பெரியபுராணம் – 23

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

பா. சத்தியமோகன்


12 . விறன்மிண்டநாயனார் புராணம்
491.
மணங்கமழ் கொன்றை மாலையும் சடையும் உடைய
சிவபெருமானின் திருவடிகள் வணங்கித்
பெரும் தவம் செய்த பரசுராமன் எனும் முனிவனைப் பெற்ற நாடு
அலை கடலில் உண்டாகும் வளங்களும்
நிலத்தினால் உண்டாகும் வளங்களும்
ஒரு சேரப் பெருகி மிகுகின்ற மலைநாடு.
492.
வாரிச் சொரியும் கடல் முத்தும்
வயல் மென் கரும்பில் விளைகின்ற முத்தும்
மூங்கிலில் விளையும் குளிர் முத்தும்
பெண்களின் வெண் முத்து போன்ற
நகைக்கும் பல் வரிசைகள் கொண்ட ஊர்
சேர நாட்டிலேயே சிறந்த பழமையான திருச்செங்குன்றூர்.
493.
செங்குன்றூர் எனும் பெயரில் விளங்கிஉலகம் ஏத்தும் பெருமையுடையது
வயல்களில் அன்னப்பறவை பழகும்
உழவுத் தொழில் வளத்தால் ஆராய்ந்த மறையின்படி நெறி தவறாமல் நடக்கின்ற
தூய குடியில் விளங்கும் நிலைத்த குலத்தின்
மாமறைநூல் மரபில் வந்த பெரியோர் வாழும் ஊர் அவ்வூராகும்.
494.
எம்பிரான் விறன்மிண்டர்
அவ்வழகிய நகரத்தில் வேளாள குலத்தில்
கூறுவதற்கரிய சிவபெருமானின் புகழையே
பற்றுக் கோடாகக் கொண்டு எல்லாப் பற்றும் நீக்குவார்
எல்லையிலா உண்மை அடியாரிடம் மிக்க அன்பு கொள்வார்.
495.
கங்கையும் பிறையும் புனைந்த
சடையுடைய சிவபெருமான் விரும்பி வெளிப்பட்டு அருள்வதால்
தலங்கள் எங்கெங்கும் கும்பிட்டுச் செல்லும் ஆசையினால் செல்பவரையும்
வணங்குகின்ற முதிர்ந்த அன்புத் தொண்டர்
நீண்ட திருக்கூட்டத்தின் அருள் பெற்றார்
இறைவர் பாதம் வணங்கப் பெற்றார்.
496.
பொன் கொழிக்கும் அருவி பாயும் மலைநாடு கடந்து
கடல் சூழ்ந்த உலகில் எங்கும் சென்று
இறைவனது அடியார் ஒழுக்கம் நிலைக்கச் செய்தார்
வன்மையுடைய மேரு மலையை வில்லாய் வளைத்து
திரிபுரங்கள் எரித்து
வேதங்கள் பூட்டிய தேர் மீது நின்ற
சிவபெருமான் வீற்றிருக்கும் திருவாரூர் சென்று வணங்கினார் விறன்மிண்டர்.
497.
அருட் செல்வம் நிறைந்த பெருமையுடன்
எந்நாளும் விளங்கும் திருவாரூர் தேவாசிரியன் மண்டபத்தில்
பொலிவுமிக்க சிவனடியாரைத் தொழுது அவர்களிடம் வராமல்
ஒரு பக்கமாகஒதுங்கிச் சென்றதால்
?வன்தொண்டன் புறகு ? ( புறம்பாவான் ) எனக் கூறுவதற்கு
சிவனருளால் பெருகும் பெரிய பேறு பெற்றார்.
மேலும் பெற நின்றார்.
(வன்தொண்டர் புறகு – சிவனடியாரை வணங்காது ஒதுங்கியது)
498.
தொலைதூரம் விளங்கி நிற்கும் மேருமலையை
வில்லாய் வளைத்த சிவபெருமானின் அடியார்த் திருக்கூட்டம்
பேணாது செல்கின்ற நம்பி ஆரூரர்க்கும்
தலையில் பிறை சூடி பாம்பு அணிந்த பெருமான்
?புறகு ? என்று உரைத்தார்.
பிறகு அவர்களிடம் கோணாத அருளையும் பெற்றார்
இதை விடப் பெருமை யார் கூறவல்லார் ?
499.
உலகம் உய்வதற்காக
நாம் உய்வதற்காக
சைவநன்னெறி ஒழுக்கம் உய்வதற்காக
முன்பு நம்பி ஆரூரர் பாட
செழுமையான நான் மறைகள் ஓலமிட்டும்
உணரமுடியாத சிவபெருமான்
?நாம் இருப்பது அடியார்களுடனே ? என்று உரைப்பாரானால்
யார்தான் சிவனடியார் பெருமை அறிந்தவர்!
500.
இது போன்றே பலகாலம் இவ்வுலகில்
சைவப்பெரும் தன்மை காத்துக் கொண்டு
சைவ நெறி போற்றி வாழ்ந்த விறன்மிண்டர்
ஏற்ற வருகையால் தம்பெருமான் அருளாலே
சிவபெருமான் திருநிழலில் கணநாயகர் ஆனார்.
( கணநாயகர் -சிவகணங்களின் தலைவர் )
501.
வேறு பலவும் சொல்லி என்ன பயன் ?
திருத்தொண்டத்தகையால் உலகம் விளங்கி
பெரும் பேற்றுக்குக் காரணரான விறன்மிண்டர்
பெருமை கூறும் சொல்திறம்
என் சொல் ஆற்றலுள் அடங்குமோ
அவர்தம் திருவடி வணங்கி
பழையாறை வணிகரான
அமர்நீதி நாயனார் திருத்தொண்டின் இயல்பு சொல்வோம்.
(விறன்மிண்ட நாயனார் புராணம் முற்றிற்று )
(திருவருளால் தொடரும் )
—-
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்