பா.சத்தியமோகன்
2734
“சாதுக்கள் மிக்கீர்; இறையே வந்து சார்மீன்களே; ” என
இப்பதிகத்தில் ஓதியதால் –
வேண்டும் வேட்டைகள் எல்லாம் இயல்பாகவே
பாசங்களிலிருந்து நீங்கிய இறைவரின் திருவடிகளையே
அன்பினால் போற்றுகிறவர்களே
வந்து சாருங்கள்” என்று சண்பை அரசர் அருளினார்.
2735.
“ஆடும்” என்றும்
“அரும் கூற்றம் உதைத்து வேதம்பாடும்” என்றும்
வருகின்ற பதிகத்தின்
ஆடும் என்றதும்
அருங்கூற்றம் உதைத்து என்றதும்
வேத பாடும் என்றதும்
ஆகிய மூன்றும்
புகழுக்காகவோ அல்லது பிற உயிர்களின் துன்பம் நீங்குவதற்கோ
ஆராய்கின்ற உணர்வு உடையீர்–
இவற்றை ஈசர் செய்தது
உலகின் மீது வைத்த கூடும் கருணைத் திறம்
எனும் கொள்கையால்
மேன்மையுடைய பிள்ளையார் அருள் செய்தனர்.
2736.
“கருதும் கடி சேர்ந்த” எனத் தொடங்கும் திருப்பாட்டில்
இறைவர் விரும்பி ஏற்கும் பெரும் பூசையைச்
சிதைத்தவர்களைக் கொல்லுதல்
தீய செயலாவதில்லை
முக்தி அளிக்கும் தன்மையாகிறது
இதனை சண்டீசநாயனார் வரலாற்றால்
தக்கவரான பெரியோர் சொல்லக் கேட்டோம்”
என்று பிள்ளையார் உரைத்து அருளினார்.
2737.
“வேத முதல்வன்” எனத் தொடங்கும் திருப்பதிகத்தில்
புலப்பட வரும் மெய்ப்பொருள் எதுவெனில்
சிறந்த பிரமாணமாக இருக்கின்ற வேதத்தால் குறிக்கப்படும் இவர்
உலக உயிர்கள்
தம் பிறவி இடர் நீங்கவும் அறிந்து புகழவும்
கூத்தாடுகின்ற சிவபெருமானே ஆவார்
அவரே முதலாம்
அவரே பதினெட்டு புராணங்களும் விளக்கும் உண்மையாம்”
என்று உரைத்தருளினார்
ஓதாது உணர்ந்தவரான ஞானசம்பந்தர்.
2738.
திருப்பதிகத்தில் “பாராழிவட்டம்”என்ற
திருப்பாட்டின் உண்மை யாதெனில்
உலகம் காக்கும் தொழில் எனும் காவல் பெற்ற திருமாலின் வரலாறு
எல்லோருக்கும் மேலானவரான ஈசன் சிவபெருமான்
அருளும் சக்கரமும் பெற்றுப் பொருந்திய சிறப்பைப் பெற்றதால் ஆடும்
என்று வேதங்கள் வெளிப்படும் வாக்குடைய
சம்பந்தர் அருள் செய்தார்.
2739.
“மாலாயவனும்” என வரும் திருப்பாட்டில்
திருமாலும்
தோல்வியிலா மறைகளைப் படைத்த
நான்முகனுமவர்களைத் தொடர்ந்த தேவர்களும் ஏற்க மாட்டாதபடி
சுட்ட நஞ்சினைத் தாம் உண்டு
அவர்கள் இறவாமல் காத்த
மேலான பெரும் கருணைத் திறத்தை
அப்பாட்டினில் “வெங்குரு” என அழைக்கப்படும்
சீகாழியைச் சேர்ந்த
சம்பந்தப் பிள்ளையார் அறிய வைத்தார்.
2740.
