பெரியபுராணம் – 90 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

பா.சத்தியமோகன்


2517.

மங்கல மலர்கள் மழையெனப் பொழிய

மங்கல வாழ்த்துக்கள் இனிதாக இசைக்க

பூக்கள் இட்ட

மணமுடைய நீர் நிறைந்த குடங்களையும்

அழகிய விளக்குகளை தூபமுடன் ஏந்தியும்

நீண்ட தோரணங்கள் வரிசையாய் அமைத்து

அடியார்கள் எதிர்கொண்டு வரவேற்றனர்

கலையுடைய மாலை மதியத்தைச் சூடிய சடையுடைய

இறைவரின் கோவில்கள் பலவும் வணங்கினார்.

2518.

தெளிவான அலைகள் சூழ்ந்த கடற்கரையிலுள்ள

திருவத்தியான் பள்ளியில் வீற்றிருக்கும்

அண்டர்பிரானாகிய இறைவனை வணங்கினார்

அரிய தமிழ்ப் பெருமறையான தேவாரப் பதிகம் பாடினார்

மேகங்கள் தங்குவதற்கு இடமான

மணற்குன்றுகள் சூழ்ந்த

திருக்கோடிக்குழகரை அடியார்கள் சூழத் தொழுதார்

மேற்கொண்டு செல்லத்துவங்கினார்-

தோணிபுரத் தோன்றலார் சம்பந்தர்.

(“வாடிய” எனத் தொடங்கும் பதிகம் திரு அகத்தியான் பள்ளியில் பாடியது)

2519.

அழகிய திருநெற்றியில் விழியுடைய இறைவர்

மகிழ்ந்து வீற்றிருக்கும் திருக்கடிக்குளம்

எனும் பதி வணங்கினார் இறைஞ்சினார்

மக்களின் எண்ணம் நிறைந்த திரு இடும்பாவனம் எனும் பதி சென்றார்

மண்ணில் நிறைந்துள்ள பதிகள் பிறவும்

மகிழ்வுடனும் அன்புடனும் வணங்கி

பண் பொருந்திய தமிழ்ப்பதிகங்களால் பாடி வணங்கியே சென்றார்.

2520.

திரு உசாத்தானம் எனும் பதியில் தேவர்பிரான் கழல் பணிந்து

பொருந்திய செந்தமிழ்ப் பதிகங்களை

திருமால் வணங்கி வழிபட்ட விதத்தை வைத்துப் பாடினார்

நல்வினை தீவினை என்ற இருவினைகளையும்

பற்றுதலையும் அறுக்கும் ஞானசம்பந்தப் பிள்ளையார்

எண்ணிட முடியாத தொண்டர்களுடன்

பெருகும் விருப்பத்தை உடையவராய்

பிற பதிகள் பலவும் பணிந்தார் அருளினார்.

2521.

கருமையான உப்பங்கழிகள்

கடலின் பக்கமுள்ள நெய்தல் நிலம்

யாவும் கடந்து சென்று

திருந்திய சிறப்புடைய காவிரிநாடான சோழநாட்டின்

தென்மேற்கு திசை நோக்கி நடந்தார்

பக்கங்களில் நெருங்கிய தூறு கொண்டு எழும்

பெரிய சாலி எனும் பயிர்கள் நெருங்கிய

காய்க்குலைகள் கொண்ட தென்னைகள்

நெருக்கமாக வளரும் பாக்குமரங்கள் யாவும் சூழ்ந்த

மருதநிலத்தின் வழியே சென்றார்.

2522.

சங்குகள் நிரம்பிய வயல்களில் எங்கும் நெல்லும் கரும்பும் உள்ளன

குளிர் மணமுடைய பொய்கைகள் எங்கும்

மணம் கமழும் தாமரைகள் உள்ளன

ஆங்காங்கே

உழவர் கூட்டம் ஆர்ப்பரிகின்ற ஒலிகள் நிறைந்துள்ளன

எங்கெங்கும் பூக்கள் நிறைந்த பள்ளங்கள் உள்ளன

இவை யாவும் நீங்கி நடந்தார் ஞானசம்பந்தர்.

2523.

பொய்கைகள் எங்கும்

நீராடும் மகளிரின் தொய்யில் குழம்பின் நிறம் !

நகரில் –

அந்தணர்கள் ஓதும் கிடைகள் !

மடங்கள் எங்கும் –

தொண்டர் குழாம் !

மனை எங்கும்

ஆடலுடன் ஒலிக்கும் பாடல்கள்!

