பெரியபுராணம் – 108 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

பா.சத்தியமோகன்


3075.

சிறந்த வேதநூல்களில் விதித்த சடங்குகளின் பொருட்டும்

வகுக்கப்பட்ட முறை வழியே வந்த மரபினாலும்

தூய மணத்துக்குரிய

நல்ல வேள்விப் பொருட்களை அமைத்து

ஒழுங்குபடுத்துபவர்களின் தொழில் நிகழ்ந்தது

நான்முகனைப் போன்ற பெருந்தவ மறையோர் எடுத்த

பூக்கள் பொருந்திய பொற்கலசங்களில்

புண்ணியநீர் அழகுடன் திகழ்ந்தது

(கலசம்-குடம்)

3076.

குங்குமப்பூவின் செழுமையான சேறான சந்தனக்குழம்பைக்

கூட்டி அமைப்போர் இனங்கள் குழுமின

பொங்கும் மணமுடைய புதுக்கலவையின்

தூபப்புகை எடுப்பவர் கூட்டம் பெருகியது

உயர்வுடைய நறுமணம் உள்ள

கற்பூரச் சுண்ணம் இடிப்போர் நெருங்கினர்

எங்கும்

மலர்களால் ஆன பிணையல் முதலான

பலவகைப்பட்ட மாலைகள் தொகுப்போர் கூட்டம் பெருகியது.

3077.

இப்படியாக

பலவிதப்பட்ட தொழில்களும்

எல்லாப் பக்கங்களிலும் ஒழுங்குபடச் செய்கின்ற

மனைகள் உள்ள வீதிகளிலெல்லாம்

மணவிழாவை

விளக்கமாகக் காட்டுகின்ற

மறையவர்கள் வாழும் அந்த மூதூர்

நினைப்பதற்கும் அரிய பெரிய வளங்கள் நெருங்கியதால்

குபேரனை ஏவி

சிவபெருமானே சமைத்ததுபோல விளங்கியது.

3078.

மாறுபாடில்லாமல்

நிறைந்த வளம் தரும் புகலியில்

திருமணம் மேற்கொள்ளும் திருநாளின் முன் நாளில்

அந்தணர் குழாமும்

திருநீறு அணிந்த தொண்டர்களும் சேர்ந்து

நிகரில்லாத ஞானசம்பந்தருக்கு

கங்கை ஆறு சூடிய இறைவரின்

அருள் பொருந்திய திருக்காப்பு நாணை அணிவித்தனர்.

3079.

வேதவாய்மையில் கூறும் விதிகள்

இச்செய்கை மூலம் விளங்குமாறும்

கடல்சூழ் உலகத்தின் நடைமுறை ஒழுக்கங்கள் பெருகுவதற்காகவும்

காதல் நீண்ட திருத்தொண்டர்களும்

ஆடவர்களும் கூடி

பொன்னால் ஆன காப்பு நாணை

நகர்வலம் வருமாறு செய்தனர்.

3080.

காப்புநாணை

நகர்வலம் வரச்செய்து புகுந்த பின்பு

நவமணிகளால் ஆன

குற்றமிலாத ஓவியங்களால்

கட்டி அமைக்கப்பட்ட மண்டபத்தில்

வைதிக நூல்களில் விதித்த விதிகளின்படி

சமாவர்த்தனமாகிய தன்மை திகழும்படி

சிறந்த ஞானசம்பந்தச் செம்மலாரின்

திருமுன்பு சேர்ந்தனர்.

3081.

செம்பொன்னால் ஆன தட்டில்

செந்நெல்லால் ஆன வெண்பரப்பின் மீது

மணம் பொருந்திய நீண்ட மாலைகள்

இருபக்கங்களிலும் அமைக்கப்பட்ட

வாசம் மிகுந்த நீர் நிறைந்த பொன்குடமும்

அரசிலையும் தருப்பையும்

பரவிய நீண்ட சுடர்தரும் அழகிய விளக்கு ஒளிரும் பரப்பினில்

3082.

நாத மங்கல முழக்கத்தோடு

நல்ல தவ முனிவர்களின் வேத கீதமும் விம்மிட

நறுமணம் கமழும் மலர்களும்

சாந்தும் அணிகளும்

அழகிய ஆடையும் புனைந்த புண்ணியம்போல

மலர் அமளி மீது வீற்றிருந்தார் ஞானசம்பந்தர்

அவர் முன்பு அடைந்து —

3083.

ஆர்வம் மிகுந்து எழுவதால் உண்டான அன்பினால்

தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனைப் போன்ற

சிறந்த மறைவிதித் தொழில் செய்யும்

சடங்குகளைச் செய்யும்

நூல்வல்ல முனிவர்கள்

உலகில் பிறவி எடுக்க வரும்

இருவினைகளின் பந்தத்தையும் சார்பையும் ஒழிப்பவரான

ஞானசம்பந்தரின் திருக்கையில்

காப்பு நாணைக்கட்டினர்

3084.

காப்பு நாணைக் கண்ட மாந்தர்களும்

திருமணத்தைக் காண வந்தவர்களும்

பற்றிய வல்வினைக் கட்டினை

அவிழ்த்து நீக்கும் கொள்கையுடைய தொண்டர்களும்

சிந்தையும் வதனமும் மலரப் பெற்றனர்

சுருதிகள் நிறைந்த மறைக்குலங்கள்

மகிழ்ச்சி பெற்று

மேலோங்கி ஒலித்தன மகிழ்ந்தே.

3085.

பரவிய இரவில்

வேத விதி முறைப்படி

நிதி மழையாகப் பொழிந்து அருளிய ஞானசம்பந்தர் முன்

புன்மையான நெறிகளான புறச்சமயங்களின்

துன்பம் தரும் வலிய இருள்

அகல்வதற்காக வந்து தோன்றியது போல

பரந்த பேரிருளை நீக்கிக் கதிரவன் தோன்றினார்.

3086.

“அழகிய வண்டுகள் இசைபாடுகிற

பொழில்கள் ( சோலைகள் ) சூழ்ந்த

சண்பை எனும் சீகாழியின் ஆண்சிங்கமான ஞானசம்பந்தர்

சிவத்திருமணம் செய்வதற்கு இடமாக

தவம் செய்யப் பெறும் நாள் இது” என்று

திருமஞ்சனத் தொழில் செய்தல்போல

மாசுடைய இருளைக்கழுவி

செஞ்சுடர்க் கதிர்களின் பேரணியினை

திசைகள் அணிந்து கொண்டன.

3087.

பெருகிய தங்களிடத்தில்

எங்கும் உள்ள பல வளங்களையும்

எட்டு திசையிலுமுள்ளவர்கள்

நிரப்புமாறு முன் கொணர்ந்து நெருங்கி வந்து கூடியதால்

ஒப்பிலாத ஞானசம்பந்தரின் கலியாணத்தில்

அளவற்ற தனது பயனை

காட்டுவது போல இருந்தது –

வையம்.

3088.

பெரிய

வெண்மையான அலைகளுடன்

சங்குகளின் சத்தத்துடன் சூழ்ந்து

மேலும் மேலும் பெரிய ஒலியான முழக்கத்துடன்

கடலில் எழும் ஒலியானது

அடியவரான எங்களின் வாழ்வே உருவாகி வந்த திருஞானசம்பந்தரின்

மங்கலமான திருமண எழுச்சியின்போது நிகழும்

மங்கல வாத்தியங்களின் ஒலிபோல இருந்தது.

3089.

கடல்கள் ஏழும் ஒன்றாகச் சேர்ந்து எழுந்தன

எனும் பெருமை கொண்டு

எல்லாவுலகும் விளங்கிடச் செய்தது மாமணவிழா!

அவ்விழாவுடன்

தானும் விரைவாகச் செல்ல எழுவது போல

வேதியர்கள் ஆகுதியை தொடங்குவதற்கு முன்னம்

மூன்று தீ வளர்வதற்கு இடமான வேதிகைகளில்

வலம் சுழித்து எழுந்தது —

தீ !

3090.

