பெரியபுராணம் — 109 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

பா.சத்தியமோகன்


3106.

திருவடி மலர்கள் மீது பூத்த

செவ்விய விளக்கின் சோதி போன்று

பொருந்திய முத்துக்கோவைகளை உடைய

மணிவளையைப் பொருத்தமாய்ச் சாத்தினர்

விரிசுடர் ஒளியுடைய பரடுகளின் மீது விளங்கிய

பொன்சரட்டில் கோத்த

பெருகும் ஒளியுடைய முத்து மாலைத் தொங்கல் சாத்தி-

3107.

குளிர்ந்த ஒளி வீசும் பெரிய முத்துகளைப்

பொன்கயிற்றில் கோத்த

கண்கவர் கோவை வரிசை உடைய

ஒளி கொண்ட அரைஞாணை

வெண்சுடர் ஒளி வீசும் முத்துமாலை விரித்த

சுடர் விடும் கச்சத்தின் மீது

வளமை வாய்ந்த அரையில்

மிக்க அழகுடன் ஒளி விளங்க அணிவித்து-

(அரை- இடுப்பு)

3108.

ஒளியை உடைய முத்துக்கோவைகளால் செய்யப்பட்ட

அரைப்பட்டிகையின் மீது

தளிர்கின்ற ஒளி ததும்பும் சன்னவீரம் சாத்தினர்

குளிர்ந்த நிலவொளி வீசும்

முத்துக்கோவையால் செய்த பூண் நூல் சாத்தினர்

குளிர்க் கதிர்களை வீசும் முத்துமாலை ஆரம் சாத்தினர்.

(சன்னவீரம்- வெற்றிமாலை)

3109.

ஒளிவிடும் வயிரக்கட்டு கொண்ட மோதிரத்தை விரலில் சாத்தி

முழந்தாள் வரையிலும் நீண்ட வன்மையான கையில்

முத்தால் ஆன தண்டையும் சாத்தி

நீண்ட ஒளி கொண்ட முழங்கைப் பொட்டுடன்

ஒளி வீசும்

மணி வடங்களை வரிசையால் சாத்தினர்

முத்தால் ஆன தோள் வளையை

தோள் மீது சாத்தி —

3110.

திருக்கழுத்தில்

தெய்வத்தன்மை கொண்ட உருத்திராக்க மாலையுடன்

முத்துக்கள் கோத்த

படரும் ஒளியுடைய வடமும் சாத்தி

அழகின் இலக்கணம் பொருந்திய காதில்

நற்சாதி முத்துக்களால் ஆன

மகரகுண்டலம் விளங்கச் சாத்தி-

3111.

திருநீற்றின் ஒளிதழைத்துப் பெருகும் நெற்றிமீது

விரிந்த சோதியின் வெண்சுடர் மேல் எழுந்ததுபோல

நல்தன்மையுடைய முத்தால் ஆன

குளிர் ஒளிவிடும் திரணை அணிவித்து

பொருந்துமாறு வைத்து

அழகு படுத்திய முத்தால் ஆகிய மகுடம் சாத்தினர்.

3112.

இவ்வாறு

நம்மை ஆட்கொள்கின்ற அழகுமிக்க

தெய்வக்கோலம் கொண்ட மணக்கோலத்தை

அத்தொழிலில் வல்ல அந்தணர் செய்தனர்

மணம் பொருந்திய செந்தாமரைத் தாதுக்களை உடைய

புதிதாய் மலர்ந்த

நீண்ட மாலை அணிந்த மார்பரான ஞானசம்பந்தர்

உருத்திராக்க மாலையை

எல்லா உலகத்தவரும் துதிக்குமாறு வணங்கித்

தாமே எடுத்து அணிந்து கொண்டார்.

3113.

அழகுக்கு அழகு செய்யும் திருவெண்ணீற்றைப்

பஞ்சாட்சரமான ஐந்தெழுத்தை ஓதி அணிந்தார்

பழகிய அன்பர்கள் சூழ

ஒளியுடைய தெருவில் வந்து

இளமையான காளை உடைய சிவபெருமானை

மனம் கொள்ள வணங்கினார்

முழவுகள் ஒலிக்க

முத்துச்சிவிகை மீது அமர்ந்தபோது-

3114.

எழுந்தன சங்குகள் ஒலி

ஒலித்தன இனிய வாத்தியங்களின் ஒலி

பொழிந்தது விசும்பிலிருந்து தேவர்கள் கற்பகப்பூமழை

தொழும் தகுதியுடைய முனிவர்களும் தொண்டர்களும்

சுருதியின் வேத வாழ்த்தொலிகளை எழுப்ப

மேலும் மேலும் பொங்கி

திசைகள் எல்லாவற்றிலும் மலர்ந்தது உலகம் எல்லாம்.

(சுருதி-வேதம்)

3115.

பரந்த பெரிய குஞ்சங்களும் பிச்சங்களும்

பச்சை நிறமுடைய பீலியால் அமைந்த கூட்டங்களும்

நெருக்கமாய் அலங்காரம் செய்த

பொன் தகட்டால் ஆன

வட்டமான அழகிய துணிகளால் ஆன

மேற்கட்டிகளும் நெருங்கிட

கடல் மீது வந்து தோன்றும் கலைகள் நிறைந்த சந்திரன் போல

முத்து வடங்களால் அலங்கரிக்கப்பட்ட

முத்துக்குடை நிழல் செய்ய

ஞானசம்பந்தர் வந்தருளினார்.

3116.

“அழகிய தெருவில்

திருமண எழுச்சி செல்ல

முத்தால் ஆன அழகிய எக்காளமும் திருச்சின்னமும்

ஒளியுடைய தாரையும் இவை யாவும்

வேதங்களுடன் வந்து உய்யும் பொருட்டு

திருஞானசம்பந்தன் வந்தார்” என எடுத்துச் சொல்லி

பேரொலி பெருக ஊதின.

3117.

மண்ணுலகினருக்கு

துன்பமாகிய இடுக்கண் நீங்க வந்தருளிய

ஞானசம்பந்தரின் திருநாமங்கள் பலவற்றையும்

அளவில்லாமல் எடுத்து ஏத்தித் துதித்தனர்

திருச்சின்னங்கள் கூறி எழுந்த அச்சமயத்தில்

அலங்காரம் செய்யப்பெற்ற ஞானசம்பந்தர்

திருமணம் செய்வதற்காக

வந்து சேரும் பேறு பெற்றனர் புண்ணிய மறையோர்

நம்பாண்டரது திருமாளிகையில்

மங்கலங்கள் பொழிந்து பொங்கின.

3118.

முற்றிய மெய்ஞ்ஞானம் பெற்ற ஞானசம்பந்தரின்

சிவந்த திருக்கை பிடிக்க

நல்ல பெரும் தவத்தின்

தன்மை நலங்களை எல்லாம் பெற்று எழுந்த

தெய்வக்கற்பக பூங்கொம்பு போன்ற அம்மையாரையும்

காப்பு அணிவித்து

சங்கற்பம் முதலான சடங்குகளைப்

பரிவுடன் செய்தபோது —

3119.

செம்பொன்னால் ஆன நெற்றிமாலையையும்

அழகிய மணிகள் பதித்த

தொழிற்பாடு உடைய அணிகளையும்

செல்வம் பொருந்திய பொன்னர் மலைகளையும்

வரிசைப்பெறச் சூட்டிய

பவளக்கொடி போன்ற அம்மையாரை

இறைவரின் அருளையே வாழ்த்தி

நல்ல அழகு விளங்க அலங்காரம் செய்து

அழகிய பொன்னால் ஆன விளக்கைப்போல்

அழகையே அலங்கரித்தது போல

அலங்கரித்தனர்.

3120.

வேதத்தில் சிறந்த அந்தண மைந்தர்கள் எல்லோரும்

திருமண எழுச்சியின்போது

முன் வந்து

தூய்மையான மலர்களுடன் செம்பொன் சுண்ணத்தையும்

நவமணிகளையும் வீசினர்

தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் போன்ற அந்தணர்கள்

அரச இலையையும் தருப்பையும் தோய்த்த

அழகிய

பொன் கலச நன்னீரை

மந்திரங்களுடன் கலந்து கூறித் தெளித்தனர்.

3121.

தேவர்கள் பொழிந்த மலர்களின் மழை

வானத்தில் ஒளி தழைக்குமாறு வீசியது

நிறைந்த மணமுடைய தென்றலை மண்ணுலகம் வீசியது

நெருங்கிய ஒளி மிக்க

அழகிய தோரணங்களிடையே சென்று

புண்ணியத்தின் பயனைப் போன்ற சம்பந்தர்

பூம்பந்தலின் முன் சேர்ந்தார்.

3122.

பொன்னை அணிந்த சங்குகளின் கூட்டம்

பொலிவுடன் முழங்கியது

பொருந்திய முத்து வரிசைகள் பெருகி

ஒளி வீசியது முத்துச்சிவிகை

அதிலிருந்து

பல மலர்க்ளும்

நறுமணம் கமழும் பொன் சுண்ணமும்

பரவியிருந்த பாவாடை மீது

முன்னே இறங்கி

மூவுலகமும் உய்யும் பொருட்டுத் தோன்றிய

ஞானசம்பந்தர் வந்தருளினார்.

3123.

அந்தணர் குலத்தவராய்

இல்வாழ்வில் வாழும்

மங்கலம் உடைய மகளிர் எல்லோரும்

நிறைந்த நீரை உடைய பொன்குடங்கள்

வரிசையான அழகிய விளக்குகள்

தேனையுடைய நல்ல மலர்மாலைகள்

நல்ல ஒளியுடைய முளைப்பாலிகை இட்டு வைத்த பொன் தட்டுகள்

உறைத்ததால் விளையும் கலவைச்சாந்து

இவை அனைத்தும் ஏந்தி

மணமகனான ஞானசம்பந்தரை வரவேற்று நின்றார்கள்.

3124.

அங்கு

முன்னமே இட்டு வைத்த

செம்பொன்னால் ஆன அழமிய மணி பதித்த பீடத்தில்

அனைத்தை விடவும் ஓங்கிய ஞானவெள்ளமானது

உள்ளே நிறைந்து

மேலெழுந்து பொழிவது போல

வரிசையாய் அணிந்த முத்துக்களால் ஆன

குளிர்ந்த ஒளி வீசுமாறு ஏறி

திசைகளிலெல்லாம் ஒளிபரப்பி நின்றார்

பரசமயங்களை வென்ற ஞானசம்பந்தர்.

3125.

எதிர்கொண்டு வரவேற்ற மங்கையரின் சாயல்

இளைய மயில் போல இருந்தது.

இனிய மங்கலச் சொற்கள் முன்கொண்டு பாடிய வாழ்த்தொலி

எங்கும் நிறையுமாறு வந்தனர்

அழகான கரகத்தில் உள்ள

மணமுடைய நீரைத்

அவரது திருஉருவம் முன்பு வார்த்தனர்

மிக்க விருப்பத்துடன்

விதிமுறைப்படி

வலமாகச் சுற்றி வந்து

பொருந்திய நல்சடங்குகள் செய்தனர்.

3126.

மங்கலம் பொலிய ஏந்தி வந்த மங்கையர்

முன்னே நடந்து செல்ல

கங்கையின் கொழுந்து போன்ற வெள்ள ஒழுங்கு

சிவந்த பொன்மலையான இமயத்தில் சேர்ந்தது போல

அங்கு

நம்பாண்டார்நம்பிகளின் அழகிய பொன்மாடத்தில்

ஆதி பூமி என்ற மணவறையுள் புகுந்தார்

உலகை வாழ வைப்பதற்காக

முன்னாளில்

வைகையில் ஏட்டினை இட்ட பிள்ளையார்.

3127.

மணம் மிகுந்த அகிலின் தூபப்புகை

மணம்கொண்டு விம்மியது

அழகு விளங்கும்

மணிகளால் வேயப்பட்ட

நல்ல பட்டினால் ஆன

மேற்கட்டின் கீழ்

தூய்மையான மலர்கள் தூவப்பட்ட

ஆசனத்தின் மீது

கொங்கைகள் மேல்

முத்து மாலைகளை அணிந்த

மலர்ந்த முகமுடைய மங்கையர் வாழ்த்திட

சினம் முதலான பகை இல்லாத

சிறப்பு கொண்ட அந்தணர் சூழ

இனிதாய் அங்கு

ஞானசம்பந்தர் எழுந்தருளியபோது-

3128.

தமது மகளை

மணமகளாகக் கொடுக்கப்பெற்ற

செழுமையான மறை முனிவரான நம்பாண்டார்நம்பிகளும்

அரிய தன்மையால் முன்செய்த

மெய்மையான அரிய தவப்பேறுடைய மனைவியாரும்

பெருமகிழ்ச்சியுடன்

பிள்ளையாரின் பாதங்களை விளக்குவதுபோல

ஞானசம்பந்தரின் திருஉருவம் முன்பு

அந்த உரிமையில்

வெண்மையான பசும்பாலையும்

தூய்மையான நீரையும்

ஒரு சேரக் கொண்டு வந்தனர்.

3129.

ஞானசம்பந்தரின் முன் வந்து

தாம் முன்பு செய்த பெருந்தவத்தால் பெற்ற

நன்மை பெருகும் நம்பாண்டார் நம்பிகள்

மணம் வீசும் நீண்ட கூந்தலுடைய மனைவியார்

பொன்கரத்தில் எடுத்து வார்க்க

உள்ளத்தால் நினைக்கும் தியானத்தில்

நடையையுடைய சிவபெருமானே இவர் என்ற எண்ணத்துடன்

ஞானப்பால் உண்ட அவரது அடிகளை-

3130.

விருப்பத்தோடு விளக்கி

தூய நீரை

தலை மேலே தெளித்துக் கொண்டு

மலை போன்ற திருமாளிகை உள்ளும் வெளியேயும் தெளித்த பின்னர்

அழகு மிக்க வயிற்றில் (உதரம்) கொள்ளுமாறு

ஆசையுடன் உட்கொண்டனர்

புளகாங்கிதம் அடையும் உறவினர் (கிளைஞர்) மேலும்

பெருகும் ஆசையுடன் தெளித்தனர்.

3131.

பெருகும் ஒளி ஞானம் உண்ட பிள்ளையாரின்

மலர்க்கை முன்பாக

பொருந்திய மணமுடைய

நீர் நிறைந்த

கமண்டலத்தை முன் ஏந்தினர்

அதன்

மங்கல நீரை வார்த்தனர்

தரும் முறையில்

தம் கோத்திரத்திற்குரிய

குலப்பெயரையும் எடுத்துக்கூறி

“என் அருமையான செல்வமான பாவை போன்ற மகளாரைப்

பிள்ளையாருக்கு அளித்தேன்” என்றார்.

3132.

நல்தவமுடைய கன்னியாரின் கையை

ஞானசம்பந்தரின் செங்கையால் பிடிப்பதற்கு உரிய

பண்புடைய குற்றமிலாத

நல்பொழுது வந்து சேர

பெற்றவர், உடன்பிறந்தவர், பெண்மையுடைய மணப்பெண்ணை

மான் போன்ற கன்னியை

சுற்றம் சூழ்ந்து போற்ற அழைத்துக் கொண்டு

மணமகனான ஞானசம்பந்தர் முன் கொணர்ந்தனர்.

3133.

ஏகமாகிய

மெய்யான சிவஞானம் அடைந்த ஞானசம்பந்தரின்

வலப்பக்கத்தில் வந்து

பாம்பின் படம் போன்ற அல்குல் பொருந்திய

நல்தவத்தின் கொழுந்து போன்ற கன்னியாரை

வானத்தில் நிறைந்த ஒளி பொருந்த வீற்றிருந்த

வெள்ளை மேகத்துடன் பொருந்தும்

மின்னல் கொடி போல

அமரச் செய்தனர்.

3134.

புனிதமான மெய்க்கோலத்துடன்

நீண்ட புகழுள்ள புகலி வேந்தரான ஞானசம்பந்தரை

வளைந்த வில் போன்ற புருவங்களையுடைய

மென்பூங்கொடி போன்ற தேவியாருடன் சேர்த்து

மிக ஆர்வத்துடன் கண்டபோது

நல்ல மங்கலங்களைக் கூறி

கண் இமைக்காமல் வாழ்த்தும் விதத்தால்

மக்களும் தேவர்கள் ஆயினர்.

3135.

வரிசை பெற அழகு படுத்தப்பட்டிருந்தது

பசும்பொன்னால் ஆன பந்தல்!

அதன் நடுவில்

சித்திரம் அமைந்த மேற்கூரை கீழே

செழுமையுடைய நீலநக்கர் ஆசிரியராக இருந்து

முத்தமிழ் விரகரான ஞானசம்பந்தர் முன்பு

முதன்மையான மறைநூல் விதிச்சடங்குகளை

மெய்ப்பொருளான நம்பெருமானின் திருவடிகளைப் பொருந்தும்படி

உள்ளத்துடன் செய்தார்.

3136.

மறை ஒலிகள் பொங்கி ஓங்கின

மங்கல வாழ்தொலிகள் மிகுந்தன

நிறைந்த வளையல்கள் அணிந்த மணப்பெண்ணின்

சிவந்த கையை

ஞானசம்பந்தப் பெருமான் பற்றுமாறு

நேரிய அணிகள் அணிந்த

அந்தக்கன்னியின்முன்

பொறுமை எனும் அணி அணிந்த

முந்நூல் மார்பரான நீலநக்கநாயனார்

வெண் பொரியைக் கையில் எடுத்து

சிவபெருமானை வணங்கியபடியே

ஆகுதியாகப் பெய்தார்

எரியை வலமாக வருவதற்கு எண்ணி,

–இறையருளால் தொடரும்


pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்