பெரியபுராணம் – 53

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

பா.சத்தியமோகன்


1421.
குறைவற்ற சிறப்புடைய தில்லை அம்பலத்தின் அருச்கூத்து ஆடுகின்ற

கங்கை ஆறு பக்கத்தில் பரவும்

மலர்ச்சடையார் அடி வணங்கினார்

ஊனாலும் உயிராலும் உள்ளபயன் பெற நினைத்து

தேன்பொருந்திய மலர்ச்சோலை சூழ்ந்த

திருப்புலியூர் தன் பக்கத்தை அடைந்தார்.

1422.

நான்முகனுக்கும் திருமாலுக்கும் எட்டாத அரியவர்

நடமாடிய தில்லையின் எல்லை சேர்ந்து

நிலம் பொருந்த மெய்யால் தொழுதுபின்

மேலும் மேலும் எழுகின்ற ஆசையுடன்

சோலைகளில் களிப்புடைய மயில்கள் மகிழ்ந்து எதிர் எதிராக ஆட

மணம் கமழும் தாமரைகள் நிரம்பிய

பொய்கைகளில் மலர் முகங்கள் விளங்கும்

மருதம் சார்ந்த குளிர் வயல்களில் வழியே வந்தார் திருநாவுக்கரசர்.

1423.

மணம் வீசும் செறிவான தாமரை இதழ் உள்ள நீர்ப்பள்ளங்களில்

முதிய எருமைகள் புதிய பூக்களை மேயும்

அதன் அருகே காடுபோல் மூங்கில் உயரம் நிற்கும் கரும்புகள்

அக்கரும்பின் கணுக்கள் வயலெல்லாம்

உள் உருகி அன்பு மிகுந்து கண்ணீர் பொழிவது போலுள்ளது

பெரியவரான நாவுக்கரசரின் வடிவம் கண்டு.

1424.

அறிவில் பெரியவரான திருநாவுக்கரசு நாயனார்

அருகிலுள்ள நெல்வயல்கள் பின்வருமாறு கடந்து முன் சென்றார்

பகையான பிறவிசேரும் நெறி விடுவீர்

இருவினைகள் பெருகிப் பின் தொடர்ந்து

பிணிக்கும் பாசம் நீங்கிட இங்கு சேர்க எனச் சூழ்ந்த

மரக்கிளைகள் மேலே பயிலும் குயில்கள் கூவும்

திருநந்தவனம் எதிரில் கண்டார்.

1425.

பணிவுடன் தொழுது நாயனார் அங்கே சேர

அழகான மரக்கொம்புகளின் மேலே பக்கங்களில் எங்கும்

முன் நாளில் தவம் செய்தலால் வருகின்ற திருத்தொண்டு என்ற நிலையில்

தலை சிறந்து நின்று உயர்ந்த தமிழ் அரசரான

இவரின் திருவடிவைக் கண்டு இஃது அதிசயம் ! என வந்தன

எதிரே கரகர என்றன இறகுகள் உடைய கிளிகளும்

சிறிய நாகணவாய்ப் பறவைகளும்.

1426.

அழகிய சொல் கொண்ட பதிகங்களை

அவர் முன் கிளிகள் பகர்ந்தன

அவரும் தொழுதார் அருள் நிறைந்த நெஞ்சில் பெருகிய மகிழ்வுடன்

காதலுடன் நிறைந்த அன்புடன் சொற்கள் தடுமாறின.

செம்மையான சொல் கொண்ட வேதம் ஓதும் அந்தணர் பயிலும்

தில்லைத் திருநகரின் எல்லையில்

மேகங்கள் விளங்கும் நீண்ட மதில் சூழ்ந்த

மேற்குத் திசை மணி வாயிலின் புறத்தே வந்து சேர்ந்தார்.

1427.

