பெரியபுராணம் – 72 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்

This entry is part [part not set] of 4 in the series 20060101_Issue

பா.சத்தியமோகன்


1959.

தனது மெய் மீது கண்ணீர்த்துளிகள் வீழ

எல்லா இடங்களிலும் பார்த்து அழுவார்

தன் மேலை நிலைமைச் சார்பு உணர்ந்தோ

அப்போது சார்ந்திருந்த பிள்ளைமை சார்பாலோ

அம்மே!அப்பா! என்றழைத்து அழுது அருளினார்

செம்மேனியில் வெண்ணீறுடைய

சிவபெருமான் எழுந்தருளிய திருத்தோணி சிகரம் பார்த்து.

1960.

அப்போது திருத்தோணியில் வீற்றிருக்கும்

சிவபெருமான் அருள் பார்வையால்

முன்னை நிலைமைத் திருத்தொண்டு நினைத்து

அவருக்கு அருள் புரிவதற்காக சிவபெருமான்

பொன்மலை வல்லியான சிவகாமி அம்மையுடன்

போர்க்காளை மீது எழுந்தருளி

தலையில் இளம்பிறை திகழ அப்பொய்கையின்

பக்கத்தில் சேர்ந்தருளினார்.

1961.

வேத நூல் வல்ல அந்தணரான சிவபாத இருதயருக்கும்

அவர்தம் மனைவியரான பகவதியாருக்கும்

தாம் கொடுத்த வரத்தை நிறைவு செய்ய எண்ணியது போல

தம் திருவடிகளையே போற்றும் நெறியில் நிற்பதினால்

வருகின்ற ஞானத்தைக் கொடுப்பதற்காக

தம்முடன் இருந்த அருமறை ஆளும் ஞானமுதல்வியை

அளித்தருளுமாறு அருள் செய்தார்.

1962.

அழுகின்ற பிள்ளையாரை நோக்கி

அருட்கருணை எழும் திரு உள்ளம் கொண்ட சிவபெருமான்

எவ்வுலகும் தொழுகின்ற மலைக்கொடி போன்ற

நாயகியைப் பார்த்து அருளி

இருதிரு முலைகளும் பொழிகின்ற பாலைப்

பொற்கிண்ணத்தில் இப்பிள்ளைக்கு ஊட்டுக என இயம்பினார்.

1963.

சிவபெருமான் கூறி அருளியதும்

வேதங்களும் ஏழு உலகங்களும் ஈன்று அருளி

அனைத்தினுக்கும் மூல காரணமாய்

வளம் பெருகும் கருணையே

தம் திருவடிவாகக்கொண்ட பெரியநாயகி அம்மையார்

பிள்ளையார் அருகில் போய் திருமுலைப்பால்

பொற்கிண்ணத்தில் கறந்து அருளி-

1964.

நினைப்பதற்கும் அரிதான சிவஞானம் எனும் இனிய அமுதத்தைப்

பாலுடனே குழைத்தருளித்

தம்மை எதிர்நோக்கும் பிள்ளையாரின் கண்மலர் நீர் துடைத்தருளி

கையில் பொற்கிண்ணம் அளித்து

பெருமையுடைய அண்ணலே அங்கு அழுகை தீர்த்து

பாலமுதம் உண்க என அருள் செய்தார் சிவபெருமான்.

1965.

யாவருக்கும் தந்தை தாய் எனும் அம்மை அப்பர்

இப்படி வெளிப்பட்டு அளித்தமையாலும்

அகில தேவரும் முனிவரும் தெரிய இயலாத அரிய பொருளான

ஒப்பிலாத சிவத்தை உணரும் சம்பந்தம்

உடையவர் என்ற காரணத்தினாலும்

ஆளுடைய பிள்ளையார்

திருஞானசம்பந்தர் எனும் திருப்பெயர் உடையவர் ஆனார்.

1966.

சிவபெருமான் திருவடியே சிந்திக்கும் செம்மை மிகு சிவஞானம்

பிறப்பும் இறப்பும் நீக்கும் பாங்கினில் ஓங்கிய ஞானம்

உவமை கூற முடியா கலைஞானம்

உணர்வதற்கு அரிய மெய்ஞ்ஞானம் என அந்நிலையில்

யாவும் உணர்ந்தார் தவமுதல்வர் சம்பந்தர்.

1967.

எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும்

அப்பொருளாவதும் ஆள்வதும் அவரது அடியார்கள்தாம் எனும் அறிவும்

இது தவிர தம் தம் அறிவுக்கு ஏற்றவாறு எண்ணி

இசைவு கொள்கின்ற தூய்மையற்றவர் துணிவுகளை

துகள் துகளாகுமாறு நினைத்து எழுந்தார் ஞானசமபந்தர்.

1968.

சிறப்புடைய சிவபாத இருதயரும் சிறிது நேரத்தில்

நீருள் பொருந்தித் தாம் செய்யும் நியமங்கள் முடித்துக் கரையேறி

பேருணர்வுடன் பொலிகின்ற பிள்ளையார் தம்மை நோக்கி

யார் அளித்த பாலை உண்டாய் நீ எனச் சினந்து-

1969.

எச்சில் உண்டாக உனக்கு இதை அளித்தவர் யார் காட்டு என்று

ஒரு கோலால் அடிப்பவரைப் போல் ஓங்கியதும்

அச்சிறு பெருந்தகையார் ஒரு கால் எடுத்து நின்று

கண்களில் ஆனந்தக் கண்துளி பெய்து

உச்சிமேல் திருக்கையின் ஒரு விரல் சுட்டிக்காட்டி –

1970.

வானத்தில் நிறைந்த பெருகும் ஒளியால் விளங்கும் காளைமீது

பண் நிறைந்த அருமறைகள் வணங்கித் துதிக்க

உமாதேவியுடன்

எண்ணவியலாக் கருணையால் நின்ற திருத்தோணிப்புரத்தாரை

உள்ளே நிறைந்து தேக்கி மேல் எழுந்து

பொழிந்த உயர் ஞானத் திருமொழியால் —

1971.

எல்லையிலா வேதங்களின் முதல் எழுத்தை

மெய்யுடன் தொடங்கி எழுதும் முறையை வளம் வாய்ந்த நெடுந்தமிழால்

இவ்வுலகிலுள்ளவர்கள் பயனும் இன்பமும் அடைய

தம் திருப்பாடல் இறைவரிடம் செல்கின்ற வகையைப் பெறுவதற்கு

திருச்செவியைச் சிறப்பித்து-

1972.

செம்மை பொருந்தும்படி தொடங்கி “தோடுடைய செவியன்” எனும்

மெய்ம் மொழியான திருப்பதிகத்தை

பிரமபுரத்தில் மேவிய சிவபெருமானை அடையாளங்களுடன் சொல்லி

எம்மை இது செய்தவன் இறைவனே என

இசைத்தார் தந்தையிடம்.

(ஞானசம்பந்தர் பாடிய பதிகத்தின் தொடக்கம் “தோடுடைய” )

1973.

மண்ணுலகில் வாழ்கிறவர்கள் பிழை செய்தாலும்

அவர்கள் தம்மை வந்து அடைந்தால்

நெற்றிக் கண்ணனாகிய சிவபெருமான்

பெருங்கருணை கைக்கொள்வார் எனக்காட்ட

நல்லுணர்விலா வல் அரக்கன் இராவணன்

திருக்கயிலை மலை எடுத்து முறிவுபட்டான் – பிறகு

இசை பாடவே இறைவர் அவனுக்கும் அருள் புரிந்த

ஆக்கப்பாடுகளை அந்தத் திருப்பதிகத்துள் செய்தார்.

1974.

