பா.சத்தியமோகன்
2951 .
இவ்விதமாக
சிவநேசர் செயலாற்றி வரும் நாட்களில்
தெய்வப்பெண் போன்ற பூம்பாவையார்
கன்னிமாடத்தில் –
பால் போன்ற தூயநீர் நிறைந்த பொய்கை அருகில்
பனிமலர் கொய்வதற்காக
தம்மைப் போற்றும் நீண்ட கூந்தல் கொண்ட சேடியருடன்
வெளியே வந்தார்
திரண்ட வளையல்கள் கொண்ட தளிர்க்கைகள்
முகைக்கும் பருவத்து மலர்களைக் கொய்யும்போது–
(சேடியர்- தோழிகள்)
2952.
“அன்பரான சிவநேசர் விருப்பத்தால் அளித்த அளவு தாண்டியும்
பொன் கொழிக்கும் நீரையுடைய சீகாழி சம்பந்தருக்கு
இது சேராது” என்று
தன் மனதில் நினைத்துக் கொண்ட ஊழ்
நச்சுப் பற்களுடைய ஒரு பாம்பாகி
முன் வந்ததைப் போல
வந்தது
முள் போன்ற பற்களுடைய ஓர் பாம்பு!
2953.
பூம்பாவையார்
மல்லிகை முல்லைக்கொடிகள் படர்ந்த பந்தலில்
மறைந்துவந்து சேர்ந்தது
பருவத்தில் புதிதாகப்பூத்த அரும்புகளைப் பறிக்கின்ற போது
மான்போன்ற கூர்மையான கண்களையும்
நல்ல நெற்றியையும்
செறிவும் நெறிவும் உடைய கூந்தலையும்
கோவைக்கனி போன்ற வாயையும் உடைய
பூம்பாவையரின் மலர்போன்ற கையில்
பூக்கொய்யக் கூப்பிய விரலை
குறிபார்த்துக் கடித்தது.
2954.
நச்சுப் பற்கள் நான்கும்
எலும்பு அழுத்தும் வரை நஞ்சை உகுத்தது
படத்தை விரித்து நின்று ஆடிய அப்பாம்பு —
வேறு இடத்தில் மறைந்துவிட்டது.
கரிய நீலநிறம் கொண்ட நஞ்சு தொடர்ந்து மேலெழுந்தது
மென்மையான பூமாலை தீப்பட்டது போல
பூம்பாவையார் உள்ளம் மயங்கி —
2955.
தரையில் விழ
தோழியர் திடுக்கிட்டு அஞ்சித் தாங்கினர்
அவருக்கென அமைக்கப்பட்ட
கன்னிமாடத்தில் கொண்டு புகுந்தனர்
சிவநேசருக்கு சொல்லும் மனமும் நிலையழிந்தது
துயர்பெருக
அளவற்ற சுற்றத்தாரும் கண் கலங்கி அழுதனர்.
2956.
நஞ்சை நீக்கிடும் கலையில் பெரியோரான மேலோர் பலர்
அடர்ந்த நஞ்சைப் போக்குவதற்கு சேர்ந்தனர்
திடம் மிக்க மந்திரமும் தியானமும் பாவனையும்
முட்டிநிலையுமாய்
முயற்சிகளைத் தனித்தனியாய்ச் செய்வதற்கு
சூழ்ந்து கொண்டு —
(முட்டிநிலை- நஞ்சினைத் தணிக்கும் மந்திரவாதி
பெருவிரலை எடுத்து மற்ற நான்கு விரலையும் மடித்து,
உச்சி முதல் கடிவாய் வரை நஞ்சு ஏறியவர் உடலைத் தடவுதல்)
2957.
கொடுக்கப்பட்ட மருந்துகளும் எண்ணிலாதவை
அப்படியிருந்தும் கூட
விஷம் வன்மையாய்ப் பற்றிக் கொண்டு
ஏழு வேகமும் முறையாய் மேல் ஏறியது
அகன்ற கண்கள் உடைய
பூம்பாவையரின் தலையை மேற்கொண்டு செய்யப்பட்ட
தீவினைகள் எல்லாவற்றையும் கடந்தும் கூட தீரவில்லை.
2958.
உயிரானது
உடலில் தங்குவதற்கான பலகுறிகளும் பொருந்தாது போயின
அப்போது வந்து சேர்ந்த
ஆடும் கலையில் வல்லவரும்
“இது விதி” என்று கைவிடும் வேளையில்
பொருந்தி வந்தபல சுற்றத்தார்களும் கடலைப் போல அலறி
பாவை மீது விழுந்து அழுதனர்
2959.