பதிகத்தின் நிறைவான “அற்றன்றி அந்தன்” எனத் தொடங்கும் பாட்டில்
நான்மாடக்கூடல் எனும் மதுரையில்
மூன்று சங்கங்கள் நிறுவிய பாண்டியன் தெளிவு பெறவும்
தெளிவு பெறாத சமணர்கள்
வாதத்தில் சொன்ன எல்லையில்
முடிவு காணுமாறு இட்ட ஏடு
நீரில் எதிர்த்து மேலே சென்றால்
அதனால் உறுதியாகக் கொள்ளப்படும் உண்மை ஞானம்
“ஈசனிடத்து அன்பே ஆகும்” என்று விளக்கினார் —
சிவஞான அமுது உண்ட பிள்ளையார்.
2741.
மணம் வீசும் சோலை சூழ்ந்த சண்பையர் வேந்தர்
மன்னவர் திருஞானசம்பந்தரின்
மெய்ப்பொருள் விரிந்த மெய்யான பாசுரத்தை
அதன் அருட்குறிப்பு எல்லை வரை
அறிந்து கும்பிட்டவன் அல்லேன்
சிறியவனான என் சிற்றறிவுக்கு
அவர் தமது திருவடிகள் உணர்த்திய வழியில் நின்று
சிறிய அளவில் நான் அறிந்த தன்மை
பற்றுக் கோடாகக் கொண்டு அறிவுபூர்வமாக அல்ல
அன்பு காரணமாக கும்பிட்டேன்.
2742.
சைவ மெய்த்திருவை உடைய ஞானசம்பந்தர்
தம்திருக்கையால்
ஆற்று நீரில் செலுத்திய அந்த ஏடு
பொருந்தி வரும் பிறவியான ஆற்றிலே
மா தவங்கள் செய்தவரின் மனம் எதிர்த்துச் செல்வதைப்போல
மிகுந்து ஒடும் நீருடைய வைகை ஆற்றில்
“இதுவே உண்மைப் பொருள்” என எடுத்துக் காட்டியது
கீழ்நோக்கி ஓடும் ஓட்டத்தை எதிர்த்தது.
நீரின் நடுவில் அதைக் கிழித்துக் கொண்டு
மேல் நோக்கி செல்லாயிற்று.
2743.
எம்பெருமானாகிய சிவனே எல்லாப் பொருளும்
என எழுதிய அந்த ஏட்டிலே
“இறைவரின் அருளால் வேந்தனும் ஓங்குக” என்று பாடியதால்
திருமகளை மார்பில் உடைய அநபாயன் எனும்
சிறப்பு பொருந்திய செம்பிய (சோழ) மன்னனின்
செங்கோல் போல
பாண்டிய (தென்னன்) மன்னனின் கூறும் அப்போதே நிமிர்ந்தது.
2744.
ஞானசம்பந்தர் இட்ட ஏடு
வைகை ஆற்றின் நீரை எதிர்த்துச் சென்றது கண்டு
இமையோர்கள் (வானவர்கள்) யாவரும்
நீண்ட வாழ்த்துக்களால் போற்றி வாழ்த்தினர்
மலர்மழை பொழிந்து பூமியை மறைத்தனர்
வெற்றி இயல்புடைய யானைப்படையுடைய பாண்டிய மன்னன்
அற்புத உணர்வு எய்தி நின்றார்
அறிவிழந்த சமணர் அஞ்சினர்
பதைபதைப்புடன் பணிந்து நின்றனர்.
2745.
ஆற்றின் மேல் செல்லும் அந்த ஏட்டினைத்
தொடர்ந்து சென்று எடுப்பதற்காக
காற்றைப் போல் விரைந்து செல்லும் குதிரைமீது ஏறி
அந்த ஏட்டின் பின் சென்றார்–
ஆட்சியை திருத்தும் வல்லமையுள்ள அமைச்சர் குலச்சிறையார்
அந்த ஏடு மேற்கொண்டு செல்லாமல்
ஓரிடத்தில் தங்கி நிற்குமாறு பாடி வணங்கினார் ஞானசம்பந்தர்
காளைக்கொடியுடைய சிவபெருமானை.
2746.