அழகிய மென்மலர்களின் பூந்தாதுக்களான திருநீற்றை

மேனியில் தரித்து

கூட்டமாகப் பொருந்தும் வண்டுகளின்

வரிசையான உருத்திராட்ச மாலைகளைப் பூண்டு

சிந்தையில் தூய அன்பர்களுடன் கூடி

திருமண எழுச்சியில் கலந்து செல்ல

மென்மையான வேகத்தினால்

பூ மணங்களைச் சுமந்து

வந்தது –

காற்று !

3091.

எட்டுத் திசைகளிலும் வாழ்கின்ற

எல்லாத் திறத்தவரும் புகலி ( சீகாழி ) வந்து கூடினர்

அத்திருமண எழுச்சியில்

அழகு பொருந்தும்படி

வெண்ணிறம் பொருந்திய ஒளி உடைய

பெரு வெண்மேகங்களால் ஆகிய

வெண் துணியால் ஆன கொடிகளை

வரிசையாய் அமைத்தது போலிருந்தது

வானம்!

3092.

இத்தகைய நன்மைகள் யாவையும்

திருமண எழுச்சியின் முன்நின்று காட்டுகின்ற காலைப்பொழுதில்

கவுணியர் பெருமான் ஆகிய ஞானசம்பந்தர்

மூலமான திருத்தோணி மேல் உள்ள

முதல்வரை வணங்கினார்

சீலம் மிக்க இறைவரின் திருவருளினால்

முத்துச்சிவிகை மேல் எழுந்தருளி செல்லத் தொடங்கினார்.

3093.

சீகாழி மாநகரின் வேதியர் குழாத்தோடும்

சூழ்ந்த அன்பர்களோடும் மற்றவர்களோடும் கலந்து

நெருங்கி முன்னே செல்ல

வாழ்வு தரும் மாமறைகள் முழங்கிட

வளம் வாய்ந்த சீகாழிப்பதியினை வணங்கி

ஒளி மிக்க வெண்சுடர் உடைய

முத்துச்சிவிகை மேல் எழுந்தருளி அமர்ந்தார்.

3094.

அவரவர்களுக்குரிய வாகனங்களில் அமர்ந்து கொள்ள

காட்டினைப்போல தொங்கல்களும்

நீலிக்குஞ்சங்களும்

குடைகளும்

கவரிகளும் நெருங்கின

வானத்திற்கும் நிலத்திற்குமாக தேவதூந்துபி ஒலிக்க

மங்கல வாத்தியங்களும் ஒருங்கே எழுந்தன.

3095.

சங்கு தாரை,

சின்னம்

ஒப்பற்ற பெரிய எக்காளம்,

தாளம் ,

குழல்

இவை போன்ற கருவிகள் எல்லாமும் பொங்கி

ஒலி எழுப்பி

அந்தணர்களின் வேதகீதங்களின் ஒலியுடன் பொருந்தி

எங்கும் பெருகியது

திருமணம் எழுந்தது!

3096.

மங்கையரின் கூந்தல் சூழ் வண்டுக்கூட்டங்களின் ஒலி ஒரு பக்கம்

அழகிய மறையவர் ஓதும் வேத வாய்மை மிகுமொலி ஒருபக்கம்

குற்றலமிலாத வீணையும் யாழுமான ஒலி ஒரு பக்கம்

துதிக்கும் நாதமங்கலங்களின் இனிமையான ஒலி ஒருபக்கமாகவும்

3097.

மிகுந்த வெண்துகில் பதாகைகளின் கூட்டம்

விண்ணை விழுங்கியது

மிக்க ஒளி வீசும் சாமரைகளின் கூட்டத்தால் கண்கள் கூசின

அழகிய மணிகள் உடைய அணிகளும்

நீடும் மஞ்சள் நிறமும் மிக்க

அழகிய

அளவற்ற

துணிப்பொதிகளின் கூட்டமும் எங்கும் பொருந்த

( பதாகை – கொடி )

3098.