தொழுவார்க்கே அருள்வார் சிவபெருமான் எனத் தெரிந்து

தொழாமல் தவறு கொண்ட மனத்தால்

மயக்கம் கொண்ட திருமாலும் நான்முகனும்

இழிந்த பன்றியும் அன்னப்பறவையுமாக

இறைவனை எய்தாமல் விழுகிறவர்கள் —

திருஐந்தெழுத்தைத் துதித்து உய்ந்த இயல்பை

விரிவாய் எடுத்துரைத்தார்.

1975.

வேதங்களின் காரணரான

வெண்மையான பிறை சேர்ந்த சிவந்த சடையுடைய

சிவபிரானது நெறி அறிந்து உய்யாதவர்கள்

போதம் இல்லாத சமணர்களும் புத்தர்களும் ஆன

இவர்களின் நெறிகள் பழியை விளைவிக்கும் கேடுகளே

என மொழிந்தார் எம்பெருமான் சம்பந்தர்.

1976.

திருப்பதிகம் நிறைவாகப்பாடி

திருக்கடைக்காப்பும் சாத்தி

வேதமொழியுடைய பிள்ளை(யார்) தொழுது நின்றார்

அருட்கருணை நிறைந்த திருவாளனார் சிவனார் அருள் கண்டு

பெருகிய வானத்தில் ஆரவாரித்து

தேனைச் சொரியும் தெய்வமலர்களை மழையாய்ப் பெய்தனர்.

1977.

மங்கலமான வானக துந்துபி முழக்கம்

கந்தர்வர்கள் கின்னரர்கள் ஒலிக்கும் கானஒலி

இந்திரன் முதலாகிய தேவர்கள் எடுத்தேத்தும் இசை

இத்தனை ஒலிகளின் தொகுதியும்

அழிவற்ற பல பூதகண நாதர்கள் முழக்கும்

அர!அர! எனும் ஓசையுள் அடங்கிற்று.

1978.

வேதங்கள் எழுந்து கிளர்ந்து ஒலி வளர்ந்து முழங்கின

வானோரின் நிறைந்த முடிகள்

ஒன்றுடன் ஒன்று மோதி மணிகள் சிந்தின

வானத்திலிருந்து பனி நீர்த்துளி போல!

அவை உலகில் எங்கும் நிறைந்தன

இடையறாத மெய்மை பொறுமை பொறுமை சாந்தம் உள்ள

முனிவரெனும் கூட்டம்

கடல் போல பக்கங்களிலெல்லாம் சூழ —

1979.

தம்மை வந்து அணைந்து கொள்ளும் அறிவு தொடங்கிய

அடியார்களிடமிருந்து பிறவி பெருகும் கடல்கள் நீங்குமாறு

அருள்கின்ற கழல்களும் கருணையும் உடைய திருத்தோணியப்பர்

போர் செய்யும் காளை மீது தம் துணையோடு அருளினார்

வேதங்கள் தொடர்கின்ற பெரும் தோணியில்.

1980.

அண்ணலாகிய சிவபெருமான் எழுந்தருளியது கண்டு

அப்பெருமானைத் தொடர்ந்து செல்ல அன்பாலே முயன்று

பொய்கைக் கரையில் நின்ற வேதத்தில்

சிறு யானை போன்ற சம்பந்தர்

கண்களின் வழியாகச் சென்ற கருத்து கவ்விக் கொள்ள

புண்ணியரான சிவபெருமான் சேர்ந்த

திருத்தோணி கோவிலின் உட்புகுந்தார்.

1981.

இறுதி இல்லாத பெரும்தவம் செய்து

இவருடைய தந்தை எனக்கூறும்

நிலை பெற்ற சிவபாத இருதயர் —

அடிக்க ஓங்கிய சிறு கோல் நழுவ விட்டார்

மலர்க்கை குவித்தார் மகிழ்ந்தாடினார்

வெருட்சி வியப்பு வெறுப்பு எனப்படும் வேறு விளைவுடன் கூடியவராகி

தம் பிள்ளை கூறும்

அருந்தமிழின் பொருளான குறிப்பை உணர்வார் ஆனார்.

1982.

சிவபாத இருதயர் சிவபெருமானைக் காணவில்லையெனினும்

நிகழ்ந்த அடையாளக் குறிகள் கண்டார்

திருப்பதிகத் தமிழ்பாடும் ஆற்றல் கண்டார்

இது தோணிபுரத்து இறைவன் அருளே எனத் துணிந்து

ஆர்வம் பேணும் மனதோடு மகனைத் தொடர்ந்து பின் சென்றார்.

1983.

அப்பொழுது அங்கு நிகழ்ந்ததை கண்டவர்களும்

முப்புரிநூல் அணிந்த வேதியரும்

உரோம முகிழ்ப்பெய்தி இது

இப்படி ஒப்பிலாத அற்புதம் எங்கு நிகழ்ந்திருக்கிறது>

என்று திருத்தோணி கோயிலின் வாயில்புறத்தில் வந்து சூழ்ந்து கொள்ள-

1984.

இங்கு எனை ஆளும் பெருமான்

உமையோடு எழுந்தருளியினோன் எனும் கருத்துக் கொண்ட

பதிகம் புகன்றார் ஞான அமுது உண்ட பிள்ளையார்

பொங்கும் ஒளியுடன் கூடிய காளையூர்தியில்

அழகிய பொன் தோணியில் எழுந்தருளிய

பெரும் திரு வாழ்வைப் போய்க் கூடிய பிள்ளையார்.

1985.

மறைகள் ஓதும் வேதியர் பலரும் காணும்படியாக

இன்னிசை ஏழும் கலந்த செழுந்தமிழ் பதிகங்களை

ஈசருக்கே என சொல் முறையாக சிவனருள் பெற்றுப்

பாடுகின்ற திருத்தொண்டரான பிள்ளையார்

அடிமைத் திறமும் அருளும் பெற்ற பிணைப்புடன் பாடினார் —

ஞான அமுதம் கமழும் திருவாயை உடைய ஞானசம்பந்தர்.

1986.

ஒளி பொருந்திய சந்திரனை விட சிறந்து விளங்கும் சடையுடைய

சிவபெருமானின் தொண்டர்களும்

வாழ்வடையும் திருத்தோணி புரத்தில் உள்ளவர்களும்

நீண்ட நிலைகளுடன் விளங்கும் கோவில் வாசல் அடைந்து

துதிக்கத் தொடங்கினர் திருவருள் பெற்ற ஞானப்பிள்ளையாரை.

1987.

சீகாழியில் உள்ளவர் செய்த தவமே

கவுணியரின் செல்வமே

கலைஞானம் நிறைந்த ஆழ்கடலே

அக்கடலின் அமுதே

அடியார் கண்டு வாழ இம்மண்மிசை வந்தீர்

வானவரின் ஒப்பற்ற தலைவரான சிவபெருமானும்

ஏழிசை மொழியாளாகிய உமையும்

திருவருள் புரியப் பெற்றீர்! என வாழ்த்தினர்.

1988.

மறை(வேதம்) வளர்க்கும் செல்வமே

வைதிக நெறியின் நிலையே

வளர் ஞானம் எனும் கருக்கொண்ட மேகமே

புகலி எனும் நகரத்தவரின் புகலிடமே

அலை மோதும் காவிரித்துறையில் பெறத்தக்க மணியே

சுருதிகளில் விளங்கும் ஒளியேயான இறைவனே வெளியில் வந்து

உமையாளுடன் அருள்தரப் பெற்றீர் என வாழ்த்தினார்.

1989.

புண்ணியங்களின் முதலே

மணி புனைந்து அரைஞாணுடன் போந்து காட்சிதரும்

கண் நிறைந்த கதிரே!

கலைகள் வளரும் சந்திரனே

அழகு மேவும் பண்களுக்கு இயல்கதியே

பருவம் மூன்றாண்டில்

தியானத்திற்கெல்லாம் பொருளாய் நின்ற சிவபெருமான்

அருள் பெற்றீர் என்பார் சிலர்.

( திருவருளால் தொடரும் )

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்