பேரழிவில் உளவியல் சீரமைப்பு -அனுபவங்களின் தொகுப்பு

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

ஸ்ரீமங்கை


இரு மாதங்கள் முன்பு ஆழிப்பேரலையின் தாக்கத்தில் உண்டான பேரழிவின் சீரமைப்புப்பணியில் உளவியல் ரீதியான சீரமைப்பின் முக்கியத்துவம் குறித்து எழுதியிருந்தேன். அதில் முனைவர். திருமதி.சுந்தரி அவர்கள்( மகரிஷி தயானந்த் கல்லூரி, மும்பை) தலைமையில் ஒரு தன்னார்வலர் குழு கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளவிருந்த உளவியல் சீரமைப்புப் பணி குறித்து குறிப்பிட்டிருந்தேன். அக்குழுவின் அனுபவங்களின் தொகுப்பு முனைவர். சுந்தரி அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்றது. அதின் சில பகுதிகள் கீழ்க்கண்டவாறு.

இக்குழுவில் IPMS ( Institute of Psychotherapy and Management Sciences ) கல்வி நிறுவனத்தின் 30 உளவியல் துறை மாணவ/மாணவியர் ,முனைவர் திருமதி K.P.சுந்தரி ( தலைமைப் பேராசிரியை, உளவியல் துறை,மகரிஷி தயானந்த் கல்லுரி, மும்பை) அவர்கள் தலைமையில் 14 ஜனவரி 05 முதல் 22 ஜனவரி 05 வரை மண்டைக்காடு புதூர்,மரமடி, முட்டுக்காடு, குளச்சல், அழிக்கால், கொட்டில்பாடு முதலிய இடங்களில் சீரமைப்புப் பணியை மேற்கொண்டனர்.

முனைவர் சுந்தரி அவர்கள் EMDR (Eye Movement Desensitization and Reprocessing ) என்னும் உளவியல் மருத்துவ முறையை ,சீரமைப்புப் பணிக்கு கையாடத் திட்டமிட்டிருந்தார்.

16 ஜனவரி 05

மண்டைக்காடு புதூர் :

ஆழிப்பேரலையில் மிக மோசமாகத் தாக்கப்பட்ட கிராமம் இது. சுமார் 250 குடும்பங்கள் தற்காலிகமாக, சர்ச்சில் அடைக்கலமாக இருந்தனர். இரு வகையான மருத்துவமுறையை குழு கையாடியது. பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு, முதலில் அவர்கள் துயரை முழுதும் சொல்லியழ வைத்தபின்னர், மனதை அமைதிப்படுத்தும் வழிகள் பயிற்சிக்கப்பட்டனர். முனைவர் சுந்தரி, மிகவும் வலிதாகத் தாக்கப்பட்டவர்களுக்கு EMDR முறையில் உளவியல் மருத்துவமளித்தார்.

புதூரில் ,நான்கு வயது மகள் மஞ்சுமோளை இழந்த ஆன்ண்டனி மற்றும், தனது 4 வயது, 5வயது குழந்தைகளை இழந்த செபாஸ்டின் என்ற இருவர் மருத்துவத்திற்குப் பின் துயரை ஏற்றுக்கொள்ளும் நிலையை அடைந்தனர்.

இதே கிராமத்தில் 50 குழந்தைகள் இம்மருத்துவ உதவி பெற்றனர். அக்குழந்தைகள் தங்கள் மனநிலையை வெளிப்படுத்தும் வண்ணம், ஆழிப்பேரலையில் தங்கள் கண்டதை வரையுமாறு ஊக்கப்படுத்தப்பட்டனர். சில குழந்தைகள் பேரலையில் அடித்துச் செல்லப்பட்டு, பின் தெய்வாதீனமாக உயிர்தப்பியவர்கள். அவர்களுக்கு அச்சத்தைச் சமாளிக்கும் விதமாக சீராக சுவாசிக்கும் பயிற்சி அளிக்கபட்டது. விளையாட்டு, பாடல்கள் , இசை போன்றவை மூலமும் அவர்கள் உற்சாகமாக ஊக்குவிக்கப்பட்டனர்.

17 ஜனவரி 05

கொட்டில்பாடு:

காலை 8 மணிக்கு,. அருட் தந்தை சூசை, டாக்டர்.போர்கியோ முதலானோர் குழுவினரை கொட்டில்பாடு மீனவ கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். இங்கு 275 பேர் ஒட்டுமொத்தமாகப் புதைக்கபட்டனர்.

முதலில் பார்வையிட்டபின், அங்கிருந்த ஆரம்பப் பள்ளியில் பணி தொடங்கியது. 300 குழந்தைகள் ( 1 ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரையிலான )களுக்கு வரைதல் மூலம் பயிற்சி, சுவாசச் சீரமைப்புப் பயிற்சி முதலியன அளிக்கப்பட்டது.

