பெரியபுராணம் – 44 ( திருக்குறிப்புத்தொண்டர் புராணம் தொடர்ச்சி )

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

பா.சத்தியமோகன்


1140.

அண்ணலார் அருளிய வெள்ளத்தை

அழகிய கயல் போன்ற கண் உடைய உமையம்மை –

தம் பெருமான்மேல்

வானமும் உட்பட பெருகி வளரும் வெள்ளம் வந்துறுமே

எனப் பதற்றத்துடன்

எண்ணிய காதலுடன்

திருக்கையால் தடுத்துப் பார்த்தும் நிற்கவில்லை வெள்ளம்

குளிர் பிறைச்சந்திரன் பொருந்தும் இடமான சடையுடைய இறைவரை

தழுவிக் கொண்டனள் தனக்கு நிகராகத் தானே விளங்கும் அம்மையார்.

1141.

மலையரசனின் குலக்கொடி அன்பு மிகுந்த அச்சம் கொண்டு

மாமரத்தின் அடியில் மேவிய தேவ நாயகரை

முலையான மலையோடு வளைக்கைகளால் நெருக்கி

முதிரும் காதலால் இறுகிடத் தழுவினார்

வில்போன்ற நெற்றியுடைய அவரது முலைகளுக்கும்

சிவந்த தளிர்போன்ற கைகளுக்கும் மெத்தென இருப்பதற்காக

கொலை யானையின் தோலை உரித்துப் போர்த்துக்கொண்ட

தம் வன்மையான மேனியைக்

குழைந்து காட்டினார் இறைவர்.

1142.

தம் மனைவியார் தழுவ

உடல்குழையக் கண்டு

நிற்பனவும் அசைவனவுமாக உள்ள

தேவர் முதல் ஏழுவகைப்பட்ட யோனிகள் எல்லாம்

உயிரும் உடலும் உருகி ஒன்றாகி

?எம்பிராட்டிக்கு மெல்லியரானார் ஏகம்பர் ? ? என்று புகழ்ந்து துதிக்க

மணம் கமழும் புதிய மலர்களை

தேவர்கள் நிறைய விண்ணிலிருந்து பொழிய

கம்பையாறு வணங்கியது- தன் வெள்ளம் வடிந்து.

1143.

தூய திருநீற்றை திருமேனி முழுதும் அணிந்து

பொங்கு கங்கை தோய்ந்த முடிச்சடை புனைந்து

காதில் வெண்மையான சங்குக் குழையும்

உருத்திராக்கக் கண்டிகையும் பொருந்த

யோகத்தில் கலந்து மருவிய காரணத்தால்

ஆதி தேவனாரான சிவபெருமான்

அறிஞர்களால் மாதவம் செய்யும் அந்த மேன்மை தானோ என –

அகிலம் ஈன்ற அம்மையாரின் வளைத்தழும்பும்

முலைச்சுவடும் என அணிந்து கொண்டார்.

1144.

குற்றம் போக்கும் அமுதம் போன்ற அம்மையின் முலைக்குக் குழைந்து

தம் மணவாள நற்கோலத்தை

உமை அம்மை வாழ்வதற்கே காட்டி முன் நின்று

?வரங்கள் வேண்டுவன கேள் ? என அருள

?வேதகாரணா! ஏகம்பா! ? என மணம் கமழ் தாமரை மலர் அடிகளில் ?

விழுந்து வணங்கினார் உமை அம்மையார்.

1145.

அண்டங்களின் நாயகர் எதிர்நின்று கூறும் அளவில்

அஞ்சி அஞ்சலி கூப்பி –

?இறைவ ! தாங்கள் ஏற்ற என் பூசனை இன்னும் எஞ்சி உள்ளது;

அது நிரம்பிடக் கொள்க ?

வண்டு மொய்க்கும் குழலுள்ள மலைமகளின்

தாமரை போன்ற திருமுகம் பார்த்து

நெற்றி மீது திரிபுண்டரமாக திருநீறுடைய இறைவர்

?நம்மிடம் நின் பூசை என்றும் முடிவதில்லை ? என மொழிந்தார்.

1146.

