பா. சத்தியமோகன்
2176.
சிவபாத இருதயர் மேலும் மேலும் பெருகும் விருப்பத்தோடு
தான் பெற்ற பிள்ளையாரைப் பார்த்து
“அரிய தவம் செய்து உம்மை ஈன்றெடுத்தேன்
ஆதலால் உம்மைப் பிரிந்து இங்கிருப்பதை சகிக்கமாட்டேன்
இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் அளிக்கும் சிவவேள்வியும்
நான் செய்தல் வேண்டும்
ஆதலால் இன்னும் சிலநாட்கள் உம்முடன் இருப்பேன்”
என்று உரைத்தார்.
2177.
ஆண்தகையாளரான சம்பந்தரும் சம்மதித்தார்
அழகிய பொன் திருத்தோணியில் எழுந்தருளிய
நீண்ட சடையுடைய இறைவரின் திருவடிக்கீழ் பணிவுற்று
நீடிய திருவருளைப் பெற்று
மிகுந்த புகழுடைய தந்தையார் பின் தொடர
திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம்முடன் வர
காணத்தகுந்த சீகாழியைத் தொழுது
நீங்காத காதலுடன் புறம் போந்தார்.
( காதல் – பக்தி )
2178.
அந்தப் பழைய ஊரில் உள்ளவர்களில்
உண்மைத் தவம் உள்ளவர்கள் உடன் வருபவராயினர்
அந்தணர்கள் பிரியாவிடை பெற்று
பதியில் மீண்டு செல்வாராயினர்
மீளவும் முத்துச் சிவிகைமேல் எழுந்தருளி
மொய்த்துக் கூடிய முத்துமாலைகளை வரிசையாய்க் கட்டிய
வெண்மையான முத்துக்குடை முழுச் சந்திரன் போல் கவிந்து
நிழல் செய்தது.
2179.
முத்துச் சின்னமும் ஒப்பிலா முத்துக்காளமும்
முத்தால் ஆன தாரையும்
“சிரபுரத்திற்கு ஆளுடைய பிள்ளை வந்தார்”
எனும் தன்மையை உலகுக்கு விளங்க
அவரது பற்பல பெயர்களும் சாற்றினர்
அவரது திருமுன்பு
எல்லாப் பக்கங்களிலும்
முரசுகளும் பல இயங்களும் முழங்கின
நிலைபெற்ற திருத்தொண்டர்கள் எதிர்கொண்டு வணங்கினர்.
2180.
சங்கின் நாதங்கள் ஒலிக்க
விளங்கும் அழகிய கொம்புகள் ஒலிக்க
மங்கல வாழ்த்துரை பெருக
பிறைச்சந்திரனையும் பாம்பும் அணிந்த இறைவரின்
திருத்தலங்கள் எங்கும் சென்று
பொங்கிய காதலுடன் துதித்துப் போற்ற
சீகாழிக் கவுணிய குலத்தோன்றல் சென்றார்.
2181.
திருமறை ஓதும் சீகாழி அந்தணரின் தலைவரான பிள்ளையார்
சிவனார் எழுந்தருளும் திருக்கண்ணார் கோயில் எனும் பதியை
பெருகும் விருப்பத்துடன் சேர்ந்தார்
திருப்பதிகம் பாடித்துதித்தார்.
பிஞ்ஞகரின் கோயில்கள் பிறவும் உருகிய அன்பால் இறைஞ்சினார்
உயர்ந்த தமிழ்மாலை கொண்டு புகழ்ந்தார்
பொங்கும் நீரையுடைய காவிரியின் வடகரை வழியே
மேற்குத்திசை நோக்கி வருபவராகி-
(“தண்ணார் திங்கள்” எனும் பதிகம் திருக்கண்ணார் கோவிலில் பாடியது)
2182.
போற்றும் விருப்பம் காதலாகிப் பெருகி
திருபுள்ளிருக்குவேளூரில்
நான்கு பெரும் தோள்களையுடைய
முக்கண் பெருமானாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் கோவிலை
அடைந்து பேரன்பு பொருந்த வணங்கி
பறவை அரசர்களான சம்பாதி, சடாயு ஆகியோர் வணங்கிய
வழிபாட்டின் பெருமையைப் புகழ்ந்துபாராட்டிப் போற்றி
அழகிய சொற்களால்
“கள்ளார்ந்த” எனத் தொடங்கும் பதிகம் அமைத்தார்.
2183.