பவித்திரா என்ற 10 வயது பெண், EMDR சிகிக்சைக்குப் பின் தெளிவாகி, தான் பிற்காலத்தில் ஒரு பொறியியல் வல்லுநராக விரும்புவதாகக் கூறினாள்.

பிசானி என்ற 6ம் வகுப்பு படிக்கும் சிறுமி, தன் கண்முன்னே தந்தையும் இரு அத்தைகளும் அலைகளில் அடித்துச் செல்லப்ட்டதைக் கண்டு உறைந்திருந்தவள், சிகிச்சைக்குப் பின் கதறியழுது தான் பிற்காலத்தில் துறவுபூண்டு பொதுநலச் சேவைசெய்யப் போவதாகச் சொன்னாள்.

18 ஜனவரி 2005

குளச்சல் :

750 பேர் அடையாளம்தெரியாது ஒட்டுமொத்தமாகப் புதைக்கபட்ட கொடூரம் நடந்த இடம்.

நாகர்கோவிலில் கார்மேல் பள்ளியில் சிகிக்சை தொடங்கியது.

அன்டோனிராஜ் என்னும் சிறுவன் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு பிணவறையில் மற்ற பிணங்களோடு 5 மணிநேரம் கிடத்தப்பட்டிருந்தான். பிணங்களில் அடையாளம் காண வந்த எவரோ, அவனது உடலில் மெலிதாக நாடித்துடிப்பு இருப்பதை உணர்ந்து, மருத்துவமனைக்குத் தெரிவிக்க, 5 நாள் கழித்து அவன் நினைவுதிரும்பினான். தனது 15 வயது சகோதரன் அலையில் மரித்ததை நினைவுகொண்ட அன்டோனிராஜ் மிக மனஉளைச்சலில் இருந்திருந்தான். EMDR சிகிக்சைக்குப் பின் அவன் ஆழிப்பேரலை நிகழ்சியை விவரித்ததில், குழுவில் இருந்த மாணவர்கள் மட்டுமன்றி மருத்துவர்களும் கண்ணீர் மல்கியதை முனைவர்.சுந்தரி நினைவு கூறுகிறார்.

மற்றொரு மீட்புதவிக்குழுவில் பெண்கள் மிகுந்திருந்தனர். அவர்களில் பலருக்கும் அனைத்துக் குழந்தைகளும் மரித்துவிட்டிருந்தனர். அப்பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டிருந்ததால், மீண்டும் குழந்தைகள் வரும் வாய்ப்பில்லை என்னும் பேருளைச்சலில் ஆழ்ந்திருந்தனர். பெரும்பாலான பெண்கள் இளம்வயதினர். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அர்த்தமே இல்லை என்னும் முடிவிற்கு வந்துவிட்டிருந்தார்கள்.

நிர்மலா என்ற பெண், தன் வீட்டிற்குத் திரும்ப மறுத்தாள். தனது குழந்தைகளின் சிரிப்பும், விளையாட்டும்,குரல்களும் அவ்வீட்டில் எதிரொலிக்கும் என்னும் நினைவே அவளைப் பெருமளவில் தாக்கியிருந்தது.

ஸ்டெல்லா என்ற பெண் தனது பெண்குழந்தைகளை இழந்திருந்தாள். சீரமைப்புக் குழுவில் இருந்த இரு பெண்களை இறுகப் பிடித்துக்கொண்டவள் அவர்களில் தன் பெண்களையே கண்டதாகக் கூறிக் கதறினாள்.

ஒரு மனோவேகத்தில், அப்பெண்களைத் தழுவிக்கொண்டு முத்தமழை பொழிந்துகொண்டிருந்த ஸ்டெல்லாவிடமிருந்து, அவர்களை விடுவிக்க முனைவர்.சுந்தரி இடைபட வேண்டியிருந்தது. பின் ரீக்கி சிகிக்சைக்குப் பின் ஸ்டெல்லா அமைதிப்படத் தொடங்கினாள்.

முனைவர் சுந்தரி அவர்களின் வார்த்தைகளின் படி

‘In a fit of hysteria, Stella was showering them with caresses and kisses. I had to intervene and give Reiki to calm her down ‘

சில பெண்களுக்கு , உணவு ஊட்டிவிடவேண்டியிருந்தது. அவர்கள் சோகத்தில் பலநாட்கள் உணவு உட்கொள்ளவேயில்லை என்பது வேதனைமிகுந்த வலிமிகுந்த செய்தி.

இன்னும் வரும்.

அன்புடன்

ஸ்ரீமங்கை

kasturisudhakar@yahoo.com

Series Navigation

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை