பா.சத்தியமோகன்
1576.
செங்கண் கொண்ட காளையூர்தி கொண்ட சிவனாரின்
திருவண்ணாமலை தொழுது வலம் வந்தார்
அப்பெரிய மலை மீது ஏறி
தொண்டர்கள் அன்பு கூர்ந்து செய்யும்
அடிமைத் திறத்திற்கு முன் நின்றருளும்
அங்கத்தில் கண் கொண்ட அரசரான சிவபெருமானை வணங்கி
இன்புற்றுத் திளைத்தார்
உலகில் தங்கும் இப்பிறப்பே
உலகை நீங்கிய பிறகு பெறும் வீடுபேற்றுக்கு மேலானது என்ற
அனுபூதி நிலை சாதித்தார்.
1577.
அண்ணாமலை மீது விளங்கும் அழகான மலையை
அடங்காத அன்புடைய அடியவர்கள்
தம் கண்ணால் அனுபவிக்கும் அமுதை
விண்ணோரைக் காக்க பாற்கடலில் வந்தெழுந்த
உண்ணத்தகாத நஞ்சு உண்ட பெருமானைக் கும்பிட்டு உருகும் சிந்தையோடு
பண் நிறைந்த பதிகத் தமிழ் ஆடிப் பணிந்தார்
துதித்தார் திருப்பணிகள் செய்தார்.
1578.
பாம்புகளை அணியாய் அணிந்த சிவபெருமான் பாதம் போற்றி
திருப்பணிகள் செய்து வரும் நாட்களில்
நீலகண்டத்தையுடைய எம்பெருமான்
பூமி மீது மகிழ்ந்து வீற்றிருக்கும் இடமெங்கும்
தணியாத காதலுடன் சென்று வணங்கினார்.
தக்க பணிகள் செய்வார் அழகிய தொண்டைத் திருநாட்டிற்கு
இறை அருள் செலுத்த செல்பவராயினார்.
1579.
அன்பு மிகுந்த பணிகள் செய்யும் கருத்துடன்
காடுகளும் மலைகளும் காட்டாறுகளும் மாஞ்சோலைகளும்
குளிர் நிறைந்த வயல்களுடைய நகரங்கள் பலவும் கடந்து
சொல்லினுக்கு நாதராகிய நாவுக்கரசர் அடைந்து
பெரிய தொண்டை நாடு எய்தினார்.
முன்னதாக குளிர்ந்த மென்மலர் சோலைகள் சூழ்ந்த
திருவோத்தூர் சென்றடைந்தார்.
1580.
சிவந்த சடையுடையவரான
திருவோத்தூரில் வீற்றிருக்கும் தேவர்பிரானாரின் கோவில் புகுந்து
வலமாகச் சுற்றி வந்து
திரு முன்பு இறைஞ்சிப் போற்றினார்.
கண்கள் புனல் பொழிய மூன்று கண்கள் கொண்ட பிரானை
விரும்பிப்பாடும் திருத்தாண்டகங்கள் முதலாக
தக்க மொழிமாலைகள் சாத்தி பாடினார்
சார்ந்து பணிகள் செய்தார்.
1581.
சிவந்த சடையுடைய இறைவரின் திருவோத்தூரை ஏத்திப் போற்றினார்
செழுமையான உலகங்கள் உய்வதற்காக
நஞ்சுண்டு அருளும் பெருமான் உறைகின்ற
தலங்கள் பலவும் வணங்கினார்
உமையம்மையார் தழுவத் திருமேனியை குழைந்து காட்டியபிரான்
வீற்றிருக்கும் தெய்வத்தலம் என்று
வையம் முழுதும் தொழுது புகழ்கின்ற
மதில் சூழ் காஞ்சியின் பக்கம் அடைந்தார்.
1582.
உலகம் உய்யும் பொருட்டாக
திருவதிகைப் பெருமான் தம் பேரரருளினால்
சூலைநோய் தந்து ஆட்கொள்ளப்பட்ட நாவுக்கரசர்
இங்கு எழுந்தருளப் பெற்றோம் என்று
காலையில் பூக்கும் தாமரை போல்
காஞ்சியில் வாழ்வோர் முகமெல்லாம் மிகவும் மலர்ந்தது
தழைத்தது மனமெல்லாம்!
1583.
மாடவீதிகளின் பக்கங்களில் எல்லாம்
அழகான வாயில்கள் எங்கும்
தோரணங்கள் பொருந்தும் வாழைமரங்களுடன்
பாக்குகளும் வரிசையாகக்கட்டி
நிறைகுடம், தீபங்கள், இதழ்கள் பொருந்திய வாசனைப்பந்தல்
ஆடும் கொடிகளுடன் அமைத்து
அழகிய நீண்ட காஞ்சியை அலங்கரித்தனர்.
1584.
இதற்கென மேற்கொண்ட திருக்கோலப் பொலிவுடன் வரவேற்க
சொல்லுக்கரசர் வரும் வழியில்
தொண்டர்களுடன் கூடி எழுந்துபோய்
தேவர்களும் அறிவதற்கு அரிய திருவலகு முதலியன எடுத்துக்கொண்டு
இண்டை மாலை சூடிய சடையுடைய பெருமானார்க்கு
அன்பரான அவரை எதிர்கொண்டார்.
1585.
எதிர்கொண்டு வரவேற்று வணங்கும் அடியவரைத்
தாமும் வணங்கி இறைஞ்சி
மதில் சூழ்ந்த அழகிய காஞ்சிநகரின் திருவீதி புகுந்து
வான்கங்கை குதிக்கும் சடையுடைய
ஏகாம்ப நாதரின் செம்பொற்கோவில் அடைந்தார் —
அதிர்வு கொண்டு ஒலிக்கும் மேகம் போன்ற
நீலமணி போன்ற கண்டரான இறைவரால்
ஆட்கொள்ளப்பட்ட திருநாவுக்கரசர்.
1586.
கோபுரத் திருவாயிலைப் பணிந்தெழுந்து
செல்வம் நிறைந்த திருமுற்றத்தை அடைந்து
அருள் கருவை உடைய கச்சி ஏகாம்பரின்
பொன்மாளிகையைச் சுற்றி வலம் வருபவரான நாவுக்கரசர்
செம்பொன் மலையரசனின் மகளான காமாட்சியம்மையார்
தழுவக் குழைந்த அழகிய திருமேனி உடைய பெருவாழ்வினை
முன்பு கண்டு இறைஞ்சி
பேராத அன்பு மிக்கவர் ஆனார்.
1587.
கண்ணீர் மழை பெருகிச் சொரிந்தது
மயிர்க்கால் தோறும் புளகம் வந்து திருமேனியின் புறத்தை அலைக்க
அன்பு மேலீட்டால் உள்ளம் கரைந்து எழும்பினுள் அலைக்க
பெறத்தக்க பயனைப்பெற்று கண்கள் திளைப்ப
திருஏகாம்பரை நேர்ந்த மனதில் பொருந்த வைத்து
நீடும் திருப்பதிகம் பாடுவார் ஆனார்.
1588.
“கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானை” என்றெடுத்துப்
சொல்மாலை திருப்பதிகம் பாடிய பின்னர்
பகைவரின் முப்புரங்களை எரித்தவரும்
வெண்பற்களை உடைய பாம்புமாலை அணிந்தவருமான இறைவரின்
கோவிலின் திருமுற்றம் அடைந்தார்.
1589.
கையால் செய்கின்ற திருத்தொண்டினை
மிகப்பெரும் காதலோடும் செய்து கொண்டே
பலப்பல செந்தமிழ் மாலையும் பாடி
மையார்ந்த திருநீலகண்டரின் கச்சித் திரும்பானத்தை வலம் வந்து
மெய்யான ஆர்வமுறத் தொழுது விருப்பத்தோடு தங்கியிருந்த நாளில்-
1590.
சிறப்பு பெருகும் மதிலுடைய திருக்கச்சியில் மேற்றளி முதலாக
நீர் வளரும் கங்கை தாங்கிய சடையவர்தாம்
நிலவி வீற்றிருக்கும் ஆலயங்கள் ஆர்வமுறப் பணிந்தேத்தி
ஆய்ந்த தமிழ்ச் சொல்மலரால்
சார்பு பொருந்தும் தமிழ் மாலைகள் சாத்தி
தக்க தொண்டு செய்து அங்கு தங்கியிருந்தார்.
1591.
அக்காஞ்சி நகரில் அவ்விதமாய் நாவுக்கரசர் தங்கியிருந்த போது
நிலைபெற்ற “திருமால்பேறு” எனும் இடத்திற்குச் சென்று தமிழ்பாடி
பிறைச்சந்திரன் அணிந்த சிவபெருமானின்
திருத்தலங்கள் பலவும் சென்று இறைஞ்சித்
திரும்பவும் காஞ்சி நகரம் வந்தார்
தொடர்ந்த பெரும் காதலினால்.
1592.
“ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான்” எனப் போற்றும்
தாண்டகம் போற்றிப் பாடினார் போற்றிப் பாடினார்
பாசம் பெண் உருவான இறைவனை
பாம்புகளை அணியாய் உகந்தானை
நலம் பெருகும் திருநீறு பூசிய திருமேனியானை
சேர்ந்து வணங்கி நாவுக்கரசர் பணிந்து இன்புற்றார்.
1593.
காஞ்சித்தலமும் ஏகம்பர் கோவிலும் பணிந்தேத்தினார்
பிறைச்சந்திரனை செஞ்சடைக்கு அணிந்த இறைவர்
நீடு பெற எழுந்தருளிய பிறதலங்களும் தொழுது
பலாச்சுளைகள் பொழிகின்ற தேன் பெருகி வயல் விளைகின்ற
அந்நாட்டிடைச் சென்றார்
பருத்த கையுடைய வலிய யானையின் தோலை உடையவரின்
திருக்கழுக்குன்றம் பக்கமாகச் சென்றார்.
1594.
நிலைத்த செல்வமுடைய
திருக்கழுக்குன்றத்தில் வீற்றிருக்கும் நிருத்தனாராகிய
கூத்தன் கழல் வணங்கிப் பாடும் தமிழ் மாலையான தேவாரம் புனைந்து
பக்கமுள்ள பல பதிகளிலும் சென்று
இளம்பிறை சூடும் இறைவரை வணங்கித் துதித்து
கடல் உடுத்திய திருவான்மியூர் தலம் அணைந்தார்.
1595.
திருவான்மியூரில் வீற்றிருக்கும் மருந்து நாதரைச் சேர்ந்து பணிந்து
அன்பினோடு பெரு வாய்மையோடு தமிழ்பாடினார்
அப்பக்கத்தில் பிறப்பறுத்து வீடுபேறு அருளும் இறைவரின்
பலதலங்களும் சார்ந்து இறைஞ்சினார் தமிழ்வேந்தர்
மணம் நிறைந்த மலர்சோலை மயிலாப்பூர் வந்தடைந்தார்.
1596.
மலைமீது வளரும் பெரிய மயில் போன்ற மாடங்கள் மீது
மஞ்சு ஆடும் சிறப்புடைய திருமயிலாப்பூரில்
சங்கரனின் பாதங்கள் வணங்கி
உரைபெருகும் படையாளியாகிய நாவுக்கரசர்
அலைகள் தவழும் கடற்கரை வழியே திருவொற்றியூர் அடைந்தார்.
(மஞ்சு- மேகம் )
1597.
திருவொற்றியூர் எனும் வளநகரத்தின்
ஒளிமிகுந்த மணி வீதிகளை விளக்கும்படியாக
நல்ல கொடிகளை, நல்ல மாலைகளை, பாக்கு, வாழைகளை வரிசையாய் நாட்டி
பொன்னால் ஆன நிறைகுடங்கள் தூபங்கள் விளக்குகள் அழகுற அமைத்து
நாவுக்கரசரை எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர் தொண்டர்கள்.
1598.
திருநாவுக்கரசரும் அந்தத் திருவொற்றியூரில் அமர்ந்த
போர் செய்யும் திண்மையான வில்லுடைய
சிவபெருமானின் கோபுரத்தை வணங்கி உள்ளே புகுந்து
ஒருமைப்பட்ட ஞானமுடைய தொண்டருடன் உருகி வலம் வந்தார்
அடியார்களின் பிறவி என்ற நாமம் தவிர்க்கும் இறைவரைத்
கைதொழுது இறைவரின் திருமுன்பு விழுந்தார்.
1599.
எழுதாத மறை அளித்த எழுத்தறியும் பெருமானைத் தொழுது
அன்பு மிகப்பெற்று நிலத்தில் தோய்ந்து எழுந்து
அங்கமெல்லாம் பரவசத்தால் முகிழ்ந்து
மயிர்க்கால்கள் புளகமுறத் திளைத்து
கண்கள் தாரையாய் பொழிய
உடல் விதிர்ப்புற்று விம்மினார்.
1600.
வண்டோங்கும் செங்கமலம் எனத் தொடங்கி
உள்ள உருகப்பாடினார் திருத்தாண்டகத்தை
பண் தோய்ந்த சொற்களால் பாடி வணங்கினார்
வான் தோய்ந்த புனல்கங்கை தரித்த இறைவரின்
திருவுருவம் கண்டோங்கிய களிப்பினால்
மிகக் கைதொழுது கோவிலின் புறம் அடைந்தார்.
1601.
விளங்கும் பெருமையுடைய திருமுற்றம் பொருந்திய
திருப்பணிகள் செய்தே உளம் கொள்ளும் திருவிருத்தங்களும்
ஓங்கு புகழ் திருக்குறுந்தொகைகளும்
களம் கொள் திரு நேரிசைகளும் பலவாகப்பாடி
கைதொழுதார் வளமை மிகு திருப்பதியாகிய திருவொற்றியூரில்
பலநாட்கள் தங்கியிருந்தார்.
1602.
அங்கு உறைந்திருந்த நாட்களில்
அருகில் உள்ள சிவலாயங்கள் எங்கும் சென்று
இனிதே இறைஞ்சி ஏத்தினார் இறைவர் அருளால்
பொங்கு புனல் திருவொற்றியூர் தொழுது
உமையை தன் ஒரு பங்காக உடைய சிவனாரின்
திருப்பாசூர் எனும் தலம் அணைந்தார்.
(அணைந்தார்- அடைந்தார்.)
1603.
திருப்பாசூர் நகர் எய்தி
சிந்தையினில் வந்து ஊறுகின்ற விருப்பமும் ஆர்வமும் உந்த
அத்தலத்தில் மூங்கிலை இடமாகக் கொண்டு வெளிப்பட்டு
உலகம் உய்வதற்காக எழுந்தருளி இருப்பவரான இறைவரை
திரிபுரங்கள் எரித்திடவும்
அதில் அன்பர் மூவர்க்கு அருளவும்
ஒப்பற்ற மேரு என்ற வில் உடையவருமான இறைவரை
நிலத்தில் விழுந்து தொழுது எழுந்து போற்றுவார்.
1604.
முந்தி மூவெயில் எய்த முதல்வனார் எனத்தொடங்கி
சிந்தை கரைந்து உருகும்
திருக்குறுந்தொகைப் பதிகமும் திருத்தாண்டகமும்
சந்தம் நிறைந்த திருநேரிசை முதலான தமிழ்ப்பதிகமும் பாடி
எம் தந்தையான இறைவரின் திருவருள் பெற்று
ஏகுவார் திருநாவுக்கரசர்.
1605.
அந்த அழகான பதியை விட்டு அகன்று
அருகில் உள்ள பதிகள்(தலங்கள்) யாவும்போய்
நஞ்சு விளங்கும் கண்டம் உடைய இறைவரை
மகிழ்வோடும் துதித்துப் பின்னர்
மெய்மை நிலை வழுவாத வேளாள தூய குடியும் செம்மையும் உடைய பெருமக்கள்
வாழ்கின்ற பழையனூர்த் திருவாலங்காடு பணிந்தார்.
1606.
திருவாலங்காடு உறையும் செல்வம்தாம்
எனச் சிறப்பாக முடிகின்ற திருத்தாண்டகத்தையும்
ஓங்கும் பெருவாய்மை மிகு தமிழ் மாலைகளையும் பல பாடினார்
ஆர்வமுடன் வணங்கி பிறபதிகள் பல நோக்கி
அங்கிருந்து வடதிசை வழியில் சென்றார்.
(திருவருளால்
தொடரும் )
—-
pa_sathiyamohan@yahoo.co.in
- ஏதேன் தோட்டமும் கேலாங் விடுதியும்
- 24 வது ஐரோப்பிய தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005 – லண்டனில் 15,16 ஒக்டோபர் 2005
- கவிஞர் எஸ் வைதீஸ்வரனின் 70-வது வயது நிறைவை முன்னிட்டு சிறப்புக் கூட்டம் – 2-10-2005
- அவசரமாய், அவசியமாய் ஒரு வேண்டுகோள்
- காலம்-25 : இலக்கிய மாலையும் அறிவியல் சிறப்பிதழ் வெளியீடும்
- சுயாதீன கலை திரைப்பட மையம் -முடிவுகள்
- ரமேஷ் மெய்யப்பனின் புதிய நாடகம் ‘இந்த பக்கம் மேலே ‘(This Side Up)
- கிரிக்கெட்டாம் கிரிக்கெட்டாம் . . .
- கிடைக்க மறுக்கிற நீதி (ஹஸினா – கன்னடத்திரைப்பட அனுபவம்)
- சின்ன வீடு
- குறும்பட வெளியீட்டு விழா
- திறந்த ஜன்னல் வழியே
- அலைகள் திமிங்கிலம்
- ஒற்றை நட்சத்திரம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-10)
- மூன்று மணித்துளிகள் – பேரண்டத் துவக்கம்
- நலம்பெறவேண்டும்
- கீதாஞ்சலி (42) முடிவில்லா முக்தி! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 58 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )
- கவிதைகள்
- ‘ ‘மற்றவர்கள் நரகம்…. ‘ ‘
- கற்பு என்னும் மாயை
- கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும்
- Commander in Chief
- பி.ஏ. கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு
- சேவை
- தெரிந்தவன்