பா.சத்தியமோகன்
3292.
அழகிய திருவாரூரில்
மணிப்புறத்தில் அமர்ந்து
அருள்தரும் பெருமானைப் பணிகின்றார் ஆரூரர்;
ஒருநாளில் –
இறைவரைப் போற்றும் திருப்பதிகத்தில்
தணியாத ஆனந்தம் மேலெழ
திருத்தொண்டருடன்
பேரரருள் திறத்தை வினவும் வகையால்
பதிகத்தால்
தொழுதார் பாடினார்.
3293.
தொடங்கிய பதிகத்தின் பண் நிறைவுசெய்ய
“பாறுதாங்கி” எனத் தொடங்கி
உள்ளத்தில் நிறையும் மனக்களிப்பினால்
பதிகத்தை முடித்தார்
திருமேனி –
மயிர்க்கூச்செறிப்பு கொண்டது
கண்கள் நிறைந்து –
நீர் சொறிந்தது
அளவிலா ஆனந்தம் –
எண்ண இயலா அளவு தோன்றத் துதித்தார்
மகிழ்ந்து இன்புற்றார்.
3294.
இன்பமுடன் அங்கு தங்கியிருந்த நாளில்
எல்லையிலா வேதங்கள் துதித்து வணங்குகின்ற
வலிமையான புற்றின்
அரவம் அணிந்த சிவபெருமானின் அருள் பெற்று
அன்பு கொண்ட காதலுடன்
அளவிலாத பிறதலங்களும் சென்றார் —
பொன்னின் ஒளி கூட கருமைதான் என்கிற அளவு
ஒளி வீசும் சடையுடைய இறைவரை வணங்க!
(அரவம்- பாம்பு)
3295.
பரிவாரங்கள் உடன் வந்தன
பக்கங்களில் உள்ள தலங்கள் எங்கும் சென்றார்
யானைத் தோலை உரித்த இறைவரின் திருவடிகள் தொழுதார்
மகிழ்வோடு துதித்து
குற்றமிலாத நல்ல பெரும் தொண்டரான நம்பி ஆரூரர்
திருநள்ளாறு தொழ எண்ணினார்
சிவத்திருத்தொண்டர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர்
அங்கு சென்றார்.
3296.
விண் தடவும் கோபுரத்தைப் பணிந்தார்
தலை உச்சி மீது கரம் குவித்தார்
கோவிலை வலம் வந்தார்
மிக்க பேரன்புடன்
நிலை பெற்ற திருநள்ளாறு இறைவரின்
தாமரை போன்ற அழகிய திருவடிகளை
நிலத்தில் பொருந்துமாறு விழுந்து வணங்கினார்.
3297.
நெற்றிக்கண் உடைய இறைவரைப் பணிந்தார்
வணங்கித் துதித்தார்
அருள் பெற்று விடைப்பெற்றார்
மேகங்கள் உலாவும் அழகிய மாடங்கள் நிறைந்த
திருக்கடவூர் சென்று அடைந்தார்
பிறைச்சந்திரன் வளரும் திருமுடி உடைய இறைவரின்
திருக்கடவூர் மயானம் பணிந்தார்
பொங்கும் இசையுடைய
“மருவார்க் கொன்றை” எனும் பதிகம் பாடித் துதித்தார்.
3298.
திருக்கடவூரில் உள்ள வீரத்தலத்தில்
தேவர்களின் தலைவரான சிவபெருமான்
சினம் பொருந்திய இயமனின் வீரத்தைத் தொலைத்த
சிவபெருமான் திருவடியினைப் பணிந்தார்
“பொடியார் மேனி” எனத் தொடங்கும்
அன்பும் ஈரமும் மிகுந்த தமிழ்மாலைப்பதிகம்
புனைந்து துதித்தார்
பிறகு
மேருமலை வளைத்த பெருவீரர் அருள்புரியும்
திருவலம்புரம் எனும் தலத்திற்குச் சென்றார்.
3299.
மலை போன்ற மதிலுடைய திருவலம்புரத்தில்
இறைவர் கழல் வணங்கினார்
“எனக்கினி” எனத்தொடங்கும்
அழகிய ஓசை மிகு பதிகம் பாடினார்
சங்கு வரிசை வாத்தியங்களுடன்
அலைநுரைத் திவலைகள் எனும் தூபத்தை
அலைகள் எனும் கரங்களால் எடுத்துக் கொண்டு
கடல் வணங்கி வழிபடும்
திருச்சாய்க்காடு அடைந்தார்.
3300.