சிந்தை வெந்து துயர் உற்றார் சிவநேசர்
பின்பு தெளிந்தார்
“வந்திருக்கின்ற செய்வினையை இல்லாது செய்ய
செயல்கள் ஏதுமில்லாததால்
உலகத்தில் உள்ளவர்களில் எவரேனும்
இக்கொடிய நஞ்சை ஒழித்தால்
எல்லையில்லாத செல்வத்திரள் யாவும் அளிப்பேன்”
என யாவரும் அறியுமாறு பறை சாற்றினார்.
2960.
முரசு இயம்பி மூன்று நாள் முடிந்தது
அரச அவையில் உள்ளவர் உட்பட
உலகில் உள்ள எல்லையிலாக் கல்வி உடைய யாவரும் முயற்சித்தனர்
தாம் உறுதியாய்க் கண்ட
குற்றமற்ற தொழில்கள் எதனாலும்
நஞ்சு ஒழியாமல் போனதால்
விடைபெற்றுச் சென்றனர்.
2961.
சிறப்பு பொருந்திய சிவநேசர் உள்ளம் மயங்கினார்
மேகம் பொருந்திய சோலைகளால் சூழ்ந்த சீகாழியின் தலைவர்
வந்து சேரும் நாள் வரையிலும்
பூம்பாவையரின் உடலைத் தீயில் இட்டு அடங்கச் செய்தபிறகு
அதில் சேரும் எலும்பினைச்
சாம்பலுடன் சேமித்து வைப்பது என முடிவு செய்தார்
2962.
“ஞானசம்பந்தப் பெருமானுக்கு என இவள்தனை அளித்தேன்”
என்று கூறிவிட்டதால்
“அடையும் துன்பம் நமக்கு எதுவுமில்லையாம்’
எனத் துன்பம் நீங்கினார்
பிறகு
தீயில் எரித்த எலும்பையும் சாம்பலையும்
பக்கத்திலிருந்த அகன்ற குடத்தில் புகுமாறு இட்டு வைத்தார்.
2963.
அக்குடத்தை
கன்னிமாடத்தில்
முன்பு போலவே
காவல் பொருந்த வைத்தார்
பொன்னும் முத்தும் மேல் அணிகலன்களும்
அழகிய மென் துகில்களும் அந்தக்குடத்தினைச் சுற்றிலும் புனைந்தார்
புகழப்படும் அன்ன இறகுகள் இட்ட பஞ்சணையான
மணம் கமழும் பள்ளியில் வைத்து
அதன்மேல்
பொன்னால் ஆன கழுத்தணி மாலைகள் அழகுபெறுமாறு
கோலம் செய்து வைத்தார்.
2964.
நாள்தோறும் மாலையுடன்
சந்தனத்துடன்
திருமஞ்சனத்துடன்
பால்சோறும்
பகல் விளக்கும்
விடாமல் அமைப்பதைக் கண்ட யாவரும்]
அதனைக் கண்டு வியப்பெய்தும் நாளில் —
2965.
“சண்பை மன்னவர் திருவொற்றியூர் நகர் சார்ந்தார்
பண்பை உடைய நல்தொண்டர்களுடன் இறையைப் பணிந்து
அங்கே இருந்தார்” எனும் நண்பு மிக்க நல்வார்த்தையை
அந்த நல்பதியில் உள்ளோர்கள்
வண்மையும்புகழும் உடைய
பெரு வணிகத் தோன்றலான சிவநேசரிடம் வந்து கூறினர்.
(நண்பு- நட்பு, பதி- இடம்)
2966.
அவ்விதம் சொன்னவர்க்கெல்லாம்
ஆடையும் காசும் பொன்னும் அளித்தார் சிவநேசர்
“இன்னதன்மைதான் பெற்றார்” என சொல்லமுடியா
மகிழ்ச்சியின் உச்சம் எய்தினார்
தலையில் வாழும் நிலவையுடைய சிவபெருமானின்
திருவொற்றியூர் வரையிலும் நடைக்காவணம் இட்டார்
துணியால் விதானமும் கட்டினார் குடத்திற்கு.
2967.
மகரதோரணங்களும்
வளம்மிக்க குலைக்கமுகுகளும்
ஒப்பில்லாத பல கொடிகளும் மாலைகளும்
அழகு பெற வரிசையாய் அமைத்து
நகரம் முழுதிலுமுள்ள தெருக்கள் யாவற்றையும்
நன்மை மிகுந்த அலங்காரங்கள் செய்தார்
அதனால் தேவலோகம் எனப்படும் பொன்னுலகம்
அழகில் சற்று இறங்கிவிட்டது எனும்படி
பொலிவு செய்தார் சிவநேசர்!
2968.