நிலைபெறும் திருநின்றவூரில்
நிமலனாரின் நீண்ட கழல் துதித்தார்
கூடிய காதலால் போற்றிக் கும்பிட்டார்
வன்மையான திருப்பதிகம் பாடினார்
நாளும் சிறப்புடைய திருநீற்றை வணங்கி
இறைவரின் திருப்புன்கூர் சென்றார்
அருட்கூத்து ஆடும் பாதம் இறைஞ்சி
அருந்தமிழ்ப் பதிகம் பாடி அங்கு தங்கினார்.
(நிமலனார் – சிவபெருமான்)
2184.
அங்கு நின்று
பிறகு திருப்புன்கூரிலிருந்து புறப்பட்டுச் சென்றார்
அப்பக்கங்களில் இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும்
கோவில்கள் யாவும் சென்று பணிந்தார்.
உமையம்மையை ஒரு பாகம் கொண்ட சிவபெருமான் வீற்றிருக்கும்
திருப்பழமண்ணிப்படிக்கரைக் கோவில் வணங்கி
நிலைக்கும் தமிழ்மாலை சாத்தினார், பின்
திருக்குறுக்கை எனும் பதி அடைந்தார்.
2185.
திருக்குறுக்கை எனும் தலம் பொருந்தி
அங்குள்ள திருவீரட்டானக் கோவில் அமர்ந்த
மேருமலையை வில்லாகக் கொண்டவரை ஏத்தினார் துதித்தார்
பிறகு
திரு அன்னியூர் சென்று போற்றினார்
பருத்த கையாகிய துதிக்கை உடைய யானையை உரித்த
சிவபெருமானின்
திருப்பந்தணநல்லூர் பணிந்து
வேதங்களைத் தமிழால் விரித்துச் சொன்ன பிள்ளையார்
தமிழ்ப்பாமாலைகள் பாடினார்.
(அன்னியூரில் பாடிய பதிகம் “மன்னியூர் உறை”எனத் தொடங்கும்
திருப்பந்தணநல்லூரில் பாடிய பதிகம் “இடறினார் கூற்றை” எனத் தொடங்கும்)
2186.
அத்தலத்தைப் போற்றி விடைபெற்று
இறையின் திருமணச்சேரியை
ஒப்பற்ற திருத்தொண்டர்களுடன் வழிபட்டுத்
திருப்பதிகத்தைப் பாடி
எப்பொருளும் தரும் இறைவரின்
“எதிர்கொள்பாடி” எனும் பதி அடைந்து
ஒப்பிலாத திருப்பதிகங்கள் பாடி
உயர்கின்ற வேள்விக்குடியை அடைந்தார்.
2187.
வளமுடைய திருவேள்விக்குடியில் வீற்றிருக்கும்
மணவாளத் தோற்றமானது
பொன்னி ஆறு பொழிய பொருந்தியிருக்கின்ற
திருத்துருத்தியில் பகலில் காட்டி
இரவில் வேள்விக்குடியில் எழுந்தருளிய தன்மையும்
சேர்த்துஅறிவுறுத்திக் குளிர்ந்த தமிழ்மாலை பாடி
முளைக்கும் கொழுந்து போன்ற
வெண்மையான பிறைச்சந்திரன் சூடிய
இறைவரின் திருக்கோடிக்கா என்ற தலம் சென்று சேர்ந்தார்.
2188.
திருக்கோடிக்காவில் அமர்ந்த
தேவர்களின் சிகாமணியான சிவபெருமானை
எருக்கு மலரோடு பாம்பும் விரும்பி அணிந்தானை
வெள்ளைப் பன்றியான திருமாலின்
பருத்த கொம்பைப் பூண்ட தலைவனை
திருப்பதிக மாலைகள் பாடி பணிந்து சொன்னார்
கருவாகி கோடி முறை பிறக்கும் பிறவி நீக்குவார்கள் சேர்கின்ற
திருக்கஞ்சனூரைத் தொழச் சென்றார்.
(இன்று “நன்று” எனத் தொடங்கும் பதிகம் திருக்கோடிக்காவில் பாடியது)
2189.
திருக்கஞ்சனூர் ஆள்கின்ற தம் இறையைக்
கண்ணுற்றார் இறைஞ்சினார் பிறகு
மேகங்களை அணிகின்ற மாமதில் சூழ்ந்து
திருமாந்துறை வந்து வணங்கி
அஞ்சாத சொல் கொண்ட தமிழ்மாலை சாத்தி
அங்கிருந்து அகன்று
அன்பர்கள் எதிர்கொள்ள
சிவந்த சடையுடைய வேதியர் நிலையாக வாழும்
திருமங்கலக்குடி அடைந்தார்.
2190.
கொடிய கண் உடைய காளை மேல் வரும் இறைவர் எழுந்தருளும்
திருவியலூர் இறைவரை வணங்கி
தங்கிய இனிய இசையுள்ள தமிழ்மாலை பாடினார்
அத்தலம் விரும்பி அமர்ந்த இறைவர்
அருள் வேடம் காட்டியதும் தொழுதார்
செங்கண் உடைய திருமாலுக்கு அரியவரான இறைவரின்
“திருந்து தேவன்குடியை”ச் சென்று அடைந்தார்.
(“குரவம் கமழ்” எனும் பதிகம் திருவியலூரில் பாடப்பட்டது)
2191.
திருந்து தேவன் குடியில் நிலையாய் வீற்றிருக்கும்
சிவபெருமான் கோயிலை அடைந்து
பொருந்திய காதலால் புகுந்து துதித்து வணங்கி நினைந்தார்
“இவரது வேடம் மருந்தும் மந்திரமும் ஆகும் “என்று
அளவிலா ஞானப்பாலை உண்ட பிள்ளையார்
அரிய தமிழ்மாலை புனைந்தார்.
(“மருந்து வேண்டில்” எனத்தொடங்கும் பதிகம் இங்கு பாடப்பட்டது)
2192.
அரும்புகள் விளங்கும்
சோலை சூழ்ந்த
அந்த முதுமையுடைய ஊரிலிருந்து
முன் நகர்ந்து சென்று வயல்கள் தருகின்ற
நெல் கரும்பு தென்னை பசியகமுகு
ஆகிய பசுமை நடுவே சென்று
நஞ்சு விளங்கும் கழுத்துடைய இறைவரின் கோவில்களுள்
அப்பக்கங்களில் உள்ளவற்றை எல்லாம் வணங்கி
திருஇன்னம்பர் இறைவரின் கோயிலை திருஞானசம்பந்தர் அடைந்தார்.
2193.
திருஇன்னம்பரில்
நிலை பெற்று வாழும் இறைவனை இறைஞ்சினார்
இடைமடக்கான யாப்பால் அமைந்த
திருமுக்கால் எனும் திருப்பதுக தமிழ்ப்பாடல்
மாலை புனைந்தார் வணங்கினார்
இறைவரின் பொன்கழல் போற்றிப் புறப்பட்டு
நிலைபெற்ற பெரிய கரையை உடைய
காவிரியின் வடகரையில் உள்ள
வடகுரங்காடுதுறை வந்தார்.
(எண்டிசை எனத் தொடங்கும் பதிகம் திருஇன்னமபரில் பாடப்பட்டது)
2194.
வாலியார் வந்து வழிபட்டுச் சரணமான வரலாற்றை
வடகுரங்காடுதுறையில் திருப்பதிகம்பாடி
உலகம் அறியச் செய்தார்
அங்கு பக்கமுள்ள பிற தலங்களையெல்லாம் வணங்கி
மூவிலைச் சூலத்தைப் படையாய் கை கொண்ட
இறைவன் அருளும் திருப்பழனம் எனும் திருத்தலம் சென்றார்.
(வாலியார்; இராமாயணத்தில் பேசப்படும் வாலி)
2195.
திருப்பழனம் மேவிட முக்கண் சிவபெருமான் பயிலும்
கோயிலில் புகுந்து
இறைஞ்சி நின்றார் ஏத்தினார் உருகிய சிந்தையராகி
விருப்புடன் தமிழ்ச்சொல்பதிகம் விளம்பினார்
விருப்புடன் அங்கு தங்கினார் பிறகு அகன்றார் —
தீயைப்பழிக்கும் சிவந்த தாமரை மலர்ந்த
நீர்நிலைகள் கொண்ட திருவையாற்றுக்கு.
(“வேதமோதி” எனத் தொடங்கும் பதிகம் திருப்பழனத்தில் பாடப்பட்டது)
2196.
மாடங்கள் வரிசையாக நிற்கும் வீதியில்
திருவையாறில் வாழும் தொண்டர்கள்
“நாடு உய்வதற்கு சீகாழியில் தோன்றி
ஞான அமுது உண்ட பிள்ளையார் வந்தார்” என எண்ணினார்
ஆடலோடு பாடினர்
அந்த அழகிய பழைய ஊரினை
நீண்ட மனக்களிப்போடு அலங்காரம் செய்து
எதிர் கொண்டு வரவேற்றபோது
முத்துச்சிவிகையிலிருந்து இறங்கி வந்தார் பிள்ளையார்.