முடிவிலாத இப்பூசனை

என்றும் தாங்கள் எம்பிரான் மகிழ்ந்து ஏற்று அருளி

?இறுதியிலாத இத்தலத்தில் எல்லா அறமும்

யான் செய்ய அருள் செய்ய வேண்டும்

(சிவ அபராதம் எனும் திருவடி பிழைத்தல் தவிர)

வேறு செய்வினை எது செய்தாலும்

இங்குள்ளார் செய்யும் எச்செயலையும்

தாம் வேண்டுவனவற்றை வேண்டிச் செய்தாலும்

மாதவப்பயன் அவற்றுக்கு அருள வேண்டும் ? என்றார்

உயிர்களின் பிறப்பு நீக்கும் அம்மை.

1147.

காளையூர்பவரான இறைவர்

மலைமகள் வேண்டிக் கொண்டதும்

அவர் விரும்பிய பூசனையில் பொருந்தி வீற்றிருந்து

இடையறாமல் அறம் வளர்க்கும் வித்தாக

இகபரத்திற்கு உரித்தான இரண்டு நாழி நெல் அளித்தார்

கடையவராகியும் உயர்ந்தவராகியும்

காஞ்சியில் வாழ்பவர்கள் செய்யும் தீவினைகள் கூட

தடையிலாது மெய் நெறி அடைவதற்குத்

துணைபுரியும் தவங்களாக அமைய உவந்து அருள் செய்தார்.

1148.

எண்ணுதற்கு அரிய பெரும் வரங்கள் பெற்று எம்பிராட்டி

தன் கணவர் மகிழ்ந்து அருள

மண்ணில் மேல் வழிபாடு செய்து அப்பயனை

பெருகும் கருணையினால்

நிலைபெற்ற உயிர்கள் பல்க விரும்பி அளித்தார்

நாடிய காதலால் நீண்ட வாழ்வுக்குரிய

புண்ணியத்திருக்காமக் கோட்டம் என்ற கோவிலில் பொலிய

முப்பத்தியிரண்டு அறங்களும் வளர்த்தார்.

1149.

அண்டமாகிய தம்திருமனைக்கு இடும் தீபமாகிய முச்சுடர்களும்

அளவிலாப் பெருந்தவம் செய்யும் அறச்செல்வி

உலகில் வந்ததால் உறுபயன் அறிவிக்க ஓங்குவதுபோல

ஓங்கிய புதிய நீலமலர் மூன்றுடன் கூடிய ஒரு பூ நிலவும்படியாக

ஆண்டுக்கு ஒரு முறை மலரும் நீடிய தொன்மையால்

புண்ணிய திருக்காமத் தோட்டத்து நல் அறங்கள்

நிலை பெற வீற்றிருந்து அருளுவார்.

1150.

புண்ணிய காமக்கோட்டத்தின் பக்கத்தில்

மேல்-நடு-கீழ் எனும் மூன்றுலகில் உள்ளவரும் துதிக்கும்

தீர்த்தமான குளிர் நீரைக் கொண்ட ஒரு குளம்

வளைந்த அலைகள் வீசும்

கடலாகிய மேகலையால் சூழப்பட்ட நிலவுலகத்தார்க்கு

மோட்ச நிலை அடைய ஏற்றபடிகளுடைய ஏணிபோல

பாவங்கள் தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றுமளவு

ஓங்கு வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளதென்று

?உலகாணி ? எனப் பெயர் பெற்றது.

1151.

முடிவிலாது நல் அறம் புரிந்து அதன் பயனை அளிக்கும்

உமை அன்னையின் புண்ணிய திருக்காமக் கோட்டத்தில்

சந்திரனும் சூரியனும் வந்து

அக்கோட்டத்தின் மேலாக

வான்வழியில் செல்லாமல் ஒதுங்கிப் போகின்றது

ஆதலால் நேர்த்திக்குகள் மயங்கி

எப்பக்கமும் நிழல்கள் மாறி

அதனால் திசைமயக்கம்

இந்த மாநிலத்தவரெல்லாம் காணுமாறு

என்றும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உள்ளதால்.

1152.

காளியின் நல்ல பெரும் காவலுடைய காஞ்சியின் எல்லைக்குள்

காஞ்சி என்ற பெயருடைய நதிக்கரையின் பக்கத்தில்

தலையில் இளம்பிறை அணிந்தவர் விரும்பி எழுந்தருளிய

?திருப்பெரும் பெயர் இருக்கை ? எனும் கோவிலில் திகழ்ந்து

நிலைத்த வெம்மையான கதிர் மேலே எழும்போதும்

மறுபடி மேற்குக் கடலில் விழும்போதும்

தன் நிழல் தன்னைவிட்டுப் பிரியாத வளம் கொண்ட

காஞ்சி மரம் உள்ள இடத்தைப் பெற்ற மேன்மையுள்ளது காஞ்சி நகரம்.