ஞானசம்பந்தர் வேடகத் திருப்பதிகமான
“வன்னியும்ம் அத்தமும்”
எனத் தொடங்கிப் பாடி அருளினார்
ஆற்று நீரில் கூடி வந்த ஏட்டினிடம்
குலச்சிறையார் சென்று கூடினார்
பெரும் சுடுகாடே இடமாக ஆடும்
நெற்றிக்கண் உடைய சிவபெருமானின் நடுவில் புகுந்து
மேற்கொண்டு செல்லாமல் நின்ற
அந்த ஏட்டை எடுத்துக் கொண்டார்.
2747.
குலச்சிறையார் எடுத்த ஏட்டினைத்
தலை மீது வைத்துக் கொண்டு
தாங்க முடியா மகிழ்ச்சி
மேலும் பெருக
அலை புனல் வைகைக் கரையில் ஏறினார்
அங்கு
இனிதே அமர்ந்த சிவபெருமானார் கழல் போற்றியபடி
மலைமகளான உமையம்மையினால்
சிவஞான அமுதம் குழைத்து ஊட்டப்பெற்ற
ஞானசம்பந்த பிள்ளையாரிடம் வந்து சேர்ந்தார்.
2748.
வந்து சேர்ந்த குலச்சிறையார்
பிள்ளையாரின் தாமரை மலர் போன்ற திருவடி போற்றினார்
அரசன் முதலாக அங்குள்ளோர் காணுமாறு
தம்தலை மீது கொண்டு வந்த ஏட்டினை
பற்றிக்கொண்ட கையுடன் ஏந்தி
பண்பினால் அனைவருக்கும் காட்டினார்
இக – பரப் பற்றுகளை அறுத்தலால்
திருவருளைப் பெற்ற தொண்டர்கள் செய்யும்
“அரகர” என்ற ஒலி அப்போதே எங்கும் எழுந்தது.
2749.
பாண்டிய மன்னனான நின்றசீர் நெடுமாறன் அதைக்கண்டு
மந்திரியான குலச்சிறையாரை நோக்கி
“பொருந்திய வாதத்தில்
தாமே போட்டியிட்டுத் தோற்ற
இந்தச் சமணர்கள்
முன்பே
சம்பந்தரிடத்தில் செய்யத்தகாத தீயச்செயலைச் செய்துள்ளனர்
ஆதலால்
அவர்களைக் கழுவில் ஏற்றி நீதி முறைப்படி தண்டிக்கவும்” என்று கூற
2750.
புகலியில் அவதரித்த ஞானசம்பந்தர்
அவ்விதம்
மாறன் ஆணையிட்டதைக் கேட்டார்
“சமணரிடத்து பகை இல்லாதவராயினும்
சைவத் தொண்டர்கள் இருந்து வாழும் மடத்தில்
தீங்கு செய்த சமணர்களின்
தகுதியற்ற தன்மையால்
இத்தண்டனை பொருத்தமானதே” என எண்ணி நீதி முறையில்
மிகைப்படா வேந்தனின் ஆணைச்செய்கையை
விலக்காமல் இருந்த வேளையில்-
2751.
நல்பண்புடைய அமைச்சரும்
உலகில் உள்ளோர் அறியும்படியாக
கணுக்களைப் பக்கங்களில் வெட்டிக்
கூர்மையான கழுக்களின் வரிசையில் ஏற்றிட
அன்புடைய ஞானசம்பந்தர் எழுந்தருளிய மடத்தில்
தீயினால் கொளுத்திட சூழ்ச்சி செய்து
எட்டு பெரும் குன்றுகளில் இருந்து வந்த
எண்ணாயிரம் சமணகுருமார்களும் கழுவில் ஏறினார்கள்
(கழுத்தறி- கழுமரம், எண்பெருங்குன்றம்- மதுரையைச் சுற்றியிருந்த
ஆனை மலை முதலான எட்டுமலைகள்)
2752.
வாதத்தில் தோற்றவர்களான சமணர்கள்
கழுவில் ஏறித் தோற்க
யாவரும் காணும்படி காணப்பட்ட அக்கழுமரங்கள்
ஆற்றில் சமணர் இட்ட ஓலை அழிந்து போனதால் நிறுத்திய தம்பங்கள்!
