பெரியபுராணம் – 4

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

பா. சத்தியமோகன்


31.

உள்ளதை உள்ளபடி உரைப்பார் உபமன்னிய முனிவர்:

கங்கைச்சடை மெய்ப்பொருளுக்கு

மதுமலர் மாலையும் பூசிடும் திருநீறும்

எடுத்துத் தருவார் ஒருவர் உண்டு…

32.

அன்னவன்பெயர் ஆலாலசுந்தரன்

முன்னம் ஆங்கொரு நாளில் முதல்வனுக்கு

விதிப்படி நாண்மலர்கள் கொய்ய

நந்தவனத்துக்குச் சென்றார்

33.

நிறைமதிமுகத் தோழியர் இருவர்

மென்மேலும் பொங்கும் அழகுடை மங்கையர்

உயிர்களைக் காக்கும் உமைக்கு மலர் பறிக்க

ஆலாலசுந்தரருக்கு முன்னமே சென்றிருந்தாரே.

34.

நுட்பமாய்ச் செறிந்த அளவிலா அழகி அநிந்திதை

மணம் கமழும் மாலை சூடியவளோ கமலினி

மலர்க்கொத்துகளை ஆராய்ந்து கொய்கையில்

வான ஈசன் அருளே போல —

35.

மகாதவம் செய்த தெற்கு வாழ்ந்திடவும்

தீதிலாத் திருத்தொண்டத்தகை தரவும்

ஆலாலசுந்தரர் அவர் மேல் மனம் போக்கிட

காதல் பெற்ற மங்கையர் பிற காட்சியற்ற கண்பெற்றார் !

36.

என்னை ஆட்கொண்ட ஈசனுக்கே என சுந்தரர்

வண்டுகள் மொய்க்கும் நாண்மலர் கொய்தார்

அவர்செல்ல குளிர்ப்பூக்களைப் பறித்தபடி

அன்னங்களென அம்மங்கையர் சென்றனர்

37.

ஆதிமூர்த்தி ஆலால சுந்தரர் நோக்கினார்

மாதர் மேல் மனம் வைத்தானை

தென்புவி மீது தோன்றுக .. அம்மெல்லியலாடேன்

காதல் இன்பம் கலந்து அணைக என்றேன் புரிய

38.

தலைக்கு மேல் கைகள் அஞ்சலித்துக் கலங்கினான்

செம்மையான தங்கள் திருவடி நீங்கி

சிறுமையும் மையலுமாய் மானுடனாகி மயங்கும் போது

ஐயனே ! தடுத்தாண்டருள் அருள் புரிவீர் என்றார்.

39.

கண் போன்ற இறைவன் அதற்கருள் செய்தபின்

நங்கையும் நம்பியும் முன்பு கூறிய தெந்திசையில்

மனிதப் பிறப்பில் போந்தனர் இன்பம் அடைந்தனர்

இங்கு மீண்டும் வருகின்றனர் முனிவர் பகர்ந்தார்.

40.

அந்தணர்கள் யாவரும் அது கேட்டனர்

பந்தம்படும் மானுடர்க்கு தெந்திசை மட்டும்

வான் திசை எட்டினைக் காட்டிலும்

செய்த புண்ணியம் யாதென வினவினர்.

41.

ஒப்பிலாதவத்தான் புலிக்காலன் எனும்

என் தந்தை வியாக்கிரபாதர் அர்சித்த திசை தென்திசை

பெருமை சேர் பெரும்பற்றப் புலியூர் என

ஒருமையானர்க்கு இருப்பிடமாகுமே.

42.

அத்தலத்தில்தான் அத்திசையில்தான்

மெய்த் தவக்கொடி சிவகாம சுந்தரி காண

அத்தன் நெடிய திருக்கூத்தாடுகிறான்

வேறு எத்திசையும் இத்திசைப்போல் பெருமையுண்டோ ?

43.

அனைத்து உயிர்களின் உள்ளிருந்த மலரென

வேத மூலம் வெளிப்படும் உலகெனும்

காதல் மங்கையின் இதயகமலம் போன்ற

திருவாரூரில் மாதொரு பாகனார் மலர்ந்திருக்கிறார் ?

44.

என் இறைவி ஏழுலகம் ஈன்றவள்

தம்பிரானாகிய இறையைத் தனித்துவம் செய்து

கம்மையாற்றில் வழிமடு காஞ்சி என்று

தேவரும் போற்றும் திக்கு தெற்கே ஆகும்.

45.

நம் குருநாதர் நந்திதேவர் தவம் செய்ததும்

பொங்கு நீர் கங்கை சடையில் மலர

சிவந்த கைகயினில் தீ மலர

இறைவனின் ஐயாறும் தெற்கே கொண்டது.

— திருஅருளால் தொடரும்.

cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்