விந்தன்
‘என்னா சின்னி ‘ வயிற்றைக் கிள்ளுகிறது; சோத்தையாச்சும் வடிச்சயா ? ‘ என்று கேட்டுக் கொண்டே வந்தான் பசியால் வாடிய பொன்னையா.
‘நீயும் கேட்கிறயே ‘ வெட்ட வெளியிலே அடுப்பைப் பற்ற வச்சிட்டு நான் அவதிப்படறேன். குழந்தை வேறே பனியிலே படுத்துக் காலையிலேருந்து காயலாக் கிடக்குது. எனக்கு வேலையே ஒண்ணும் ஓடலே. அடிக்கிற காத்துலே இந்த அடுப்பு கொஞ்சமாச்சும் எரியுதா ? ‘ என்று எரிந்து விழுந்தாள் சின்னி.
‘என்னை என்ன பண்ணச் சொல்றே. சின்னி ? என் அப்பன் எனக்கு ஆஸ்தியா வச்சுட்டுப் போன அந்த ஒரே ஒரு பொத்தல் குடிசையையும் பாழாய்ப்போன வெள்ளம் வந்து அடிச்சுட்டுப் போயிடிச்சு. இப்ப அந்த வீட்டைக் கட்டறதுன்னா கையிலே காசில்லே… ‘
‘எதுக்குத்தான் ஒங்கிட்டெ காசு இருந்தது ? நீயும் வந்து வெடிஞ்சயே, என் தலையிலே ‘ உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன் ? நகை உண்டா ? நட்டு உண்டா ? இல்லை நல்ல புடவையாச்சும் ஒண்ணும் உண்டா ? நான் வந்த வழி ‘ ….ஊ…உம்..ஊ….உம் ‘ என்று தன் புடவையின் மேலாக்கை எடுத்துக் கண்களைக் கசக்கிக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள் சின்னி.
‘அழு, அழு ‘ நல்லா அழு ‘ நான் அந்தத் தெருப்பக்கமாகப் போயிட்டு வாரேன் ‘ ‘ என்று கீழே வைக்கப்போன அடைப்பத்தை மீண்டும் தூக்கி அக்கத்தில் வைத்துக் கொண்டு நடந்தான் பொன்னையா.
* * *
வீட்டுக்கு வீடு ‘ஸேப்டி ரேஸர் ‘ வைத்துக் கொண்டிருக்கும் இந்த நாளிலே பொன்னையாவின் பிழைப்பு க்ஷீணதசையை அடைந்திருந்தது. கிடைத்ததைக் கொண்டு வயிற்றைத் திருப்தி செய்து கொள்ளவே அவனால் முடியவில்லை. இந்த லட்சணத்தில் அவன் இழந்த வீட்டை மீண்டும் கட்டிக் கொள்வதென்றால் குறைந்தது ஐம்பது ரூபாயாவது வேண்டுமே ‘ அடே அப்பா ‘ இந்த ஜன்மத்தில் அத்தனை ரூபாயை அவன் கண்ணாலாவது பார்க்க முடியுமா ?
உலகம் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதுதான்; அதுஎல்லோருக்கும் சொந்தம்தான். ஆனால், பணக்காரர்கள் சிலர் அதை ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கு போட்டுக்கொண்டு, ‘இது என்னுடையது; அது உன்னுடையது ‘ ‘ என்று உரிமை கொண்டாடுகிறார்களே…அவர்களுக்கு மத்தியில் ஏழை பொன்னையாவுக்கு வாழ இடமுண்டா ?
‘எல்லோரும் ஓர் குலம் ‘ என்பதெல்லாம் எழுத்திலே. வெறும் பேச்சிலே ‘ நடைமுறையிலோ ?
நாடு நகரங்களில் எத்தனையோ மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் ‘மேல் ஜாதியைச் சேர்ந்த எத்தனையோ பேர் அவற்றில் ஒண்டுக் குடித்தனம் செய்கின்றனர். அவர்களுடன் நாய்கூடச் சரிசமானமாக வாழ்ந்து வருகிறது ‘ ஆனால் பொன்னையா ? அவன் தான் கீழ் ஜாதியாச்சே ‘ மரணமடைந்த பின் மயானத்தில் கூட அவனுக்குத் தனி இடந்தானே ?
* * *
‘சின்னி ‘ எனக்கொரு யோசனை தோணுது; எங்கேயாச்சும் ஒண்டுக் குடித்தனம் இருக்கலாம்ணு பார்க்கிறேன் ‘ ‘ என்றான் ஒரு நாள் பொன்னையா.
‘நல்ல யோசனைதான்; நமக்கு யார் வீடு விடுவாங்க ? ‘ என்று கேட்டுச் சிரித்தாள் சின்னி.
