பெரியபுராணம்- 128 43. கழறிற்றறிவார் நாயனார் புராணம்

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

பா.சத்தியமோகன்



“கார் கொண்ட கொடைக் கழறிற்று அறிவார்க்கும் அடியேன்”

( திருத்தொண்டத் தொகை -6 )

3746.

இலக்குமி வீற்றிருக்கும்

பெருஞ்சிறப்பும் பழைமையும் மிக்க தலம் –

மலைநாட்டில்

பழந்தமிழ்ப் பாட்டுகளில் பல வகையாக புகழப்படும்

சேரமரபினரும் குடிகளும்

தொன்று தொட்டு வாழும் தலம் –

காளை ஊர்தியிலே எழுந்தருளும்

சிவபெருமானின் திருவஞ்சைக்களத்தில் அமைந்ததலம் –

சேரமன்னர்கள் அரசுக்கட்டிலில்

வழிவழியாக ஆட்சி புரியும்

பெரிய தலை நகரமான தலம் –

கொடுங்கோளூர் எனும் தலம்

3747.

காலையில் ஓதப்படும்

வேதம் முதலான கலைகளின் ஒலி

யானைக்கன்றுகள் வடிக்கும் ஒலி

பூஞ்சோலைகளிலிருந்து எழுகின்ற வண்டுகளின் ராக ஒலி

பாலை விபஞ்சி யாழ் பயிலும் ஒலி

பாடல் ஆடல்களுக்கு ஏற்ப

இசைக்கப்படும் முழவு எனும் கருவியின் ஒலி

இவை எல்லா ஒலியும் கலந்து கேட்டதால்

கடலின் ஒலி

குறைவாகவே கேட்கின்ற –

வியப்பு தரும் நகரம் கொடுங்கோளூர் எனும் நகரம்.

3748.

அந்நகரத்தில்

செல்வம் மிக்க வீடுகள் நிறைந்திருந்தன

மனைகள்தோறும் இன்பம் விளங்கியது

இல்லங்களின் பக்கங்கள் தோறும்

நல்ல அறங்கள் பெருகின

தக்க அன்பர்கள் வாழும் திருமடங்கள்தோறும்

சைவத்தின் மேன்மையும் உண்மையும் சாற்றப்பட்டன

தொகுதியாய்ச் சேர்ந்த

வளமையான இடங்கள்தோறும்

நிறைசெல்வங்கள் விளங்கின.

3749.

வேதங்கள் விதித்த நெறி முறை தவறாமல்

பிறழாமல்

மிக்க நல்லொழுக்கத்தில் சிறந்த நான்கு சாதிகளும்

தத்தமது நிலைகளில் தழைக்கும் தன்மையுடைய

பெரிய மதில் சூழ்ந்த

மாமரம்

மகிழமரம்

சரளமரம் எனும் தேவதாருமரம்

ஆகியவற்றின் வரிசை நெருங்கிய

சோலைகள் சூழ்ந்த வளமை உடையது அந்நகரை –

கோதை எனப்படும் சேரமன்னர்

மகோதை எனும் பெயருடைய ஊரினை

தலைநகராகக் கொண்டார்; ஆண்டு வந்தார்

3750.

மணம் கமழும் பூக்களுடைய சோலைகள் சூழ்ந்த

அந்தப் பழமையான நகரத்தில்

சிறுத்து

அழிவு செய்யும் கலியை

மரபு வழி வரும் ஒழுக்கத்தால் நீக்குகின்ற சைவம் தழைக்க

அறம் நாட்டும் சைவம் தழைக்க

மாறுபட்ட சினம் உடைய

யானைப்படை உடைய

சேரர்குலம் செய்த தவத்தால்

உலகம் செய்த தவத்தால்

சிவனருளால்

பெருமாக்கோதையார் என்பவர் பிறந்தார்.

3751.

செல்வம் நிறைந்த மாநகரம் அது;

அந்நகரில்

கோதையார் திருஅவதாரம் செய்த விழாவினால்

அந்நகரம் மிகவும் மகிழ்ச்சிக் கூத்தாடியது

நெய்யாடல் விழா எடுத்தது

ஒலிக்கும் மங்கல ஒலிகளோ

கற்பக மலர் தூவும் வானம் வரை தொட்டது

பெருமாநிலமான உலகில்

உயிர்கள் எல்லாம்

மேலும் மேலும் பெருகும் மகிழ்ச்சி கொண்டன.

3752.

இம்மண்ணுலகில்

சைவநெறி வாழ்வதற்காக வளர்ந்து

முன்பு செய்த தவத்தின் வழியே தொடரும் அன்பினால்

நெற்றிக்கண் உடைய சிவபெருமானின்

திருவடிகளை மட்டுமே பேணும் கருத்தினால்

உள்ளத்தில் பொருந்திய அன்பினால்

தமது

உரிமையுடைய

அரசாட்சித் தொழிலை செய்யாமல்

தெளிந்த கங்கை நீர் உடைய

இறைவரது திருவஞ்சைக்களத்தில்

திருத்தொண்டு புரிந்து வந்தார்.

3753.

“உலகத்தில் வாழும் வாழ்வும்

அரச வாழ்வும்

நிலையற்றது உறுதியற்றது” என உணர்ந்த அவர்

வைகறையில் எழுவார்

நீரில் மூழ்கிக் குளித்து

தூய்மை தரும் வெண்ணீற்றில் குளித்து

நந்தவனத்துப் பணிகள் பலவும் செய்வார்

அரும்புகளைக்கொணர்ந்து

திருமாலை சாத்துவதற்கு

மகிழ்வோடு தொகுப்பார்.

3754.

திருமஞ்சன நீர் கொணர்வார்

திருவலகு கொண்டு சுத்தம் செய்வார்

அன்புடன் மலர்கள் சாத்துவார்

பிற திருப்பணிகளும் செய்வார்

ஒழுக்கத்தின் உணர்வு கொண்டு

திருப்பாடல்களையும்

ஒருமைப்பட்ட நெறியுடன் பாடிப்பணிந்து வந்தார்

இவ்விதமான நாட்களில் –

3755.

அந்நகரில்

நீரால் நிறைந்த கடல்போலிருந்தது அகழி;

நீண்ட மலை போலிருந்தது மதில்;

மேகத்தை விட கொடை நிழலை மேலேயும்

அந்தக்கொடையின் நிழலுமாக கீழேயும்

“செங்கோல் பொறையன்” எனும் பெயருடன்

மாலையணிந்த தோள்களுடைய

அத்தகைய சேரமன்னன்

இவ்வுலகம் ஆளவில்லை –

தவநெறியில் சார்கின்ற

ஒழுக்க நெறி சார்ந்து வாழத் துவங்கினான்.

3756.

வழிவழியாக வரும்

மரபுப்படி அரசு ஆட்சி அளிக்க வேண்டியவன்

தவத்திற்காக வனம் புகுந்து விட்டதால் –

சிந்தை செய்யும் கூர்மதி உடைய நூல்களை

ஆராய்கிற அமைச்சர்கள்

என்ன செய்வது என சில நாட்கள் ஆராய்ந்துபார்த்து

இவ்வாறு தெளிந்தனர்;-

“முந்தை மரபில் முதல்வராகிய சிவபெருமானுக்கு

தொண்டு செய்வதில் முதன்மை பெற்ற

பெருமாக்கோதையாரைக் காண

திருவஞ்சைக்களம் செல்வோம்”.

3757.

பொய் தீர்க்கும் வாய்மை உடைய மந்திரிகள்

திருவஞ்சைக்களம் சேர்ந்து

பெருமாக்கோதையாரை வணங்கினர்

அவர் திருஉருவம் முன்பு வணங்கினர்

“மிகப்பெரிய குளிர்ச்சாரலை உடைய மலைநாட்டின்

மன்னர் மரபு வழி வரும் முறைமைப்படி

செங்கோல் அரசு புரியும் உரிமை

குற்றமிலாத வழியினால்

முடி சூடும் மரபால்

உங்களுக்கு வந்திருக்கிறது

முடிசூடி அருள்க” என்றனர்

அப்போது –

3758.

“இன்பம் பெருகும் இறைவனின் திருத்தொண்டுக்கு

அமைச்சர்கள் கூறிய செய்தி

இடையூறாகஅமைந்தது

எனினும் –

“சிவன் மீது அன்பு செலுத்தும் நிலைமையால்

அரசாட்சி புரிவதற்கு திருவருள் உண்டானால்

இறைவரது ஆசி கிடைக்குமானால்

எலும்பும் பாம்பும் புனைந்த இறைவரின் திருவுள்ளத்தை

காலம் பார்த்து அறிவேன்” என எண்ணிக்கொண்டார்

கோயிலுள் புகுந்து தொழுதார்

விண்ணப்பம் செய்தார்

3759.

அரசாட்சி மேற்கொண்டபடியே

அன்பு விளையும் சிவவழிபாடும் செய்தார்

அப்போது

இறைவரது அருள் பாலிப்பு

பெருமாக்கோதையாருக்கு உண்டானதால் –

அ·றிணை உயர்திணை எனும் இருவகை உயிர்களும்

கூறுவதை அறியும் உணர்வு உண்டானது

அளவிலாத வெற்றியும் ஒப்பிலாத வெற்றியும்

தடையற்ற ஈகை, படை, ஊர்தி ஆகிய

நாடு காக்கும் மன்னருக்குரிய

அங்கங்கள் அத்தனையும் அவரைச் சேர்ந்தன

3760.

இறைவரின் அருள்பெற்று

அவருக்கு அஞ்சலி செய்து இறைஞ்சி

கோயில் விட்டு வெளியே வந்தார்

அரச பதவி என்பது

திருத்தொண்டுக்கு ஊனம் தான்;

என்றாலும்

உடையான் ஆகிய சிவபெருமான் அருளாலே

மேன்மை மிகு அரச மகுடம் தாங்குதற்கு

அமைச்சர்களிடம் ஒத்துக்கொண்டார்

உடன்பட்டார்

பெருமை மிகு அமைச்சர்கள்

நாயனாரின் திருவடிகள் பணிந்து

அதற்கு வேண்டிய செயல்கள் புரிய

மகிழ்ச்சியுடன் அகன்றனர்.

3761.

முடி சூட்டுவதற்குரிய நாளின்

ஓரையின் நலமும் பொருந்தி வந்தது

உபகரணங்களையெல்லாம்

சிறப்போடு

பெருமையோடு விளங்குமாறு அமைத்து

மங்கலச் சடங்குகள் செய்தார்

உயர்திணை, அ·றிணை ஆகிய எல்லா உயிர்களும்

அறநீதியால் மகிழும் தன்மை அறிந்து

இம்மை – வீடுபேறு ஆகிய இரண்டினுக்கும் உரிய

ஒரே முடியை அணிந்தார்!

3762.

இறைவராகிய தம்பிரானின் கோவிலை வலம் வந்தார்

திருமுன்னர் வணங்கி எழுந்தார்

மத்தகத்தையுடைய யானையின்

மேல் குடை- சாமரம் – பரிவாரங்கள் ஆகியன

அவருக்கு ஏவல் செய்தன

நகரை வலம் வந்தபடி இருந்தார்

கழறிற்று அறிவார் நாயனார் அப்போது

உவர்மண் மூட்டை ஒன்றினை

தோளில் சுமந்தபடி

வண்ணான் ஒருவர் வருவதைப் பார்த்தார்.

3763.

மழை பெய்த காரணத்தால்

அவ்வண்ணான் சுமந்த உவர்மண்

அவன் உடலில் கரைந்து ஊறியிருந்தது

அதனால்

அவர் மேனி வெளுத்திருந்தது

இவ்வடிவம் கண்டதுமே –

“மானைக் கையினில் ஏந்திய சிவனின்

அடியார் திருக்கோலமன்றோ இது !”

என உணர்ச்சி பெற்றார்

அணிகளிலேயே சிறந்த பட்டம் அணிந்த

யானையின் கழுத்திலிருந்து இறங்கினார்

பெருகும் காதலுடன் விரைவாகச் சென்று

அவ்வண்ணானை கைகூப்பித் தொழுதார்.

3764.

சேரர் பெருமான் தன்னைத் தொழுவதைக்கண்டு

வண்ணான் சிந்தை கலங்கிப்போனான்

முன் சென்று வணங்கி –

“யாரென்று எண்ணி இவ்வாறு செய்தருளினீர்

அடியேன் தங்களின் பணியாள்

அடி வண்ணான்” என்றான்

சேரர் பிரானோ –

“அடியேன் அடிச்சேரன்” என்றார்

பிறகு

“திருநீறு அணிந்த

இனிய அன்புக்கு இருப்பிடமான

சைவக்கோலத்தை நினைப்பூட்டினீர்

வருந்தாது செல்க” என்றும் கூறினார்.

3765.

