பா. சத்தியமோகன்
திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
— பா. சத்தியமோகன்
2083.
மிகப்பழமையுடையவரான ஆதியாரான
சிவபெருமான் உறைகின்ற
திருவரத்துறை நோக்கியே
காதலால் செல்கின்றவராகி விரைவாய்ச் செல்ல
தந்தையாரும் வருந்துமாறு
சம்பந்தனாரின் பாத தாமரைகளும் நொந்தன சிறிது.
2084.
வேதங்கள் அனைத்தும் ஒருவடிவு ஆனது போன்று
நிறையும் பிறைச்சந்திரன் போன்று
நீண்ட மண்ணுலகில் சேர்ந்த பிள்ளை
தொழுவதற்காக விரைந்து சென்றார்
நீர்த்துறைகளில் அலை வீசும் கங்கை சூடும்
திருவரத்துறை வீற்ற இறைவரை வணங்குவதற்காக.
2085.
பாசம் சிறிதும் அற்றவர் எனினும்
உலகில் ஆசையை சங்கரர் மீது கொண்டதால்
சிவதேசு மிக்க திருவுருவான சம்பந்தர்
ஈசனைத் தொழுதார் தொழுதார்
பிறகு ஏகினார்.
2086.
வைதிக குல மாமணியான சம்பந்தர்
சிந்தையில் ஊறும் அமுதமாம்
செஞ்சடை சிவனார் திருவடி தாழ்ந்து
தொழுது ஏகினார்
இந்த
பெரிய உலகமான மாநிலத்தின் இருள் நீங்க.
2087.
மாறன்பாடி எனும் ஊரில் வந்து சேர
வழி நடந்து வந்த உடல் வருத்தத்தால்
சுற்றிலும் வரும் பரிவாரம் உள்ளிட்டோர் களைப்படைய
உய்வித்துக் காப்பாற்றும் ஐந்தெழுத்தை உச்சரித்தபடி அங்குசேர-
2088.
உலகம் உய்வதற்கு வந்த ஞானசம்பந்தருடன் வந்தவர்களுக்கு
தன் வெம்மையினால் உண்டான
இளைப்பும் களைப்பும் பார்த்து அஞ்சியவன் போல
தன் ஆயிரம் கைகளும் உள்வாங்கி இழுத்து மறைத்துக் கொண்டு
மறைந்து போனான் கதிரவன் மேலைக்கடலில்.
2089.
அந்தநாள் இரவில்
அந்த இடத்தில்
தம்மைச் சூழ்ந்த தொண்டர்கள் போற்ற
காளையூர்தி உடைய சிவபெருமானின் திருவடிகளையே பேணுகின்ற
ஞானசம்பந்தப் பிள்ளையார்
மகத்தான தவம் புரிவாருடன் தங்கியிருந்தார்.
2090.
இந்நிலையில் அழகுமிக்க சீகாழித் தலைவரின் வழி வருத்ததைப் போக்க
அன்னப்பறவைகள் ஆடும் துறை கொண்ட திருவரத்துறையில்
கங்கை ஆற்றை சென்னியில் கொண்ட தலைவர்
திருவுளம் செய்தனர்.
(சென்னி-தலை)
2091.
ஏறிச் செல்வதற்கு சிவிகை
மேலே கவிழ்த்துக் கொள்வதற்கென குடை
மெய்ப்புகழை ஊதும் அழகிய பொன்சின்னங்கள்
யாவும் முத்துக்கள் பதித்த சிறப்புடன்
திருநீற்றை விரும்பும் அரத்துறை இறைவர் அருள்வாராகி-
2092.
நீண்ட வாழ்வுடைய தலமான திருநெல்வாயிலின்
மாளிகைகள் மிகப்பெரிய இல்லங்கள்தோறும்
வேதியர்களுக்கு அன்றிரவு கனவில்
பெருமையுடைய வேதங்கள் தேடும்
செவ்விய திருவடிகள் தோன்றுமாறு அவர் முன் சென்று-
2093.
“ஞானசம்பந்தன் நம்பால் வருகின்றான்
அரிய கலைகள் யாவுக்கும் தலைவன் அவனிடம்
பெரிய முத்துச் சிவிகையும் அழகிய குடையும்
ஆகிய சின்னங்களை
நம்மிடம் பெற்றுக்கொண்டு போய்க் கொடுங்கள்” என உரைக்க-
(சிவிகை- பல்லக்கு)
2094.