தேவர்பெருமான் சிவபிரானை
திருச்சாய்க்காட்டினில் வணங்கினார்
பாக்களின் தன்மை விளங்கும்
செந்தமிழ் மாலையான திருப்பதிகத்தைப் பாடிச் சென்று
பகைவர்களின் முப்புரம் எரித்த
திருவெண்காடு வணங்கித் துதித்து
நாவலராகிய நம்பி ஆரூரர்
திருநனிப்பள்ளி எனும் திருநகரம் அடைந்தார்
(மடங்கொள்நாகம் எனும் பதிகம் வெண்காட்டில் அருளினார்)
3301.
திருநனிப்பள்ளியில் அமர்ந்து
சிவபெருமானின் திருவடி வணங்கி
நல்ல தமிழின்
இனிய தூய மாலை பாடிப்புனைந்தார்
திருச்செம்பொன் பள்ளி முதலாக
பனிமதி சூடிய சடையாரின் பதிகள் பலவும் பணிந்து
ஒப்பில்லாத காளை மேல் வருகிற
இறைவரின் திருநின்றியூர் சேர்ந்தார்.
3302.
திருநின்றியூர் இறைவரை
நேயத்தோடு
உள்ளே புகுந்து வணங்கினார்
வணங்கி ஒன்றிப்போய்
அன்பு உள்ளே உருக பாடத் தொடங்கினார்
ஆளுடைய அரசுகள் எக்காலத்திம்
உலகத்துன்பம் நீங்கி
இன்பம் அடையுமாறு பாடிய
ஏழு எழுநூறு பதிகங்களைப் பாராட்டும்
அழகிய சொற்கள் சூடிய திருப்பதிகம் ஒன்று பாடினார்
(திருநின்றியூரில் “திருவும் வன்மையுடன்” எனத்தொடங்கும் பதிகம் பாடினார்)
(நாவுக்கரசர் பாடியது 7து 700 பதிகங்கள்)
3303.
அந்தத் தலத்தில்
அன்பர்களுடன் அமர்ந்திருந்தார் அகன்றார்
பிறகு புறப்பட்டு
செப்ப முடியாத புகழுடைய
நீடுரை
பணியாமல் சென்றபோது
ஒப்பிட முடியாத உணர்வினால் நினைந்து கொண்டார்
வந்தார் தொழுதார்
மெய்ப்பொருளான வளமிகு தமிழ்மாலைப்பதிகம் விளம்பினார்
திரும்பவும் வந்து சேர்ந்தார்.
3304.
இதழ்கள் பொருந்திய
மலர்ந்த
நீர் நிறைந்த
வளம் உடைய திருநீடுரில் அமரும் இறைவரின்
திருவடியை வணங்காமல் விடலாமோ
எனும் ஆசை மிகுந்த திருப்பதிகத்தை
வல்லமை மிகு சூலப்படை உடைய
சிவபெருமானின் திருவடிகளை வணங்கி
உடலெங்கும் மயிர்புளகம் தோன்ற
மிகவும் பணிந்து பாடினார்
அங்கு
தங்கியிருந்தார்.
3305.
அங்கு
இனிதாகத் தங்கியிருந்து விடைபெற்றார்
திருப்புன்கூர் சென்று வணங்கினார்
மணம் மிகு மலர்ச்சோலை சூழ்ந்த
திருக்கோலக்கா சேர்ந்தார்
கங்கையினைச் சடை மீது கொண்ட சிவபெருமான்
எதிரிலேயே காட்சி கொடுத்தார் அருளினார்
பொங்கும் விருப்பத்தோடு
திருப்பதிகம் பாடி வணங்கினார்.
3306.
திருஞானசம்பந்தர் தமது திருக்கைகளால்
தாள இசையுடன்
ஒத்துப் பெருகும் ஆர்வத்துடன் பாடினார்
பிஞ்ஞகனாகிய சிவபெருமான் கண்டு இரங்கினார்
சிவன் திருவருளால்
பொன்தானம் பெற்ற தன்மையினப் பாராட்டும்
திருப்பதிகத்தைப் பாடித் துதித்தார்.
(“புற்றில்” எனத் தொடங்கும் பதிகம் திருக்கோலக்காவில் அருளியது
ஞானசம்பந்தருக்கு பொன் தானம் இறைவரால் திருக்கோலக்காவில் அருளப்பட்டது)
3307.
எக்காலத்திலும்
முதுமை அடையாத
முழுமுதலாகிய சிவபெருமானின்
திருக்கோலக்கா விட்டு அகன்றார்
தாழாத புகழுடைய சண்பைநகர் (சீகாழி)
வலமாக வந்தார்
வீழ்ந்து வணங்கினார்.
நாவார்ந்த முத்தமிழ் வல்லுநரான
ஞானசம்பந்தரின் திருவடி வணங்கி
பகைவர்களின் முப்புரங்கள் அழித்த இறைவரின்
திருக்கருக்காவூர் சென்றார்.
3308.