பஞ்சசிகை கொண்ட தோற்றம் கொண்டு

கரியமான் தோலைப் பூணூலில் கொண்ட

வேதம் ஓங்கும் சிறுவர்களும்

உபாத்தியாயர்களும் கூடிச்செல்ல

ஓமப்புகை விடும் வேள்விச் செந்தீயினை

தமது இல்லத்தினருடன்

அந்தணர் கொண்டு செல்ல

தடுக்க இயலாத விருப்புடன்

பெருமையாய்

சிறந்த பதிகங்களை ஓதியபடி ஓதுவார் செல்ல

ஆறு வகையான பகை அறுத்தவர்கள்

தத்தமது இயல்புடன் நெருங்க —

3099.

ஆறு வகையாக விளங்கும் சைவ உட்சமயங்களில்

அளவிலாத விரதங்களைச் சேர்ந்த ஒழுக்க வழிகளிலே

உரிய வேடங்களால்

நீண்ட தவத்தில் நின்றவர்களும்

குற்றமற்ற மனதோடு

அன்பின் வழியாய் வந்த

சிவயோகக்குறியில் நிலைபெற்றவர்களும்

குழாம் குழாமாகப் போக –

3100.

வித்தியாதரர்களும்

இயக்கர்களும்

சித்தர்களும்

நெருங்கிய தேவர்களும்

அஞ்சனம் பூசிய அரம்பையர்களுடன் உடனாக உள்ளவர்களும்

தத்தமது ஒளி பொருந்திய வானவிமானங்களில் ஏறிக்கொண்டு

மேலும் மேலும் தழைக்கும் ஆசையுடன்

மேகம் உறையும் வான் வழியாக

திருமண அழகைக் காணச் சென்றனர்.

(அஞ்சனம்- மை)

3101.

இவ்விதம்

தேவர்கள் நெருங்கிச் செல்கின்ற

மங்கலமன வனப்பான காட்சி

இம்மண்ணுலகில் உள்ளோர் யாவரும் நெருங்கிக்கூடி

திருமண எழுச்சியில் செல்லும்போது

அற்புதத் தன்மை பொருந்தி

மேலே உடன் செல்வதால்

அது

அழகுமிக்க எழுச்சியின் பிம்பம் போல விளங்கியது!

3102.

தவ அரசை ஆட்சி செய்ய

ஒப்பிலாத முத்துக்குடை மேலே நிழல் செய்தது;

சாரும் பிறவியை அறுத்து

ஆட்கொள்ளவல்ல இறைவரின் திருவடிகளை

உள்ளத்தில் வைத்துக் கொண்டவராக

உலகங்கள் எல்லாம் வாழ்வு பெற

வந்து தோன்றிய ஞானசம்பந்தர் சென்று

சிவபெருமான் விரும்பிஎழுந்தருள்கின்ற

திருநல்லூர்ப்பெருமணத்தை அடைந்தார்.

3103.

திருநல்லூர்பெருமணம் எனும் பதியில் உள்ள

கோவிலில் உள்ள தொண்டர்கள்

மங்கலம் பெருகுமாறு

இனி நிகழ உள்ள திருமணத்தின் முன்

வழியிலே வந்து எதிர் கொள்ள

திருமணம் புரிய வருகின்ற சிரபுரச் செம்மலார்

கரிய நஞ்சு தன்னுள் விளங்கும் கழுத்துடைய

இறைவரின் கோயில் புகுந்தார்.

3104.

இறைவனாகிய நாதனைப் பணிந்தார்

போற்றினார்

நல் பொருள் மிகுந்த பதிகம் பாடினார்

காதல் மெய்யருள் பெற்றார் கவுணியர் தலைவரான ஞானசம்பந்தர்

பிறகு வெளியே வந்தார்

மறையவர்கள் அவரை மணக்கோலம் புனைந்திட வேண்டும் என வேண்ட

பூதகணங்களின் தலைவரான இறைவரின் கோயில் பக்கமுள்ள

ஒரு மடத்தில் புகுந்தார்.

3105.

பொற்குடம் நிறைந்த வாசமுள்ள மஞ்சன நீராட்டி

ஒளி விளங்கும் வெண்பட்டாடை அழகுறச்சாத்தி

நல்ல உத்தரீயமான நறுமணத்துகில் சாத்தி

மணம் கமழும் பல பொருட்கள் கூட்டிய சாந்தைப்

பண்பு அமையச்சாத்தி

பின்னர்–

–இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்