மன்னர் பெருமானின் திருத்தொண்டைப்பார்த்து

அறிவுடைய அமைச்சர் யாவரும்

தலை மீது கை குவித்து

அஞ்சலி செய்து போற்றினர்

ஒளி வீசும் மணிகளால் செய்த

கொடிகள் கட்டிய மாளிகைகள் கொண்ட

தெருக்கள் உடைய பழமை மிகுநகரத்தை

சினம் மிகுந்த பெரிய யானை மேல் ஏறி

வலமாக வந்தார் மன்னர்

பொன்பூண்ட

மணிமாளிகை வாசலில் புகுந்தார்.

3766.

யானை மேலிருந்து இறங்கி

விளங்கும் மணிகளையுடைய மண்டபத்தில்

மேன்மை பெற்ற அரியாசனத்தில் ஏறி அமர்ந்து

கொற்றக்குடை நிழல் செய்ய

குவளைமலர் போன்ற விழி நங்கையர் சாமரம் வீச

பெருமையுடைய மன்னர்

பூக்கள் பலத்தூவித் துதிக்க

மன்னர்க்கும் மன்னரான

நாயனார் வீற்றிருந்தார்.

3767.

உலகினைக் காக்கின்ற

கொடை வள்ளல் தன்மைமிக்க சோழமன்னர்

உரிமையுடைய பாண்டிய மன்னர்

இவர்களோடு மூவேந்தர்களாகப் போற்றப்பட்டர்

நீதியினை மனுநூல் நெறிப்படி நடத்தினார்

அளவிலாத அரசர்கள்

திறை எனப்படும் வரியினைக் கொண்டு வந்து செலுத்த

உள்ளும் புறமும் பகையை அறுத்து மலர்கின்ற

திருநீற்றுநெறி வளர்வதற்காக

மண்ணுலகைக் காக்கும் பொறுப்பை

ஏற்றுச் செய்து வந்தார்.

3768.

“நீடும் உரிமையுடைய பேரரசு செலுத்துவதால்

ஏற்படுகின்ற பயன்;

நிறைந்த தவம்;

தேடி அலையும் பொருள்

ஆகிய எல்லாமே

தில்லை திருச்சிற்றம்பலத்தில் ஆடுகின்ற

பொற்பாதமே ஆகும்” எனத் தெளிந்த அறிவு பெற்று

அந்த திருப்பாதத்தையே

அன்புடன் அர்ச்சிக்கும் செயலை

சேரர் குல மன்னர் மேற்கொண்டார்.

3769.

வாசம் மிகுந்த திருமஞ்சன நீர்

திருப்பள்ளித்தாமம்

சாந்தம்

அழகிய தூபம்

ஒளி பெருகும் செழுமையான தீபம்

முதலியவற்றோடு

திருவமுதும் அமைத்து

ஈசருக்குத்

தகுதியான விதிமுறைப்படி

அருச்சனை செய்தார்

ஒவ்வொரு நாளும் அவருக்கு அருள்வதற்காக

அழகிய சிலம்பின் ஒலியை

அந்த நாயனார் கேட்கும்படியாக

பெருங்கூத்தார் அருளினார்.

3770.

இறைவரின் திருவடியினை வழிபட்டு

நாள்தோறும் இன்பம் அடைந்தார்

இந்த உலகில்

பொருள் இரந்து கேட்கும் இரவலர்களுக்கும்

வறுமையில் வாடும் வறியவர்களுக்கும்

வேண்டியபடியே பொன்னை அளிப்பதில்

மழை போன்ற தன்மையைப் பெற்றிருந்தார்

தேவர்களும் போற்றுமாறு

தனது பெருமானாகிய இறைவனுக்கு

வேள்விகள் பல செய்தார்.

3771.

இவ்விதம் இவர் நடந்துக்கொண்டு வரும் நாளில்

அழகுமிகு பாண்டிய நாட்டில்

நிலைபெற்ற மதுரையில் (திருவாலவாய்) கோயிலில்

வீற்றிருக்கும் சிவபெருமானிடம்

அன்பு மிகுந்து இசைப்பாட்டுகளால் துதிக்கின்ற

பாணராகிய

பாண பத்திரனார் எனும் அடியாருக்கு

நன்மை பொருந்திய பெரும்செல்வம் தருவதற்காக

அருள் புரிய வேண்டி-

3772.

இரவில் அயர்ந்தார் பாணபத்திரர்

அவர் கனவில் இறைவர் எழுந்தருளினார்

“என்பால்

எப்போதும் அன்பால் பரவும் சேரமன்னனுக்கு

நாம் நம் ஓலையைத் தருகின்றோம்

காலம் தாழ்த்தாமல் சென்று —

பசும் பொன்னும் காசும்

பட்டாடையும்

ஒளிக்கதிர் வீசும் மணி பதித்த அணிகளும்

இன்னும் வேண்டிய எல்லாமும்

குறைவிலாமல் நீ பெறுக” என்றார் இறைவர்

3773.

“மதிமலி புரிசை” எனத் தொடங்கும்

வாய்மை மிகு வாசகம் எழுதப்பட்ட

கதிர் ஒளி கொண்ட ஏட்டில் எழுதப்பட்ட

ஓலை ஒன்றினை

ஒப்பிலாத பெரும்செல்வம் அருள

பாணபத்திர் காணும்படி

இறைவர் தந்தருளினார்.

3774.

பாணபத்திரர்

சங்கப் புலவர்களின் தலைவராகிய

சோமசுந்தரக் கடவுள் தந்த ஓலையை

தலை மீது தாங்கிக் கொண்டு

அங்கிருந்து அப்போதே புறப்பட்டு

மலைநாடு அடைந்தார்

நெருங்கிய கொடிகள்

மேகங்களைத் தொடுமளவு வளர்ந்துள்ள

உயர்ந்த மதில்கள் கொண்ட

கொடுங்கோளூர் நகரம் புகுந்தார்.

அரண்மனை மாளிகை முன்பு வந்து –

தம் வருகையை

சேரமான் நாயனாருக்கு அறிவித்தார்.

3775.

அதைக்கேட்ட அக்கணமே

சேரமான் நாயனார்

கைகளைத் தலை மீது குவித்தார்

கிளர்ந்தது பேரன்பு

கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது

கீழே விழுந்தது

மிகவும் நடுக்கம் கொண்டு எழுந்தார்

பொன்னை ஓடவிட்ட

அழகு மாளிகையிலிருந்து வெளியே வந்தார்

உருகும் உள்ளத்துடன்

பாட்டின் தலைவரான பாணபத்திரரின் திருவடிகளைப்

பலமுறை பணிந்து வணங்கினார்.

3776.

“அடியேனையும் ஒரு பொருளாகக் கொண்டு

திருமுகம் எனப்படும் ஓலையினை எடுத்துக்கொண்டு

இங்கு வந்ததென்னே!” எனச் சொல்லி நெகிழ்ந்தார்

கொடியில் காளையை உடைய

சிவபெருமான் அளித்த திருமுகத்தை

ஓலையினை அளித்தார்

சேரமான் நாயனார் அதனைத்

தமது தலை மீது வைத்து ஆனந்தக்கூத்தாடினார்

மொழி குழறியது கண்ணீர் பொழிந்தார்

திருநீறு பூசிய மார்பில் அது பரவுமாறு —

நிலத்தில் பலமுறையும்

வீழ்ந்து எழுந்து வணங்கினார்.

3777.

இறைவர் தந்தருளிய திருமுகத்தை –

அன்புடன் போற்றிய சேரமான் நாயனார்

பரிவு மிகுந்து

பலமுறை வணங்கிய பிறகு

அதன் சுருளை

உரிய வகையில் விரித்துப் படித்தார்

இறைவரின் திருவருளைப் போற்றிக் கொண்டே

பொன் சுடர் ஒளி வீசும் மாளிகையுள் புகுந்து

தம் உரிமையுடைய சுற்றத்தார் உட்பட

எல்லாரையும் காக்கும்

அமைச்சருக்கு கூறியதாவது :-

3778.

“நமது

இந்த அரச குல மாளிகையுள்

நன்மையுடைய செல்வக் குவியல்களாக

மேலும் மேலும் பொங்கி நிறைந்த

பலவகைக் களஞ்சியத்துள் செல்க

அங்கு

ஒன்றும் மிச்சம் மீதி இல்லாதபடி எடுத்து வருக

தக்கவாறு பொதிகள் எனப்படும் மூட்டைகள் செய்க

ஆட்களின் மீது அதனை ஏற்றி

எடுத்து வருக ” என்று உரைத்தருளினார்.

3779.

சேரமான் நாயனார் இவ்வாறு உரைத்ததும்

திருந்திய அறிவும் நூலறிவும் கொண்ட அமைச்சர்கள்

அழகிய மாளிகையின் உள்ளேயிருந்து

பெரும் சிறப்புடைய

அளவிலாத செல்வங்களையெல்லாம்

மூட்டையாகக் கட்டி

ஆட்களின் மீது

பூமி நெருங்குமாறு ஏற்றிக்கொண்டு

மன்னரிடம் வந்தனர் பணிந்தனர்.

3780.

பரந்து விரிந்த செல்வத்தின்பரப்பு எல்லாவற்றையும்

பாணபத்திரருக்கு

வரிசையாக வைத்துக்காட்டி

“இவற்றையும்

மற்றும்

வன்மை பொருந்திய கொடிய யானைகள் முதலான

உயிருள்ள செல்வங்களுடன்

அடியேன் காவல் செய்யும் ஆட்சியையும் சேர்த்து

ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார்

மன்னர் சேரர் பெருமான்.

3781.

இதனை கேட்ட பாணபத்திரர் —

பசுமையான பொன் முடி சூடிய சேரமானைப் பார்த்தார்

அவர் காட்டிக் கொடுத்த

நீதிகள் எல்லாமும் பார்த்தார்

மகிழ்ந்து அதிசயித்தார்

“என்னால் பாதுகாத்துப் பேண முடிந்ததை மட்டும்

யான் பெற்றுக் கொள்கிறேன்

அரசாட்சியும்

அதன் அங்கங்களும் தாங்களே கைகொள்க

இது என் ஆணை” எனக்கூறி வணங்கியதும் –

3782.

வன்மையுடைய மன்னரான சேரர்

இறைவரின் ஆணையை மறுக்க அஞ்சியதால்

பாணபத்திரர் சொல்லுக்கு உடன்பட்டார்

ஒத்துக்கொண்டார்

நிலம் நெளியும்படி உள்ள

நிறைவான செல்வங்களின் பரப்பு

எல்லாமும் திரும்பப் பெற்றுக்கொண்டார் சேரமான்;

துளிக்கின்ற மூன்று மதங்களை உடைய யானை

மற்றும் குதிரைகளில்

வேண்டியவற்றை மட்டும் பெற்றுக் கொண்டு

வெண்பிறை போன்ற

கொம்பு உடைய யானை மீது

ஏறிச் சென்றார் பாணபத்திரர்.

3783.

சிவனடியாரின் பண்புகள் பெருக வாழும் சேரமான் பெருமான்

பாணபத்திரர் பின்னே

ஆனந்தக் கண்ணீர் பொழிந்தபடியே

கைகளைக் கூப்பித் தொழுதபடியே வந்தார்

நட்பில் சிறந்த அவரிடம்

திருந்தும் இசையுள்ள பாணபத்திரர் விடைபெற்றார்

திண்மையான பொன்மதில் சூழ்ந்த

மதுரை நகரின் உள்ளே புகுந்தார்.

3784.

சேரர் குலத்தை விளங்கச் செய்கிற

சேரமன்னரான நாயனார் திரும்பிச் சென்றார்

கூனல் இளம் வெண்பிறையினை

சடாமுடியில் முடிந்த சிவபெருமான்

அடியவர்களை ஆட்கொள்ளும் அருளின் பெருமையை

பலகாலமும் வணங்கித் துதித்தார்

மேன்மை விளங்கும்

தமது மாளிகையின் கொலுமண்டபத்தில்

அரசாட்சி செய்தார்.

3785.

அகில முழுதுமுள்ள

யோனிகளில் தோன்றிய உயிர்கள்

பேசுவன யாவும் அறிந்து

அவற்றின் உள்ளத்தில் உள்ள துயரத்தை

ஒன்றுமில்லாதபடி அகற்றி

களவு கொலைகள் முதலியன விலக்கி

கழறிற்று அறிவார் நாயனார்

அளவிலாத பெருமையுடன் ஆட்சி புரிந்தார்

சோழ மற்றும் பாண்டிய மன்னர்களுடன் மகிழ்ந்து

வாழ்ந்து வரும் நாட்களில் –

3786.

வான கங்கை நதியினை

சடையினில் கொண்ட சிவபெருமானை

தூயவிதமாகவும் நல்லவிதமாகவும்

சிறந்த பூசனை திருத்தொண்டு செய்து வணங்கி வந்த

கழறிற்று நாயனாருக்கு

ஒரு நாள்

தேன் சிந்தும் கொன்றை மலர் சூடிய இறைவரின்

ஆடல் சிலம்பொலி –

பெருமையுடைய பூசையின் முடிவில்

முன்போல் கேட்காமல் மறைந்து விட்டது

அதை அறிந்து மயங்கினார் –

3787.

பூசையை விரைந்து முடித்துவிட்டு

“அடியேன் என்ன பிழை செய்தேனோ”

எனப்பொருமினார்;

அழுதார்

“ஆசை கொண்டு தாங்கும் இந்த உடம்பால்

இனி வேறு இன்பம் என்ன இருக்கிறது”என்று

ஒளி மிக்க உடைவாளை உருவி எடுத்து

தம் மார்பிலே பாய்ச்சினார்

நாட்டினார்

இறைவர் விரைந்து

திருச்சிலம்பின் ஓசையை

மிக அதிகமாக அப்போது இசைக்கச் செய்தார்.

3788.

திருநடனம் புரிவதால் வருகின்ற சிலம்பு ஒலி கேட்டதும்

உடைவா¨ª அகற்றினார் போக்கினார்

அழகிய

தமது கைமலர்களை

தலை மீது குவித்து

நிலத்தில் விழுந்து

நீண்டநேரம் துதித்து –

“நெடிய திருமாலும் நான்முகனும்

அரிய மறைகளும் தேடியும் கிட்டாத அரியவரே!

முன்பு

எனக்கு திருவருள் செய்யாதது ஏன் ?” என்றார்.

3793.

அணிகள் அணிந்து

வழியெங்கும் பரவிச் செல்லும் யானைகள்

மலைநாட்டின் மலிந்த பொருளாகிய மலைகள்

மன்னரோடு செல்வனபோல காட்சி அளித்தன

அந்நாட்டில் சூழ்ந்த காடுகள் யாவும்

உடன் நடந்து வருவது போலத் தோன்றின.

நடந்து படர்ந்து வருவது போலவும் தோன்றின

3794.

குதிரைக்கூட்டங்கள்போல

கரையில் சேரும் அழகிய அலைகள் அசைந்தன

பொருந்தியும் பரவியும் தாக்குவது போல சென்றன

மேடும் பள்ளமும் ஒன்றாகத் தெரியுமாறு

நெடியதாக இருந்த சேனை

பூமியே

பாரம் கொண்டு நெளியுமாறு சென்றது.

3795.

அந்த மலைநாட்டின் எல்லையினைக்

கடந்து செல்லும் முன்

தம் அமைச்சர்களுக்கெல்லாம் விடை தந்தார்

மின்னும் ஒளியுடைய மணிகள் அணிந்த சேரர்பெருமான்

தம் பயணத்தில் உதவும்

பரிவாரங்களைக் கூட்டிக் கொண்டார்

கூர்வேல் ஏந்திய மறவர்கள் வாழ்கிற கொங்குநாடு கடந்து

தேவ உலகினரும் வந்து ஆடும்

காவிரியின் வளமுள்ள சோழநாடு சென்றார்.

3796.

சென்ற திசைகள்தோறும் சிவனடியார்கள்

சிறப்போடு எதிர்கொண்டு வரவேற்றனர்

குன்றுகளும் காடுகளும்

தமக்கு இடமாகக் கொண்டு ஆள்கின்ற குறுநில மன்னர்களும்

குறை தீர உபசரித்தனர்

பாலை நிலங்களும் காட்டாறுகளும்

துன்பம் தரும் வழிகளும் கடந்து சென்றார்

வெற்றி பொருந்திய காளை உடைய

இறைவரின் தலங்கள் வணங்கினார்

பணிந்து செல்லத் தொடங்கினார்.

3797.

ஒப்பிலாத காவிரி ஆறாகிய

அந்த பொன்னித் திரு நதியின்

வடக்குக்கரையில் ஏறினார்

ஒருகணமும் ஒழியாத அன்பின் வழியில் தோன்றிய

அந்த நாயனார்

பெரும்பற்றப்புலியூரில்

பொன்னம்பலத்தில் ஆடும்

திருக்கூத்தைப்போற்றுவதற்காக

உருகும் உள்ளமுடன் சென்றார்.

3798.

தில்லையாகிய பழமை மிகுந்த தலத்தின் எல்லை வந்தார்

மகிழ்ச்சி கொண்ட தில்லைவாழ் அந்தணர்களும்

திருத்தொண்டர் கூட்டங்களும் வந்து சேர்ந்தனர்

வணங்கினர்

அவர்களுக்கு

பதில் வணங்குதல் செய்து நகரில் புகுந்தார்

அழகிய மணமிகு மலர்கள்

அழகு செய்யும் திருவீதிகண்டார்

வணங்கினார்

தலைமீது கைகள் குவிந்தன

சிந்தை மகிழ்ந்து –

எழுநிலைக் கோபுரத்தை அடைந்தார் சேரமான்

3799.

பெருமை நிலவும் எழுநிலைக் கோபுரத்தின் முன்பாக

நிலத்தில் விழுந்தார் வணங்கினார்

கண்ணீர்த்துளிகள் மலர்ந்தன

உள்ளே புகுந்து

அழகிய மாளிகையை வலம் வந்தார்

அளவிலாத அண்டங்களையெல்லாம் அளித்தவர்

நின்று ஆடும் திருச்சிற்றம்பலத்தின் முன்பாக

பிறகு உள்ளே சென்றார்

3800.

அளவிலாத இன்பம் அளிக்கின்ற பெருங்கூத்தர்

ஆடுவதற்காக தூக்கிய பொற்பாதம் காட்டி அருளியதும்

உள்ளமும் புலன்களும் ஒரு வழியில் சென்றன

உருகின

உய்வு பெற்றார்

கழுத்தினில் நஞ்சை வைத்து

தேவர்களுக்கு அமுதம் அளித்துக் காத்தது மட்டுமல்ல

திருவம்பலத்தில்

திருக்கூத்தாடும் காட்சி எனும் அமுதத்தையும்

நாயனார் வாழ்த்திப் போற்றினார்.

3801.

இறைவரைத் துதிக்கத் துதிக்க

நிறைவு பெற முடியாத அளவுக்கு ஆசை மிகுந்தது

ஆனந்தக் கடலுள் திளைத்தார்

இறைவர் திருவருளால்

பருவம் தவறாமல் மழை பொழிகின்ற

மேகத்துக்கும் ஒப்புமை கூற முடியாத

வள்ளல்கரங்களை உடைய

கழறிற்றறிவார் நாயனார்

சிறப்பு நிறைந்த வண்ணமுடைய

“பொன் வண்ணம்” எனத் துவங்கும் அந்தாதியை

உலகம் அன்புடன் ஓது இன்பம் அடைவதற்காக –

திருப்படிகளின் கீழே நின்று பாடினார்

3802.

தம் இறைவராகிய

தம்பிரானுக்கு முன் நின்றார்

செந்தமிழ்ச் சொல்மாலையை

இறைவன் கேட்பிக்கச் செய்தார்

வானவரும் வாழ

நடமாடும் ஒருவராகிய சிவபெருமான்

அந்தச் சொல்மாலைக்கு ஏற்ற பரிசாக

செம்பொன்னால் ஆகிய

அழகிய அம்பலத்தில்

எடுத்து ஆடும் திருவடிச் சிலம்பிலிருந்து

இந்த உலகினர் வாழ்வதற்காக எழுகின்ற

அதே ஒலியை

நாயனார் எதிரே

கேட்கும்படி செய்தார்.

3803.

ஆடுகின்ற சிலம்பின் ஒலி கேட்ட சேரமான்

அளவிலாத ஆனந்தம் பெற்றார்

“பெரும் பேறு இது!” எனும் கொள்கையுடன் கும்பிட்டார்

நீண்ட நெடிய காலங்கள் பணிந்து வணங்கினார் தொழுதார்

பின்பு வெளியே வந்தார்

மாடங்களையுடைய மாளிகை வீதியை வணங்கினார்

வெளியே தங்கினார்

3804.

எல்லோரும் துதிக்கின்ற தலம் தில்லை

அங்கு தங்குபவரானார் சேரமான்

பசும் பொன்னால் ஆன அம்பலத்துள்

பாம்பும்

கங்கைப்புனலும் சடையில் தாங்கி ஆடுகிற

இறைவரின் கூத்தினை

தாங்கவியலாத பெருவிருப்பம்

மேலும் மேலும் எழுமாறு

வேதங்கள் புகழும் திருக்களிற்றுப்படியின் கீழிருந்து

இரவும் பகலும் துதித்தார்

அதனால் மிக்க இன்பம் பெருகியது

அத்தகைய நாட்களில் –

3805.

ஆடுகின்ற கூத்தப்பெருமான்

சேரபெருமான் பாட்டைக் கேட்டதால்

“சிலம்பொலியைக் கேட்குமாறு செய்து அருளினோம்” என

அவரது நட்பு மிக்க இயல்பினால் அருளினார்

நாவலூர் மன்னரான சுந்தரரை

நீண்ட விருப்புடன் “காணலாம்” என

உள்ளத்தில் எழுந்தது நிறைந்த நினைவு

அதனால் –

திருமாலும் தேடுகின்ற திருவடியை உடைய இறைவரின்

திருவருள் பெற்றுக் கொண்டு

திருவாரூர் புறப்பட்டார் சேரமான்.

3806.

“அறிவின் எல்லை” எனப்படும்

திருத்தில்லையின் எல்லையை வணங்கினார்

பிரிவேயில்லாத இறைவனின் திருவடியை

மேலும் மேலும் பெருகும் உள்ளத்தில் பெற்றார்

ஞானபோனகர் ஞானசம்பந்தர் தோன்றி அருளிய

புகலிக்குச் சென்றார் துதித்தார்

மான் கொண்ட கையையுடைய

சிவபெருமானின் கோவில்கள் பலவும்

வணங்கி மகிழ்ந்து பயணித்தார்.

3807.

வழியிலும் குழியிலும் செழுமையான வயல்களிலும்

வயல்களில்

மலர்கள் பொருந்திய நீர்நிலைகளிலும்

முத்துக்களை கொணர்ந்து சேர்க்கின்ற

அலைகள் நிரம்பியிருந்தது பொன்னி ஆறு

அதனைக்கடந்தார்

தென்கரை ஏறினார்

விழியுடன் திகழும் நெற்றி கொண்ட சிவபெருமான்

விரும்பி வாழும் தலங்கள் பல வணங்கினார்

பிறகு

ஊழியின் முடிவில் தோன்றிஎழப்போகும்

பெரு வெள்ளத்தாலும் விழுங்கப்படமுடியாத

அழிவற்ற வயல்கள் சூழ்ந்த

திருவாரூர் கண்டார்.

3808.

அத்தகைய நாட்களில்

திருநாகைக்கோரணம் சென்றார்

திருப்பதிகம் பாடினார்

அழகிய பொன்னாலும் மணிகளாலும் ஆன நவமணிகளுடன்

ஆடை – சாந்து மற்றும் வலிய குதிரைகள்

பசும் பொன்னால் ஆன சரிகை

ஆகியன இறைவர் தந்தார்

அதனைப்பெற்றுக் கொண்டு

மேலும் பல பதிகளில்

தம்பிரானாகிய சிவபெருமானைப் பணிந்து புகழ்ந்தார்

திருவாரூரில் தங்கியிருந்தார் நம்பி ஆரூரர்.

3809.

சேரமான் பெருமானார் திருவாரூர் அடைந்தார்

அந்தணர்களின் தலைவரான நம்பி ஆரூரர்

அரசர் சேரமான் வருகின்ற பெருமை பெற்றார்

உள்ளம் மகிழ்ந்து

அவரை எதிர்கொண்டு அணுகினார்

அழகிய மணமுடைய

மாலை சூடிய சுந்தரர் முன்பு

விருப்பமுடன் தாழ்ந்து வணங்கினார் சேரமான்.

3810.

தம் முன் பணிந்த சேரமானை

தானும் வணங்கினார் நம்பி ஆரூரர்

அவரை

முகந்து வாரினார்

அன்பு பெருகத் தழுவினார்

இன்ப வெள்ளத்தில் முழுகிய ஒருவர்

கரையேற இயலாமல் அலைபவர் போல்

எலும்பும் உருகும்படி

இருவரின் உயிரும் உடம்பும் இரண்டல்ல

ஒன்றே எனும்படி ஆயினர்.

3811.

இவ்விதம்

அந்த இருவரையும் கண்ட திருத்தொண்டர்களும்

அளவிலாத மகிழ்ச்சி எய்தினர்

மானம் மிகுந்த சேரர் பெருமானாரும்

வன் தொண்டரான நம்பி ஆரூரரும்

ஒருவருள் ஒருவர் கலந்த

தன்மை கொண்ட நட்பின் காரணமாக

முனைப்படி நாட்டின் மன்னரான நம்பி ஆரூரர்

“சேரமான் தோழர்” என்றும்

உலகத்தால் அழைக்கப்பட்டார்.

3812.

ஒருவரில் ஒருவர் கலந்த உணர்வால்

இன்பம் தரும் மகிழ்வான மொழி உரைத்தனர்

பொருந்திப் பழகும் போதெல்லாம்

“இறைவரிடம் நாம் எப்படி கைம்மாறு செய்வோம்” என

உள்ளத்தில் மகிழ்ச்சி பெற்றார் நம்பி ஆரூரர்;

பருவமழை போல

கொடைத் தன்மை மிகுந்த

சேரமானின் செங்கைகளைப் பற்றிக் கொண்டார்

இறைவரின் திருவடிகளைப் பணிவதற்கு

வீதியை விட்டு நடந்து

கோயிலுக்குள் புகுந்தார்.

3813.

அக்கோவிலின் திருமுற்றத்தில் உள்ள

தேவாசிரிய மண்டபத்தினைத் தொழுதார்

பிறகு —

இறைவரின் திருமாளிகை வலம் வந்தார்

ஒன்றுபட்ட உள்ளத்துடன்

உள்ளே புகுந்த சேரமான்

திருவாரூரர் முன்னே நின்று

கண்ணருவி வீழ

நிலத்தில் விழுந்தார்

என்றும் இனிய தம் பெருமானாகிய

புற்றிடம் கொண்ட இறைவரைத் துதித்தார்.

3814.

தேவர்களும் முனிவர்களும் வந்து கெஞ்சுகின்ற

வந்து இறைஞ்சுகின்ற

தெய்வப்பெருமானாகிய

தியாகேசரின் திருவடிகளை வணங்கினார்

மூவருக்கும் முதல்வரான இறைவரை

திரு முன்பு

“மும்மணிக்கோவை” பாடித் துதித்தார்

நன்மை விளங்கும் நாவலூர் நம்பியின்

திரு உருவம் முன்பு

சேரமான் பாடியபோது

இறைவரும் அதனை ஏற்றார் அருள் செய்தார்.

3815.

நெற்றியில் கண் உடைய

இறைவரின் அருள் பெற்று

எழுகின்ற சேரமான் நாயனார் எனப்படும்

கழறிற்றறிவார் நாயனாரை

சுந்தரர் அழைத்துக் கொண்டு வெளியே வரும்போது

ஒளிமிகும் விளக்குகளையும்

நிறை குடங்களையும் பூமாலைகளையும்

ஏந்திக் கொண்டு வரும் நங்கையர்களுடன்

பரவையாரும் எதிர் கொண்டு வரவேற்றார்.

3816.

சோதி ஒளி வீசும் மாளிகையில்

பசும்பொன் சுடர் விடும் கால்களை உடைய இருக்கை மீது

சேரமான் பெருமானை அமரச்செய்து

நம்பி ஆரூரராகிய சுந்தரரையும் அமர வைத்தார்

நீதி தவறா ஒழுக்கமுடைய நூல்கள் விதித்தபடி

பூசைகளை முறைப்படி செய்தார்.

3817.

தூண்டுசோதி விளக்கு போன்ற பரவையாரை

திருவமுது அமைக்கும்படி

துணைவர் நம்பி ஆரூரர் சொன்னதும்

அவர் விரும்பியபடியே

வெவ்வேறான பலவிதமான கறிகளும் பானகமும்

தாவிச் செல்லும் குதிரைப்படை உடைய

சேரமான் பெருமானுக்கும்

அவருடன் வந்தவர்களுக்காகவும்

விரைவாகச் சமைத்து விருந்து அமைத்தார்

3818.

அரசர் என்ற சிறப்பை விட மேலாக

“அடியார்” என்ற சிறப்புக்குத் தகுந்தபடி

பொருந்திப் பெருகும் அன்போடு

விரும்பும் அமுதைச் சமைத்தார்

பிறகு –

கழுத்துக்கயிறு அணிந்த

யானைகளை உடைய சேரமானுக்கும்

அவருடன் வந்தவர்களுக்கும்

உணவு உண்ணச் செய்ய

பாற்கடலில் தோன்றிய இலக்குமி போன்ற

பரவையார் வந்து

நம்பி ஆருரருக்கு அன்புடன் அறிவித்தார்.

3819.

“மலர்மாலை சூடிய குழலை உடைய பரவையே !

முன் செய்த தவப்பயனால்

சேரமான் இங்கு எழுந்தருளி

திருவமுது செய்யும் பேறு பெற்றோம்

காலம் தாழாது

அமுது செய்விப்பாயாக” என்று

இவ்வுலகில் நிறைந்த சிறப்புடைய

வன் தொண்டர் கூறி அருளினார்

அழகுடன் விளங்கும் தமது திருக்கரங்களால்

சுந்தரர் ஓரிடத்திலும் சேரமான் ஓரிடத்திலும்

இரண்டு இலைகள் இட்டார்

பரிகலங்கள் இட்டதும் –

3820.

சுந்தரர் சேரமானை நோக்கி

“தம்முடன் அமர்ந்து உணவு உண்ண வேண்டும்” என்றதும்

அங்கு அவர் விரைந்து வணங்கிப்

பணிந்து அஞ்சினார் திடுக்கிட்டார்

நீண்டிருக்கும் அவரது

பெரிய கைகளைப் பிடித்துக்கொண்டுநம்பி ஆரூரர்

மீண்டும்

நேரே வேண்டிக் கொண்டபிறகு

அவருடன் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்ண

இசைந்தார் சேரமான்.

3821.

ஒன்றாக உடன் அமர்ந்து

உணவு உண்ண சேரமான் சம்மதித்தார்

நம்பி ஆரூரரும் சேரமானும் ஒன்றாய் உணவு உண்ண

உயர்தவமுடைய பரவையார்

மிகுந்த விருப்பமுடன் உணவு அமைத்தார்

ஆறு வகை

ஆறு சுவை உணவுகளையும்

தாம் வேண்டிக்கொண்டபடியே உண்ணச்செய்தார்

தூய்மையான விருந்து அளிக்கும் கடமையினை

இனிதே ஆற்றி முடித்தார்.

3822.

சந்தனத்துடன் பனிநீரைக்கலந்து

பச்சைகற்பூரமும் சேர்த்து

மணம் மிகுந்த கலவையாக்கி அரைத்து

சேர்த்துத் தந்தனர் பெண்கள்;

மகிழ்வு தரும் கஸ்தூரி சாந்தையும்

தூய வாசம் வீசும் பூமாலைகளும் தந்தனர்

பொன்கொடி போன்ற பரவையார்

இனிய வாசத்துடன்

வெற்றிலையும் பாக்கும் ஏந்தினார்

3823.

அத்தகைய சிறப்புடன் செய்த

பூசைகள் எல்லாவற்றையும் விரும்பி ஏற்றுக்கொண்டு

தூய்மை செய்யும் திருநீற்றை வாங்கிக் கொண்டு

தம் திருமுடியில்

வணங்கி அணிந்துக் கொண்டு

மிக்க விருப்பமுடன்

சுந்தரர் அருகிலேயே இருக்கும்

பெருமை பெற்றார் கழறிற்றறிவார்

உண்மையான திருத்தொண்டின் தன்மை அடைந்தவராக

அவர் சுந்தரரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

3824.

மலைநாட்டு அரசராகிய

சேரமான் பெருமான் வணங்கியதும் –

சுந்தரரும் எதிர் வணங்கினார்

தழுவிக் கொண்டார்

கலைகள் நிறையப் பெற்ற

முழுமதி போன்ற முகம் பெற்ற பரவையாரின்

கணவராகிய நம்பி ஆரூரர்

“வில் குறி பொறித்த

கொடி உடைய சேரமானை

அடையுமாறு தந்தார் இறைவர் ” என்று

கங்கை அலை வீசும்

பூங்கொன்றைமலர் சடை உடைய

இறைவரின் திருவருளைத் துதித்தார்.

3825.

செல்வம் நிறைந்த திருவாரூரில் உள்ள

செம்பொன் புற்றில்

இனிதே விரும்பி அமர்ந்த

மேருமலையை வில்லாக உடைய

சிவபெருமானின் திருவடிகளை வணங்கினார்

வீதிவிடங்கப்பெருமான் ஆகிய தியாகேசரை

பவனி வரும்போது சேவித்தார்.

பெருவாழ்வு பெற்றவராக மனம் மகிழ்ந்தார்

சொல்வித்தகர்களாகிய

இரு பெருமக்களும்

இறைவர் மீது தொடர்கின்ற காதலுடன்

அவ்வூரில் இருந்தனர்.

3826.

இவ்விதம்

இன்பத்தில் மூழ்கியிருந்த நாட்களில்

மணி மாலைகள் அணிந்த வன் தொண்டர்

நஞ்சுடைய கண்டமுடைய வேதியர் வீற்றிருக்கும்

இடங்கள் பலவும் வணங்கிய பிறகு

வயல்கள் நிறைந்த

கன்னித்தமிழ்நாட்டின்

மாமதுரை முதலாக

சடையுடைய இறைவர் வாழும்

பல ஊர்களையும் வணங்க

திருவருள் தூண்டியது.

3827.

சேரமான் பெருமானுக்கும்

சுந்தரர் பெருமானைப் பிரிய மனமில்லை

அதனால்

மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரப்பெருமானை

வணங்க விரும்பும் எண்ணமுடன்

உள்ளத்தில் எழுந்த குறிப்புடன்

சுந்தரருடன் தானும் செல்வதற்கு முடிவு செய்தார்.

3828.

இருவரது திருவுள்ளங்களும் இசைந்தன

திருமாளிகையிலிருந்து திருவாரூருக்கு

புறப்பட்டனர்;

இறைவரின் மலர்போன்ற பொற்பாதங்களை

பூங்கோயிலுள் சென்று வணங்கினர்

அவரது திருவருள் பெற்று வெளியே வந்தனர்

எல்லையிலாத அணிகள்

ஊர்திகள்

ஒப்பிலாத சேமநிதிகள்

ஆகியன ஏந்திக் கொண்டு

அவர்கள் அருகில்

பெரும் சுற்றத்தினர் வந்தனர்

3829.

தம்மைச் சேவித்துக் கொண்டே

மிக அருகில் வருகின்ற பரிவாரங்கள் சூழ

திருவாரூரை அவர்கள் வணங்கினர்

பிறகு

சோலைகள் மிகுந்த

புறம்பணை கடந்து சென்று

திருக்கீழ்வேளூர் அடைந்தனர்; பிறகு

கடல்கழிக்கானல் சூழ்ந்து

பூக்கள் விளங்கும் சோலைகள் உடைய

நாகப்பட்டினம் சென்றனர்

திருக்காரோணம் வணங்கினர்

3830.

திருநாகைக்காரோணராகிய

சிவக்கொழுந்தை சென்று பணிந்தனர்

சிந்தை உருக்குகின்ற ஆர்வத்துடன்

செந்தமிழ் மாலையான திருப்பதிகம் சாத்தி

சிலநாட்கள் அங்கேயே

உறைந்துபோய் இருந்தனர்

பெருகும் கங்கை உலவுகின்ற

சடைமுடியார் சிவபெருமானின்

பிற இடங்கள் பலவற்றுக்கும் சென்றனர்

பணிந்து ஏத்தினர்

அருளுக்கெல்லாம் காரணமான

மூலமுதல்வரான இறைவரின்

திருமறைக்காடு சென்று அடைந்தனர்

சுந்தரரும் சேரமானும்.

3831.

வலமாகச் சுற்றிவந்து

கடல் வழிபடுகின்ற

திருமறைக்காட்டின் முதல்வர் திருக்கோயில் சென்று

இறைஞ்சினார் வணங்கினார்

செம்மையான இயல்புடைய திருநாவுக்கரசும்

“ சீகாழியில் தோன்றிய சிவக்கன்று” ஞானசம்பந்தரும்

“திறக்க” “அடைக்க” என்று பாடப்பெற்ற

அக்கோயிலின் வாசலை அடைந்தனர்

அருள் கண்ணீர் பொழியும் விழிகளுடன்

அந்த இரு

நாயன்மார்களைத் தியானித்து இறைஞ்சினர்

3832.

நிறைவுகொண்ட வேதங்கள்

அர்ச்சனை செய்த

நீடிய திருமறைக்காட்டின் அரிய மணியாகிய

சிவபெருமானை இறைஞ்சினர்

வீழ்ந்து பணிந்தனர் எழுந்தனர்

போற்றினர்

“யாழைப்பழித்து” எனும் திருப்பதிகம்

நம்பிஆருரர் சாத்தினார்

அருள்மிகுந்த சேரர் –

சிறப்புடன்

தான் பாடிய

“பொன் வண்ண அந்தாதியில்”

இறைவரை ஓதி இன்புற்றார்

3833.

பிறகு –

இருவரும் எழுந்தனர் பணிந்தனர்

வெளியில் வந்தனர்

அந்த இரு பெரும் தொண்டர்களும்

செழுமையான

குளுமையான வயல்கள் சூழ்ந்த

அந்தப் பதியில்

சில நாள்கள் தங்கியிருந்தனர்

அலை கடலின் நஞ்சினை

உட்கொண்ட கழுத்தினையுடைய

இறைவரின் தலமான “அகத்தியான் பள்ளி” சென்றனர்

வணங்கினர்

பிறகு –

கலைகள் வளரும்

பிறைக்கொழுந்து வளரும்

செஞ்சடைக்குழகனாகிய சிவபெருமானின்

“திருக்கோடிக்கோயில்” எனும் கோயில் சென்றனர்

3834

கோடிக்குழகர் கோயிலின்

உள்ளேயும் வெளியிலும்

குடியிருப்பவர்கள் ஒருவரையும் காண இயலவில்லை

கோவிலுள் புகுந்து –

இறைவரின் திருவடி தொழுது

உள்ள வாட்டம் கொண்டு

கண்ணீர் வர-

“கடிதாய்க்காற்று’ எனத்தொடங்கும்

திருப்பதிகம் பாடினார் சுந்தரர்

துர்க்கையுடன் இறைவர் வீற்றிருக்கும் தன்மையும்

அந்தப் பதிகத்தில் பதித்து வைத்துப்பாடினார் சுந்தரர்

· கோடிக்கோயில் :- தென்நாட்டின் கோடியில் உள்ளதால்

“கோடிக்கோயில்” எனப்பட்டது. அக்கோயிலின் இறைவர் குழகர்.

3835.

அந்தத்

திருமறைக்காட்டில் தங்கிவிட்டு

வணங்கி விடைபெற்று அகன்று

சோழ நாட்டில்

இறைவர் தங்கும் இடங்கள்

வணங்கிச்சென்றனர்

பிறகு-

பாண்டிநாடு சென்று சேர்ந்து

திங்கள்முடியாராகிய இறைவரின்

திருப்பத்தூர் சென்றனர் வணங்கினர் பிறகு

முகில்கள் தவழும்

அழகிய மாடங்கள் நிறைந்த

மதுரை எனும் பழமைமிகு மூதூருக்கு வந்தனர்

3836.

சேரமான் தோழரான நம்பி ஆரூரரும்;

சேரமானும்

பாம்பினை அணியாகக் கொண்ட சிவனை

மதுரையில் வணங்க அன்புடன் வந்த போது

பாண்டிய மன்னர்

மனக்காதல் கொண்டு

நகரை அலங்கரித்தார்

அவர்களை எதிர்கொண்டு வரவேற்று அழைத்து

நகருள் கூட்டிச் சென்றார்.

3837.

தென்னவராகிய பாண்டியனின் மகளைத் திருமணம் புரிந்து

பழைமையுடைய மதுரை நகரில்

முன்பே வந்து தங்கியிருந்த

சோழமன்னரும் உடன் சேர்ந்து கொண்டார்;

ஒன்றாகச் சேர்ந்து –

நிலை பெற்ற

திருவாலவாய் எனும்

அழகிய கோயில் வந்து அடைந்தனர்.

3838.

திருவாலவாய் அமர்ந்த

செஞ்சடையாரின் கோவிலை வலம்வந்து

இறைவரின் திருமுன்பு வீழ்ந்து

இறைஞ்சினார் வன் தொண்டர்;

வழிவழியாய் தொண்டு புரிகின்ற பேற்றினைத் தருகிற

இறைவரைப் போற்றினார் தாழ்ந்து வணங்கினார்

பெரு வாழ்வு அடைந்த

பெருகும் வாய்மை உடைய தமிழினால்

தமிழ்ப்பாமாலை பாடி

பெருமகிழ்ச்சியில் விளங்கினார்.

3839.

உலகில்

ஏற்றம் மிகுந்து கொண்டே செல்லும்படியான

புகழ்கொண்ட சேரர்பெருமானும் நிலத்தில் வீழ்ந்து

“அடியேனையும் ஒரு பொருளாக மதித்து

திருமுகம் அளித்த

கருணையின் எல்லை கூறஅறியேன்” என

மொழிகள் தடுமாற நாத்தழுதழுத்தார்

மணம் விரிந்த கொன்றைமலர் அணிந்த

சிவபெருமான் திருமுன்பு

களிப்பு கொண்டார்.

3840.

செம்பியர் (சோழன்)

செழியர் (பாண்டியன்)

இருவரும் இறைவரை வணங்கினர்

சேரருடன் சுந்தரரும்

கோவிலின் வெளிப்பக்கம் வந்தனர்

பெரும் உவகை வந்தது பாண்டியருக்கு!

அதனால்

உம்பர்பிரான் கோவிலிருந்து அழைத்து சென்று

அழகிய பொன் பூண்ட தனது மாளிகையில்

குறைவிலாது அனைவரையும் உபசரித்தார் .

3841.

உள்ளம் மகிழ சிவபெருமானைக் கும்பிட்டு

அங்கு தங்கியிருந்த நாட்களில்

சேரமானுடன்

வன் தொண்டர் சுந்தரரும் தங்கிய இடத்திற்கு வந்து

சோழரும் (வளவனார்)

பாண்டியரும் (மீனவனார்) விருப்பமுடன்

அவர்களுடன் அளவளாவினர் .

3842.

அத்தகைய நாட்களில் –

மதுரை நகரின் அருகிலுள்ள

இறைவரின் பிறதலங்களை தரிசிக்க

பொன்னாரமும் அணிகளும் பூண்ட மார்புடைய

முடி மன்னர்கள் மூவரும் உடன் வந்தனர்

செம்மை விளங்கும் நாவு கொண்ட

திருமுனை நாட்டின் தலைவர்

நம்பி ஆரூரர் வணங்கினார்

திருப்பதிகங்களைப் பாடினார் பிறகு

தொழுது வணங்கி எழுந்து புறப்பட்டு

திருப்பூவணம் அடைந்தார்.

3843.

நிலைத்த புகழ்மிகு

திருப்பூவணத்திற்கு அருகில்

நேரே செல்லும்போது

பக்கத்தில் வரும் திருத்தொண்டர்கள்

நிலை பெற்ற அந்தத் தலத்தினைக் காட்டினர்

வேதங்களும் தேடுவதற்கு அரிதான இறைவரை

“திருவுடையார்” எனும் பதிகத்தால் தொடங்கிப் பாடினார்

“பூவணம் ஈதோ” என்று போற்றிப் பணிந்தார்.

3844.

திருப்பூவணம் சென்று

வானவர்களின் தலைவரான

இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும்

கோயிலின் முற்றத்தை வலம் வந்தார்

இறைவரின் திருமுன்பு பணிந்தெழுந்தார்

நின்றார் பரவிப் பாடினார்

அங்கிருந்து –

வெற்றியுடைய முடிமன்னர்கள் மூவருடன் புறப்பட்டு

வன் தொண்டராகிய சுந்தரர்

அந்தத் தலத்தில் தங்கியிருந்தார்.

3845.

திருப்பூவணம் எனும் அந்தத் தலத்தில்

சிலநாட்கள் தங்கியிருந்த பிறகு

வன் தொண்டராகிய ஆரூரர்

முப்பெரும் வேந்தர்களோடு

முதன்மையுடைய மதுரை நகரம் எய்தினார்

உண்மையான

பரிவு மிகுந்த பேரன்புடன்

திருவாலவாயுடைய சிவபெருமானின்

மணம் கமழும் மலர்த் திருவடிகளை

எப்போதும் பணிந்து வணங்கி

அங்கு விருப்புடன் தங்கியிருந்தார்.

3846.

செஞ்சடையாராகிய சிவபெருமான்

நஞ்சினை உண்ட கழுத்தினை உடைய சிவபெருமான்

விருப்பமுடன்

நயமுடன்

விரும்பி வீற்றிருக்கும்

திரு ஆப்பனூர், திருவேடகம் முதலிய தலங்களில் சென்று

குறைவிலாத விருப்பமுடன் வணங்கி

முகில் தோயும் மதி உடைய

மதுரை மாநகரில் மகிழ்ந்து தங்கியிருந்தார்.

3847.

பரமராகிய சிவபெருமானின் திருப்பரங்குன்றத்திற்கு

மூவேந்தர்களுடன் சென்றார்

திரிபுரம் எரித்த பெருமானின் கோவிலை

வலமாக வந்தார் உள்ளே புகுந்தார்

வெண்தலைகள் மலிந்த

மாலை அணிந்த சடையுடைய

சிவபெருமானின் திருவடியின் கீழ்

ஆளாகச்செய்த இறைவரின் அருமையை எண்ணினார்

“அஞ்சுதும்” என்ற கருத்துடன் பாடல் பிறந்தது.

3848.

“கோத்திட்டையும்” என்று துவங்கி

குற்றமிலாத திருப்பதிக இசையினா

மூர்த்தியாரை வணங்கினார் சுந்தரர்

சங்கரனாராகிய சிவபெருமான் தங்கியிருக்கும்

திருப்பரங்குன்றத்தில்

முப்பெரும் வேந்தர்கள் முன்பாக

வளம்மிகு தமிழ்மாலைப் பதிகத்தைப் பாடிப்பரவினார்

சாத்தினார்.

(கோத்திட்டை- திருப்பரங்குன்றம்)

3849.

சிவபெருமானுக்கு

திருத்தொண்டு செய்யும் அருமைப்பாட்டை

இப்பெரியவுலகில் ஆள்கின்ற

முதல் முடி மன்னரான மூவரும் கேட்டனர் அஞ்சினர்

மறைகளில் விதித்தவாறு முந்நூல் அணிந்த

அழகிய மார்புடைய சுந்தரரை வணங்கினார்

நிறைந்த தவமுடைய சுந்தரர்

அப்பாலும் இருக்கின்ற

நிருத்தராகிய சிவபெருமானின்

மற்றபதிகள் சென்று தொழ நினைத்தார்

3850.

அந்நாட்டின் அருகிலுள்ள

பல தலங்களுக்கும் சென்று வணங்க

மலைநாட்டு மன்னரான சேரமானுடன்

சுந்தரர் சென்று எழுந்தருள்வதற்காக

மின் ஒளி வீசும் அணிகள் அணிந்த

சேரன் மற்றும் பாண்டியராகிய இருவரும்

மதுரைக்குத் திரும்பினர்

தென் நாட்டில்

அவர்களுக்கு வேண்டுவனவற்றைச் செய்ய

பரிவாரங்களை ஏவி அனுப்பினர்.

3851.

இருபெரும் வேந்தர்களும் (சோழ, பாண்டியர்)

தத்தம் தலங்களுக்கு மீண்டு சென்றனர்

பிறகு

புகழை உடைய சேரமானுடன்

எழுந்தருளிச் செல்கின்ற சுந்தரர்

இறைவர் வெளிப்படும்

தலங்கள் பலவும் பணிந்து சென்றார்

பிறகு

மலையின் சாரலில் நிறமுடைய மணிகள்

கதிரவன் போல் ஒளி வீசுகிற

குற்றாலம் சென்றடைந்தார்கள்.

3852.

திருக்குற்றாலத்தில் இனிதாக அமர்ந்த கூத்தரின்

ஒலிக்கும் கழல் அணிந்த

திருவடிகளை வணங்கினர்

சொல்மலர் மாலை புனைந்து துதித்து

“திருக்குறும்பலா” எனும் கோவிலில்

இறைவரைத் தொழுதனர்

முதிராத வெண்பிறைச்சந்திரன் சூடிய

இறைவரது தலங்களைப் பணிந்த பிறகு

திரிபுரம் எரித்த பெருமான் எழுந்தருளிய

செல்வமிகு திருநெல்வேலி அடைந்தனர்.

3853.

திருநெல்வேலியில் வீற்றிருக்கும்

திருநீற்றழகரான இறைவரைப் பணிந்து பாடினார்

அப்பக்கமுள்ள பல்வேறு பதிகளையும்

பிறவற்றையும் அன்புடன் பணிந்தார்

வில்லினை ஏந்திய வேடர் உருவமுடன்

பன்றியின் பின்னே சென்ற

வேத முதல்வரான இறைவர் வீற்றிருக்கும்

இராமேஸ்வரத்திற்கு அன்புடன் வந்து சேர்ந்தனர்.

3854.

