மதுமிதா
ஜெயந்தி சங்கரின் ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ நூலின் தலைப்பே சீனப்பெருஞ்சுவரினை நினைவுபடுத்துவதோடு பெருஞ்சுவருக்குப் பின்னே நிகழ்ந்திருப்பது என்ன என்ன என்பதை வாசித்தறியும் ஆர்வத்தினை தூண்டுவதாகவும் உள்ளது.
‘சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்’ எனும் சிறு தலைப்பு நூலின் சாரம்சம் இதுதான் என்பதனை கோடிட்டுக் காட்டி விடுகிறது. பெண்களின் வாழ்க்கையே சுவருக்குப் பின்னேயான வாழ்க்கையாய் அடைபட்டு விடுவதை சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும் நூலில் அப்பட்டமாக அப்படியே காட்டப்பட்டுள்ளது.
சீனப் பெண்களின் வாழ்க்கைநிலை குறித்து தமிழுக்கு முற்றிலும் புதுமையானதொரு நூல் இது. ஜெயந்தி சங்கரின் இந்நூல் உயிர்மை வெளியீடாக 192 பக்கங்களில் வெளிவந்துள்ளது. 37 தலைப்புகளில் நூலாசிரியர் கட்டுரைகளை அளித்துள்ளார்.
கட்டுரைகள் அனைத்தையும் மெனக்கெட்டு தன்னார்வத்துடன் ஆய்வுரீதியில் கொடுத்துள்ளார். எனினும் மொழிபெயர்ப்புநூலாகத் தெரிவதனை தவிர்க்க இயலவில்லை. நம் சூழலுக்கு முற்றிலும் புதிதான ஒரு படைப்பாகையால் இப்படித் தோன்றுவதனை தவிர்க்கவியலவில்லை. அனைத்தையும் மீறி அவரின் கடின உழைப்பும் அக்கறையும் தெரிகிறது.
நூலாசிரியரின் முன்னுரையில் சொல்லும் இவ்வரிகளே அவரின் ஆய்வுக்குக் கட்டியம் கூறும் – ‘வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் பல வாரங்களுக்கு இது ஒன்றையே செய்து கொண்டிருந்தேன். தேசிய நூலகத்தின் குறிப்பெடுக்கும் பிரிவில் வாரா வாரம் சில மணி நேரங்கள் செலவழித்து எடுத்த குறிப்புகளைக் கொண்டு பல மணி நேரங்கள் கணினியில் எழுதினேன். இது தவிர, இணையமும் கைகொடுத்தது. சில வருடங்களுக்கு முன்பு சீனாவிலிருந்து வந்து இங்கு வசிக்கும் தோழி ஸேராவிடமும் அவர்களின் தோழிகளிடமும் எழுதியதை அவ்வந்த வாரமே கலந்து பேசி சரி பார்த்துக் கொண்டேன். ஒரு சில விவரங்களில் அவர்களுக்கே சந்தேகம் வந்தது.’
முதல் அத்தியாயத்திலேயே முகத்திலறையும் உண்மை வெளிப்பட ஆரம்பிக்கிறது.
‘ஒரு பெண்ணைக் குறிக்கும் சீனத்தின் சித்திர எழுத்தில்பணிவுடன் மண்டியிட்டிருக்கும் பெண்தான் சித்தரிக்கப்படுகிறாள். மணமான பெண்ணைக் குறிக்கும் சீன எழுத்து இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளாது. ஒன்று துடைப்பம்; இன்னொன்று ஒரு பெண். அதன் உச்சரிப்பு – ஷ¥வென் ஜெயிட்சு. இதற்கு அகராதி கொடுக்கும் விளக்கம் ‘கீழ்ப்படிதல் மற்றும் பெண் தரையைக் கூட்டுதல்’ என்று இருவேறு பொருள்கள். எழுத்து வடிவம் வருவதற்கு முன்பே சீனத்தில் ஆணாதிக்கச் சிந்தனைக்கு விதை போட்டாகி விட்டது என்பதற்கு இதுவும் நல்ல ஒரு சான்று’
என்று கொடுத்துள்ளார்.
தொடர்ந்து ‘திறமையற்ற ஒரு பெண்தான் நற்குணமுடையவள்’ மற்றும் ‘மகள்களை வளர்ப்பதைவிட வாத்துகளை வளர்ப்பது இன்னும் லாபகரமானது’ போன்ற சீன பழமொழிகள் சீனப் பெண்களின் நிலையினை தெளிவாகவே சொல்கின்றன.
‘நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா’ என்ற பாடல்தான் கேட்டுள்ளோம். வாழ்க்கையில் நன்றிகெட்ட மகனால் மனதிலடிபட்ட தந்தையின் மன உணர்வு அது. மகளை வளர்ப்பதைவிட வாத்தை வளர்ப்பது லாபகரமானதா வாசிக்கையிலேயே வலிக்கிறது.
சமீப வருடங்களுக்கு முன்னால்வரை எந்தக் காலக்கட்டத்திலும் அரசு வேலைகளில் பெண் அனுமதிக்கப்பட்டதில்லை. அவளுக்கு வீடு மட்டுமே உலகம் என்று வகுக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண் வெளியில் செல்வது பிள்ளைப்பேறு தொடர்பாகவும், வேறுவகைப்பெண்கள் ஆணின் சௌகரியம் கருதி மட்டுமே. வாழ்நாள் முழுவதுமான உடல் மற்றும் மனவலிதான் பழஞ்சீனப்பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. பிறந்ததிலிருந்தே இவ்வகையான வாழ்வு முறைக்குத் தயார்படுத்தப்பட்டே வந்திருக்கிறாள்.
இரண்டாம் அத்தியாயத்தில் பெண் குறித்த சீனப்பழங்கவிதை:
மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ·பூ ஷ¤வான் என்ற சீனப் பெண் கவிஞரின் ‘பெண்’ என்ற கவிதையை ந்யூயார்க்கைச் சேர்ந்த ஆர்தர் வேய்லி என்பவர் 1946ல் மொழிபெயர்த்தார். அதன் ஒரு பகுதியின் எளிய தமிழாக்கம் –
பெண்ணாயிருப்பது எத்தனை வருந்தத் தக்கது ! !
பூமியில் வேறு எதுவும் இத்தனை கீழ்த்தரமில்லை
ஆண்கள் வாயிற்கதவில் சாய்ந்து நிற்பது
சொர்க்கத்திலிருந்து தெய்வங்கள் வீழ்ந்தது போல்.
நான்கு கடல்களையும் வீரத்துடன் எதிர்கொள்வான்
ஆயிரம் மைல்களுக்கு காற்றையும் தூசியையும் கூட.
பெண் பிறந்தால் யாருக்கும் பிடிக்காது
அவளை அவள் குடும்பத்தினருக்கும்.
அவள் வளர்ந்ததும் அறையில் ஒளிந்து கொள்வாள்
ஓர் ஆணை முகத்திற்கு நேராகப் பார்க்க பயந்து.
யாரும் அழுவதில்லை அவள் வீட்டை விட்டுச் செல்லும் போது-
சட்டென்று மழை நின்று மேகங்கள் தெரிவதைப் போல
அவள் தலை குனிந்து தன்னைத் திடப் படுத்திக் கொள்வாள்.
சிவந்த உதடுகளைக் கடிக்கும் அவளின் பற்கள்,
பணிவாகப் பலமுறை குனிந்தும் மண்டியிட்டும்
வேலைக் காரர்களையும் வணங்குதல் வேண்டும் அவள்
அவனின் அன்பு வானத்து நட்சத்திரங்களைப் போல தூரத்தில்
இருந்தாலும், சூரியகாந்தி சூரியனை நோக்கிச் சாயும்.
இருவரின் உள்ளமும் நீரும் நெருப்பும் போன்ற எதிர் நிலையில்
நூறு இன்னல்கள் கவிழும் அவளின் மீது.
அவளின் முகம் வருடங்களின் மாற்றங்களையடைய
அவள் தலைவனோ விதவிதமான சுகங்களைத் தேடிய படி.
அப்படியே வாசிக்க வாசிக்க அப்பெண் கடந்து செல்ல வேண்டிய இன்னல்கள் கண்முன்னே தெரிகின்றன காட்சிகளாய்.
தொடரும் அத்தியாயங்களில் முழுமையான சீனப்பெண்கள் குறித்த வரலாறு சீனத்தின் வரலாறாகவே காணக் கிடைக்கிறது. மதம், முடியாட்சி, சித்திரஎழுத்து, பெண்மொழி, அரசிகள், வீரப்பெண்கள், ஆசைநாயகிகள், அழகிகள், குரூபிகள், இலக்கியத்தில், அரசியலில் பெண்கள், பெண்கல்வி, குடும்பம், சிசுக்கொலை, வரதட்சிணை, திருமணம்………. என பல்வேறு தலைப்புகளில் பெண்களின் பல்வேறு வாழ்க்கை நிலையினைக் கொடுத்துள்ளார்.
பெண்களின் பாதங்களைக் கட்டும் ‘மரணித்த பாதங்கள்’ வாசிக்கையில் மரத்துப்போகிறது மனம்.
உலகளவில் பெண் சிசுக்கொலை பிரபலம் போலிருக்கிறது. இங்கே உசிலம்பட்டியில் மட்டுமே என்று இனி வருந்த வேண்டாமோ? சீனாவிலும் பெண் சிசுக்களுக்கு உயிரின் மீதான பாதுகாப்பில்லை.
1996 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சீனாவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் 10,000 பெண்குழந்தைகள் கொல்லப்படுவதாகத்தெரிகின்றன. என்ன நெஞ்சு கொதிக்கிறதா. அடங்கலாம் என்று இந்தப் பாடலை வாசித்தால் இன்னும் எகிறுகிறது.
‘பாடல்களின் நூல்’ என்ற 1000 – 700 கிமு வைச் சேர்ந்த பழஞ்சீன இலக்கியத்தில் உள்ள
மகன் பிறந்தால்
அவனைப் படுக்கையின் மீது தூங்க வை
அவனுக்கு உயரிய உடைகளை அணிவி
அவனுக்கு விளையாட பச்சைப் பவழத்தைக் கொடு
மகள் பிறந்தால்
அவள் தரையில் உறங்கட்டும்
கந்தலைக் கொண்டு அவளைப் போர்த்து
உடைந்த பீங்கானை விளையாடக் கொடு
1947 ல் ‘ஒரே குழந்தை’ கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபின் சீனப்பெண்கள் அடிக்கடி காணாமல் போகிறார்களாம். ஒரு குழந்தைக்கு மேல் உருவான கருவைக் கலைக்கவோ, பெற்றெடுத்துவிட்டு மேலை நாட்டினருக்குத் தத்து கொடுக்கவோ பெண்களுக்கு அவகாசம் தேவையாக இருந்தது. அதனால், குறிப்பிட்ட காலத்துக்கு இப்பெண்கள் காணாமல் போனார்கள். ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டால், ஊதியத்தில் வெட்டு விழுந்தது. அரசாங்கத்தால் ஓய்வூதியம் குறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்தது. இன்னும் சில வருடங்களில் 40 முதல் 60 மில்லியன் பெண்கள் கணக்கில் வராமல் காணாமல் போகலாம் என்கிறார்கள் மக்கட் தொகையியல் வல்லுநர்கள். இந்த வரிகளை எழுதும் போது ஜெயந்தி எப்படியெல்லாம் வேதனைப்பட்டாரோ என்றெண்னுகையில் இதையும் மீறும் வண்ணமாய் பாலியல் தொல்லை, குடும்ப வன்முறை, திருமண சிக்கல் குறித்த சில கட்டுரைகள் வருகின்றன. வாசிக்கையில் வாசிக்கையிலேயே இத்துனை துன்பம் என்றால் வாழ்ந்த பெண்களின் நிலை என்ற கேள்விக்குறி பெரிதாய் தோன்றுகிறது.
சட்டத்தின் பெயரால் பெண்கள் சிறையிலும், காவலிலும் அடைந்த கொடுமை ரத்தக்கண்ணீர் வரச்செய்யும்.
சீனத்தில் நான்கு நிமிடங்களுக்கு ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் சீனப்பெண்கள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். அதில் 1,50,000 பேர் சாகிறார்கள். கிராமப்புறங்களில் நகரங்களைக் காட்டிலும் மூன்று மடங்கு சீனப்பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 70-80 சதவிகிதம் கணவன் மனைவி சண்டையால் விளைந்தவையாம்.
