பெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

பா.சத்தியமோகன்


866.
தேன் கூடுகளின் தேன் ஒழுகி, கொழுத்தகனிகளின் சாறு ஒழுகி ஆறாகும்
அது வயலில் விளைந்த கரும்புச்சாறு பெருகிய ஆற்ற்ில் கலக்கும்
இம்மணம் கமழ் சாற்றின் ஊர் கஞ்சாறு எனும் ஊர்
சிரத்தின் மேல் ஆறுபாயும் செஞ்சடையனார் விரும்பும் ஊர்
நூல் திறம் நன்கு உணர்வார் பாடிப்புகழும் விருப்பமான ஊர்
867.
கருங்குவளை மலர்க்கண் உழவப்பெண்கள்
களைகளில் தப்பிப் பிழைத்து ஒதுங்கி
நீர் உள்ளே புகுந்ததால் செழித்து நின்று பூவின் சிவப்பு காட்டும்
தண்ணீர்ப் பூவான செங்கழு நீர்ப்பூக்களுக்கு நெற்கதிர்கள் தலை வணங்கும்
மண்ணும் நீரும் நலம் சிறந்து
வளமாகும் வயல்களும் அயல்களும் எங்கும் உள்ளன.
868.
பிடரியானது மேகம் போன்ற கூந்தலைக் காட்டும்
இடையானது புனமயிலின் இயல்காட்டும்
அங்குள்ள உழத்தியர் கண் முயல் காட்டும்
முகத்தால் மதி தோற்கும்
அவர்தம் கண்கள் காட்டும் கயல் மீன்கள் காட்டிட
பலபெரிய நீர்நிலைகள் வயல்களில் உள்ளன.
869.
சேறு அணிந்த அழகிய மருதநிலத்தின் கொழுத்த கதிர்கள்
மேலே சென்று
வயலின் அருகில் அடுத்துள்ள வேலிப்பக்கம்
பசிய பாக்கு மரத்தின் குலையை வளைத்தன
வண்டு அலையும் சோலை வாழ் உழவரின் நெடுங்கொடுவாள் போல
கழுத்து வரை வளர்ந்து உள்ளன கதிர்கள்.
870.
அழகிய பல மணி நிறங்களும் மதில்களும் கொண்டது மாடம்
துணியால் ஆன அழகிய கொடிகளும்;
அழகிய பெண் கொடிகளும் கொண்டவை கோபுரங்கள்
தோரணமும் பூரண கும்பமும்
ஓங்கும் மன்மத பாணங்களும் கொண்டவை தெருக்கள்.
871.
நிலைத்த இல்லறத்தின் வழிவந்த
வளங்கள் உடைய வினை பொருந்திய
உழவுத் தொழிலின் குடிகள் விரும்பி
அணிகள் அணிந்த பெண்கள் மயில் போன்று நடம் புரிய
அதற்கேற்ப முழவுகள் கொண்ட வீதி உடையது கஞ்சாறு.
872.
கஞ்சாறு எனும் அவ்வூரில் அரசனுக்கு சேனாதிபதியாக
செப்புதற்கு அரிய புகழுடன் குடி விளங்க திருஅவதாரம் செய்தார்
மெய்ப் பொருளை அறிந்து உணர்ந்தார்
மேலான வேளாண் மரபின் நலநீதி போல
மேன்மை கொண்ட மானக்கஞ்சாறனார்.
873.
பணிவு கொண்ட வடிவுடையவர்
பாம்புடன் பனிமதி சூடிய சடைமுடியார்க்கு
ஆளாகும் பேறு பெற்றவர்
தம்பெருமான் கழல் சார்ந்த துணிவுடைய தொண்டர்க்கே
பணி செய்யும் தொழில் கொண்டவர்.
874.
மாறிலாத பெரும் செல்வத்தின் வளம் பெருக
அவற்றை
கங்கை சூடிய சடைக்கற்றை இறைவரின் அடியவர்களுக்கே
என எண்ணி அவையெல்லாம் அவர்கள் கூறும் முன்னே
அவர்தம் குறிப்பறிந்து கொடுத்து வந்தார்.
875.
பரந்த கடல் சூழ் மண்ணுலகில் இத்தன்மையுடைய
அப்பெரியவர்க்கு முன் சிலகாலம் பிள்ளைப்பேறு இல்லை ஆதலால்
திருமாலும் அறியாத மலர்க்கழல்களைத்
திருவருள் தூண்டுதலால் துதித்தார்
ஏனெனில் அவர் அறியாமையை அறியாதவர்.
876.
குழை அசையும் வடிந்த காதுடைய கூத்தனார் அருளாலே
மழை பொழிய உதவும் பெருங்கற்புடைய மனைவியிடம்
செய்வினைப் பயனால் சூழ்ந்த
இப்பிறவியின் கொடும் சூழலிலிருந்து பிழைக்கும் வழிஉதவ
கொடியைப் போன்ற பெண்குழந்தை பெற்றெடுத்தார்.
877.
பெண் பிறந்த மகிழ்ச்சியினால்
பெரிய அந்தப்பழவூர் களிப்பில் சிறக்க
சிறப்பும் நிறைவும் கொண்ட மங்கள வாத்தியங்கள் முழங்க
சிவநெறியில் நின்ற அடியவர்க்கெல்லாம்
அளவற்ற வளமும் அருளும் பெருக வைத்து
குழந்தையைப் பாதுகாக்கும் செவிலியர்கள் வாழ்த்த
அப்பொற்கொடியை வளர்த்து வந்தார்.
878.
காப்பு அணிகின்ற இளம் குழந்தைப் பருவம் கூர்ந்து
வண்டுகள் மொய்க்கும் பூக்களை முடிக்கும் கூந்தலும்
பொன்குண்டலமும் உடன் கூடி தாழ்ந்து தொங்க
கட்டிய மென்மையான சிறிய மணிமேகலை அணிந்த சிற்றாடையுடன்
கோர்க்கப்பட்ட கிண்கிணி அசைய
குறுந்தளிர் மெல்லடி ஒதுங்கி நடந்தது.
879.
பெண் அமுதமான அவள்
தமை வளர்க்கும் செவிலியர் சூழ
அவர்கள் நடுவில் அழகிய முற்றத்தில்
மலர் போன்ற மென்மையான கையால் சிறிய மணல் வீடு கட்டினாள்
பால மணிகள் அசைந்து ஓசை செய்ய விளையாடி
முலைகள் அரும்பு போல் அரும்பும்
பேதைப் பருவம் அடைந்தாள்.
880.
பொருந்தும் அழகுத் திருமேனி வெளிப்புறம்
மின்னல் போன்ற இடையை விளங்க முலைகள் வருந்த
முத்தைப் போன்ற புன்சிரிப்பு வெளியில் புலப்படாமல்
புன்சிரிப்பு பூக்கும் மென்கொடி போன்ற இடையும்
அழகிய தளிர் செங்கையும் உடைய
குற்றமிலா குலத்தில் உண்டான கொழுந்தைப் போன்ற
அப்பெண்ணுக்கு மணப்பருவம் வந்தது.
881.
திருமகள் இலக்குமிக்கு மேலாக விளங்கும்
செம்மணி விளக்கு போன்று விளங்கும் அப்பெண்மகளை
மண்ணுலகில் ஓங்கும் வேளாண்குல மரபினரான
நீலகண்டமுடைய மறையவரின் அன்பரான
வீரக்கழல் அணிந்த ஏயர் கோன் கலிக்காமருக்கு
மணம் பேச வந்தனர் பெரியோர்
– ( திருவருளால் தொடரும் )
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்