நிலை பெற்ற இராமேஸ்வரத்து மாமணியாகிய

இறைவனை

முன் சென்று வணங்கி

துதிக்கும் தமிழ்மாலையான திருப்பதிகம் பாடினார்

பாம்புகளை அணிந்த முடி உடைய

இறைவர் வீற்றிருக்கும் ஈழநாட்டில்

மாதோட்டம் எனும் ஊரில் உள்ள

“கேதீச்சரம்” எனும் தலத்தை சிந்தித்து

திருப்பதிகமாகிய சொல்மலர் மாலை சாத்தினார்

நடுவே கடல் இருப்பதால்

தொலைவில் நின்றபடியே தொழுதார்

அங்கு தங்கினார்.

3855.

திரு இராமேஸ்வரத்தில்

சிவந்த பவளம் போன்ற சுடர்க்கொழுந்தை

இறைவனாகிய சிவத்தினை

வணங்கினார் தொழுதார்

பிரிவு கொண்டு அகன்றார்

பரமரின் மற்ற தலங்கள் சென்று பணிந்தார்

பெரிய வானூர்திகளில் வந்து

தேவர்கள் வணங்குகிற

திருச்சுழியல் வந்து சேர்ந்தார் வன் தொண்டர் சுந்தரர்

மலைநாட்டு மன்னரான சேரமானுடன்.

3856.

திருச்சுழியலை தனது தலமாகக் கொண்டவரும்

செம்பொன் மலையினையே வில்லாகக் கொண்டவரும்

கர்ப்பம் எனும் கருச்சுழியில் வீழாமல் காப்பவரும்

கடலில் எழுந்த நஞ்சின் கருமையை

தன் கழுத்தில் தாங்கியவரும் ஆன இறைவரை

கொன்றைமலர் மாலையால் ஆன மாலையுடன்

“ஊனாய் புகலாய்” எனும் பதிகமாலை பாடிப்புனைந்தார்

வழிபட்டார்.

3857.

அவ்வூரில்

அங்கணராகிய இறைவனை

நெற்றியில் கண் கொண்ட பெருமானை

பணிந்து தங்கியிருந்தார் ஆரூரர்

அவ்விதமான நாட்களில்

இரவில்

கனவில்

காளையான திருவடிவத்துடன் தோன்றி

சிவந்த கையில் பொன் செண்டும்

முடியில் சுழியமும் கொண்டு

எங்கும் காணமுடியாத திருக்கோலத்தை

எலும்பும் உருகும்படி முன்னே காட்டி –

3858.

“யாம் இருப்பது கானப்பேர்” என்று கூறி

வானில் கங்கை எனும் பேராறு உலவும்

பெருமுடியுடைய பெருமான் மறைந்தார் அகன்றார்

ஞானப்பேராளர் ஆகிய நம்பி ஆரூரர் உணர்ந்தார்

அதிசயித்தார்

பாம்புடன் பன்றிக்கொம்பும் அணிந்த இறைவரின்

“திருவருள் தன்மைதான் என்னே” என்றார்.

3859.

தாம் கண்ட கனவின் தன்மை

சிவபெருமானின் அருள் தன்மை

இரண்டினையும்

சேரமான் நாயனராகிய கழறிற்றறிவாருக்கு

மொழிந்தார்

எடுத்துக்கூறி அருளினார்

தாமரை மலர்களை உடைய

நீர்நிலைகள் கொண்ட திருச்சுழியில்

புனிதராகிய சிவபெருமானின் கழல் வணங்கினார்

விடைபெற்று

அண்டர்பிரானாகிய தேவர்கள் தலைவன் வாழும்

திருக்கானப்பேர் தலம் அடைந்தார் நம்பி ஆரூரர்

“தொண்டரடித் தொழலும்” எனத்தொடங்கும்

பதிகத் தமிழ்மாலையைப் பாடினார்

(‘கானப்பேர்” என்பது தற்போது “காளையார் கோயில்” )

3860.

மனிதரைத் தொலைவில் கண்டதும்

அஞ்சுகின்ற நீர்நாயின் அருகில்

வாளைமீன்கள் பாய்ந்து நுழையும்

சேறு கொண்ட வயல்கள்

மிகுந்தது திருமுனைப்பாடி நாடு

அதன் தலைவரான நம்பி ஆரூரர்

“காளையாரான இறைவரைக் கண்டு

என்று தொழுவேனோ” எனப்பாடி

இறைவர் திருவடிகளை தினமும் பாடிப்பரவுதற்கு

பரமரிடம் சென்று சேர்ந்தார்.

3861

நிலை பெற்ற புகழுடையது கானப்பேர்

வளம் மிகுந்த அந்தத் தலத்தில்

சென்னியில் வளரும்

பிறைச்சந்திரன் அணிந்த சிவபெருமானின்

செழுமையான கோயிலை வலம் வந்தார்

முன்பாக நின்று இறைஞ்சினார்

உள்ளே புகுந்தார்

முதல்வர் சேவடி தாழ்ந்து வணங்கினார்

செந்தமிழ்ச் சொல்மாலையாகிய திருப்பதிகம் பாடினார்.

(சென்னி – தலை)

3862.

தாங்க முடியாத காதலுடன்

தாங்க வியலா பக்தியுடன்

அந்தத் தலத்தில் பணிந்து துதித்தார்கள்

சிறந்த தொண்டராகிய சுந்தரரும், சேரமானும்

பிறகு

அங்கு சில நாட்கள் தங்கியிருந்த பிறகு

மலர்ச்சோலைகள் சூழ்ந்த

கானப்பேர் எனும் தலம் கடந்து

போரில் வல்லமைமிகு காளையை உடைய இறைவரின்

“திருப்புனவாயில்” எனும் தலம் அடைந்தார்கள்.

3863.

“திருப்புனவாயில்” எனும் பதியில்

விரும்பி வீற்றிருந்த புனிதரின்

திருக்கோயில் புகுந்து மன ஆர்வம் மிகுந்து

“சித்த ! நீ நினை என்னோடு” எனத்தொடங்கும்

வினா அமைந்த செந்தமிழ்ப் பதிகம் பாடினார்

மதயானையை உரித்து அணிந்து கொண்ட இறைவரின்

திருப்பாதம் தொழுது

அத்தலத்தில் தங்கியிருந்தார்.

3864.

திருப்புனவாயில் என்ற பதியில் அமர்ந்திருக்கும்

சிவபெருமான் மகிழும் கோயில்கள் பலவும் வணங்கினர்

அருள் பெற்று விடை பெற்றார்

குன்றுகளும் காடுகளும் கடந்து

நீர்வளமுடைய பொன்னி (காவிரி) பாயும்

நாட்டிற்கு அடைந்தார்

மலையெனும் வில் அணிந்த இறைவரின்

“திருப்பாம்பணி” எனப்படும் நகரினை

சேரமானும் நம்பி ஆரூரரும் சென்று சேர்ந்தனர்.

3865.

“திருப்பாதாளீச்சரம்” சென்றார்

இறைவரை இறைஞ்சினார்

அதன் பக்கமுள்ள பலபதிகள் சென்றார்

அங்கு வீற்றிருக்கும்

வேதங்களுக்கெல்லாம் ஆதி நாயகராகிய

சிவபெருமானை வணங்கினார்

சூதாடும் கருவிபோன்ற இருமுலைகளுடைய மங்கையரின்

அழகிய வாயினிடம் தோற்றுப்போனதால்

பகலில் மலராமல்

இரவில் மட்டுமே

சிவப்பு ஆம்பல் மலர்கள் மலர்கின்ற

திருவாரூர் தலம் வந்து அடைந்தார்.

3866.

திருநாவலூர் வேந்தரான நம்பி ஆரூரர்

சேரர் குலவேந்தருடன் வரும்போது

திருவாரூரில் வாழ்கிறவர்கள் எதிர்கொண்டனர்

மிக்க விருப்பத்துடன் வணங்கி

தம் இறைவரின் திருக்கோயிலுக்குள்

பெருகும் விருப்பத்தோடு சென்று வணங்கும்

பெரும் பாக்கியம் பெறுவதற்காகப் புகுந்தனர்.

3867.

வாசம் மிக்க கொன்றைமலர் சூடிய

இறைவர் மகிழும் கோயில் அதனை வலமாக வந்தார்

நேசமுடன் முன் நின்று துதித்தார்

நீண்டகாலம் பிரிந்து இருந்த காரணத்தால்

திருப்பதிகத்தால் துதித்தார் பிறகு

அருள் பெற்று வெளியே வந்தார்

பாசவினை பற்றுகளை அறுப்பவரான இறைவர் வாழும்

கோவிலைப் பணிந்து வெளியே சென்றார்

3868.,

பரவையாரின் மாளிகை நோக்கி

பரிவாரங்கள் முன்பாகச் சென்றன

பெரும் அலங்காரங்களான தூயமங்கலங்கள்

மிகவும் செய்தார் பரவையார்

அவர்களது வரவினை

எதிர்கொண்டு வரவேற்றார்

மலைநாட்டு அரசனாகிய சேரமானையும்

உடன் அழைத்துக் கொண்டு

வன் தொண்டராகிய சுந்தரர்

அழகிய பொன்மாளிகையுள் புகுந்தார்.

3869.

வந்தவர்களை பரவையார்

பரிவுடன் பணிந்து துதித்தார்

பொருத்தமான

திரு அமுதும் கறிகளும் பலவிதமாக சமைக்கச் செய்தார்

திருத்தம் பெற்ற

தேன்போன்ற மொழி கொண்ட பரவையார்

மரபுக்காக வைக்கபடும் ஆடை பரப்பி

அதன் மீது உண்ணும் பரிகலமாகிய இலை விரித்தார்

உபசாரத்திற்காக வைக்கப்படுகிற

திருவிளக்கை அருகில் வைத்து

அந்த இருவரும்

மற்ற பரிவாரங்களுக்கும் திருவமுது செய்வித்தார்.

3870.

இறைவரின் திருவடிகளில்

பரவையார் செய்கின்ற பூசனைகளை

நாள்தோறும் கண்டு மகிழ்ந்து தங்கியிருந்தனர்

தம்பிரானாகிய சிவபெருமானின் கோவிலுள்

பொங்கும் பெரு விருப்பத்தோடு புகுந்து

துதித்து பிறகு வெளியே வந்தனர்

தமக்கு மறவாமல் அருள் புரியும்

இறைவரின் நல் விளையாட்டினை வியந்தனர்.

3871.

பந்து போன்று இருக்கின்ற செண்டு ஒன்றை

நின்றபடியே வீசி விளையாடியும்;

குதிரை மீது அமர்ந்து

இடவலமாக வீசி

செண்டு விளையாடியும்;

விலக்க முடியாத அளவுக்கு போர்புரிகிற

ஆட்டுக்கிடாக்களின் பாய்ச்சலைப் பார்த்தும்;

நீண்ட முட்களை உடைய

கணைக்கால் கோழிகளின் போரைக்கண்டு மகிழ்ந்தும்;

போர் செய்கிற

மற்ற பறவைகளைக் காண்பதுமாக

அங்கு தங்கியிருந்தனர்.

3872.

மிகுந்த விருப்பம் மேலும் மேலும் அதிகரிக்க

மேலும் மேலும் தங்கும் நாட்கள் கழிந்தன

மறைக்காமல் வழங்குகிற

கொடைத் தன்மையுடைய சேரமான்

பரவையாரின் கொழுநனாகிய நம்பி ஆரூரரை வணங்கி

தன்னை

இரவும் பகலும் அவருடன் அழைத்துச் செல்ல

அனுமதி வேண்டிக் கொண்டார்

அவரும் இசைந்தார் உடன்பட்டார்

(கொழுநன் – கணவன்)

3873.

பரவையாராகிய நங்கையின்

மன ஒப்புதல் பெற்று நம்பி ஆரூரர் புறப்பட்டார்

பிறைச்சந்திரன் அணிந்த இறைவரின்

திருவருளைப் பெற்றதனால் துதித்தார் சேரமான் பெருமாள்

அந்தத் தலத்தில்

எங்கெங்கும் உள்ள சிவனடியாருக்குத் தகுந்தபடி

பூசை செய்து அருளினார்கள்

பொங்கும் முயற்சியோடு இரண்டு பெருமக்களும்

புனிதராகிய இறைவரின்

பூங்கோயிலுக்குள் சென்றனர்.

3874.

தம்பிரானைத் தொழுதனர்

அருள் விடை பெற்றனர்

வெளியே வந்து

தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டு நம்பி ஆரூரரும்

பசும்பொன் சூடிய

சேரநாட்டின் அரசரான கழறிற்றறிவார் நாயனாரும்

பயணம் புறப்பட்டனர்

செம்பொன் அணிந்த நீண்ட மதில் சூழ்ந்த

திருவாரூரை தொழுது

மேற்குத் திசையில் சென்றனர்.

3875.

பொன்னைப் பரப்புகின்ற

மணிகளை வாரிக் கொழிக்கின்ற

நீருடன் பரவிச் செல்லும் காவிரி ஆற்றின்

தென்கரை வழியே சென்றனர்

சிவபெருமான் மகிழ்ந்து எழுந்தருளும் கோயில்கள்

பல சென்று துதித்தனர்

மின் போன்ற ஒளி வீசும் சடை உடைய

இறைவர் விரும்பும் திருக்கண்டியூருக்கு

அன்பால் உருகும் சிந்தையுடன் சென்றார்கள்

பணிந்தார்கள் வெளியே வந்தார்கள்.

3876.

வடக்குக் கரையில்

திருவையாறு எதிர்பட்டது

உடல் உருகிற்று

உள்ளம் உருகிற்று

மலர் போன்ற கரங்கள் தலைமீது குவிந்தன

கடல் பெருகி வந்தது எனும்படி

பெருகிவரும் காவிரியைக் கடந்தனர்.

இடையறாத தொடர்புடைய

இறைவரின் திருவடி வணங்க எண்ணம் கொண்டனர்.

3877.

இலக்குமி

நீங்காத இயல்புடைய சேரமான் பெருமான் நாயனார்

அருளுடைய நம்பி ஆரூரர்

யாவரையும் பார்த்து அருள் செய்தார் இவ்வாறு

“நஞ்சுண்ட கண்டர் சிவபெருமான் வீற்றிருக்கும்

திருவையாறு இறைஞ்சிட

வணங்கிட

மனம் உருகிற்று

இந்த ஆற்றைக் கடந்து சென்று பணிவோம் நாம்”

என்றதும் –

3878.

காவிரி ஆறு பெருக்கெடுத்தது

இரண்டு கரைகளையும் அலையாய் அலைக்கிறது

வான் வரை அலைகள் எழும்பித் தொடுகிறது

வேறு மரக்கலங்களோ

ஓடங்களோ செல்ல இயலாதபடி

நீர் மிகுந்து செல்கிறது

திருநீறு விளங்கும் திருமேனி உடைய

நிருத்தரின் பாதம் பணிந்தார்

அன்பின் ஆறு வழியாகச் செல்லும் ஆரூரர்

பொறுக்க முடியாமல் இறைவரை விரித்துப் பாடினார்

(நிருத்தர் – சிவபெருமான்)

3879.

“பரவும் பரிசு” எனும் பதிகம் பாடத் தொடங்கினார்

பாடும் ஒவ்வொரு திருப்பாட்டின் முடிவிலும்

பாம்பு அணியும் இறைவரை

“ஐயாறு உடைய அடிகளே” என

விரவும் வேட்கையுடன் அழைத்தார்

பண் இசை அமைய

வன் தொண்டர் தொழுது பாடியதும் –

3880.

அம்பலத்தில் நிறைந்து

நிறைவாக திருக்கூத்து ஆடவல்ல இறைவர்

தடை ஏற்பட்டதும் அழைக்கின்ற கன்று

எதிர் கூப்பிடக் கேட்டதும்

தானும் கதறிக் கனைக்கின்ற

புனிதப் பசுவைப்போல

ஒன்றுபட்ட உணர்வுடன்

அண்ட சராசரங்கள் எல்லாமும் கேட்கும்படி

“ஓலம்” என்று நின்று மொழிந்தார்

அப்போது

பொன்னியாகிய காவிரி ஆறு

தொடர்ச்சி நீங்கிற்று ! வழிவிட்டது.

3881.

வானை முட்டும்படி பெருக்கெடுத்த

காவிரி ஆற்றின் மேல்பக்கம் –

பளிங்கு மலைபோல தாங்கி நின்றது;

கீழ்ப்பக்கத்தில் நீர் வடிந்த இடைப்பகுதியிலோ

நல்ல வழி உண்டாகி

குளிர்ந்த மணல் பரவியிருந்தது

இதனைக் கண்டதும் தொண்டர்கள்

மழைபோல் கண்ணீர் பொழிந்தது

மயிர்ப்புளகம் கொண்ட மேனியுடன்

கைகளை அஞ்சலியாக

தலைமீது குவித்து வணங்கினர்

(“பரவும்” எனத் தொடங்கும் பதிகம்,

திருவையாற்றில் சுந்தரர் பாடியது)

3882.

நம்பி ஆரூரரின் பாதத்தினை

சேரமான் பெருமான் பணிந்தார்

திருநாவலூரில் பிறந்து அருளிய

செம்பொன்னுக்கு விளக்கம் போன்று முந்நூல் அணிந்த

அழகிய மார்பு கொண்ட

நம்பி ஆரூரரும்

சேரர் பெருமானை எதிர் வணக்கம் செய்தார்

“இது

தேவர்களின் நாதராகிய இறைவன்

உமக்கு அளித்த திருவருள் அன்றோ”

என உடன் மகிழ்ந்தார்

இருவரும் தம்பிரானை போற்றி இசைத்தனர்

காவிரியின் நடுவே சென்றனர்.

3883.

செம்மையுடைய சொல் பொருந்திய

தமிழ்நாவலர்களாகிய

சுந்தரர் பெருமானும் சேரர் பிரானும்

தம் பெருமானாகிய சிவபெருமான்

குறைவிலாமல் நீர்பெருகும் ஆற்றின் நடுவில்

அளித்த மணலில்

மணல் வழியில்

தம் பரிவாரங்களும் தாமும் ஏறிச் சென்றார்

திருவையாற்று இறைவரை

பஞ்சநதிவாணரைப் பணிந்தனர்

நிலத்தில் வீழ்ந்து துதித்தனர்

எழுந்தனர்.

3884.

நெற்றிக்கண் உடைய

அருள் நோக்குடைய

இறைவரின் கருணையை

திருவருளை

ஆற்றமுடியாமல் ஆற்றிக்கொண்டு

பெறமுடியாமல் பெற்றுக்கொண்டு

அதில் திளைத்தனர் இறைஞ்சினர்

தங்கள் பெருமானின் திருவருளைத் தாழ்ந்து

அங்கிருந்து மீண்டு வந்தனர்

காவிரியைப் பிளந்து

நடுவுள்ளே வந்து

கரையேறிய அடுத்த வினாடி

பெரிய

மலை போன்று நின்ற நீர்

விரைந்து தொடர்ந்து –

முன்போல பெருகி ஓடியது!

3885.

இத்தகைய செயலின்

அதிசயத்தைக்கண்டு

அந்தக் கரையிலிருந்து

ஐயாறு வீற்றிருக்கும் இறைவரின் திருவருளைத் துதித்து

நிலமுற வீழ்ந்து தாழ்ந்து துதித்தனர்

மேற்குத் திசை சென்று

தூய பிறைச்சந்திரன் வாழும் சடையாரின்

பிறதலங்கள் தொழுது வணங்கினர்

பிறகு

செம்மையுடைய கொங்கர்களின் நாட்டை அடைந்தார் –

திருவாரூர் வன் தொண்டர் சேரமானுடன்.

3886.

கொங்கர் நாடு கடந்து போயினர்

விளங்கும் மலை நாட்டின் எல்லை அடைந்தனர்

“நம் பெருமானின் தோழரான நம்பி ஆரூரர்

தம்பிரான் தோழர்

அங்கு வருவதற்காக

ஒன்று சேர்ந்து

புறப்பட்டு வருகிறார்”

என்ற விருப்பத்தினால்

அந்நாட்டில் உள்ளவர்கள் அனைவரும்

அவர்களை வரவேற்று இன்பம் அடைந்தனர்.

3887.

எங்கும் தோரணங்கள்

எல்லா இடமும் பூவனங்களாக ஆக்கும் அழகுகள்

வழிகளெங்கும் குளிர்ந்த பந்தல்கள்

வீடுகளெங்கும் மேகம்போல் எழும் சந்தனப்புகை

ஆறுகளின் கரைகளில்

நிதிக்குவியலாக ஒதுங்கும் மணிகளும் பொன்னும்

எங்கும் முழவின் ஒலிகளும்

எங்கும் ஒளி கொண்ட பொன்னின் பூமழையும்

அந்நகரில் அவர்களை வரவேற்றன

3888.

நம்பி ஆரூரரும் சேரமான் பெருமாளும்

பார்த்த வெள்ளங்கள் இவை:-

திசைகள்தோறும் வரும் பெருமையின் வெள்ளம்;

அமைச்சர்கள் மற்றும்

படைகள் கொண்ட பெருவெள்ளம்;

பிடரி மயிர் உடைய

குதிரை அணிவரிசை வெள்ளம்;

மத்தகத்தை உடைய யானைப்படை வெள்ளம்;

விரும்பும் சோற்றுப் பெருக்க வெள்ளம்;

இத்தனை வெள்ளங்களும் கண்டதால் –

அசை விலாத இன்பமாகிய வெள்ளத்தில் மூழ்கி

கொடுங்கோளூர் அடைந்தனர்

3889.

கொடுங்கோளூரின் மதில் வாயிலை

அணிகளால் அலங்காரம் செய்திருந்தனர்

விண்மீன்களைத் தொடும் கோபுரங்கள்

மாளிகைகள்,

நிலா முற்றங்கள்

குளிர்ச்சாலைகள்,

திண்ணைகள்

நீண்ட அரச நகர்கள்

ஆடல் அரங்குகள்

எனும் இவற்றை

மணிமாலைகளாலும்

தொங்கவிடட்ட பூமாலைகளாலும்

தனித்தனியாய் அலங்கரித்து –

3890.

அந்த நகர மக்கள் எதிர் கொள்வதற்காக

அளவற்ற ஆடரங்குகள்தோறும்

மகரக்குழை அணிந்த மாதர்கள்

அழகான வீதியில் பாடி ஆடினர்

சிகரம் போல இருக்கும்

நெடிய மாளிகைக்கு செல்லாமல்

பிறகு –

திருவஞ்சைக்களத்திற்கு

ஒப்பிலாத திருத்தொண்டரான

நம்பி ஆரூரரை அழைத்துக் கொண்டு

சேரமான் பெருமான் புகுந்தார்.

3891.

சிவபெருமானது கோவிலின்

அழகிய முற்றத்தை வலம் வந்து வணங்கினர்

பெரும் விருப்பமுடன் நிலத்தில் வீழ்ந்து வணங்கினர்

பணிந்தனர்

திருமுன்பு நின்றனர்

“முடிப்பது கங்கை” எனத்துதிக்கின்ற

திருப்பதிகத்தை நம்பிஆரூரர் தொடங்கினார்

பிறைச்சந்திரன் சூடிய முடியரான

இறைவரைப் பாடித் துதித்தார்

சேரமான் பெருமாளுடன் வணங்கினார்

3892.

வணங்கி இன்பம் அடைந்தனர்

வெளியே வந்தனர்

அலங்கரித்த பெண் யானை மீது

உலகம் எல்லாம் வியக்கும் நம்பி ஆரூரரை

முதலில் ஏற்றி

பிறகு

சேரமான் பெருமான் தானும் ஏறினார்

குற்றமற்ற

அழகிய சாமரைகள் வீசி

பசும் பொன்னால் ஆன

அழகிய மாளிகை நோக்கி வரும்போது

இருபுறமும் நெருங்கிய மக்கள்

இந்த உலாவைக்கண்டு

வாழ்த்தி பேசலாயினர்.

3893.

நம்மன்னர் நம்பி ஆரூரருக்கு “நல்லதோழர் இவர்” என்பர் சிலர்

“இவரைக்கண்டு தொழுவதற்கு

நாம் முன்பு என்ன தவம் செய்தோம்” என்பர் சிலர்

“நம் மலைநாடு

இனி பெற வேண்டிய செல்வம்

வேறு என்ன இருக்கிறது” என்பர் சிலர்

வேறு சிலரோ

“சொல்லும் தரத்தில் அடங்குமோ எம் பெருமான் தொழில்

அதனைப் பாரீர்! “ என்பார்.

3894.

பூவினையும்

பொரியையும்

பொன் தூளையும் கலந்து வீசுவர் வணங்குவர்

“ஒப்பிலாத இவர் இருக்கும் பொன்னித்திருநாடே

உலகுக்குத் திலகமாகும்” எனச்சிலர் வியப்பர்

துதித்துப்பாடும் துதிகள்

எத் திசையிலிருந்தும் வந்து சேர்ந்தன

குதிரைகள், யானைகள்

அழகிய திருமாளிகையின்

அழகிய வாசல் வழியே புகுந்தன

பக்கத்தில் சுந்தரரும் சேரமானும் இறங்கினர்.

3895.