அந்தணர்கள் உரைத்த அப்பொழுதில் ஒன்றாகக் கூடினர்
தாம் கண்ட கனவைச் சொல்லி மகிழ்ந்தனர்
அற்புதம் உற்ற சிந்தையுடன்
செழிப்பான நீர் பொருந்திய திருவரத்துறையில்
பிறை சூடிய சடை கொண்ட
பெம்மானின் கோயில் வந்தனர்.
2095.
அங்கு-
முன்பு சொன்ன இறை அருள்
அக்கோவிலில் உள்ள அடியார்களுக்கும் உண்டாயிருக்க
“ஈங்கு இதென்ன அதிசயம்” எனக்கூறி
வந்து கூடிய மறையவர்களுக்குத்
தாங்கள் முதலில் கூறினர்.
2096.
மிகப்பெரும் வியப்பு அடைந்தனர்
அத்தன்மை அடையும்போது
திருப்பள்ளி எழுச்சிக்குரிய காலம் வந்தது
அன்பு வழிப்பட்ட காதலுடன் சீலம் மிக்க அவர்கள்
கோவிலின் திருக்காப்பு( கதவு) நீக்கினர்.
2097.
சந்திரன் போன்ற தன்மையுடன்
செழுந்திரள் முத்துக்கள் இழைத்த பெரிய வெண்குடை
தூய பல்லக்கு
பொங்குமாறு ஊதும் ஒப்பிலாத சின்னங்கள்
ஆகியவற்றைக் கண்டனர் —
அங்கத்தில் கண்கொண்ட இறைவரின் அருளால்.
2098.
அவற்றைக் கண்டபிறகு
அவர்கள்
தம்கைகள் தலை மேல் குவித்து
“இவை எட்டுதிக்குகளுக்கும் விளக்கு ஆகும்” எனக்கூறி
தொண்டர்களுடன் சூழ்ந்து வணங்கி
தேவர் உலகமும் அறியும்படி
ஆரவாரம் செய்தனர்.
2099.
சங்கு, துந்துபி, தாரை, பேரி முதலிய வாத்தியங்களின்
பொங்கும் நாதம்
பொலிவு பெற்று எழுமாறு செய்து
அங்கத்தில் கண் உள்ள இறைவரின் அருளால்
பல்லக்கு , குடை ,சின்னங்கள் ஆகியவற்றை
பொங்கி எழும் காதலுடன் எதிர்கொள்ளப் போவாராய்-
2100.
மாசு படியாத வாய்மை மிகு திருநெல்வாயில் அந்தணர்கள்
குற்றமற்ற பெருமையுடைய சீகாழி ஆண்ட பிள்ளையார்க்கு
ஒளிமிகு சிவிகை முதலியவற்றை
இறைவரின் இன்னருளால் தாங்கிச் சென்றனர்.
2101.
இந்த அந்தணர்கள் இப்படியாகச் சென்றனர்
அங்கு
சண்பை நாதரான சீகாழித் தலைவருக்கும்
அவ்விரவே
நல்லமுத்துக்கள் பதித்த பல்லக்கு முதலியவற்றை
கொண்டு செல்லும்படி முன் உணர்த்தினார் இறைவர்.
2102.
சேற்றையுடைய நீர்வளம் சூழ்கின்ற திருவரத்துறையில்
எழுந்தருளிய வள்ளலாரான நாம்
மகிழ்ந்தளிக்கும் இந்தச் சிவிகை முதலியன —
ஏற்றுக்கொண்டு உய்ப்பதற்கு ஏற்றவை
ஏற்று உய்ப்பாயாக என அருளினார்
அவ்வருள் அறிந்து உணர்ந்தபின் –
2103.
சண்பை என்ற சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர்
தாம் கனவில் கண்ட
மெய்யருளின் தன்மையைத்
தந்தையருக்கும்
தம்முடன் இருந்த தொண்டர்களுக்கும் கூறி அருளினார்
திருவருளைத் தொழுவதற்கு முன் மூடியிருந்த இருள்
இப்போது நீங்கியது
வானம் வெளிப்படுமாறு.
2104.
மாலை முடிந்து
யாமம் முடிந்து
வைகறை புலர்வதற்குமுன்
செய்யத்தக்க கடன்கள் முடித்து
வெண்மையான திருநீறு அணிந்த சிவன் கோலமான
அழகிய திருமேனியராகி
கைம்மலர்களை தலைமேல் குவித்து
திருஐந்தெழுத்தை ஓதி எழுந்தருளினார் சம்பந்தர்
2105.
போத ஞானம் பெற்ற புகலி (சீகாழி) புனிதர்
குளிர்ந்த முத்துச் சிவிகை மீது ஏற்றியதும்
காதல் செய்பவன்போல
கரிய கடல்மீது
தன் தேரில் ஏறி வந்தான் சூரியன்.