‘நம்ம ஜில்லா போர்டுக்குத் தலைவராயிருக்காரே தர்மலிங்கம். அவர் எப்பப் பார்த்தாலும் ‘எல்லோரும் ஓர் குலம் ‘னு பேசிக்கிட்டிருக்காரு; நம்ம ஜாதியும் அவரு ஜாதியும் ஒண்ணுன்னு சொல்றாரு. அதாலே அவரைக் கேட்டா நமக்குக் கொஞ்சம் இடம் விடுவாரு, இல்லையா ? ‘
‘என்னமோ கேட்டுத்தான் பாரேன் ? ‘
‘இரு, கேட்டுக்கிட்டு வாரேன் ‘ ‘ என்று சொல்லிவிட்டு, அவருடைய வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான் பொன்னையா.
* * *
‘அம்மா ‘ ஐயா இருக்காரா ? ‘
‘யாரடா அது ? பொன்னையா ? ‘ என்று கேட்டுக் கொண்டே வாசலுக்கு வந்தார் தர்மலிங்கம்.
‘ஆமாங்க ‘ ‘
‘எங்கே வந்தே ? ‘
‘வெள்ளம் வந்து என் வீட்டை அடிச்சுக்கிட்டுப் போயிட்டுதுங்க; அதைத் திருப்பிக் கட்டலாம்னா கையிலே காசில்லிங்க ‘ பனியிலே படுத்துப் படுத்துக் குழந்தை வேறெ காயலாக் கிடக்குது. அதாலே உங்க வீட்டுத் திண்ணையிலாச்சும் கொஞ்சம் இடம் கொடுத்தீங்கன்னா, என்னமோ நாங்க பொழைச்சுப் போவோம் ‘ ‘
இதைக் கேட்டதும் தர்மலிங்கத்துக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. பொன்னையாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே அவருக்குத் தெரியவில்லை. எதற்கும் தமது மனைவியுடன் கலந்து யோசித்துப் பார்க்கலாம் என்று எண்ணியவராய், ‘சரி நாளைக்கு வாடா ‘ ‘என்று சொல்லி அவனிடமிருந்து அந்த நிமிஷம் தப்பிவிட்டார் ‘
* * *
‘பத்மா ‘ பொன்னையாவின் வீடு வெள்ளத்திலே போயிடுத்தாம்; நம்ம வீட்டுத் திண்ணையிலே கொஞ்சம் இடம் வேணும்ணு கேட்கிறான் ‘ ‘ என்று எண்சாண் உடம்பையும் ஒரு சாணாக ஒடுக்கிக்கொண்டு, தன் மனைவியிடம் தாழ்மையோடு விண்ணப்பம் செய்து கொண்டார் தர்மலிங்கம்.
‘ரொம்ப அழகாகத்தான் இருக்கு ‘ போயும் போயும் அந்தக் கீழ் ஜாதி நாயைக் கொண்டு வந்து… ‘ என்று ஆவேசத்துடன் இரைய ஆரம்பித்துவிட்டாள் அவள்.
‘உஸ் ‘ யாராவது கேட்டுக்கொண்டே உள்ளே வந்து விடப் போகிறார்கள் ‘ ‘ என்று அவள் வாயைப் பொத்தினார் தர்மலிங்கம்.
அவள், வாசல் வரை சென்று எட்டிப் பார்த்துவிட்டு வந்து, ‘யாரையும் காணோம் ‘ – ஆமாம், அதற்கு நீங்கள் என்ன சொல்லித் தொலைத்தீர்கள் ? ‘ என்று கேட்டாள்.
‘என்னத்தைச் சொல்வது ? ‘எல்லோரும் ஓர் குலம் ‘னு எடுத்ததுக்கெல்லாம் தொண்டை கிழியக் கத்தும் நான் என் வீட்டுத் திண்ணையில் அவனுக்குக் கொஞ்சம் இடமில்லையென்றால்… ? ‘
‘அதற்கு நான் ஒரு வழி, சொல்கிறேன் ? ‘ என்று சொல்லிக் கொண்டே பத்மா ஓடோடியும் வந்து, அவர் காதோடு காதாக ஏதோ சொல்லி வைத்தாள்.
அதைக் கேட்டதும் தர்மலிங்கத்தின் முகம் ஜாஜ்வல்யமாகப் பிரகாசித்தது. ‘அடியே ‘ பெண் புத்தி பின் புத்தி ‘ என்று சொல்கிறார்களே, அவர்களைக் கொண்டு போய் உடைப்பில்தான் போடவேண்டும் ‘ ‘ என்று அகங்கனிந்து சொல்லி அவளை அன்புடன் தழுவச் சென்றார், அவள் விலகிக் கொண்டாள் ‘
* * *
மறுநாள் பொன்னையா வந்தான். அவன் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக ‘ஏண்டா, பொன்னையா ‘ எத்தனை நாளைக்குத் தான் நீ என் வீட்டுத் திண்ணையில் பொங்கித் தின்று கொண்டிருக்க முடியும் ? இந்தா இந்த ஐம்பது ரூபாயைக் கொண்டு போய் உனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக்கொள் ‘ என்று அவனிடம் ஐம்பது ரூபாய் எடுத்துக் கொடுத்தார் தர்மலிங்கம்.
நல்ல வேளையாகப் பொன்னையா மூர்ச்சையடைந்து கீழே விழுந்துவிடவில்லை. இரு கைகளையும் ஏந்தி அந்தப் பணத்தைப் பக்தி சிரத்தையுடன் பெற்றுக் கொண்டான். ‘நீங்க நல்லாயிருக்கணும் சாமி ‘ ‘ என்று நெடுமரம் போல் அவர் காலில் விழுந்து கரைபுரண்டு வந்த கண்ணீரால் அவருடைய பாதங்களை நனைத்தான்.
‘ஆமாம், இவனுக்குப் பணம் கொடுக்காவிட்டால் நான் கெட்டுப் போய்விடுவேனாக்கும் ‘ ‘ என்று தம்முள் முணுமுணுத்துக் கொண்டார் தர்மலிங்கம்.
* * *
ஆனந்தக் கடலில் நீந்திக் கொண்டு வந்த பொன்னையா, அடுத்த நிமிஷத்தில் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். ஆவலே உருவாய்த் தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சின்னியிடம் ஐம்பது ரூபாயைக் கொடுத்தான்.
‘ஐயோ சாமி, இத்தனை பணம் உனக்கு ஏது ? ‘ என்று திடுக்கிட்டுக் கேட்டாள் சின்னி.
‘ஐயாதான் கொடுதாரு ‘ ‘ என்றான் பொன்னையா.
‘மவராஜா ‘ இந்த ஏழைகளுக்கு இவ்வளவு பணம் கொடுத்தாரே ‘ அவரு மனுசர் இல்லை; தெய்வம் ‘ ‘
‘தெய்வந்தான் ‘ இல்லேன்னா என்னை உன் வாயிலேயிருந்து காப்பாத்தியிருக்க முடியுமா ? ‘ என்றான் பொன்னையா சிரித்துக் கொண்டே.
அந்தப் பணம் மனமுவந்து கொடுத்த பணமல்ல; மனைவி சொன்ன யோசனையின் பேரில் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கொடுத்தபணம்; தன்னை எப்பொழுதுமே தாழ்த்தப்பட்டவனாக வாழச் செய்யும் பணம் அது என்பது ஏழை பொன்னையாவுக்கு எப்படித் தெரியும் ?
***
- கடற்கரை
- அன்புள்ள அம்மாவுக்கு
- புள்ளிவிவர அறிவியல் (statistics) நகைச்சுவை துணுக்குகள்
- வெப்ப இயங்கியலின் (thermodynamics) மூன்று விதிகள் (எளிய தமிழில்)
- தமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை
- ஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்
- அழகி(யல்) பார்வை
- திசைகளும் பயணங்களும் (இந்தப் புத்தகத்தைப் படித்து வீட்டார்களா ?-2 – ‘என்னைக் கேட்டால் ‘ -என்.எஸ்.ஜகந்நாதன்)
- வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்
- தர்பூசணி சோர்பே
- ஆண்டிபயாட்டிக்ஸ் என்னும் மருந்துகளை உற்பத்தி செய்யும் பாக்டாரியத்தின் மரபணுவை பிரிட்டிஷ் அறிவியலாளர்கள் முழுக்கப் பிரித்து படித்
- பிளாஸ்டிக் என்னும் பூமியின் எதிரி
- நிலாவில் குதித்து உலாவிய பூலோக வாகனங்கள்
- மறைந்த உருது கவிஞர் கைஃபி ஆஸ்மி – கவிஞரும் கவிதையும்
- துயர்நிலம்
- ஒட்டைச்சிவிங்கி
- உருவமற்ற நிழல்கள்.
- வெளிதாண்டிய வெளிதாண்டாத் தவளைகள்.
- உன் போலத்தான் இந்த கவிதையும்.
- நீ… உனக்கான வரம்.
- சுவர்களின் கவிதைகள்.
- வெள்ளி
- தமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை
- ஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்
- தினமணி பத்திரிக்கை நிருபர் தற்கொலையும் தமிழ் ஊடகங்களின் மனித மதிப்பீடுகளும்
- குஜராத் கலவரங்களை முன்வைத்து
- வம்பு பேச்சும் கவலையும்
- இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 4 அத்தியாயம் 4 – இந்துத்துவம் : தலித்கள் பெண்கள்
- ஊதுகிற சங்கு
- பொன்னையா