இவையனைத்தும் நிறைந்த நல்ல ஊர்களையும்

ஞானசம்பந்தர் கடந்து சென்றார்.

2524.

இவ்விதமான நீர்நாட்டைக் கடந்தார்

பிறகு

பெரிய புறவங்களில் கார்காலத்தை நாடும்

முல்லை அரும்புகளின் மணம் கமழும்

முல்லை நிலம் கடந்தார்

பிறகு

போர் நாடுகின்ற வில் ஏந்திய மறவர் வாழும்

புன் புலங்களான பாலை சார்ந்த இடங்கள் கடந்தார்

பிறகு

புகழ் விரும்பும் தென்பாண்டி நன் நாட்டை சென்று அடைந்தார்.

2525.

இருபுறமும் மணமுடைய பூக்குவியல்களை

தனது அலைகளால் எறிகின்ற பல நதிகள் கடந்தார்

முறுக்குடைய கொம்புகள் பெற்ற

கலிமான்கள் ,பெண்மான்கள் மற்றும் அதன் கன்றுகள் துள்ளிப் பாயும்

நாடுகள் இடையே உள்ள வழிகள் கடந்து

கொன்றைமலர்கள் மணம் வீசும் சடையுடைய இறைவர் வீற்றிருக்கும்

திருக்கொடுக்குன்றம் சார்ந்தார்.

(திருக்கொடுக்குன்றம்- பிரான்மலை)

2526.

திருக்கொடுக்குன்றத்தில் இனிதாய் விரும்பி வீற்றிருக்கும்

கொழும் பவழமலை போன்றவரான

யானையை உரித்தவரான

இறைவரை வணங்கி

அரிய தமிழ் மாலைகளைப்பாடி

நீண்ட குன்றுகள் கடந்து

படர்ந்த காடுகள் கடந்து

சந்திரன் தொடுமாறு உயர்ந்த மலை போன்ற மதில்கள் உடைய நகரை

ஞானசம்பந்தர் சேர்ந்தார்.

(நெடுங்குன்று- அழகர்மலை)

2527.

இவ்விதமாக

ஞானசம்பந்தர் ஆனைமலை முதலிய

எட்டுகுன்றங்களில் மேவியபோது

அந்நிலையில்

சமணர்களுக்கு உண்டாக இருக்கும் அழிவைச் சாற்றும் விதமாக-

பலமுறையும்

காரணமின்றி அச்சம் கொண்டு

உள்ளம் பதைக்கின்ற

தீய நிமித்தங்கள் அங்கு நிகழ்ந்தன

அதனைச் சொல்லத் துவங்குகிறோம்.

2528.

சமணரின் கோயில்களான பள்ளிகள் மீதும்

சமண குருமார்கள்

தங்கள் பாழி எனும் குகைகள் மீதும்

ஒள்ளிய இதழ்களுடைய அசோக மரங்கள் மீதும்

உணவு செய்யும் கவளங்களை கையில் கொள்ளும் மண்டபங்கள் மீதும்

கோட்டான்களுடன் ஆந்தைகளும்

மற்ற தீய பறவை கூட்டமும்

தமக்குள் போரிட்டு

வர இருக்கும் அழிவைப் புலப்படுத்தின.

2529.

மயிர்ப்பீலியும் –

தடுக்கும் –

பாயும் –

அவற்றைப் பிடித்த கைபிடியிலிருந்து வழுவி வீழ்ந்தன

கால்கள் பின்னித் தடுமாறின

கண்கள் இடப்பக்கமாய்த் துடித்தன

மேற்கொண்டு நிகழப்போகும் அழிவு நீக்க

வேறு ஒரு காரணமும் அறியாமல்

சமணர்கள் எல்லாம் மயக்கம் அடைந்தனர்.

2530.

தங்களுக்குள் தாங்களே

கனன்று எழும் கலகங்கள் செய்தனர் சமணத் தவப்பெண்கள்

சமணமுனிவர்களும் தமக்குள் மாறுபாடு கொண்டு

ஒருவருக்கொருவர் துன்பம் செய்தனர்

தமது பழைய நூல்களில் கொண்ட பொறுமை விட்டனர்

உள்ளத்தில் சினம் முதலான தீயகுணங்களில் சிறந்து நின்றனர்.

2531.

இவ்விதமாக

சமணர்கள் தங்கும் எவ்வகைப்பட்ட இடங்களிலும்

ஒப்பிலாத தீய நிமித்தங்களை

ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டனர்

பலன் அளிக்கும் தீய கனவுகளையும்

வெவ்வேறாகக் கண்டு

அதனைச் சொல்வதற்காக

வெளியில் உள்ளோரும்

பாண்டியனின் மதுரை சேர்ந்தனர்.

2532.

அந்த மதுரை நகரில் உள்ளோரும்

நகருக்கு வெளியிலிருந்து வருவோரும் கூடி

மன்னவனுக்கும் அறிவித்தனர் மருண்ட மனதோடு

அழுக்குடைய உடலில்

துணியில்லாத சமணர் பலரும்

இன்னன்ன கனவுகள் கண்டோம் என எடுத்து இயம்பத் தொடங்கினர்.

2533.

“சிறப்புமிகு அசோகமரத்தின் கீழ்

அமர்ந்து அருளிய நம் அருகக் கடவுளின் மேல்

அம்மரம் வேரோடு சாய்ந்து வீழ்ந்ததைக் கண்டோம்

அதன் பின் –

அழகிய மூன்று குடையும் தாமுமாக

அத்தேவர் எழுந்து கைகளைத் தொங்கவிட்டபடி போனார்

இதனை ஊரில் உள்ளோர் ஓடிச் சென்று

காணவும் கண்டோம்” என்று உரைத்தார்கள்.

2534.

“கமண்டலத்தை உடைத்து

பாயையும் கிழித்துக் கொண்டு

ஒரு பெண் குரு ஓட

சமணப் பண்டிதர்கள் தம் குகையிலிருந்து கழுதைகள் மேல் செல்ல

அவர்களின் பின்னால்

ஒளியுடைய வளையல் அணிந்த தவப்பெண்கள்

ஊளையிட்டு அழுது ஓடக் கண்டோம்”

என்று கவலைகொண்டு உரைத்தனர்.

2535.

இடுகாட்டில் நடனமாடும்

நெற்றிக்கண் உடைய சிவனது அடியார் எல்லாம்

மீன் கொடியுடைய பாண்டியனின் மதுரையில் வந்திடக் கண்டோம்”

என்றனர் சிலர்

“கொழுந்து விடும் தீயில்

மதுரை மன்னனும் முழுகக் கண்டோம் “

பிறகு

“அவன் அதனின்று எழவும் கண்டோம்

அதிசயம் இது” என்றனர் சிலர்.

2536.

“இளமையுடைய சேங்கன்று ஒன்று ஓடி வந்து

நம் சிங்கத்தை சுழல மிதித்தது கலக்கியது

அதனால் சிதறி ஓடினோம்

அக்கன்றை எவரும் தடுக்க அஞ்சினர்

அடைக்கலமாய் விழுந்து ஒளிய

ஒரு இடமும் இல்லாமல்

பூமியை விட்டு

நிழலில்லா மரங்கள் மீது ஏறி நிற்கவும்

ஒரு கனவு கண்டோம்” என்றனர்.

2537.

“பாவிகளே! இக்கனவின் முடிவுதான் என்ன?

இக்கனவின் விளைவு-

நம் அடியார்களுக்கு பொருந்திய தீமை விளைவிப்பது நிச்சயமே”

என்று நொந்த மனத்தினராயினர்

உண்ணத்தக்க உணவுகளையும் உண்ணாமல்

என்ன செய்வது என எண்ணிக் கேட்பவர்களும்

துன்பமடைந்து வருந்தினார்கள்.

2538.

அவ்வாறு அந்த அமணர்கள்

அந்நிலையில் இருக்க-

நல்ல சைவ மரபில் தோன்றிய

மாமயில் போன்ற

இளமையாகிய மெல்லிய சாயலையும்

பாம்பின் படம் போன்ற அல்குலையும் உடைய

பாண்டிமாதேவியரான மங்கையர்கரசியார்க்கும்

உண்மை நெறியில் நிற்கும் குலச்சிறையாருக்கும்

நல்ல நிமித்தங்கள் மேலும் மேலும் நிகழ்ந்தன.

2539.

அளவற்ற மகிழ்ச்சி உண்டாக்குகின்ற

அத்தகைய அரிய பெரிய நல்ல நிமித்தங்கள் வந்து பெருக-

மனதில் மகிழ்ச்சி உணரும் அந்த தருணத்தில்

உலகமெல்லாம் உய்வதற்கு வந்த

“வளரும் ஒளியுடைய

ஞான அமுது உண்டவராகிய

சம்பந்தர் வந்து கொண்டிருக்கிறார்” எனும் வார்த்தையை

கிளர்ச்சி பொருந்திய ஓசையுடன்

செய்தி அறிவிக்க அதனைக் கேட்டனர்

குலச்சிறையாரும் மங்கையர்கரசியாரும்.