2106.
அச்சமயத்தில் அர!அர எனும் ஆர்ப்பரிப்புடன்
தூய முத்து பதித்த சிவிகை,
சுடரும் குடை
பொருந்திய சின்னங்கள் ஆகியன தாங்கி
மெய்யன்பர்களோடு அந்தணர்களும்
ஞானசம்பந்தப் பிள்ளையார் எதிரே தோன்றினர்.
2107.
மணம்மிக்க பொழில்களையுடைய
சீகாழித் தலைவரின் திருமுன்பு நின்று
அழிவற்ற சிறப்புடைய திருவரத்துறை இறைவர் அளித்தருளிய
பேரரருள் (வடிவான பொருட்களை)
எதிரில் வந்த அந்தணர்களும் மெய்யன்பர்களும்
“ஏற்பீர்” என்றனர்.
2108.
இவ்வாறு
தங்களுக்கு ஈசர் அருள் செய்ததை
ஒன்றுவிடாமல் உரைத்தனர் ஞானசம்பந்தரிடம்.
“இவ்விதம் நின்று நாம் தொழுமாறு நேரக்காரணம்
திருவம்பலத்தில் நின்றாடுபவரின் அருளே”
என்று வணங்கினார் சம்பந்தர்.
2109.
மெய்மையைப் போற்றி
சிறிதும் விட்டுவிடாத விருப்பத்தினால்
தம்மையே நினைப்பவர்க்கு பரிசு தந்து ஆள்பவர்
செம்மையான முத்துச் சிவிகையின் சிறப்பை அளித்தல்
எம்மை ஆண்டு உவக்கும் இறைத்தன்மை இதுவன்றோ.
2110.
“எந்தை ஈசன்” எனும் திருப்பதிகம் தொடங்கி எடுத்து
இந்த அருள் வந்த வழி எவ்வண்ணமோ! எனச்
சிந்தை செய்யும் திருப்பதிகத்தை
இசையுடன் கலந்து
புத்தி நிறைந்து கொள்ளப் புகன்றார்
எதிர் நின்று போற்றினார்.
2111.
பொடி அணிந்த புராணன்
திருவரத்துறை இறைவனின் திருவருளே இதுவாம் என
ஒப்பற்ற சொல் மாலைகள் பாடியே
நீள வணங்கினார் போற்றினார்
திருப்பதிகம் நிறைவு செய்தார்.
2112.
சோதி ஒளி வீசும் முத்து பதித்த சிவிகையினை
வலமாக சூழ்ந்து வந்து
நிலம் மீது தாழ்ந்து விழுந்து வணங்கி
அதன் வெண்ணீற்று ஒளியைப் போற்றி நின்றார்
ஆதியாராகிய இறைவர் அருள் ஆதலால்
அஞ்செழுத்து ஓதி
அதில் ஏறியருளினார் உலகெலாம் உய்ய.
2113.
தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்
வேதங்கள் ஆர்பரித்தன
பழமையுடைய தேவர்கள் ஆர்பரித்தனர்.
உலகம் ஆர்த்தெழுமாறு மேகங்கள் முழங்கின
முழவு வாத்தியங்கள் ஒலித்தன
மலர் மழை பெய்து ஆர்பரித்தது வானம்.
-இறையருளால் தொடரும்
—-
pa_sathiyamohan@yahoo.co.in
- பெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )
- கடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2
- கடிதம்- ஆங்கிலம்
- ஹெச்.ஜி.ரசூல் அவர்கலின் “வஹாபிசம்—- ‘ கட்டுரை மற்றும் விளக்கம் குறித்து
- நீங்க எப்படிங்க ? கொஞ்சம் சொல்லுங்க
- புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு
- Looking for Comedy in the Muslim World – திரைப்படம்
- தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள்
- மெட்டாபிக்சனின் ஆழ அகலங்கள்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 10. சேவை அமைப்புகள்
- விண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]
- கவிதைகள்
- இப்போதாவது புரிகிறதா
- முற்றும் இழத்தல்
- கீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)
- மனிதம்
- அய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும்
- சொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…
- மண்டைக்காடும் இந்து எழுச்சியும்
- பாலாற்றில் இனி கானல் நீர்தானா ?
- இளந்தலைமுறைக்குத் தலை வணக்கம்
- குருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்
- தர்கா பண்பாட்டு அரசியல்
- எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்!
- ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து….!
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- விடுமுறையின் முதல் நாள்
- ப லா த் கா ர ம் ( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )