பெரியபுராணம் – 110 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

பா.சத்தியமோகன்



3137.

அரும்பினைப் போன்ற மென் முலையினரான

அம்மங்கையின்

அழகிய மலர்க் கையைப் பிடித்துக் கொண்டு

அங்கு சென்ற சம்பந்தர்-

தனது திரு உள்ளத்தில்,

“விருப்பம் பொருந்தும் அக்கினியாக விளங்குபவர்

இடபக்கொடியை உயர்த்திய சிவபெருமானே ஆவார்” என்று

திருநல்லூரில் நிகழ்கின்ற பெருமணத்தை

பொருந்திய உள்ளத்திலே

தெளிந்து கொண்டு செல்பவர் ஆனார்.

3138.

மந்திர முறையால் உண்டாக்கி வளர்க்கப்பட்ட எரியை

வலம் வருவதற்காக

அம்மையாரின் திருக்கையைப் பற்றிப்பிடித்து

தாமரைமலர் போன்ற செங்கை கொண்ட பிள்ளையார்

“இந்த இல்வாழ்வான ஒழுக்கநிலை வந்து வாய்த்ததே!

இவளுடன்

அழிவில்லாத சிவபெருமான் திருவடிகள் சேர்வேன்”

என்று ஆசை பெருக —

3139.

“மலர்ச்சியை உடைய பெரிய உறவினர்களோடும்

திருத்தொண்டர் கூட்டத்தினரோடும்

அளவில்லாத

மெய்ஞானத்தின் எல்லையை அடையவேண்டும்” என்ற குறிப்பினால்

அங்கு —

உலகப்பற்று தம்மைச் சேராமல் நீங்க

இறைவருடன் சேரவிரும்பினார்

குலமணம் செய்துவித்த இறைவரின்

“திருப்பெருமணம்” என்ற கோயிலை நோக்கி வந்தார்.

3140.

சிவபெருமான் அமர்ந்து வீற்றிருக்கின்ற

உயிர்களுக்கு அருள் செய்கின்ற

திருப்பெருமணக் கோவிலுக்குள் எய்தினார்-

தவநெறியை வளர்ப்பதற்கே அவதரித்த ஞானசம்பந்தர்

உலகக்காட்சி நீங்கிய

வீடுபேறு நிலை சார்வதற்கான

அருட்குறிப்பு நிலை கண்டார்

“பிறவி வாராமல் என்னை

முற்பிறவியில்

அத்தன்மைக்கு

தம் திருவடிக்கு ஏற்ப

ஆளாகக் கொண்ட அத்தன்மை

புதிதாக மலர்ந்த தாமரைமலர் போன்ற

திருவடிகளில் சேர்ப்பிக்கும்”

என்ற மெய் உணர்வு தோன்றியது

பொருந்தியது

3141.

பக்தியினைப் புலப்படுத்தும்

உண்மையுடைய திருப்பதிகத்தைக்

“நல்லூர்ப் பெருமணம்” எனத் தொடங்கினார் பாடினார்

அங்கு திருமணம் எடுத்துக்கொண்டார்

தீய பிறவிக்குக் காரணமான கன்மங்களை தீர்ப்பதனை

செம்மைப் பொருளாய்க் கொண்டு

“நாதனே! இறைவனே

நல்லூர் கோயில் மேவிய பெருமண நம்பனே !

உம் திருவடிகளாகிய

மெய் பொருந்திய நிழலைச் சேரும்

பருவம் இதுவே” என்று பாடினார்

[ இங்கு பாடிய நமசிவாய பதிகம், “காதலாகி” எனத் தொடங்குவது ]

3142.

தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபெருமானும்

திருவருள் புரிந்து —

“நீயும்

பூவினைப் போன்ற நின் மனைவியும்

இங்கு –

உன் புண்ணிய திருமணத்தில் வந்தவர்கள் யாவரும்

எம்மிடத்தில்

இந்த சோதியுள் வந்து அடைக” என்று

மூன்று உலகங்களும் தம் ஒளியால் மேலிட்டு விம்ம

முழுச்சுடர் ஒன்று

சோதி லிங்கமாகி எழுந்தது.

3143.

திருக்கோயில் உட்பட

மேலே பரந்து ஓங்கும் அந்த சோதியுள்

ஒரு வாயிலையும் அமைத்துக் காட்டினார் –

நிலை பெற்ற புகழையுடைய புகலி மன்னர்.

பரந்த பேரொளியால்

நீண்டு விளங்குகின்ற

பரஞ்சுடரான இறைவரைத் தொழுது போற்றினார்

மிகப்பெரிய உலகில் உள்ள ஆன்மாக்கள்

உய்யும் வழியை

அருளிச் செய்யும் விதமாக.

3144.

மெய்மையுடைய ஞானநெறி

எல்லோருக்கும்

“நமச்சிவாய” எனும் ஐந்தெழுத்துச் சொல்லே ஆகும் என்று

ஆக்கம் பொருந்திய

சிறப்பு கொண்ட

“நமச்சிவாய திருப்பதிகத்தை”

அங்கு

வானமும் நிலமும் கேட்குமாறு அருள் செய்தார்

இத்திருமணத்தில் வந்தவர் எல்லோரும்

“இழிவான பிறவி நீங்க

யாவரும் இவ்வொளியில் புகுக” என்றார்.

3145.

இடையறாது

முறையாய்த் தொடர்ந்து வருகின்ற

பிறவி எனும் வெள்ளத்தில்

வரம்பு காணாமல் அழுந்தி

உடல் எனும் துயரக்கூட்டில்

உணர்வில்லாமல் மயங்குகின்றவர்கள்

அத்திருமணத்திற்கு சென்றிருந்த சிறப்பினால்

பொருந்திய பிறவி நீங்குமாறு

நிலையான அப் பேரொளியில் புகுந்தார்கள்.

3146.

சிறப்பு மிகும்

திருநீலநக்க நாயனார்,

திருமுருக நாயனார் முதலிய தொண்டர்களும்,

தவ ஒழுக்கத்தின் பொலிவு மிக்க சிவபாத இருதயர்,

நம்பாண்டார் நம்பி,

சிறப்பு மிகு ஒழுக்கமுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர்,

மற்றும்

அங்கு வந்தவர்கள் உள்ளிட்ட சுற்றத்தார்களும்

தத்தமது மனைவிகளோடு

அந்த ஒளியில் உடன் புகுந்தார்கள்.

3147.

அழகிய முத்துச்சிவிகையைத் தாங்கிச் சென்றவர் முதல்

மணி முத்து மாலைகளைத் தக்கவாறு

அலங்கரிக்கும் மங்கையர்,

மங்கலம் பெருக வரும் மணிகளை எடுத்து வந்தவர்கள்,

மற்றும் பணி செய்தவர்கள்,

வினைப் பாசங்களெல்லாம் அறுத்த உணர்வு உடையோராய்

வணங்கியபடியே

சோதியில் உடன் புகுந்து ஒடுங்கினர்.

3148.

சைவசமயத்தின் உட்பிரிவான

ஆறுவகை சமயநெறி நின்ற தவத்தினர்களும்

சைவத் தொண்டர்களும்

வேதவிதி ஒழுகும் முனிவர்களும்

கும்பிடும் கருத்துடன் வந்தவர்களும்

முன் குறிப்பிடப்பட்டபடி

எக்காரணமும் இன்றி

திருவருள் வயத்தால் வந்தவர்களும்

எல்லையிலாத பெரும் சோதியுள்

எல்லோரும் புகுந்தபின் —

3149.

காதலியைக் கைப்பற்றிக் கொண்டு

அந்த சோதியை வலமாக வந்தார்

உலகில் தீமை அகற்ற அவதரித்த திருஞானசம்பந்தர்

சிவபெருமானின்

எழில் வளரும் சோதியை அடைந்து

அதனுள் புகுந்தார்

போத நிலை முடிந்ததால்

உள்ளே புகுந்து

ஒன்றாய்ச் சேர்ந்து

சிவானந்த நிறைவுடன் நிறைவானார்.

3150.

ஞானசம்பந்தர் போய் உட்புகுந்த பின்

பேரானந்தப் பெருங்கூத்தனாகிய இறைவர்

இவ்விதம்

மணத்தில் வந்தோரையும்

ஞான சம்பந்தப்பிள்ளையாரையும்

தம்முடன் கொள்ளும் வரையிலும் நீண்டிருந்த

சோதிக்குறி நிலையையும்

அதன் உட்புகக் காட்டிய அந்த வாயிலையும்

மறையுமாறு செய்தார்

தெளிந்த நீர் உள்ள உலகத்தில்

இந்தப்பேறு பெறாதவர்

மயங்கி வருந்தினர்.

3151.

நெற்றியில் விழியுடைய சிவபெருமான் திருமேனியுடன்

திருஞானசம்பந்தரான கவுணியனார் சென்ற காட்சியை

தாம் தாம் நின்ற

நிறை தூரத்திலிருந்தே கண்டு

வந்தடையப் பேறு பெறாத தேவர்களும் முனிவர்களும்

நான்முகன் முதலான பெரும் தேவர்களும்

மற்றும் எண்ணிலாதவர்களும்

தம் துக்கம் தீரும்படி எடுத்துத் துதித்தனர்.

3152.

அரிய தமிழுக்கு இருப்பிடமான தழிழாகரர் சரிதத்தை

அடியேனுக்கு

அவரது திருவடிகள் அறிவித்துத் தந்தருளிய

பண்பின் அளவு அறிந்தபடி துதி செய்தேன்.

தாரணி மேல்

பெரிய கொடையும்

உறுதியான வன்மையும்

பேருணர்வும்

திருத்தொண்டு செய்து பெற்ற பண்புடைய

ஏயர்கோன் கலிகாம நாயனார் செய்த திருத்தொண்டைத்

துதித்துச் சொல்வேன்.

( திருஞானசம்பந்த நாயனார் புராணம் முற்றிற்று )

— இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்