பெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

பா.சத்தியமோகன்


381.

துறவியர் கோலத்தில் மறைந்திருக்கும் மலைமகளின் துணைவன் தானும்

வீட்டிற்குள் புகுந்து நின்ற ஒப்பிலாப் பெருந்தொண்டர் கேட்குமாறு

“இத்தனை நேரம் தாமதித்த காரணம் யாது” என உரத்துக் கேட்க

கரிய கண்டம் மறைத்து வந்திருந்த துறவியாரைக்

கைத் தொழுது சொல்லலானார் :-

382.

இழைகளால் ஆன முந்நூல் எனும் பூணூல் மார்புடைய எம்தந்தை போன்றவரே.

நீர் தந்து போன விரும்பத்தக்க ஓடு

வைத்த இடத்திலும் வேறு இடத்திலும் தேடினேன்

காணாமல் போனது பழையது ; மற்ற நல்ல பாத்திரம் தருவேன்

பெற்றுக் கொள்வீர் பிழையினைப் பொறுக்க வேண்டும் பெருமானே

என இறைஞ்சி நின்றார்.

383.

தலை வணங்கி நின்ற தொண்டரைக் கோபிப்பதுபோல் பார்த்து –

“என்ன சொன்னாய் ! நான் வைத்த மண் ஓடு தவிர

பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினும் பெற்றுக் கொள்ளமாட்டேன்.

உன்னால் போற்றி வைக்கப்பட்ட

முன்பு நான் வைத்த ஓடே கொண்டுவா “ என்றான் முன்னோன்.

384.

“கேடுதல் இல்லாப் பெரியோய் !

என்பால் வைத்த ஓடு காணேன்

எங்கு தேடியும் காணேன் ,

மிக நீண்டகாலம் பயன்படுமாறு வேறு ஒன்று தருகிறேன்

எனச் சொல்லியும் ஏற்காமல் சினந்து உரைத்த உரை

என் உணர்வெல்லாம் ஒழித்து விட்டது

என்றார் தொண்டர்.

385.

“இனி உன்னால் ஆகக் கூடியது என்ன !

உன்னிடம் வைத்த அடைக்கலப் பொருளைக் களவிட்டு

வஞ்சனை பலவும் செய்து பழிக்கு வெட்காதவன் ஆனாய்

யாவரும் காணும்படி உன்னை வளைத்து

நான் ஓட்டைப் பெறாமல் போகேன் “ என்றான்

புண்ணியத்தின் பொருளாய் நின்ற இறைவன்.

386.

“வளம் மிக்க உம் ஓடு நான் திருடினேன் அல்லன்

செயலிலும் உளத்திலும் எண்ணம் புலப்படுத்த

நான் என் செய்ய இயலும் உரைப்பீராக” என்றதும்

கண்டத்தில் நஞ்சு ஒளித்த இறைவன்

“ஆசைக்குரிய உன் மகனைக் கைப்பிடித்து

குளத்தினில் மூழ்கிச் சத்தியம் செய்” என அருளினான் கொடுமை இல்லான்.

387.

“ஐயர் நீர் அருளிய வண்ணம் யான் செய்வதற்கு

சிறப்புடைய மகன் இல்லை! என் செய்வேன் புகல்வீர்” என்றதும்

குற்றமிலாச் சிறப்புமிக்க உன் மனைவியைப் பற்றிக் கொண்டு

நிறைவான பூக்கள்மிக்க குளத்தினுள் மூழ்கி எழு

என மொழிந்தார் துறவியார்.

388.

கங்கை ஒளிந்திருக்க சடையை மறைத்தருளி எதிர்நின்ற

கொடிய கண் உடைய காளையை வாகனமாக உடைய இறைவர்

இவ்வாறு உரைத்ததும் விடையளிப்பவராய்

“எங்களுக்குள் ஓர் சபதத்தால் உடன் மூழ்குதல் பொருந்தாது

பொங்கு புனலில் யானே மூழ்கித் தருகிறேன் வாரும்” என்றார் நீலகண்டர்.

389.

“முன் தந்ததை நீ தாராமல் வைத்துக் கொண்டமையாலும்

உன் மனைவியின் அழகிய தளிர் செங்கையைப் பற்றி

புனலில் மூழ்கி சத்தியம் தாராமலும்

உன் சிந்தையில் வலிமை கொண்டுள்ளாய்

இனி நான் தில்லைவாழ் அந்தணர்கள் கூடிய

பேரவையில் வழக்குரைப்பேன்” எனச் சென்றார்.

390.

நல்லொழுக்கம் தலை நின்ற

நான்கு வேதத்தின் எல்லை நின்ற

தில்லைவாழ் அந்தணர்கள் வந்திருந்த திருத்தமான சபையில்

எல்லையிலா இறைவர் முன் செல்ல

பெருந்தொண்டர் நீலகண்டரும்

மிக்க எழுந்த காதலுடன் வழக்கினால் தொடரப்பட்டு சென்று சேர்ந்தார்.

391.

அந்தணனாகி வந்த பெருமான்

தில்லைவாழ் அந்தணர்முன் பகர்வான்:-

“இக் குயவன்பால் யான் தந்த பாத்திரத்தையும் கொடுத்துத் தொலைக்கமாட்டான்

உண்மையில் தொலைத்திருந்தால்-

மனைவி கரம் பற்றி குளம் மூழ்கி சத்தியம் தரவும் மாட்டான்

வலி செய்கிறான்” என்றார்.

392.

மணம் கமழும் சடை முடியும்

நான்கு தோள்களும் முக்கண்ணும்

நீலகண்டமும் மறைத்து அருள் செய்து

எதிரே வெளிப்பட்டு நின்ற வேதியரான இறைவர் சொன்னதும்

“நற்பண்புடைய குயவரே நிகழ்ந்ததைக் கூறுக”

என்றனர் தில்லைவாழ் அந்தணர்கள்.

393.

“பூணூலை அணியென அணிந்த மார்பரே

இது பெருஞ்செல்வம்!” எனச்சொல்லி இவர் தந்த திருவோடு பேணி

வைத்த இடத்திலிருந்து

பெயர்ந்து மறைந்தது எவ்வாறோ காணவில்லை என்றார்

தொலைவிலும் தீமை நெருங்க முடியாத திருநீலகண்டர்.

394.

திருவுடைய அந்தணர்கள் செப்பினர்:

“திருநீறு பூசிய கோலம் கொண்ட இவ்வேதியர் தந்த ஓட்டை

காணாமல் போக்கிய நீர் கூறுவதை

ஒப்புக் கொள்ள வேணுமெனில்

அவர் கேட்டவாறு

மருவிய மனைவியுடன்

நீவீர் மூழ்குதல் வழக்கே”

395.

அரிய தவமுடைய தொண்டரும்

அந்தணர் கூறிய தீர்ப்பு கேட்டுத்

திருந்திய மனைவியாரை தீண்டா நிலையைச்

செப்ப இயலாதவரானார்

வழக்கில் வென்ற பெருந்தவமுனிவரைப் பார்த்து

“பொருத்தமானபடி நான் மூழ்கித் தருகிறேன் வருவீராக”

எனத் தன் இல்லம் சார்ந்தார்.

396.

இல்லத்திலுள்ள மனைவியைத் தம்முடன் கொண்டு

மறைச் சிவயோகியார் முன்

காளை ஊர்தியினரான சிவபெருமான் மேவும்

திருப்புலிச்சுரம் எனும் ஆலயத்தின் முன்னர்

நனை மலர்ச் சோலை சூழ்ந்த குளம் அடைந்து

உண்மை காக்க

அழகிய மூங்கில் தண்டின்இருமுனைகள் பிடித்துப் புகுந்தார் குளத்து நீரில்.

397.

தண்டின் இரு பக்கமும் பற்றி முழுகப்போகும் அவர் தம்மை நோக்கி

வெண்திருநீற்றை திரிபுரண்டரமாய் அணிந்த வேதியர்

“மனைவியைத் தீண்டிக் கொண்டு உடன் மூழ்கித் தருக “ என்றதும்

எவ்வகையிலும் குற்றமிலாத் தொண்டர் உலகம் அறியுமாறு

தன் மனைவியைத் தீண்டி மூழ்க இயலா நிலை சொல்லி மூழ்கினார்.

398.

நீர்நிலையில் மூழ்கிக் கரையேறும் கணவரும் மனைவியாரும்

மேவிய முதுமை நீங்கி

விருப்பம் தரும் இளமை பெற்றுத்

தேவரும் முனிவரும் சிறப்புடன் பொழியும் தெய்வப்பூவின்

மாமழையில் மேலும் மூழ்குவார் போலத் தோன்றினார்.

399.

அந்நிலையில் நின்ற அவ்விருவரைக் காணும் அதிசயம் கண்டார் உலகத்தார்

“தம்முன் நின்ற வேத முதல்வரைக் காணவில்லை

இங்ஙணம் இருந்த வண்ணம் என்ன !” என மருண்டு நின்றார்

வான்வெளியில் தன் துணை உமையுடன் காளையூர்தியில் கண்டார்.

400.

கண்டனர் கண்ணார

கைகளால் தொழுதனர்

அன்பர் பெருமையில் காதல் கொண்டு தேவர்களும் ஏத்தினார்கள்

கூறமுடியா அளவு பொலிவுகாட்டி காளையின் மேல்வருவார் தம்மை

தொண்டரும் மனைவியாரும் தொழுது துதித்தனர்.

401.

அம்பலத்துள்ளே திருக்கூத்து ஆடி

அடியவர்கள் இல்லம் தோறும் சென்று

அவர்தம் உண்மை நிலைகாட்டும் தேவர்களின் தேவரான இறைவர் அருளினார்

“ஐம்புலனை வென்று விளங்குவோரே …

என்றும் இந்த இளமை நீங்கா நிலையுடன் எம்முடன் விருப்பால் இருப்பீராக”

402.

வல்லமையுடைய தொண்டரும்

வெண்பற்களும் சிவந்த வாயும்

மென் தோளும்

கருமணல் போன்ற கூந்தல் உடைய மனைவியாரும்

அருளால் நிறைந்த அரிய செய்கை செய்து

எய்தினார் சிவலோகம்

பெற அரிய இளமை பெற்று

அன்றே பேரின்பம் உற்றார்.

403.

அயலார் யாரும் அறியாத வண்ணம்

இறைவரது ஆணையைப் பாதுகாத்தவரும்

உலக மயக்கம் தவிர்த்தவருமான திருநீலகண்ட நாயனாரை

யான் அறிந்த வகையால் வாழ்த்தி

மேகம் தவழும் அளவு உயர்மாடம் கொண்ட பூம்புகார் நகரில் வாழ்ந்த

பொய்மையிலாச் செயல் கொண்ட இயற்பகை நாயனார்

திருத்தொண்டு கூறத் தொடங்குகிறேன்.

(திருநீலகண்ட நாயனார் புராணம் முற்றிற்று )

[ திருவருளால் தொடரும் ]
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்