2540.

அம்மொழியைக் கூறியவருக்கு

அவர்கள் வேண்டுவனவற்றை நிறைய தந்து

மெய்மையோடு விளங்கும் விருப்பம் பொருந்திய

அன்பு வெள்ளம் ஓங்கிட

தம்மையும் அறியாதபடி

திரண்ட மகிழ்ச்சி கொண்டு

பொருந்திய சிறப்பு மிக்கவர் ஆனார்.

2541.

தம்மிடம் வந்து அடி வணங்கி நின்ற

குலச்சிறையாரை நோக்கி

நம்பெருமானாரான ஞான அமுது உண்டவர் திருமுன்பு எய்தி

“இங்கு நீங்கள் எழுந்தருளியதால்

உய்வு பெற்றோம்” எனக்கூறி

வரவேற்பீராக என்றார் மங்கையர்கரசியார்.

2542.

மனம் பொருந்திய கூந்தலுடைய மங்கையர்கரசியாரை

வணங்கினார் அமைச்சர் குலச்சிறையார்

“வெற்றியுடைய வேந்தனுக்கு

இச்செயல் உறுதி அளிப்பதே” என

மனதில் எண்ணி

பொன் வேலைப்பாடுகள் பொருந்திய மாடங்களுடைய

மதுரையின் திருவீதிகளின் பக்கத்தில் விரைவாகச் சென்று

இனிய தமிழினால் வேதங்களை அருளிய

ஞானசம்பந்தரை வரவேற்க செல்லும் போது-

2543.

தாமரை மலரில் வீற்றிருக்கும்

திருமகளை போன்ற மங்கையர்கரசியார்

திருவாலவாயில் வீற்றிருக்கும் பெருமானை

சென்று கும்பிட வேண்டுமென்று

மன்னனுக்கும் கூறித்

தம்பணி மக்கள் சூழ்ந்துவர

தனித்த காவலுடன்

தாமும் சென்று

ஞானசம்பந்தரை வரவேற்க நின்றார்.

2544.

சிவனது அருட்செல்வம் பொருந்திய

அழகியமுத்துச் சிவிகையின் மேல் நின்று வணங்கிக் கொண்டே

வருகின்ற நிலவு ஒன்று

நிலவைப் பொழிந்தது போல வளரும்

ஒளிமுத்து வெண்குடை நிழலை உண்டாக்கியது

பெருகும் ஒளியுள்ள திருநீற்றுத் தொண்டர் குழாம் சூழ

அருள் பெருகும்படி தோன்றிய

சிவஞான அமுது உண்ட சம்பந்தர் மதுரை அணைந்தார்.

2545.

துந்துபிகள் முதலான வாத்தியங்களின் ஓசை மேல் எழாமல்

அந்தணர்களும் மறை முனிவர்களும் பல வேதங்கள் எடுத்துச் சொல்லினர்

வந்தெழுகின்ற மங்கலநாதங்கள் எல்லாத் திக்குகளிலும் ஒலிக்க

செந்தமிழுடன் வருகின்ற தென்றல் காற்று

எல்லாப் பக்கமும் எதிர் கொண்டு வரவேற்க –

2546.

வஞ்சனை பொருந்திய தவத்தினால்

பாண்டிய நாட்டிலே பரவிய

எண்ணிலாத

சமணம் எனும் பாவ இருள் படை உடைந்தோடும்படியாக

மண்ணுலகம் தவிர

வானுலகமும் கூடிச் செய்த

பெரும் புண்ணியத்தின் படை எழுச்சியைப் போல

பொருந்திய பொலிவு உண்டாவதற்காகவும்-

2547.

முழு உடலிலும்

நெருங்கிப் பொருந்திய அழுக்குகளாலும்

தீய சூழ்ச்சியுடைய நெறியிலாத நெறிகளாலும் ஆகிய

சமணம் எனும் அழுக்கைக் கழுவுவதற்கு

தூய்மை ஆக்குவதற்கு நிலை பெற்று விளங்கும் வண்மையாலும்

தூய தன்மையாலும்

கங்கை நதியே பாண்டியரின் கன்னி நாட்டிற்கு வந்ததுபோல

அழகை எடுத்துக் காட்டுவதற்காகவும்-

— இறையருளால் தொடரும்
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்