2197.
வந்து கூடிய திருத்தொண்டர்கள் அருகில் சூழ்ந்து வர
மானை ஏந்திய கையை உடைய இறைவரிடத்தில்
நந்தியம்பெருமான் முன்காலத்தில் “அஞ்சாதே”என அருள்பெற்ற
அத்தலத்தினை இறைஞ்சினார்
ஐந்து புலனும் நிலை கலங்கும் காலத்தில்
அஞ்சாதே என்று அபயம் உரைத்த
“இறைவரது திருவையாறு இதுவாகும்”
என்ற எண்ணத்துடன் மனம் நிறைந்து
எழுந்த செந்தமிழின் சந்த இசைப் பதிகத்தால்
வணங்கித் துதித்தார் சீகாழி வேந்தர்.
( “புலனைந்தும் பொறி கலங்கி” / “கோடல் கோங்குளிர்” ஆகிய
தொடக்கமுள்ள பதிகங்கள் ஐயாற்றுப் பதிகம்)
2198.
அழகிய வீதிகள் கடந்து
திருமாலுக்கும் நான்முகனுக்கும் அறிவதற்கு அரிய சிவபிரான்
நிலைத்து வீற்றிருக்கும் அழகு நிலைத்த கோபுரத்தை அடைந்து
கோவிலுள் அடைந்து அளவிலா காதலுடன்
தணியாத கருத்துடன் தன் தலைவன்
திருக்கோயிலை வலம் வந்து தாழ்ந்து
பாம்பை அணிந்த அப்பெருமான் முன்பு பணிந்தார் வீழ்ந்தார் துதித்தார்.
2199.
“கோடல் கோங்கம் குளிர் கூவிளம்” எனத்தொடங்கும்
திருப்பதிகம் குலவுகின்ற சொல்மாலையை
நீடிய பெரும் திருக்கூத்தின் சிறப்பு நிறைந்த
தன் உள்ளத்து நிலைமை வெளிப்பட
“ஆடுமாறு வல்லவன் ஐயாற்று ஐயன் மட்டுமே” எனும் கருத்தை
முடிபாகக் கொண்டுபாடினார் ஆடினார்
பண்பினோடு கண் பொழிநீர் பாய்ந்து பரந்தது.
2200.
பலமுறையும் பணிந்தெழுந்தார் வெளியே வந்தார்
வணங்கும் திருத்தொண்டருடன் தங்கியிருந்தார்
அந்நாட்களில்
ஒப்பிலாத நெடிய நீரையுடைய கங்கை அமைவதற்கு இடமான முடியில்
பிறைச்சந்திரன் சூடிய இறைவரது
பெரும்புலியூர் முதலான பதிகளில் போய் துதித்தார்
குலவும் தமிழ்ப்பதிகம் புனைந்து மீண்டும்
பெருகும் ஆசையுடன் திருவையாறு வந்து அங்கிருக்கும் நாளில்-
2201.
மேற்குத் திசை போவதற்கு விடை பெறக் கும்பிட்டு
திருவருள் குறிப்பு பெற்று செல்கின்றார்
மேலை வழியில்
“திருநெய்த்தானம்” என்ற பதி அடைந்து
அடையும் மனம் பொருந்த வணங்கினார்
அருந்தமிழ் மாலைகள் பாடினார்
அங்கிருந்து பக்களில் வளரும் கரும்புடன் பாக்கு நெருங்கியுள்ள
திருமழபாடியை வணங்கச் சென்றார்.
2202.
சிவந்த கையில் மான்கன்று ஏந்திய இறைவரின்
திருமழபாடியின் புறம் சேரச் சென்று
“அங்கையார் அழல்” எனும் திருப்பதிகம் தொடங்கி நெருங்கிய போது
“உமை ஒரு பாகம் வாழ்கின்ற இறைவர் வீற்றிருக்கும் மழபாடியை
தலையினால் வணங்குகிறவர்கள்
மென்மேலும் பொங்குவது போன்ற தவம் பெற்றவர்கள்”
எனப்பாடினார் தொழுதார் தொழுதபடியே கோவில் புகுந்தார்.
2203.
மழபாடி எனும் தலத்தில்
அழகிய வைரமணித் தூண்நாதர் விரும்பி அமர்ந்து மகிழும் கோவிலை
வலமாகச் சுற்றி வந்து சேர்ந்தார்
செழுமையான மணம் வீசும்
தாமரைமலர் போன்ற சேவடியின் கீழ் வீழ்ந்தார்
தாழ்ந்தார் எழுந்தார் நின்றார் தொழுதார் ஆடினார் பாடினார்
நல்லசொல் மாலைத் தொகை பாடித் துதித்து வெளியே வந்தார்
ஒழியாத நேசமுடன் தன்னை உடையவரைக் கும்பிட்டார்
அத்தலத்தில் தங்கியிருந்தார் சிலநாட்கள்.
(“ களையும் வல்வினை” எனத் தொடங்கும் பதிகம்
இங்கு பாடியருளினார்)
2204.
மழபாடியின் பக்கத்தைக் கடந்துபோய்
அருளால்
திருக்கானூர் பணிந்து போற்றி –
நிறைந்த ஆதிசைவரின் “அன்பிலாலந்துறை”யின்
இறைவரைப் பணிந்து தொழுது போற்றினார்
சிவபெருமானின் பலபதிகளும் வணங்கி செந்தமிழ்பாடி
சடைமுடியார் பல பதிகளும் பாடி
மதமான அருவி பாயும்
மலை போன்ற யானை உரித்த இறைவரின்
வடகரை மாந்துறை அடைந்தார்
அழகிய நூல் அணிந்த மார்பர்.
2205.
சென்றார் திருமாந்துறையில் திகழ்ந்து வீற்றிருக்கும்
கங்கை நதி சடையில் உடைய சிவனார் தம் கோவிலுக்கு.
திருமுற்றத்தில் பணிந்தார் அழகிய நெடுமாளிகையை வலம் செய்தார்
உள் புகுந்தார் திருமுன்பு தாழ்ந்தார்
நெருக்கமான கதிர்களுடைய ஞாயிறும் சந்திரனும் தேவமருத்துவர்களும்
தொழுது வழிபட இறைவர் எழுந்தருளிய நிலை பாராட்டினார்.
நிறை தமிழின் சொல்மாலைத் திருப்பதிகம்
நிகழுமாறு பாடினார் திருஞானசம்பந்தர்.
(“செம்பொன்னார்க்கு” எனத் தொடங்கும் திருப்பதிகம்
திருமாந்துறையில் அருளினார்)
2206.
அவ்விதமாக அங்கிருந்து நீங்கிப்போய்
அங்கத்தில் கண் உடைய சிவனாரின் பிறபதிகளும்
சென்றார் போற்றினார்
செந்தாமரைக் கட்டு அவிழுமாறு
சேல் மீன்கள் பாயும் அதனால்
தேன் பொழிந்து
சேறு உலராத வயல்களையுடைய
பொங்கும் ஒலி நீரையுடைய மழநாட்டில்
பொன்னி நதியின் வடகரை வழியேபோய் –
புகலி வேந்தர் தொழச் சென்றார் திருப்பாச்சிலாச்சிராமம்.
-இறையருளால்
தொடரும்.
pa_sathiyamohan@yahoo.co.in
- நான் கண்ட சிஷெல்ஸ் – 13. சிஷெல்சில் பெண்கள் வாழ்க்கை
- அடுத்த திண்ணை வெளியீடு மார்ச் 17 அன்று வெளிவரும்
- வருந்துகிறேன்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம்
- கடிதம்
- திரும்பவும் திண்ணையில் அமரும் துணிவு பெறுகிறேன்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம்
- அம்பேத்கரின் மதம் குறித்த சிந்தனைகள்
- பெண் எழுத்துக்கள் ஆண்களைச் சாடுவதற்கு நியாயங்கள் குறைவுதான் : மொழிபெயர்ப்பாளர் மீனாட்சி புரியுடன் சந்திப்பு
- தாவோ வாழ்வியல் (மூலம் : திரேக் லின்)
- சாரங்கா குண சீலனின் பரதநாட்டிய அரங்கேற்றம்
- விருதுகளும், விவாதங்களும்,கருத்துச் சுதந்திரமும்
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் – 5
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி 5.)
- உண்மையின் ஊர்வலங்கள் (3)
- ஐன்ஸ்டைன் புவியீர்ப்பு ஆயும் விண்ணுளவி, நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் நியதிகள் -2 [100 Years of Einstein ‘s Theories
- பெரியபுராணம் – 79 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- தோழன் புஸ்பராஜாவுக்கு
- வாழ்க்கை
- தேய்பிறைக் கோலம்!
- நிலவுகள் எப்போதும் கறுப்பு
- நாணல்
- இ.பா. எனும் கல் விழுந்த குளமாகிறது என் மனம்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஐந்து: நல்லூர்க் கோட்டையும் மதில்களும்!
- புலம் பெயர் வாழ்வு (3)
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 11