1153.

வேதங்களால் துதி செய்து அரிய தவம் புரிந்து

மாறுபாடில்லாத முறைப்படி வருகின்ற பூசை செய்ய

வானவர் முதலான எல்லா உயிர்களும்

உள்ளம் நிறை அன்பால் பூசனை செய்யவும்

அவரவர் விரும்பும் பெரு வியப்புகளை

அவரவர்க்கு அருளிய சிவனார்

மகிழ்ந்து அருளிய தலங்கள் எல்லையில்லாமல் உள்ளன.

1154.

நிலைத்த தன்மையுடைய அத்திருநகர் எல்லையுள்

இவ்வுலகத்தில் மிக்க நன்மையினால்

தன்னிடம் நெருங்கிய யானையை

புதரில் வாழும் முயல் ஊக்கத்தால் விரட்ட

தன்னிடத்திலிருந்து உயிர்நீங்கிய உடல்கள்

மீளவும் உயிர்பெற்று எழுகின்ற இடமும்

எந்நிலத்திலும் காணவியலாத

?இறவாத்தானம் ? என்ற இடமும் என

இவ்வாறே இயல்பினில் கொண்டது.

1155.

மலையெனக் குவிந்த தீவினை நீக்கி

இன்பமே தரும் புண்ணியதீர்த்தம்

வேண்டியவர்க்கு வேண்டிய சித்தப்படி அளிக்கும் இட்டசித்தி தீர்த்தம்

நன்மைதரும் மங்கல தீர்த்தம்

தேவர்களின் நீண்ட பெருங்காவலுடைய தீர்த்தம்

மூன்று உலகிலும் உள்ள தீர்த்தம் கலந்த ?சர்வ தீர்த்தமும் ? முதலிய

எண்ணிலா தீர்த்தத்தின் அமரர் நாட்டவர் ஆடினர்.

1156.

ஒரே காம்பில் மூன்று தாமரைகள் மலர்கின்ற

பொன் தாமரை உடைய நீர்நிலை,

மிகுதியான நீர் மேற்கில் ஓடி நதியில் மறையும்

பகலில் அலரும் செங்குவளை

இரவில் மலரும் தாமரை

நண்பகல் மலரும் பாதிரியுடன்

கரிய மேகம் போன்ற உமையின் திருமேனி வீற்ற எல்லையிலே

காய்க்காத புளியமரமும் உண்டு.

1157.

தன்னுள் அடியவரின் நிழல் புலப்படாதபடி

தனக்குள் அடக்கிக் கொள்ளும் கிணறு ஒன்றும்

சிறிது உண்டாலும் நஞ்சாக்கிக் கொல்கின்ற நீர்நிலை ஒன்றும்

ஒரு வஞ்சகமும் இல்லாது வந்து உள்ளே புகுந்தவர்கள்

குரங்கு வடிவம் அடையும் பிலம் ஒன்றும்

அக்குரங்கு வடிவம் நீங்க நீராடத்தக்க பொய்கை ஒன்றும்

தேவர்களுடன் கலக்கும் இன்பம் தரும் பிலம் ஒன்றும்

அதிசயம் அந்நகரத்தில் பல ஆகும்.

1158.

ஐந்து பெரிய கைகளும்

ஆறுபோல் பாய்கின்ற மதமும் கொண்ட

யானைமுக விநாயக் கடவுள் நின்று காக்கவும்

மலர் போன்ற அடிகளில் வண்மையுடைய சிலம்புகள் ஒலிக்க

நள்ளிரவில் மேகம் நீள்வது போன்ற கரிய திருமேனியுடன்

நஞ்சு ஒழுகும் பற்கள் கொண்ட பாம்பினை

கச்சாக அணிந்த வெற்று இடுப்பை உடைய

அச்சம் தருகிற மூன்று இலை வடிவு கொண்ட

சூலப்படை உடைய மகனாகிய

வைரவக் கடவுள் இடைவிடாமல் முன்னே வந்தும் காக்கவும்

கிரெளஞ்ச மலை இரண்டாக பிளந்த வேலவன் காக்கவும்

விளங்கியது அந்த நகரம்.

1159.

சக்தியை வழிபட்டு சித்தி அடைந்த சக்தி யோகியரும்

சிவபோதக சாதமுடைய தனித்தலைவரான சிவயோகி முதலான

அழிவிலா ஆயுள் கொண்ட மெய்த்தவத்தவர்கள்

நிலைத்து வாழும் பாடிகளும் அனேகம்.

சித்தர்கள், விஞ்ஞையர்கள்,இயக்கர்கள்,கந்தர்வர்கள்

நீண்ட செண்டினைக் கையில் ஏந்தி

சிறந்த யானை மீது ஏறிச்செல்லும் ஐயனார் உலா வருகின்ற

?செண்டணை வெளியும் ?அங்கு ஒன்று உண்டு.

1160.

அக்காஞ்சி வந்தவர்

தம் உருவை மாயத்தால் மறைத்து

பிறரைத்தாம் காணும் இடம் ஒன்று உள்ளது;

சிந்தையை யோகத்து இறைவர்பால் சேர்க்கும்

முனிவர்,யோகினிகள் சேர்ந்திருக்கும் யோகபீடமும் உள்ளது

என்றும் முடிவிலாத அறம் காப்பவளான காமாட்சியின் கோவிலான

போகபீடமும் அங்கு உண்டு ;

எம்பெருமான் ஏகாம்பரநாதர் மகிழும் காஞ்சியில் இவ்வாறு

அதிசயங்கள் எல்லையற்றன.

யார் அறிவார் ? எவருமிலர்.

1161.

இறைவரால் தூண்டப்படும் சோடி ஒன்று எழுந்து

இருள் நீக்கும் இடம் உண்டு

தேவர்கள் வந்து சூழும் உருத்திர சோலை எனும் சோலை உண்டு

விரும்பி வேண்டியவர்களின் பிறப்பினை ஒழிக்க

மெய்நெறியின் படி நின்றவர் விரும்பித் தீண்டினால்

யாவும் செம்பொன்னாக்கும் ஒரு கல்லும் உண்டு.

எம்மை ஆட்கொள்ளும் காமாட்சி சமயங்கள் ஆறும்

அகில யோனியும் அளிக்கும்

அந்நகரத்தின் பெரூமை உரைக்க அரிது.

1162.

சிந்து மேதன் என்ற வேடன் முன்னே இந்த இடம் கண்டு

சிறப்பைச் சொல்ல

கலியுகத்தில் வலிய ஆற்றலுடைய

கரிகால் பெருவளத்தான் எனும் சோழமன்னன்

புலிக்கொடியை இமயமலை மேல் நாட்டியதுடன் –

1163.

குளிர்ந்த மரத்தின் மெல்கிளைகள்

பூங்கொத்துகளுடன் காற்றில் ஆடி அசைய

அதன் பக்கத்தில் வண்டுகள் காஞ்சிப்பண் இசை பாடும்

மாஞ்சோலையை தனது வேலியாகக் கொண்ட வயல்களுடன் கூடிய மருதநிலம் கொண்ட காஞ்சி நகரத்தை

வன்மையான நொச்சி மதில் சூழ்ந்த அகழி கொண்டது

சிறந்த வேதங்கள் எனும் வண்மை என்ற அணி கொண்ட

இடை கொண்ட உமை அம்மை காப்பதானது

வளர்கின்ற கருணைக்கடலானது –

இந்த உலகைச் சூழ்ந்தது போன்றதாகும்.

1164.

நீர்ப்பூக்கள் கொத்தாய் பூக்க இடமான அகழியும் மதில்களும்

கொத்துகளாய்ப் பூத்த பூக்கள் சூடிய கூந்தலுடைய பார்வதி அம்மையார்

இறைவர் விரும்பி ஏற்கின்ற பூசனையும் தானமும் காப்பதற்காக

சிவபெருமான் அருளிய உண்மையான ஆகமவிதிப்படி

கூறப்பட்ட மந்திரத்தால் அமைந்தது போன்றது

குற்றமிலாத காஞ்சியை வந்து அடைந்தோர் தவிர

அடையும் களங்கம் அறுப்பது அரிது என அறிந்து

அக்காஞ்சியை சூழ்ந்து

தன் கறுப்பு நிறமும் உவர்ப்பும் போக்கிக் கொள்ளும்

கடல் போன்றதுமாகும் அகழியும் மதில்களும்.

1165.

அங்கு மதிலுடன் விளங்கும் வாயில்கள்

அந்நகரில் வாழும் பெரியோர் உள்ளம் போல ஓங்கி நிலைப்பவை

உலகம் உய்வதற்காக உமை பாகர் அருளிய

ஒழுக்கம் தவிர வேறெந்தத் தீங்கும் அடையாத தடை போன்றவை

செம்மையான நெறியில் திகழ்ந்து

வாய்மையுடன் விளங்கும் ஆகமவிதிகள்

நீண்டு நிலவி வளர்கின்ற ஒளியால்

நீண்ட வானை அளப்பது போன்றவை.

1166.

நிகரற்ற அரிய பொன்மய மாளிகைகள்

மிகுதியாய்க் கொண்ட அழகிய வீதிகளும் நீண்ட தெருக்களும்

பலவகையாய் வந்த வளங்கள் பொருந்தி விற்கப்படும் அங்காடித் தெருக்களும்

மற்றும் பலவும் அமைந்த அந்நகரமானது-

அழகிய மலைகள் நடுவில் அமைத்துச் செய்யப்பட்ட

நவகண்டங்கள் போலிருந்தன

நெருக்கமான பலகண்டங்கள் கொண்ட

வேறொரு பூமண்டலமாகிய மகாலோகம் போன்றும் விளங்கியது.

(மகாலோகம் = மேலே உள்ள ஏழுலகங்களில் ஒன்று)

1167.

இருபக்கங்களிலும் உயர்ந்து நீண்டு

படர்ந்த மாளிகை வரிசைகளில்

மங்கையர்குழாம் தம் கூந்தல் அலைய

முத்துமாலையின் ஒளிக்கோவை மிகுந்து ஒளிவீசும் தெருவானது

வரம்பில்லாத விண்மீன்கள் ஒளி தழைத்து மேகத்தின் இடையே

கிழித்துச் செல்லும் தெய்வகங்கை முதலான மேல்நதிகள்

மண்ணுலகில் விளங்கியது போலிருக்கும்.

1168.

கிளரும் ஒளி கொண்டு செம்பொன்மயமாகி

அருகில் நீலமணிகள் கொண்டபடிகள் கொண்டு

மேற்பகுதியில் வயிரமணிகள் அமைந்த பலகணிகள்

அளவிலாத சுடர்ப்பிழம்பு ஆகிய சிவனாரைத் தேடி

பன்றி வடிவமாக நிலம் அகழ்ந்த திருமாலையும்

அன்னப்பறவையாகி

வளர் வானத்தில் எழுந்த நான்முகனும் போல விளங்கின.

1169.

வன்மையான புலியாடை உடுத்த ஏகம்பரின்

வளர்ந்து நீண்ட சடையும் அதன் பிறைச்சந்திரனும்கண்டு

அன்பால் உருகி உடலெல்லாம் கண்ணீர் வடிய நிற்கும்

அடியார்கள் போலிருக்கின்றன –

ஒளி திகழும் பலமணிகள் நெருங்கிய வெண்மாடங்கள் மீது பதித்த

சந்திரகாந்த கற்கள் கொண்ட அளவிலாத மாளிகைகள்.

1170.

முகில் உராயும் கொடிகள் கட்டப்பட்ட உச்சிகள் கொண்ட

முழுதும் பளிங்குக் கற்களால் ஆன மாளிகைகள்

வெளிப்பக்கம் சுற்றுகின்ற சரங்களும் அசரங்களும் ஆகிய அனைத்தும்

நிழல்படுவதால் உண்டான பிரதிபிம்பங்கள் நிரம்பி

நிறைந்த தவமுடைய பார்வதி அம்மையின்

முலைச்சுவடும் வளைத்தழும்பும் கொண்ட ஏகம்பர்

படைப்புத் தொழில் புரியும் நான்முகனுக்காக அமைத்து வைத்த

அரிய பெரிய கருவூலம் போல் விளங்குகின்றன.

( திருவருளால் தொடரும் )
sathiyamohan@sancharnet.in
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்