பெருகும் நீருக்காக
தாகமுடன் (வேட்கை)
உற்ற பசியுடன்
மிகவும் வருந்தி
பண்ணின் நீர்மைமிகு மொழி உடைய பரவையாரின்
கணவரான நம்பி ஆரூரர் வருகிற பாதையில்
கண் பொருந்திய நெற்றியுடைய இறைவர்
நம்பி ஆரூரரின் பக்தியும் காதலும் அறிந்து
தண்ணீரும்
கட்டு சோறும்
அவ்வழியில் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தார்.
3309.
வேனில்காலத்தின் வெய்யில் வாட்டியது
வெம்மை தணிக்க
மணமும் குளிர்ச்சியும் உடைய
மென்மையான
செங்கழுநீர் பொய்கை போன்ற பந்தலை
ஒரு புறம் அமைத்தார்.
மான் பொருந்திய கரமுடைய இறைவர்
அந்தணராகி
அருள் வேடமிட்டுக் காத்திருந்தார் –
வன்தொண்டரான நம்பி ஆரூரருக்காக.
3310.
திருக்குருகாவூரில் அமர்ந்துஅருள் புரியும்
அழகரான சிவபெருமான் –
நாவலூர் நம்பி வரவிருக்கின்ற வழியையே
பார்த்துக் கொண்டிருந்தார்
அங்கே
திருத்தொண்டர்களுடன் வந்தார் சுந்தரர்!
திருவாரூரில் உள்ள தம்பிரானாகிய இறைவரின் தோழர்
அந்தப்பந்தல் வழியே வந்த பிறகு
அந்தணர் கோலத்தில் இருந்த இறைவரிடம்
சுந்தரரின் ஆர்வம் சென்றது
அவருக்கு அருகே சென்றார்
சிவாயநம எனப்பேசி அமர்ந்தார் சுந்தரர்
3311.
வட ஆலமரத்தின் கீழிருந்து
நம்பி ஆருரரை எதிநோக்கியிருந்த சிவபெருமான்
“ மிகுந்த பசியுடன் இருக்கிறீர்கள்
இந்த
பொதிசோறு ( கட்டுசோறு ) தருகின்றேன்
இனியும் காலம் தாழ்த்தாமல்
இதனை
கைக்கொள்க;
இனிதாய் உண்ணுக
ஏல நறும் குளிர் நீர் பருகி
இளைப்பும் களைப்பும் தீர்க” எனக்கூற —
3312.
வன்தொண்டராகிய சுந்தரர் அதனைக்கேட்டு
“இந்த மறைமுனிவர் தருகின்ற பொதிசோறு
இன்று நம்மால் மறுப்பது ஆகாத காரியம்”
என எண்ணினார்
இசைந்து பெற்றார்
அழகிய பொன்நூல் அணிந்த மார்பர்
இறைவர் தந்த கூட்டுச்சோற்றை வாங்கிச் சென்று
தம்முடன் வந்த திருத்தொண்டர்களுடன்
திருவமுது செய்தார்
உண்டு முடித்தார்
3313.
எண்ணிலாத பரிவாரங்கள் எல்லாரும்
இனிதாய் உணவு அருந்தச் செய்தார்
பிறகு
அந்தப் பக்கத்தில்
பசித்து வந்தவர்களையும் உண்ணச் செய்தார்
உண்ண உண்ண
உணவாகிய அமுதம் போன்ற கட்டுசோறு
ஒருக்காலும்
குறைவு படாமலே இருந்தது ! பொலிந்தது!
3314.
சங்கரனார் திருவருள் போல
தண்ணீரின் சுவை குளிர்ந்து இருந்தது
அதன் சுவை மேலும் மேலும் அதிகரித்தது
அன்பினால்
அவர் திருநாமத்தை புகழ்ந்து போற்றினர்
அயர்ந்து இளைப்பாறினார் நம்பி ஆரூரர்
பக்கத்தில் இருந்தவர்களும் உறங்கினர்
கங்கைச் சடையுடைய சிவபெருமான் –
அந்தப் பந்தலுடன்
தாமும் மறைந்தார்.
(சங்கரனார்- சிவபெருமான்)
3315.
சித்த நிலையில் திரிதல் இல்லாத
திருநாவலூர் மன்னர் நம்பி ஆரூரர்
உறக்கத்திலிருந்து பள்ளி எழுந்தார்
அவ்வேதியரைக் காணவில்லை!
“இத்தனையோ மாற்றம் அறிந்திலேன்” என
திருப்பதிகம் தொடங்கினார்
பிறகு
திருக்குருக்காவூர் சென்று அடைந்தார்.
3316.
திருக்குருக்காவூரில் விரும்பி இருந்து அருள்கின்ற
குழகனாராகிய சிவபெருமான் கோயிலுக்கு அருகில் சார்ந்தார்
கோபுரம் சேர்ந்தார்
நெருங்கினார் வணங்கினார்
உள்புகுந்தார்
காதல் நிரம்பிட வலம் வந்து
இறைவர் திருமுன்பு வணங்கினார்
பருகாத இனிய அமுதமான
சிவபெருமானைக் கண்களால் பருகினார்.
