பேஜர்

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

ஜெயந்தி சங்கர்


பதினெட்டு வருடமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அலுத்ததில் தீபா,ப்ரவீண் ஜோடிக்கு குழந்தைபெற்றுக்கொள்ளும் ஆசை வந்தது. உடனடியாக நிறைவேறாது போகவே டாக்டர் ஃபாத்திமாவிடம் சென்றனர். ‘எதுக்கு இவ்வளவு அவசரம் ? கொழந்தை பெத்துக்கறது என்ன ஃபாஸ்ட் ஃபுட்டா, கிடிகிடுன்னு கருத்தரித்து கிடுகிடுன்னு பெத்து, அடுத்த பத்தே நிமிஷத்துல யூனிவெர்சிடிக்குப் போகறதெல்லாம் சினிமாலவேணா நடக்கும். நாற்பதைக் கடந்துவிட்டதால சின்னச்சின்ன சிக்கலிருக்கலாம். அதுக்குதான் நாங்க இருக்கோமே ஆலோசனைசொல்ல. உங்க ரெண்டுபேருக்கும் பிரச்சனையொண்ணுமில்லை, கொழந்த பொறக்கும், ‘ என்று சொல்லி ஊக்கப்படுத்தினார்.

ஹார்மோன் மாத்திரைகள் மட்டும் இருவருக்கும் கொடுக்கப்பட்டன. அவளின் மாதாந்திர சுழற்சிக்குப்பிறகு இரண்டு வாரங்களில் வெளியாகும் முட்டை ‘ஃரெஷாக ‘ இருக்கும்போது கருவுருவாகக்கூடிய அதிகமான சாத்தியக்கூறுகளை விளக்கிக் கூறி ‘தாயத்து ‘ போன்ற ஒன்றைப் பாவிக்கக்கொடுத்தார். அதை உடலில் படும்படி முழுங்கைக்குமேலே கட்டிக்கொண்டு முழுக்கைச் சட்டையணிந்துகொண்டாள் தீபா. அது உடலில் ஏற்படக்கூடிய மாற்றத்தை ‘கிக்கிக்கீ ‘ என்று அலறி அறிவிக்கும் என்றும் கூறினார். அதனால் ஏற்படக்கூடிய கிசுகிசுக்களைப் பற்றி மட்டும் ஏனோ அவர் சொல்லவேயில்லை.

நான்கு மாதங்களுக்கு முன்பு, முதல்முறை ‘கிக்கிக்கீ ‘ என்று அந்த வஸ்து அலறியபோது மதியம் இரண்டரைக்குமேல் ஆகியிருந்தது. அதன் வாயை அடைத்துவிட்டு அன்றைய வேலைகள் முழுவதுமே முடித்திருந்த மகிழ்ச்சியில் ப்ரவீணுக்குப் போன் செய்துவிட்டு தன்கீழே வேலை செய்பவர்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் நிறுவனத்தின் உயரதிகாரியான தீபா. ‘பேஜரா மேடம் ? ‘, என்ற காரியதரிசி யூலிங்க்கைப் பொருட்படுத்தாமல், ‘ அந்த ஹெண்டர்ஸன் கம்பெனியோட ‘அட் ‘ கன்ஸெப்ட் ப்ரொபோஸல் ஃபல சரிபார்த்து வை, ‘ என்று சொல்லியபடியே நடந்தாள். தீபாவின் செய்கைகளை விநோதமான பார்வையுடன் கவனிப்பதை உணரமுடிந்தது.

அடுத்தநாளைக்கே ஆபீஸ் முழுவதும், ‘நம்ம மேடம் இன்னமும் ‘பேஜர் ‘ யூஸ் பண்றாங்க தெரியுமா ‘, என்று யூலிங்க் தகவல் பரப்பு வேலையைச் செய்திருந்தாள். கூர்ந்து நோக்கிய பார்வைகள், ‘ தனித்தனியா ஆளுக்கொரு பென்ஸ் கார் வச்சிருக்கீங்க புருஷன் பெண்டாட்டி. பெரிய தரைவீடுவேற. மொபைல்தான் இருக்கே. இன்னுமா நீ பேஜரவிடல்ல ‘,என்று தீபாவைக் கேட்டன.

ஊரே குழந்தை பெற்றுக்கொள்ளும் மூடில் இருந்ததும், தேசிய சமூக வளர்ச்சி அமைச்சும் ‘குழந்தை பெற்றுக்கொள்ள ஒரு வழிகாட்டி/கைட் ‘, ஒன்றை உருவாக்கி குடிமக்களை ஊக்குவித்ததும் சேர்ந்துகொண்டதில் சில வருடங்களாகப் ப்ரவீணுக்கு இருந்த குழந்தை ஆசை தீபாவிற்கும் சென்ற வருடம் தொற்றிக்கொண்டது. ‘ பெற்றுக்கொள், உனக்கு இந்தச்சலுகை, அந்தச் சலுகை ‘, என்று மக்கள் பெறக்கூடிய குழந்தைகளுக்குத் தானே டையபர் மாற்றிவிடும் சலுகைவரை கூடச் செய்ய அமைச்சு காத்திருந்தது.

உள்ளூர் தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்ச்சியில் கூட தொளதொளவென்று உடுத்திக்கொண்டு விருது வாங்கிச் சென்ற இரண்டு கர்பிணி நட்சத்திரங்கள் சிலர் சாதாரணக் குடிமக்களுக்கு முன்னுதாரணமானார்கள். அதுவே ஃபாஷனாகிப் போகும் அளவிற்கு பருத்த வயிறும் தொளதொள கவுனும் மக்களுக்குப் ‘பெற்றுக்கொள்ளும் ‘ ஆசை ஊட்டியது என்றால் பாருங்களேன்.

வீட்டிற்குப் போய்ச் சேர்ந்ததும் ப்ரவீணிடமிருந்து போன், ‘ சாரிமா. இன்னிக்கி வரமுடியும்னு தோணல்ல. க்ளையட் மீட்டிங்க் முடியவே ராத்திரியாயிடும்போலயிருக்கு ‘, என்று சொன்னதும் தீபாவின் உற்சாகம் முழுவதும் கற்றுப்போன பலூனாய்ச் சுருங்கியது. அடுத்தவார மீடிங்கிற்காவது தயார் செய்திருக்கலாம் என்ற அலுப்பே மிஞ்சியது.

போன மாதம் ப்ரவீண் என்னுடைய போன் கிடைத்ததுமே விறுவிறுவென்று தன் ஆபீஸிலிருந்து உற்சாகமாகக் கிளம்பி வீட்டிற்குப் போய்த் தயாராக இருந்தார். தீபாதான் நெடுஞ்சாலைப் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு பிறகு, அங்குல அங்குலமாக முன்னேறி வீட்டை அடையும்போது பயங்கர எரிச்சலிலிருந்தாள். பேசாமல் இருவரும் இருந்ததைத் தின்றுவிட்டுத் தூங்கிப்போனார்கள்.

அதற்கு முந்தைய மாதம் உள்ளூரில் வசித்த தீபாவின் அக்கா தன் குடும்பத்தோடு வந்து தங்கி கொடுத்த அன்புத்தொல்லையில் முழுக்கைச் சட்டையினுள்ளே சாதனம் செய்த நினைவூட்டல் முற்றிலும் வீணானது. நான்கு மாதங்களாகவே இந்த விஷயத்தில் இப்படித்தான் இடக்கு மடக்காகவே நடந்து வருகிறது.

ஒரே மாதத்தில் ஆபீஸில் தீபாவின் ‘குட்டு ‘ வெளிப்பட்டு உணவு இடைவேளையின்போது பலவிதமான வம்புகள் பேசப்பட்டு, நமட்டுச் சிரிப்புகளினூடே அவளுக்கு சங்கேத மொழியில் பட்டப்பெயரான ‘பேஜர் ‘ ஒரு மனதாக எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்தி நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மாமியார் கிடைத்த வாய்ப்பில், ‘ எஸ் எம் எஸ் லயே கொழந்த பெத்துக்கறதுதானே ? ‘எல்லாங் கெடக்க கிழவியத் தூக்கி மணையில வச்சாப்ல ‘, கல்யாணமான வருஷத்துலயிருந்து சொல்லிகிட்டே இருந்தேன். அப்ப விட்டுட்டாங்களாம். கடையில வித்தா இந்நேரம் பிள்ளைய வாங்கிகிட்டே வந்திருப்பா. ம்,.பிறக்கப்போற பிள்ள உங்கரெண்டு பேரையும் ‘தாத்தா, பாட்டி ‘னு கூப்புடப்போகுது பாத்துக்கிட்டேயிருடா ‘, என்று மகனிடம் சொல்வதைப்போல ஆரம்ப நாட்களில் வேலையை விடமாட்டேனென்று பிள்ளை பெற்றுக்கொள்வதை ஒத்திப்போட்ட தீபாவைத் தன் பாணியில் ஏசினார்.

அந்த வாரயிறுதில் ‘ப்ரவீண், எனக்கு இப்போதைக்கு லீவும் எடுக்கமுடியாது. இந்த ‘ஓவ்யுலேஷன் டிடெக்டர் ‘ கிட்டுக்கு (ovulation detector kit) ஏதேனும் சினிமாப் பாட்டு ‘ரிங்க் டோன் ‘ இருந்தா டாக்டர் கிட்ட கேக்கணும். கொறஞ்சது ஒரு ‘வைப்ரேஷன் மோட் ‘வது இருக்கான்னாவது பாக்கணும். அதுவரைக்கும் இந்த விளையாட்டுக்கு நா வல்லப்பா, ஆபீஸ்ல மானமே போகுது ‘, என்று தீபா சொன்னதுமே ப்ரவீண் குபீரென்று வெடித்துச் சிரித்தார்.

நன்றி : அமுதசுரபி பிப்ரவரி 2005

sankari01sg@yahoo.com

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்