சிவனையன்றி வேறொரு தெய்வமில்லை என்ற உண்மையினை
உலகுக்கு விளக்கி உயர்த்திய கொடித் தம்பங்கள்
உலகம் போற்றும் சிறப்புடைய
பிள்ளையார் தம் புகழைப் புலப்படுத்திய தம்பங்களும் அவையே ஆகும்.
2753.
தென்னவனாகிய பாண்டிய மன்னனுக்கு
சிரபுரச் செல்வர் (சம்பந்தர்) திருநீறு அளித்தார்
முன்னவனாகிய பாண்டியன் பணிந்து வணங்கி ஏற்று
உடல் முழுவதும் அணிந்து கொண்டு நின்றான்
மன்னவன் திருநீறு அணிந்தான் என்றதால்
மதுரைவாழ் மக்கள் எல்லோரும்
தூய நீற்றைத் தாமும் அணிந்து கொண்டனர்.
2754.
ஞானப்பிள்ளை அளித்த திருநீறு அணிந்து
வேந்தன் புனிதனாக உயர்ந்தபோது
அரசநீதியும் வேதநீதியாகவே எங்கும் திகழ்ந்தது
உலகம் புனிதமாகும்படி
திருவெண்ணீற்றின் விரிந்த சோதி
திக்குகளையெல்லாம் தூய்மை செய்ய
சமணமான இருளும் அன்றே மாய்ந்தது.
2755.
மீன்கொடியேந்தும் மன்னவனுக்கு உயிரை அளித்து
உண்மை நெறியையும் காட்டி
மிகுந்த கேட்டினை விளைவிக்கும் சமணசமயத்தைப் போக்கி
உய்யும்படி ஆட்கொண்ட ஞானசம்பந்தரின் மெய்நெறி
உலகில் பெருகி ஓங்குவதால்
வண்டுகள் ஒலிக்கும் தேன்கமழும்
கொன்றைமலர் சூடிய சிவனாரின்
திருநெறி அன்றே நடந்தது.
2756.
மறையவர்களாகிய அந்தணர்கள் வேள்வி செய்ய
அதனால் தேவர்கள் மழை நல்க
மன்னவன் நன்னெறியில் ஓங்க
இவ்வுலக வாழ்வாகிய
இகத்தினில் அனுபவிக்கும் இன்பங்கள்
குறையின்றி இருந்தது
எனினும் காலனைக் காலால் உதைத்தவரான
சிவபெருமானின் நாமம் கூறும்போதுதான்
கடல் அலைபோல் வரும்
பிறவித் துன்பத்திலிருந்து உலகம் நீங்கப் பெற்றது.
2757.
அங்கையற்கண்ணி அம்மையுடன்
திருவாலவாயில் எனும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற
பேரருள் புரியும் அண்ணலான சிவபெருமானின்
தாமரைமலர் போன்ற பாதம் பணிவேன் என
வைகைக் கரையிலிருந்து எழுந்து சென்று
பொங்கும் ஒளிமிக்க சிவிகை மீது ஏறினார்
புகலிவேந்தர் புறப்பட்டார்
அவர்பின் மங்கையர்க்கரசியாரும்
நின்றசீர் நெடுமாறனும் போற்றியபடியே வந்தனர்.
( திருவாலவாயில் – மதுரை
)
2758.
எண்ணுதற்கும் இயலாத பெருமையுடைய
தொண்டர்கள் யாவரும் மகிழ்ந்தனர்
புண்ணியத்தின் பிழம்பாகிய பிள்ளையாரைப் புகழ்ந்து
வணங்கித் துதித்தனர்
பாண்டிய நாட்டினோர் அனைவரும்
மண் எல்லாம் உய்ய வந்த
வள்ளலார் ஆகிய சம்பந்தப் பெருமானைக் கண்டனர்
ஆதலால்
கண்கள் படைத்த பயன்களை அடைந்தவர் ஆயினர்.
2759.
