பெரியபுராணம் – 63 -29. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

பா சத்தியமோகன்


1705.

மாமரமும்

நெருங்கிய குலைகளையுடைய தென்னையும்

சூழ்ந்த கமுகு மரங்களும் பலாமரங்களும்

சுற்றுப்புற பனைகளையுடையதாகி

வீதிதோறும் திருநீற்றின் ஒளி பெருக விளங்கும் ஊர் திருமிழலை.

வேத நீதியிலிருந்து வழுவாத நல்லொழுக்கத்துடன்

வாழும் குடிமக்களின் பெருமையால்

பெரியவுலகில் விளங்கும் மிழலை நாட்டில்

பெருமிழலை எனும் ஊர் பழைமையுடையது.

1706.

அத்தகைய தொன்மையுடைய நகரில்

குறுநில மன்னரான மிழலைக் குறும்பர்

தலையில் பிறை சூடிய இறைவரின் அடியார்க்குரிய பணிவிடைகள்

இப்படிப்பட்டவை என்று அவர்கள் சொல்லும் முன்பே

எதிர் கொண்டு உணர்ந்து செய்பவராக

முதிர்ந்த அறிவுபெற்ற பயனை அடைவராக இருந்தார்.

1707.

சிவத்தொண்டர்கள் பலரும் வந்துகூடி

உண்ண உண்ணத் தொலையாதபடி உணவு உண்பிப்பார்

எடுத்துக் கொண்டு செல்ல

செல்வங்களை முகந்து கொடுத்து

தன்னை சிறியவராய் வைத்து நடந்து கொள்வார்

வண்டுகள் மருவும் கூந்தலுடைய உமைக்கு

கணவரின் சிவந்த திருவடித் தாமரைகளை

தன் நெஞ்சத்தாமரையில் வைத்துப் போற்றும் இயல்புடையவர்.

1708.

இத்தன்மை உடையவராக விளங்கும் நாளில்

அளவில்லாத அவரது திருத்தொண்டின் திறத்தை உலகம் அறிய

அடியவரின் உள்ளத்துள் நீங்காமல் விளங்கும்

திருத்தொண்டப் தொகைப் பதிகத்தை விதிப்படி வணக்கம் செய்து

அதனைப்பாடி

நம்பியாகிய சுந்தரரை வணங்கி

சிவபெருமானின் அருள் கூடியதால்

அவரது திருவடிகளை நினைக்கும் செயலில் சிறந்து விளங்கினார்.

1709.

மைபூசப் பெற்ற பெரிய கண்களுடைய

பரவையாரின் மணவாளனாகிய சுந்தரரின் மலர்க்கழல்களை

கையால் தொழுது வாயினால் வாழ்த்தி

மனதால் துதிக்கும் கட(மை)ப்பாட்டில்

திருமகள் கணவன் திருமாலும் நான்முகனும் அறிய இயலாச்

செம்பொன் திருவடிகள் கீழ்

உய்யுமாறு சேர்வதற்கு உற்றநெறி இதுவே என்று

அன்பு செலுத்தி வருவாரானார்.

1710.

நாள்தோறும் நம்பி ஆரூரராகிய சுந்தரரின் திருநாமம் கூறியவராகவே

அணிமா முதலான எண்வகை சித்திகளும்

அவர் ஆளுகைக்கு உட்பட்டது

மூள்கின்ற காதல் மென்மேலும் பெருகி

முதல்வர் நாமம் அஞ்செழுத்து மட்டுமே சுற்றமும் பொருளும் உணர்வுமாகும் என்கின்ற
தன்மை வாய்க்கப் பெற்றார்.

1711.

இவ்விதமாக இவர் ஒழுகி வர

காளைக்கொடியை உயர்த்திய சிவபெருமான்

தனது பொன் போன்ற இனிய அடிகள்

மண்ணின் மேல் பொருந்துமாறு நடந்து வந்து வழக்காடி

நிலைபெற்ற மூலஓலையை சபை முன்பு காட்டி

ஆட்கொள்ளப்பட்ட வன் தொண்டர்

உச்சி மீது நிலவுதேயும்படி உயர்ந்த மாடங்கள் நிறைந்த

கொடுங்கோளூரைச் சேர்ந்தார்.

1712.

திருவஞ்சைக்களம் என்ற தலத்தில்

நஞ்சை உண்ட இறைவரைத் துதித்தார்

செஞ்சொல் தமிழ்மாலைகளான தேவாரத்திருப்பதிகம் பாடினார்

தேவர்களின் பெருமான் சிவனார் அருளாலே

மேகங்கள் விளங்கும் வடகயிலாய மலையில் சேரும் வாழ்வை

திருமிழலைக் குறும்பனார் நெஞ்சில் தெளிந்து கொண்டார் இங்கிருந்தே.

1713.

மண்ணில் திகழும் திருநாவலூரில் அவதரித்த வன் தொண்டர் (சுந்தரர்)

மற்றவரால் அடைதற்கரிய திருக்கயிலையை

நாளை சென்றடைய

கண்ணில் கருமணி நீங்கிய பின்னும் வாழ்வார் போல்

நான் வாழ்மாட்டேன் என்று எண்ணி

சிவபெருமான் பாதங்கள் இன்றே யோகத்தால் அடைவேன் என்பார்.

1714.

மனம் முதலிய கரணங்கள் நான்கும் ஒன்றாகி

நல்ல அறிவை மேற்கொண்டு

(பிரமநாடி) சுழுமுனை வழியே பிராணவாயு (கருத்து) செலுத்த

கபால நடுவே தாம் பயின்ற நெறியால் எடுத்த

பிரணவ மந்திரமானது பிரம மந்திர வாயிலைத் திறந்தது

மூல முதல்வராகிய இறைவரின் திருப்பாதம் அடைந்தார்

நம்பி ஆரூரர் சேர்வதற்கு முன்னமே.

1715.

பயிலும் தொழிலை மிகச் செறிவுடன் செய்த யோகத்தால்

பரவை நாச்சியாரின் கணவரான சுந்தரரின் பாதங்களை அடைய

கயிலை மலை இறைவரின் திருவடி அடைந்த

திருமிழலைக் குறும்பரின் திருவடிகளை வணங்கி

மயிலை வெல்லும் மகளிரான யாழுடன்

குயில் இசை ஒத்து சொற்கள் ஒலிக்கும்

காரைக்கால் அம்மையாரின் பெருமை இனிச் சொல்வேன்.

(பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் முற்றிற்று )

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்