இன்னவாறு பலவகையாலும் அழகு செய்து
குறைகள் இல்லாமல் செய்யும் பணியாட்களை ஏவினார்
“முன்னதாக நான் சென்று
திருவொற்றியூர் நகரில்
முத்தமிழ் விரகரான பிள்ளையாரின் பொற்பாதங்களை
தலை மீது சூட்டிக்கொள்வேன்” என எழுந்து
அந்த மயிலையில் வாழும் பெரும் தொண்டர்களும் தம்முடன் வர
திருவொற்றியூர் நோக்கிச் சென்றார்.
2969.
அந்தச் சமயத்தில்
அருமறை நாயகனாகிய புகலியார் பிரானும்
தாம் தங்கியிருந்த திருவொற்றியூர் பணிந்து அகன்று
உப்பளங்கள் சூழ்ந்த கடற்கரையின் துறையை உடைய
மயிலாபுரி நோக்கிச் சென்றார்
திருத்தொண்டர்கள் குழாம் எதிரில் வர
(மயிலாபுரி- மயிலாப்பூர்)
2970.
ஒப்பில்லாத வண்மையுடைய பெருவணிகரான சிவநேசரும்
அவருடன் வந்த பெருந்தொண்டர்களும்
ஒளி விளங்கும் வெண்ணீறு புனைந்த அடியவர் கூட்டத்தினை
நெடுந்தொலைவில் கண்டதுமே
கங்கை ஆறு சூடிய இறைவரின் மகனார் வந்தனர் என்று
இறுதியிலாத ஒப்பற்ற மகிழ்ச்சியால் நிலத்தில் விழுந்து துதிக்க
(வெண்ணீறு- திருநீறு)
2971.
ஒளி வீசும் முத்துச்சிவிகையிலிருந்து இறங்கி
சூழ்ந்த பெரிய தொண்டர்கள் முன் தொழுது
சீகாழி நாடரும் எழுந்தருளினார்
வாழ்வுடைய மாதவர்களாகிய சிவநேசரின்
அடிமைப்பண்பை எடுத்துச் சொல்லக்கேட்டு
கடற்கரை சூழ்ந்த
திருமயிலைத் திருநகர் அணைந்தார்.
2972.
அத்தகைய திறம் உள்ள வாணிகருக்கு
நிகழ்ந்த நிகழ்வை
தம் உள்ளத்தில் ஞானசம்பந்தர் அமைத்தார்
சித்தம் இன்புறும் சிவநேசரின் செயல் வாய்த்தது
பொய்யான தவம் கொண்டு வருந்தும்
சமணர் சாக்கியரின் புறத்துறைகள் அழிய வைக்க
திருவுருளம் கொண்ட அந்தப்
பெரிய அருள் நோக்கத்தினால் மகிழ்ந்து அருளியதும் —
2973.
கங்கை சூடிய நீண்ட சடையுடைய சிவனார் எழுந்தருளிய]
திருக்கபாலீச்சுரம் எனும் திருக்கோயில் சேர்ந்தார்
உயர்ந்த நீண்ட ஒளியுடைய
கோபுரத்தைத் தொழுது புகுந்து அருளினார்
உமையம்மை ஒரு பாகம் கொண்ட ஈசனாரின் கோவிலை
வலம் வந்தார்
சிவந்த கைகளை
சென்னி மீது குவித்தவாறே திருமுன்பு வந்து சேர்ந்தார்.
(சென்னி-தலை)
2974.
தேவதேவனான சிவபெருமானை
திருக்கபாலீச்வரம் அமர்ந்த அமுதை
தையல் ஒரு பாகத்தானை
பரிவு பொருந்திய பண்பினால் துதித்தார்
பொருந்திய காதலால் விரும்பிய விரைவினால்
உண்மைத் திருவாக்கினால்
போற்றினார் ஞானசம்பந்தர்.
2975.
அங்ஙனம் போற்றி
மெய்யருள் திறம் பெறும் இடைவிடாத எண்ணத்துடன் வணங்கினார்
திருநீறு பூசிய மேனியில்
நிறைவாக மயிர்ப்புளகம் தோன்றுமாறு
இயமனைக் காலினால் உதைத்து உருட்டிய இறைவரது கோயிலின்
வெளிப்புறத்தில் சென்று
செய்கின்ற இனிய அருள்
வாணிகர் மீது செல்வதாய் அருளினார்.
2976.
சிவனடிமைத் திறத்தில் ஒன்றி உய்த்த நல் உணர்வுடையீர்!
உலகத்தினர் யாவரும் அறியுமாறு
அரிய தவத்தின் பயனாகப் பெற்ற
மகளுடைய எலும்பு நிறைந்த அக்குடத்தைப்
“பெரிய மயானத்தில் கூத்தாடுகின்ற இறைவரது
பெரும் கோயிலின் திருமதில்புறத்துத் திருவாசல் முன்பு கொணர்க”
என செப்பிட
2977.
எல்லையிலாத பெருமகிழ்ச்சியால் நிலத்தின் மீது விழுந்து வணங்கி
கோவில் விட்டு
தமது இல்லம் சேர்ந்து
அங்கு
மணம் பொருந்திய நீண்ட சொலையிடையே உள்ள
கன்னிமாடத்தில் புகுந்து
மகள் உடல் வெந்த சாம்பலுடன் எலும்பும் இட்ட குடத்தைப்
பஞ்சணை முதலியவற்றிலிருந்து
வேறாய் எடுத்து வந்து
2978.
பலமணிகள் இழைத்த மூடுசிவிகையுள்
அந்தக்குடத்தை இனிதாக அமைத்து வைத்து
அதனை முன் போகவிட்டு
பக்கத்தில் தோழியர் கூட்டம் சூழ்ந்து வர
ஆடல் செய்யும் இறைவரின்
திருகபாலிச்வரம் சேர்ந்து
நீண்ட கோபுரத்தின் வெளியே எதிரில்
மணிச்சிவிகையின் திரையை விலக்கி
2979.
அங்கத்தில் கண்ணுள்ள இறைவனார் திருவடியில்
அவரது அபிமுகத்தின்
அன்பின் உறைப்பால்
மங்கையினது எலும்பு சேர்ந்த குடத்தினை வைத்துத்
திருமுன்பு சிவநேசர் வணங்கிட
பொங்கி வரும் பெருநீர்ச் சிறப்புடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர்
இவ்வுலகில் தங்கி வாழும் மக்களுக்கு
உறுதிப் பொருள் நிலைமை இதுவே என சாதித்தார்.
(அங்கணாளர்- சிவபெருமான்)
2980.
மாடங்கள் ஓங்கிய மயிலை மாநகரில் உள்ளவர்கள்
மற்றும் அந்நாட்டில் வாழ்பவர்கள்
நன்றியில்லாத பிற சமயத்தில் உள்ளவர்கள்
எப்பக்கத்திலுமாக சூழ்ந்து
விளைவைக்காண வந்தவர்கள் பெருகினார்கள்
நீடிய தேவர்களும் மற்றவர்களும்
வானத்தில் நெருங்கினார்கள்.
2981.
திருத்தொண்டர்களின் பெரும் குழாம் பக்கத்தில் சூழ
பழமையான தேவரது கோபுர வாயிலின் நேரில் வந்து அணைந்து
வண்டுகள் சூழும் கூந்தலுடைய பூம்பாவையாரின்
எலும்புகள் நிறைந்த மண்குடத்தை
அருட்பார்வை பார்த்தருளினார் —
தம்பிரான கருணையின் பெருமையை உள் நினைந்து
(தம்பிரான் – தனது பிரானாகியசிவபெருமான்)
— இறையருளால் தொடரும்
pa_sathiyamohan@yahoo.co.in
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:2)
- டோடோ: ஒரு இரங்கல் குறிப்பு
- முதுமை வயது எல்லோருக்கும் வரும்
- மீண்டும் அலைமோதும் அண்ணா நினைவுகள்
- அலன்டே & பினொச்சே – சிலி
- கீதாஞ்சலி (90) மரணம் கதவைத் தட்டும் போது!
- தி ஜ ர வுக்கு உரியன செய்யத் தவறினோம்: அவரது குடும்பத்தாருக்கேனும் உதவுவோம்
- சாம வேதமும் திராவிட வேதமும்
- ஓர் கலைஇலக்கியவாதியின் மத துவேஷம்
- கடித இலக்கியம் – 22
- தெள்ளிய மொழியில் தெய்வீகத் தேடல்கள்: தமிழ் உபநிஷத நூல்கள் குறித்து
- கல்வெட்டாய்வு: இந்திரப் பிரேத்து
- பட்டறை தயாரித்த பரமார்த்த குரு
- நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை
- ஆணிவேர் திரைப்படம் வெளியீடு
- கடிதம்
- சாலைகள் வளைந்து செல்கின்றன- பாரசீக வளைகுடாவிலிருந்து அரபிக்கடலுக்கு (மனைவிக்கு ஓர் கடிதம்)
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, சூடாகும் கடல்நீர், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-10 [கடைசிக் கட்டுரை]
- வஞ்சித்த செர்னோபில்
- என் கவிதை
- பெரியபுராணம் — 104 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (74 – 112)
- தன் விரல்களை துண்டித்த சூபி
- எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது..- கமலா சுரையா
- தெளகீது பிராமணர்களின் கூர் மழுங்கிய வாள்களும் வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகளும்
- ஜிகாத்தும் தலித் விடுதலையும், முயற்சித்தலும் மூடி மறைத்தலும்
- கையறு காலம்
- மடியில் நெருப்பு – 3
- இரவில் கனவில் வானவில் – 1