(காதல்- பக்தி)
3317.
கண் நிறைந்த இனிய அமுதமாகிய சிவபெருமானை
கைக்குளிரத் தொழுது வணங்கினார்
பண் நிறைந்த திருப்பதிகத்தைப் பாடி வணங்கித் தொழுதார்
உள்ளத்தில் நிறைந்த பெருங்காதலுடன்
சிவயோகி நிலையில் நாடி நுகரும்
பெரும் பக்திக்காதல் உடைய
நம்பிஆருரர் வெளியே வந்தார்
மிகவும் விருப்பத்துடன் அத்தலத்தில் தங்கியிருந்தார்.
3318.
அத்தகைய நாட்களில்
நம்பி ஆரூரர்
தமது இறைவரான சிவபெருமானின்
அருள் சேர விடைபெற்றார்
மின்னலென ஒளி விளங்கும் சடையுடைய
இறைவர் வீற்றிருக்கும் தலங்கள் பலவும் வணங்கினார்
கல்லால் ஆன மதில் சூழ்ந்த
திருக்கழிப்பாலை வணங்கினார்
பிறகு
தில்லை நகரம் வந்து அடைந்தார்.
(தில்லை- சிதம்பரம்)
3319.
சீரும் சிறப்பும் வளர்கின்ற தில்லையின்
திருவீதிகள் பணிந்தார் புகுந்தார்
அழகு வளரும் பொன்னம்பலத்தில் ஆடும்
தூக்கிய சேவடியை வணங்கினார்
உலகம் வாழ
வேதம் வளர்க்கும் அந்தத் தலத்தை வணங்கிய சுந்தரர்
மேருமலையான வில் உடைய சிவபெருமானின்
திருத்தினை நகருக்குச் சென்றார்.
3320.
திருத்தினை மாநகரில் எழுந்தருளும்
சிவக்கொழுந்தான இறைவரை வணங்கிச் சென்றார்
ஆனந்தக் கூத்தர் விரும்பி அருள்கின்ற
நிறைந்த பல தலங்களும் வணங்கினார்
பிறகு
பொருத்தம் மிகுந்த திருத்தொண்டர்கள் போற்றுகிற
திருநாவலூர் அவரது கருத்திலும் உள்ளத்திலும் தோன்றியது
அன்புடன் தொழ அங்கு சென்று அடைந்தார்.
3321.
திருநாவலூர் மன்னர் சுந்தரர் வருகின்ற செய்தி கேட்டு
பெரும் புகழை உடைய
அந்தப் பதியில் உள்ள தொண்டர்கள்
“பெருவாழ்வு வருகின்ற நாளிது” என மகிழ்ந்தனர்
தலத்தை அலங்கரித்தனர்
எதிர் கொண்டு அவரை அழைத்தனர்
யானைத் தோலுரித்து அணிந்த சிவபெருமானின்
செழுமையான கோவில் அடைந்தார்.
3322.
எதிர்கொண்டு வரவேற்ற தொண்டர் குழாம்
நெருங்கி வந்ததும்
அரகர என எழும் ஓசை
மூன்று உலகங்களிலும் சென்று ஒலித்தது
முதல்வனராகிய சிவபெருமானின் முன்பு நின்றார்
அடைவதற்கு
உயிரை விடச் சிறந்தவரான இறைவரின்
திருவடித் தாமரையின் அருளைப் போற்றினார்
“கோவலனான் முகன்” எனும் பதிகம் பாடிக் கும்பிட்டார்.
–இறையருளால் தொடரும்
- கிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்
- புதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் – 11/12/2006
- இலை போட்டாச்சு! – 5 – அவியல்
- ‘இளைஞர் விழிப்பு’
- அளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..
- சூபியின் குழப்பம்
- ஜார்ஜ் ஒர்வலின் 1984
- கடித இலக்கியம் – 35
- சிங்கப்பூர் கணையாழி விருது-2006
- ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்
- ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை
- புதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)
- ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை
- புதிய நாகரிகம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை
- தமிழன் (கி . மு . 2000, கி . பி . 2000)
- ஒன்று ! இரண்டு ! மூன்று !
- மனு நீதி
- பெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- கீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்!
- தேவதையின் கையில்
- இயான் ஹாமில்டன் கவிதைகள்
- சுஜாதா பட் கவிதைகள்
- கற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)
- அரபுநாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம்
- எது ‘நமது’ வரலாறு?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.
- சுயம்பிரகாசம்
- அவல்
- எஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)
- ம ந் தி ர ம்
- மடியில் நெருப்பு – 15
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 14