணருவார்கள் ?

****

வரலாற்றின் முக்கியத்துவம் பற்றி சீனர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கிறது. சீனாவை ஆண்ட முதல் பேரரசரிலிருந்து இன்றைய ஆட்சியாளர்கள் வரையில் இடைவெளியில்லாமல் அவர்களின் ஐந்தாயிர ஆண்டுகால வரலாறு தொடர்ச்சியாக, கோர்வையாக எழுதப்பட்டுப்பட்டிருக்கிறது. எந்த வருடம், எந்தப் பேரரசர் தங்களை ஆண்டார் என்பதைச் சீனர்களால் தெளிவாகச் சொல்ல முடியும். நமக்குத் தெரிந்த வரலாரெல்லாம் பொய்யும், புளுகு மூட்டைகளும்தான். தங்களின் கடந்த கால வரலாற்றைப் பற்றிய, தங்களின் கலாச்சாரத்தைப் பற்றிய அறிவு இல்லாதது மட்டுமில்லாமல், இருப்பதையும் அழிப்பதில் இந்தியர்களை, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்காரர்களை மிஞ்ச ஒருவருமில்லை.

செப்பேடுகள், கல்வெட்டுக்கள் போன்றவை தமிழ்நாட்டு வரலாறு பற்றி அறிந்து கொள்ள ஓரளவு உதவியாக இருக்கின்றன. எனினும், தமிழர்கள் அறியாமை காரணமாகப் பல பழமையான ஓலைச் சுவடிகள் ஆற்றில் எறிந்தும், தீயிட்டுக் கொளுத்தியும் இருக்கிறார்கள். டாக்டர் உ.வே.சா போன்றவர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையே பல அரிய தமிழ் இலக்கியங்களைத் தேடிப்பிடித்துக் காப்பாற்றியிராவிட்டால், பல வரலாற்றுக் குறிப்புகள் வெளிவராமலே போயிருக்கலாம் (எங்கள் ஊர்ப்பக்கம் துணி துவைக்க கல்வெட்டுக்களைத்தான் பயன்படுத்துவார்கள். சதுரமாக இருக்கும் பாருங்கள்!). கல்வெட்டுகளில் எழுதி இருப்பதைப் படிக்க முயல்வது கூடத் தவறு என்ற நம்பிக்கை இன்றும் சில தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கிறது.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு, தஞ்சைப் பெரிய கோவில் பற்றி எடுக்கப்பட்ட ஒரு டாகுமென்டரிப் படத்தை (அதுவும் அமெரிக்கர்களால் எடுக்கப்பட்டதுதான்), Travel Channel-இல் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. மிகவும் விளக்கமாக, விஸ்தாரமாகப் பெரிதும் மாறுபட்ட கோணங்களில் எடுக்கப்பட்ட மிகச் சிறப்பான டாகுமெண்டரி. கோவிலின் விமான உச்சியில் இருக்கும், ஏறக்குறைய நான்கு டன் எடையுடைய கல்லை எப்படி மேலே ஏற்றி இருப்பார்கள் என்பதை மிகத் தெளிவாக விளக்கி இருந்தார்கள். தமிழ்நாட்டுக்காரர்களே அறியாத, வெட்கித் தலை குனியும்படியான வகையில் ஏராளமான வரலாற்று ஆதாரங்கள். அதைப் பார்த்த போது எனக்குள் எழுந்த ஒரே கேள்வி, ‘நாம் ஏன் இப்படி இருக்கிறோம் ? ‘ என்பதுதான். நமது வரலாற்றுச் சிறப்பை எடுத்துக் காட்ட ஒரு வெளிநாட்டுக்காரர்தானா வர வேண்டும் ? அதையேன் நாமே செய்யவில்லை ? அறியாமையா ? அல்லது அறிவிலித்தனமா ?

தமிழ்நாட்டின் ஒவ்வொரு கோவிலும் ஒரு கலைக்கூடம். கடவுள் இருக்கிறாரா ? இல்லையா ? என் கடவுள்தான் உயர்ந்தவர். மற்ற மதத்துக் கடவுளர்கள் போலிகள் என்பது போன்ற சர்ச்சைகளை ஒருபுறம் ஒதுக்கித் தள்ளி விட்டு ஒருமுறை ஏதாவது ஒரு தமிழ்நாட்டுக் கோவிலுக்குள் நுழைந்து பாருங்கள். நன்கு வளர்ந்த ஒரு கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு முழு வீச்சில் அங்கு மிளிர்வது தெரியும்.

கடந்த காலம் என்பது ஒரு அளவு கோல். நமது முன்னோர்கள் ‘காட்டு மிராண்டிகளாக ‘ இருந்தார்கள் என்றால், நாம் நமது இன்றைய ‘நாட்டு மிராண்டி ‘த்தன்மை கண்டு பெருமை கொள்ளத் தேவையான ஒன்று. அது இல்லாவிடில் நாம் எதைக் கொண்டு நம்மை அளவிடுவது ? திராவிட வரலாற்றைக் கொண்டா ? அதை விடக் கொடுமை வேறெதுவும் இருக்க முடியாது.

மேலே கூறிய அதே டாகுமெண்டரியில், தஞ்சைப் பெரிய கோவிலின் கீழ் கண்டுபிடிக்கப் பட்ட ஒரு நிலவறையில் காணப்படும் சில ஓவியங்களைக் காட்டினார்கள். ஒரு ஓவியத்தில், தனது ராஜகுருவின் பின்னால் பாதி மறைந்தும், மறையாமலும், மிக அமைதியான முகத்தில் மெல்லிய புன்னகையுடன் நின்று கொண்டிருப்பவர்தான் தமிழ்நாட்டின் ஒரே பேரரசரும், மாபெரும் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவருமான அருள்மொழிவர்மன் (aka இராஜ இராஜ சோழன்) என்பதை நம்புவதற்குக் கடினமாகத்தான் இருந்தது எனக்கு.

பணியுமாம் என்றும் பெருமை ?

****

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்