மணவிலக்குகள் அதிகரித்துவிட்ட நிலையில் போலி மணவிலக்கு குறித்து சொல்லியிருப்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயமாயுள்ளது. சர்வ சாதாரணமான போலிமணவிலக்குகள் நிஜமான மனவிலக்குகளுக்கு தம்பதியினரிடையே உண்மையான பிளவுக்கு காரணமாகிவிடுகிறதாம்.
புலம் பெயர் நாடுகளில் சீனப்பெண்களின் நிலையினைக் காணும்போது உலகம் முழுக்க பெண்களின் நிலை இதுதானோ, அது எந்த தேசத்து, இனத்துப் பெண்ணாக இருந்தாலும் என்னும் நிலை தீவிர யோசனையைக் கிளப்புகிறது. பாலியல் ரீதியான சிரமங்கள்தான் எத்தனை எத்தனை.
ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் தென்கிழக்காசிய வட்டாரத்தில் சீனப்பெண்களே ஜப்பானிய இராணுவத்தினரின் உடற்தேவைகளுக்கு அதிகமாக இலக்கானார்கள். ஏராளமான பெண்கள் ஊரை விட்டுத்தள்ளி ஒதுக்குப்புறமாக அமைக்கப்பெற்ற வீடுகளில் சிறை வைக்கப்பட்டார்கள். இவ்வகையில் சிறைப்படுத்தப்பட்ட மொத்தப் பெண்களில் 80 சதவிகிதம் பேர் சீனப்பெண்கள்.
சீனப்பெண்களின் உடையில் மாற்றம் வரவேண்டுமென்றும், சீனப்பெண்ணுக்கு உடையின் அசௌகரியமாக இருக்கும் என்று அக்கறை கொண்ட ஒரு கவிஞரின் கவிதை இதோ:
ஒரு சீனப் பெண் வியாபாரியைக் கேளுங்கள்
சீனப்பாணியில் உடை உடுத்த வேண்டுமா என்று,…
எத்தனை சிரமம் இந்த வியாபாரப் பெண்களுக்கு
அவர்கள் அழகிய பருத்தித் துணிகளும் பட்டுத் துணிகளும் விற்கிறார்கள்.
ஒரு கையில் துணிப் பொதியைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
இன்னொரு கையில் குடையையும் எடுத்துக் கொண்டால்
இன்னும் சிரமமாக இருக்காது?
இத்தனையும் கடந்தும் பல பெண்கள் அரசியலில், இலக்கியத்தில், இராணுவத்தில் பல்வேறு துறைகளிலும் முன்னுக்கு வந்துள்ளனர். தன்னம்பிக்கையுடன் போராடி வென்ற பெண்களாகவும் காட்சியளிக்கின்றனர்.
ச்யூ ஜின் (1877-1907) மட்டுமே 1906 ல் பெண்களுக்கான பத்திரிகையைத் தொடங்கியவர். பாடல்களும், கவிதைகளும் எழுதியுள்ளார். ஷாங்குவான், லீ பாய் கவிஞர்கள். ஷன் சுங்க் இலக்கிய வரலாறு ஆளுமை மிக்கவர். ஜீத்தியேன்( கி.மு. 221) கவிஞர். யாங்க் யூஹ¥வான் ஆடல், பாடல்களில் வல்லவர்.
ஷ்வே தாவ் ( கி.பி. 758 – 832) கவிஞர் பாடகி. ஸ்யேதாவ்யுன் கவிஞர், கட்டுரையாளர். லியூ லிங்க் ஸியன் கவிஞர்(கி.பி. 502 – 557). லீச்சிங்க் ஜாவ் கவிஞர், கட்டுரையாளர், பாடலாசிரியர் (கி.பி. 1084 – 1155). ஷீமூ கவிஞர், நாட்டுப்பற்றாளர்.
ஸின்ரன் – இவரின் ‘சீனாவின் நல்ல பெண்மணிகள்’ நூல் 50 நாடுகளில் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
‘வீரப்பெண்கள்’ நெஞ்சுரம் பெற்ற வீர மகளிர்களைக் குறித்த கட்டுரை. சீனப்பெண்களின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்த எண்ணற்ற பெண்களைச் சீன வரலாறு நெடுகிலும் சந்திக்க இயலுகிறது.
‘நவீன சீனத்தில் பெண்களின் நிலை’ மனதை ஆற்றுப்படுத்துவதாய் உள்ளது. அனைத்துத்துறைகளிலும் நெஞ்சுரத்துடன் போராடி வெல்லும் மகளிரின் மாண்பு சீனப்பெண்களிடமும் காணக்கிடைக்கிறது.
இன்றைய சாதனைப்பெண்களில் சிலர் என்ற அத்தியாயம் (இதுவே கடைசி அத்தியாயம்) 8 பெண்கள் குறித்த கட்டுரை அடங்கியது. விமானி, நிறுவனர், செஸ், கம்பூட்டர் சாதனையாளர் என பலதுறைப்பெண்கள் குறித்து பேசுகிறது இவ்வத்தியாயம்.
‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ சீன பெண்கள் குறித்த நுட்பமான பார்வைக்கான திறவுகோல்.
‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ ( சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும் ) ஆய்வு நூல்
நூலாசிரியர் – ஜெயந்தி சங்கர்
உயிர்மை வெளியீடு – டிசம்பர் 2006
கிடைக்குமிடம் :
உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்ரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை- 600 018,
Tele/Fax : 91-44-2493448, residence:91-44-52074030, Mobile : 9444366704
அன்புடன்
மதுமிதா
madhumitha_1964@yahoo.co.in
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது ? (கட்டுரை: 3)
- வடகிழக்கும் பாரதமே: பிரிப்பவர்கள் யார்?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2
- இனியொரு விதி செய்வோம்
- நிச்சயிக்கப்பட்ட திருமணம்
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007
- தமிழ் வாணனின் வழிகாட்டிப் புத்தகங்கள்
- சிறுகதை எழுதப் போய் ..
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 2 அம்பாளின் தொப்புள்கொடி
- சிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்!
- ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு நேர்ந்த துயரம் : விடைகாண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கேள்விகள்
- ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ – ஜெயந்தி சங்கர் (நூல் அறிமுகம்)
- பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசுவின் சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும் ஓரு மதிப்பீடு
- ஜெயமோகனின் சிறுகதைகள் – ஓர் பார்வை
- பாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள்
- கவிதையோடு கரைதல். (ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு )
- குற்றாலச் சிற்றருவி
- சிவசேனையின் வட்டார வாசனை நீங்க…
- கடிதம்
- கடற்கரைச்சாலை கவிமாலையின் கணையாழி விருது விழா
- கடிதம்
- பட்டிமன்றம் 25 நவம்பர் 2007
- கடலில் கரைந்த ஒரு துண்டு படகு..
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 7 – தடம் புரண்ட தலை நகரம்
- பள்ளிக்கூடம்
- மஞ்சள் வெளியின் இரண்டாவது அறை
- ஒரே கேள்வி
- மாத்தா ஹரி அத்தியாயம் -36
- இறந்தவன் குறிப்புகள் – 2
- மலர் மன்னன் எனக்கு எழுதிய மடலும் அதற்கான என் நன்றியும் எதிர்வினையும்
- மரணத்தின் விளிம்பிலிருந்து – (ஓர் உண்மை நிகழ்ச்சி)
- படித்ததும் புரிந்ததும்.. (10) காங்கிரஸ் தோற்றமும் – மாற்றமும் – அகிம்சையிலிருந்து இம்சை கட்சி அரசியல் ஒரே குட்டையில் ஊறிய மட்டை
- புன்னகைக்கும் பெருவெளி
- ஜெகத் ஜால ஜப்பான் – 1 . தோசோ யோரோஷிகூ
- கர்நாடகத்தில் மலர்ந்த கமலம்
- திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை (இன்மை) விளக்கம்
- நாம் எப்படி?
- தாகூரின் கீதங்கள் -3 மாறி மாறி வரும் முகம் !
- கவிதைகள்
- கல்யாணம் பண்ணிப்பார்!
- இலை போட்டாச்சு 38 – கோதுமை மோர்க்கூழ் (மோர்க்களி) /அரிசிமாவு மோர்க்கூழ் (மோர்க்களி)