துன்பம் அளிக்கின்ற பிறவி நீங்க உதவும் தவத்தை

தமக்கு முதலாகக் கொண்ட அடியார்கள் தம்மை எதிர்கொள்ள

அவர்களுடன் கூடிச் சென்று

செழிய நீரின் மணம் வீசுகின்ற பக்கத்தில் உள்ள

வாயிலின் வழியாக புகுந்து

கல்விக்கரை கண்ட யாவரையும் அடிமையாக உடைய

கூத்தப் பெருமானின் அடி பேணுகின்ற

தில்லைவாழ் அந்தணர்களின் மாளிகைகள் நடுவே வளர்கின்ற

சிவத்தன்மை பொருந்திய வீதியில் தொழுது நடந்தார் நாவுக்கரசர்.

1428.

தத்தம் உலகங்களுக்குத் தலைவரான தேவர்களின் முடிகள்

ஒன்றுடன் ஒன்று மோதுவதால் சிந்திய மணிகளும்

ஒளி வீசும் நவமணிகளால் ஆன மாலைகளும்

நல்மணம் வீசும் மலர் மாலைகளும் நிறைந்த திருவீதியிலிருந்து

வாரி எறிந்து திரு அலகுப்பணி செய்தான் வாயுதேவன்

அவை பழுதாமென்று

எவரும் தொழுது எழும் தன்மையுடைய அடியார்கள்

அதன் மேல் திரு அலகு இடுவார்கள்

குளிர்ந்த நீர் விடுவார்கள்.

1429.

பொருந்திய பெருமையுடைய திருநாவுக்கரசு நாயனார்

மேலே

வான வெளியிடம் எங்கும் நிறையும் கொடிகளோடு

பரவும் வெம்மைக் கதிரவன் கதிர்கள் நுழைய அரிதான

கோலம் பெருகிய திருவீதியைப் பணிவார்

உலகு திகழும் திருமறைகளின் பெருகிய ஒலியானது

நன்மையுடைய முனிவர் துதிக்கும் ஒலியுடனே

ஓலம் பொருந்திய எழுநிலை மேலைக் கோபுரத்தையும்

நிலத்தில் உடல் பொருந்த வணங்கித் தொழுது உள்ளே புகுந்தார்.

1430.

அழகு வளர்கின்ற பொன்மாளிகையை வலம் வந்து

வரையறையில் நில்லா அளவில் பெருகிய ஆர்வத்திடை எழும்

அன்பின் கடல் நிறைந்த மேனி முழுதும் மயிர்ப்புளகம் மிகுந்து கலக்க

திருமிகுந்த பொன்கொண்ட கோபுரத்தின் உள்ளே புகும் நாயனார்

நடம் நவிலும் கூத்தப் பெருமானின் பொன்னம்பலத்தை எதிரே பார்த்தார்.

1431.

நிலை பெறும் முக்தியான திருவுடன் பொருந்தி

மென்மேலும் பெருகும் ஒளி நிறைந்த அம்பலம்

தம் நினைவில் பொருந்தியபடியே கண்ணெதிரிலும் கண்டார்

கூடிவரும் அன்பால் இன்பம் பொருந்தும் குணச்சிறப்பும் கைகூடியது

ஆதலால்

தேடும் நான்முகனும் பிரமனும் தேவரும் பிற உயிர்களும்

தெளிவடைய இயலாத ஆடும் திருவடியால் நிகழ்த்தும் அமுதத் திருநடனத்தை

ஆசை நிறைவு பெறா வகையில் தொழுது உண்டார்.

1432.

அவரது கைகள்

தலைமீது புனைந்த அஞ்சலியாகக் குவிந்தன

கண்கள் பொழியும் மழையும் ஒழியவில்லை

உட்கரணங்களும் உடன் உருகின

பேறு அடையும் திருமேனியும் தரைமீது விழுமுன்னரே எழுகின்றது

மின்போல் தாழ்ந்த சடையுடன் நின்றாடும் ஐயனின் திருநடனத்தை

கும்பிடும் அவர் ஆர்வம் பெருகிற்று அளவில்லாமல்.

1433.

இத்தன்மையராகி நாவுக்கரசர் பலமுறையும் தொழுது எழ

என்று வந்தாய் ? என்ற குறிப்புடன் அம்பலத்தில் ஆடும் அத்தன்

திருவருள் பொழியும் கருணையினால்

அருள் பெற்று அதனால் வரும் ஆனந்தத்தால்

மெய்த்தன்மையுடன் திருவிருத்தத் திருமொழி பாடினார் பிறகு

மேலும் மேலும் சித்தத்தில் பரிவு மிகுந்து இன்பம் அடையும்

திருநேரிசைத் திருப்பதிகம் பகர்கின்றார்.

1434.

பக்கதனாய்ப் பாடமாட்டேன் எனத்தொடங்கும்

திருநேரிசைப் பதிகம் பாடினார்

அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று முடித்தார்

இத்திறத்தில் போற்றி நின்றே

இனிய தமிழ் மாலை பாடி

கைகளினால் திருத்தொண்டு செய்கின்ற

காதலினால் பணிந்து வெளியே வந்தார்.

1435.

நீடிய மணிகளின் சோதி நிறைந்த திருமுன்றிலின் பக்கத்திலும்

ஆடும் உயர்ந்த கொடிகள் சூழ்

பொன்தேர் அணிந்த அழகிய வீதியுள்ளும்

பொருந்திய திருப்பணிகள் செய்து

கும்பிடும் தொழில் உடையவராகிப் பாடிய

புனித வாக்கினால் பணிகளும் பயிலச் செய்வார் ஆனார்.

1436.

அருட்பெரும் மகிழ்ச்சி மென்மேலும் பொங்க

“அன்னம் பாலிக்கும்” என்னும் திருக்குறுந்தொகைகள் பாடி

பெருகி எழும் காதலோடும் பெரும்திருத்தொண்டு செய்து

விருப்பமுடைய மேனியில்

வடியும் கண்ணீரால் கரைந்த

திருவெண்ணீறுடன் வண்டல் பொருந்த-

1437.

பொருத்தமான பணிகள் செய்து வந்த நாட்களில்

திருவேட்களம் எனும் ஊரில் எழுந்தருளிய

காளைக்கொடி கொண்ட சிவனாரைச்

சென்று முன் வணங்கிப் பாடினார்

அழகிய கண்டமுடைய கூத்தப்பெருமான் நிலைபெற்ற

திருக்கழிப்பாலை சென்று அடைந்தார்

மண்ணோர் நலமாக வாழ.

(அன்னம் பாலிக்கும் எனும் திருக்குறுந்தொகை நாயனார் பாடியது)

1438.

சினமுடைய காளையில் ஊர்கின்ற

மணவாள நம்பியான இறைவர் திருவடியை

சென்று தாழ்ந்து வணங்கி அழகிய பவளவாய் திறந்து

“வானவர்களுக்கும் தானவனே என்கின்றான்” எனும் தன்மை கொண்ட

திருப்பதிகமுடன் அன்புறு வண்டமிழ் பாடி அப்பதியில் தங்கி

நினைக்க அரியரான சிவனாரைப் போற்றி

செல்வம் நிலைபெறும் திருப்புலியூரை நினைத்து திரும்புவார்.

(வனபவளவாய் திறந்து என்று பதிகம் பாடினார்)

1439.

இல்லங்களின் முற்றத்தில்

கடலின் கொழுந்து போன்ற அவைகள்

சங்குகள் கொணர்ந்து சேர்க்கும் திருக்கழிப்பாலை நீங்கி

அரும்புகளுடைய கொம்புகளுடன் கூடிய

குளிர் புன்னை மரங்கள் சூழ்ந்த சோலைகள் வழியே சென்று சேரும்போதில்

நினைப்பவரின் மனம்தம் கோயில் எனக்கொண்டருளும்

அம்பலக் கூத்தனாரை

தினைத்துணையாம் பொழுது மறந்தால் நான் உய்வேனோ

எனப்பாடியபடி தில்லை வந்தார்.

1440.

“அரியானை” எனத்தொடங்கும் பதிகத்தை

அடியவர்க்கு எளியரான சிவபெருமானை

அடியார் தம் சிந்தை பிரியாத பெரிய திருத்தாண்டகமான

செந்தமிழ்ப் பதிகம் பாடினார்

விளங்கும் சோதி விரிகின்றமையால்

எவ்வுலகும் விளங்கும் பொன்னம்பலம் மேவி

ஆடல் புரியா நின்றவர் தம்மைப் பணிந்து

தமிழ்ப்பதிகத்தால் மேலும் போற்றித் துதித்தார்.

1441.

“செஞ்சடைக்கற்றை முற்றத்தின் இளநிலா எறிக்கும்” எனும்

சிறந்த வாய்மையுடைய வாய்மைச்சொல்வளத் தமிழ்மாலைப் பதிகத்தை

அதிசயம் பொருந்தப் பாடி

அன்பு சூழ்ந்த நெஞ்சுருகக் கண்கள் புனல் பொழிந்தன

பரவிய பதிகச் சொல் நிறைந்தது வாய்

தம் செயலில் நீங்காத

திரு உழவாரப்பணி மாறாமல் சார்ந்த நாட்களில்-

1442.

யுகத்தின் முடிவுக்காலத்தில் கடலின் மேல் மிதந்த

திருக்கழுமலத்தில் ( சீகாழி )

சிவந்த கண் உடைய காளை ஊர்பவர் தோணியப்பர் திருவருளால்

மலையரசன் மகளான பெரியநாயகி அம்மையார்

திருமுலைப்பாலோடும் நிறைகின்ற

சிவம் பெருகுமாறு வளர் ஞானம் குழைத்து ஊட்டியதும்

அதை உண்டருளிய ஆளுடைய பிள்ளையாரின்

திருவரலாற்றை அடியார்கள் உரைப்பக் கேட்டார்.

(திருக்கழுமலம்- சீர்காழி /ஆளுடைய பிள்ளை-
திருஞானசம்பந்தர்)

1443.

கடலின் நஞ்சை உண்ட சிவனாரை

பெரியநாயகி அம்மையின் திருப்பாலமுதம் உண்டபோதே

ஏழிசை பொருந்தும் வண்தமிழ்மாலையால்

“இவன் எம்மான்” எனக்காட்டி

இயம்ப வல்ல பெருந்தகையரான ஞானசம்பந்தர் பெருமான்

சிறப்புகளை கேட்டதுமே அதிசயமாகி காதல் கூர்ந்து

வாழி அவர் மலர்க்கழல்கள் என வணங்குவதற்கு

மனத்திலெழுந்த விருப்பம் பொருந்துமாறு –

1444.

அப்பொழுதே

பொன் அம்பலத்துள் ஆடுகின்ற இறைவரின் கழல் வணங்கி

அருள் பெற்று பொய்ப்பிறவி பிணியோட்டும் இயல்பு கொண்ட

தில்லையின் திருவீதியைப் புரண்டு வலமாக வந்து பின்

எல்லா உலகங்களிலும் நிறைவான திருப்பதியான

தில்லையின் எல்லையினை

இறைஞ்சி ஏத்தி செப்பரிய பெருமை கொண்ட நாவுக்கரசர்

திருநாரையூரைப் போய்ப் பணிந்து பாடிச் செல்லத் துவங்கினர்.

1445.

தொண்டர்குழாம் புடைசூழ தொழும் கரங்களுடன்

திருநீறினால் நிறைவுற்ற திருக்கோலத்துடன்

கண்டவர் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை மேல் பொழிந்திட

தெளிவான அலைகளுடைய கடலில்

கல்லினை மிதவையாக ஊர்ந்து ஏறும்

திருநாவுக்கரசர் தாமும்

வளமான தமிழால் எழுதும் வேதம் மொழிந்த பிரான் ஞானசம்பந்தர் காண
திருப்புகலி அருகில் வந்து சேர்ந்தார்.

(திருப்புகலி- சீர்காழி)

1446.

நீண்ட பெரிய மேருமலையை

வில்லாகக் கொண்ட சிவபெருமான்

கொடிய வெம்மையான சூலைநோய் தந்து ஆளப்பட்ட

திருநாவுக்கரசு எழுந்தருள வருகிறார் என்ற செய்தி கேட்டருளி

ஞானசம்பந்தரும் அவரைக்காண்கின்ற பெருவிருப்பு மிக ஓங்கப்பெற்று

திருவுள்ளக் கருத்தினோடு

அருள் கொண்ட மனமுடைய அடியார்கள் பலரும்

தம்மைச் சூழ்ந்து வர எழுந்தருளி முன்னே வந்தார்.

1447.

காளை ஊர்தி கொண்டு வருவார் தம்மை

அமுது அழைத்து தம்முன் வெளிப்பட்டு

வரவைத்த ஞானசம்பந்தரும் வரவேற்கச் செல்ல

எதிரே வந்த தொண்டர் குழுவின்

திருவேடம் வணங்கி எதிரில் சேர்தலுற்ற நாவுக்கரசரை

அளவிலாப் பெரும் காதலுடன் வீழ்ந்து வணங்கினார்

விழுந்து வணங்கியவரின் கைகளைப் பற்றிக்கொண்டு

எழுதுதற்கு அரிய

மலர் போன்ற தம் திருக்கைகளால் எடுத்து

அவரைத் தாமும் தொழுது

“எம் அப்பரே” என்றதும்

அவரும் “அடியேன்” என்றார்.

1448.

பெரியநாயகி அம்மையான அம்பிகை

செம்பொன் கிண்ணத்தில் அமுதஞானம் கொடுக்க

அழுகை தீர்ந்த செம்பவளவாய்ப்பிள்ளை ஞானசம்பந்தரும்

திருநாவுக்கரசு நாயனாரும் என்ற பெரும் சிறப்புடைய

எம் இரண்டு பெருமக்களும் சேர்ந்த இத்திருக்கூட்டத்தில்

சிவனடியார் இன்பம் எய்தி தேவர்களும் போற்றித் துதிக்குமாறு

உலகமெல்லாம் சிவம் பெருகும் ஒலியாகிய

“அரகர அரகர” என நிறைத்தனர்.

1449.

ஆளுடைய பிள்ளையாரின் திருவடிகள் வணங்கப் பெற்றேன் என்று

திருநாவுக்கரசு நாயனார் மகிழ்ந்தார்

திருநாவுக்கரசு நாயனாரை வணங்கியதால்

பெருகும் ஞான வள்ளலான ஞானசம்பந்தர் பெருமகிழ்ச்சி பொங்கினார்

உள்ளத்தில் நிறைந்த காதலினால்

ஒருவர் மற்ற ஒருவரில் கலந்து

உண்மை நிலையோடும் வெள்ளப்பெருக்கில்

மிதந்த திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவரின்

கழல் வணங்கும் விருப்பம் மிக்கவராகி-

1450.

இவர்கள்-

அருள் பெருகும் ஒப்பிலாத ஒரு கடலும்

உலகுக்கெல்லாம் அன்பினால் செறிகின்ற ஒரு கடலும் என விளங்கினர்

ஓங்கும் பொருளுடைய சமயங்களின் தலைமையுடைய

சைவநெறி பெற்ற புண்ணியக் கண்களென விளங்கினர்

உலகம் உய்யும் பொருட்டுக்

கரிய நஞ்சுடைய சிவபெருமானின் அருள் போலவும்

உலகமெலாம் ஈன்றாளின் திருவருள் போலவும் கூடி

தெளிவதற்குக் காரணமான

கலைஞானக் கன்றான சம்பந்தரும் நாவுக்கரசரும்

செஞ்சடை உடைய தேவதேவரின் திருக்கோயில் சேர்ந்தார்கள் அன்றே.

1451.

இசை பாடும் வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த

சீர்காழிப் பரமரின் திருக்கோபுரத்தைப் பணிந்து உள் புகுந்து

விண்ணும் பணிய ஓங்கிய பெரு விமானம் தன்னை

வலம் வந்து தொழுது விழுந்து எழுந்தபோது

சீர்காழித் தலத்தில் தோன்றிய ஆளுடைய பிள்ளையார்

“அப்பரே உங்கள் தம்பிரானாரைப் பாடுங்கள்” என்றார்

அதைக் கேட்ட நாவுக்கரசர் கண்கள் புனல் பொழிந்தன

வாய்மைக் கலைகளில் பொருந்திய மெய்த்திருமொழிகளை

வாயினால் மொழிந்து உள்ளம் உருகிப் பாடினார்.

( இறையருளால்
தொடரும் )

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்