இறைவரின் ஆலவாய் எனும் கோயில்
அங்கு கண்முன் தோன்றியது
அதனைக் கண்டு
பாலறாவாயர் மிக்க பண்புடன் வணங்கினார் தொழுதார்
திருமாலும் நான்முகனும் துதிக்க
நிலைபெற்று எழுந்தருளிய கோயிலின் திருவாசல் முன்பு
ஒழுக்கமுடைய அடியார்களின் முன்பு
முத்துச்சிவிகையிலிருந்து இறங்கி உள்ளே புகுந்தார்.
2760.
பாண்டிய மன்னனும்
சோழமன்னர் மகள் மங்கையர்க்கரசியும்
உலகை நன்னெறியில் செலுத்தும் அமைச்சர் குலச்சிறையார்
திருஞானசம்பந்தரின் பொன்திருவடியினைப்
போற்றித் துதித்துக் கொண்டு உள்ளே புக
புனிதரான ஞானசம்பந்தர்
திருக்கோயிலை வலம் வந்து உள்ளே புகுந்தார்.
2761.
இருகைகளும் தலைமீது ஏறின
குவிந்தன
கண்களில் ஆனந்த வெள்ளம்
அது மெய்யெல்லாம் பொழிய
வேத முதல்வரான இறைவரைப் பணிந்தார் போற்றினார்
“ஐயனே! அடியனான என்னை அஞ்சேல் என்று
அருளி ஆட்கொள்ள வல்ல மெய்ப்பொருளே”என்று
“வீடலாலவாய்” எனத் தொடங்கும் திருப்பதிகம் அருளினார்.
(மெய்- உடம்பு)
2762.
பற்றிக்கொள்ளும் வேறு உணர்வு ஏதும் இல்லேன்
நீக்கமற நிறைந்த அழகிய சிற்றம்பலத்தில்
நான்கு வேதங்களும் போற்றும்படி
மானுடர் உய்யும் பொருட்டாக நின்று
நீ திருக்கூத்து ஆடல் செய்வதை
இடையறாமல் நினைப்பதே என் நியமம் ஆகும் என்று
புகலி மன்னர் சம்பந்தர்
இனிய தமிழ்ப்பதிகம் பாடினார்.
2763.
தென்னவன் பணிந்து நின்று
”திருவாலவாய் மேவிய அரசே
சமணர்களின் வஞ்சனைக்கு ஆளாகி மயங்கி
உன் அருட்பெருமையை ஒரு சிறிதும் அறியாத என்னை
உற்ற நோய் தீர்த்து
ஆட்கொள்ள
இனிய அருளின் உருவான திருஞானசம்பந்தரை
எனக்கு அருள் செய்தீர் !” என வணங்கினான்.
2764.
சிறப்புடைய பிள்ளையார்
சிறப்புடைய அடியாரோடு
மேகம் போன்று விளங்கும் கண்டம் உடைய
இறைவரின் திருவடி வணங்கி
அன்பினால் திருவருள் பெற்றுத் துதித்து
அங்கிருந்து
மனமில்லாமல் நீங்கி
அழகுற அமைந்த திருமடத்தின் உள்ளே
இனிதாய் எழுந்தருளிப் புகுந்தார்.
-இறையருளால் தொடரும்
- ஆயுளைக் குறுக்கும் ஊழ்!
- எண்ணச் சிதறல்கள் – மும்பை குண்டுவெடிப்புகள்
- சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, ஓஸோன் துளைகள், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-5
- கீதாஞ்சலி (82) – ஆதி அந்தமில்லா காலம்..!
- புதுமைப் பித்தன் கருத்தரங்கு
- கடிதம்
- கடிதம்
- மண் புழு
- கம்பரும் ஷெல்லியும் (அல்லது) மருத்துமலையும் தோட்டத்துச் செடியும்
- ஞமலி போல் வாழேல் !
- கடித இலக்கியம் – 14
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-10)
- ஆறு கவிதைகள் 6!
- பெரியபுராணம்- 97 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- அரசியல் :: தீஷிதர்கள் Vs தமிழ்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 8. அறிவியல்
- சிதையும் பிம்பங்கள்
- சலாம் மும்பை
- வ ழ க் கு வா ய் தா
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 30