கழறிற்றறிவரான சேரமான் பெருமாள்

கலைகளில் வல்லவரான நாவலராகிய சுந்தரரை

முழவைப் போன்று விளங்கும்

பெருந்தோள்களுடைய சுந்தரரை

அழைத்துச் சென்றார்

திருவிழாவின் அளவுக்கு சிறப்பை உடைய

மாளிகையுள் விளங்கும் அரியணை மீது

திக்குகளில் எல்லாம் ஒளிவீசும்

அணிகள் அணிந்த நம்பிஆரூரரை அமரச் செய்தார்

தாமும் அவர் முன்பு நேரே நின்றார்.

3896.

செம்பொன்கரகம் எடுத்து

அதில் மணமுடைய நீர் ஏந்திய தேவிமார்கள்

ஆரூரரின் பொற்பாதங்களை விளக்கத் தொடங்கினர்

நம்பி ஆரூரர் தம் கால்களை இழுத்துக் கொண்டார்

“இதுதகாது” என அருளினார் சுந்தரர்

உடனே அவர்கள் மண்ணில் வீழ்ந்தனர்

“எம் அன்பின் தகுதிக்கு ஏற்றவாறு

செய்யும் வழிபாடுகளுக்கு

மறுக்காமல் இசைய வேண்டும்” என வேண்டினர்.

3897.

சேரமான் பெருமாளும் இவ்வாறு வேண்டிக்கொண்டதும்

ஆரூரர் மறுக்க முடியவில்லை

அன்பால் பெரும் தகுதி உடைய ஆரூரர்

திருப்பொருந்திய பெரும் தோள்கள் உடைய

உதியர் பிரானாகிய சேரமான் பெருமான்

செய்தவற்றையெல்லாம் கண்டு கொண்டிருந்தார்

அரிய பெரிய பூசைகள் எல்லாவற்றையும்

முறைப்படி அவர் அளித்தபின்

ஒப்பற்ற முழுமதி போன்ற

வெண்குடை உடைய சேரமன்னருடன் அமர்ந்து

ஆரூரர் திருவமுது செய்து மகிழ்ந்தார்.

3898.

சேர மன்னருடன் திருவமுது செய்தபின்

ஆரங்கள்,

மணமுடைய சந்தனம் கலந்த சாந்து,

ஆடை அணிகள்

மணிப்பூண்கள்

குளிர்ச்சியாகவும் மணமாகவும் உள்ள மலர்மாலைகள்

ஆகியவற்றின் வர்க்கங்களை

தம் கையினால் வளைத்து எடுத்து

வன் தொண்டருக்கு சாத்தினார்

மிகுதியாக மிஞ்சியவற்றை

தமக்குப் பயன்படுத்தினார்.

3899.

பாடல்

ஆடல்

இனிய இசைக்கருவிகள் முதலானவற்றுடன்

மகளிர் விளையாட்டுகள் நீண்டன

இனிய விநோத நிகழ்ச்சிகளை

காலங்கள் தோறும் நிகழ்த்தினர்

பெருமாக்கோதையார் எனப்படும் சேரமான் பெருமான்

மணமுடைய மலர்களால்

மரங்கள் மணம் வீசுகிற சோலைகளில்

திருமுனைப்பாடி நாட்டின் தலைவரான

நம்பி ஆரூரரை அமரவைத்தார்!

3900.

பந்தாடும் தொழில் நிகழ்ச்சி

சிறு சோறு உண்ணும் பெரும் சிறப்பு

வண்டுகள் தங்கும் பொய்கைகளில் நீர் விளையாடல்

குறைவற்ற மும்மதங்களையும்

மத்தகத்தினையும் உடைய யானையின் போர்

சினமிகுந்த மற்போர்

முதலியவற்றைக் காணச் செய்து

நம்பி ஆரூரருக்கு

மகிழ்வு ஏற்படுத்தினார் சேரமான் பெருமான்.

3901.

நாவலர் பெருமான் எனப்படும் நம்பி ஆரூரர்

திருவாரூர் நகரை ஆளும்

வானவர் தலைவரான

இறைவரின் திருவடிகளை

திருவஞ்சைக்களத்திலிருக்கும்போது ஒரு நாள்

மிகவும் நினைவில் கொண்டு மனம் உளைந்தார்

சிந்தித்தார்

என் ஆவியை

என் ஆரூரானை

என் சிவபெருமானை

“மறுக்கலும் ஆமே” எனும் கருத்துடன் முடிவுறும்

திருப்பதிகம் பாடி அச்சம் கொண்டார்.

3902.

திருவாரூரை நினைந்து கொண்டு

“அங்கு சென்று தொழுவேன்” என

மனதில் எண்ணினார்

பேரன்புடைய தொண்டர்களுடன் புறப்பட்டுச் செல்லும்போது

பெரிய சேரமான் பெருமான் நாயனார்

நீங்காத நட்புடன் உள்ளம் உருக

அவருடன் எழுந்து கைகூப்பி வணங்கினார்

பிரிவு தாங்க முடியாமல்

பின்னே சென்றார்.

3903.

வன் தொண்டரின் முன் சென்று

மனம் அழிந்து நின்ற உணர்வுடன்

சேரமான் பெருமான் நாயனார் –

“இன்று உமது பிரிவைத் தாங்க மாட்டாதாவன் ஆனேன்

என் செய்வேன் நான்” என்றார்

“ஒரு சிறிதும்

நீவீர் வருந்த வேண்டாம்

உமது நகரில் இருந்தபடி

பகைவரைப் போரில் அழிக்க

ஆட்சி செலுத்துக” என்று சுந்தரர் பதில் மொழிந்தார்.

3904.

நம்பி ஆரூரர் மொழிந்ததைக் கேட்டதும்

அருளுடைய சேரமான்

“எனக்கு இவ்வுலகு மட்டுமல்ல

விண்ணரசும் தங்களது திருவடி மலர்களே !

ஆனால் –

தேரோடும் நீண்ட வீதியை உடைய திருவாரூர்க்குத்

தாங்கள் செல்ல விரும்பி

எழுந்திருக்கும் எனது பக்தியினை

விலக்குவதற்கும் நான் அஞ்சுகிறேன்” என்றார்.

3905.

அதனைக் கேட்டார் மன்னவர் நம்பி ஆரூரர்

பதில் மொழியாக

“என் உயிர்க்கும் இனிய உயிரான

அழகிய திருவாரூர் பெருமானை

வன்மையான நெஞ்சுடன்

நான் மறந்து இங்கு தங்கியிருக்கமாட்டேன்

பிறைச்சந்திரன் சூடிய இறைவனது அருளை

இறைவரின் இன்னருளால்

“இங்கே நீவீர் அரசு ஆள்க ” என்று வணங்கினார்.

3906.

அதைக்கேட்டதும்

சேரமான் பணிந்து ஒத்து இசைந்தார்

மந்திரிகள் தமை அழைத்தார்

“அழகு நிறைந்த இந்தத் தொன்மையான நகரில்

இன்று வரை சேர்ந்த

நல்ல பெரும் நிதியம் பலவும்

பலப்பல ஆள்களின் மேல் ஏற்றிக்கொண்டு

வரச்செய்க” என்றார்.

3907.

அவர் ஆணையிட்டதும்

அமைச்சர்கள் –

ஆயம் என்று சொல்லப்படும்

மன்னர்க்குரிய பகுதிப்பொருட்கள்

நிதியங்கள்

விலை உயர்ந்த பொன் நவமணிகள்

ஒளி வீசும் மணிகள் கொண்ட பூண்கள்

ஆடை வகைகள்

மணம் வீசும் பொருட்களின் வர்க்கங்கள் முதலியனவற்றை

பொதி எனப்படும் மூட்டைகளாக ஆக்கி

அதற்குரிய ஆண்களின் மீது ஏற்றி

நிலம் நிறையும்படி கொணர்ந்து சேர்த்தனர்.

3908.

அச்செல்வங்கள் பரவிய மூட்டைகளை

வன் தொண்டராகிய சுந்தரர்

பரிவாரங்களின் முன்பாக செல்ல வைத்தார்

பிறகு

வன் தொண்டரின் பொன்னடிகள் பணிந்தார்

திருமுனைப்பாடி எனும் திருநாட்டைச்சேர்ந்த சுந்தரர்

தம்மை வணங்கிய சேரமான் பெருமானைத்

தாமும் தொழுதார்

மலை போல உயர்ந்த தோள்களைத் தழுவி

விடை பெற்றார் வன் தொண்டர்

3909.

ஆரூரர்

அவருக்கு விடை தந்து பிரிந்தார்

பிறகு அந்நகரிலிருந்து அகன்றார்

முகில்கள் தவழும் மலை நாட்டினைக் கடந்தார்

கல் கோட்டைகளும்

நீர் பெருகும் காட்டு ஆறுகளும்

நீண்ட காடுகளும் கடந்தார்

சிறப்புடைய திருமுருகன் பூண்டிக்குச் செல்லும் வழியில்

செல்லத் துவங்கினார்.

3910.

திருமுருகன்பூண்டி அருகில் செல்லும்போது

போர் செய்யும் காளை உடைய சிவபெருமான்

“தன்னைத் தவிர நம்பிஆரூரருக்கு

வேறு எவரும் பொன் கொடுத்து

அதனை அவர் பெறக்கூடாதெனஎண்ணினாரோ

அல்லது

தாம் கொடுத்துப் பெருகுகின்ற திருவருள் நிலை

கூடிக்கொண்டே செல்ல எண்ணினாரோ ! ”

அதை அறியோம்!

3911.

வெற்றி மிக்க பூதகணங்கள்

வேடர் வடிவில் சென்றன

வன் தொண்டர் கொண்டு வரும்

நியதிகளைக் கவர்ந்து கொள்ளும்படி

திருவருள் செய்தது

பகைவரின் திரிபுரங்களும் எரித்த இறைவரின் அருளால்

அவை வேர்ப்படையாக உருவம் கொண்டன

நாவலூரார் வரும் வழியில்

இருபக்கமும் சினந்து எழுந்து —

3912.

வில்லை வளைத்து

அலகுடைய அம்புகளை

விசை மிகுந்த நாணில் பூட்டி

“இந்த மூட்டைகளை இங்கேயே விட்டுவிட்டுப் போங்கள்

இல்லையெனில்!” என கோபம் கொண்டு குத்தினர்

அளவற்ற செல்வங்கள் கவரப்பட்டன

செல்வங்கள் பறிக்கப்பட்டதும்

சுந்தரரின் செல்வச் சுமைகளை சுமந்துவந்த

சுமையாட்கள் சிதறி ஓடினர்

நம்பி ஆரூரர் அருகில் வந்து

சேர்ந்து கொண்டனர்.

3913.

பிறகு

சிவந்த சடையுடைய சிவபெருமான் அருளால்

சுமையாட்களும் ஓடிவிட்டனர்

அவர்கள் ஓடிச் சேர்ந்த ஊரான

திருமுருகன்பூண்டிக்கு வன் தொண்டரும் சென்றார்

போரில் வல்ல

இளமையுடைய காளையைப் பெற்ற

இறைவரின் கோவிலை நாடிப் புகுந்தார்.

3914.

அங்கணர் எனப்படும்

நெற்றிக்கண் உடைய சிவபெருமானின்

கோயிலினைக் கண்டார்

அஞ்சலியாக

கரம் கூப்பித் தொழுதார்

மேகங்கள் தொட்டுச் செல்லும்

உயர்ந்த நீண்ட வாசலினைப் பணிந்தார்

பெருகும் விருப்பமுடன்

வலமாகச் சுற்றி வந்து

புனிதநதி கங்கையை

பிறைச்சந்திரனை

முடியில் அணிந்த இறைவரின்

திருமுன்பு சென்று சேர்ந்தார்.

3915.

உள்ளம் உருகிய அன்புடன்

கைகளைத் தலைமீது குவித்து

நிலத்தில் விழுந்து

உமையம்மையின் பாகம் பொருந்திய

இறைவர் முன்பாக வன் தொண்டர் பாடினார்

“அச்சம் பொருந்த

வேடர்கள் வழிப்பறி செய்யும் கொடிய காட்டில்

எதற்காக இங்கே இருந்தீர்” எனும் கருத்துடன்

“கொடுகு வெஞ்சிலை” எனத் தொடங்கும்

அழகிய சொற்கள் கொண்ட பதிகத்தைப் பாடினார்.

3916.

திருப்பதிகம் பாடிப் பரவினார்

பரம் பொருளான பெருமான் அருளால்

வேடுவர்கள் பறித்துக் கொண்ட

அத்தனைப் பொருட்களும் நலங்களும்

வானைத் தொட்டுவிடும்படியாக

கோவில் வாசல் முன் குவிந்தது

அதைப் பார்த்து

நெகிழ்ந்து வணங்கினார்

அருட்கூத்தாடும் இறைவரின் திருவருளால்

அப்படியே பெற்றுக் கொண்டார்.

3917.

எடுத்துச் செல்லும் சுமையாட்களை ஏவி

அவற்றைப் பெற்றுக் கொண்டார்

நஞ்சு உண்ட கண்டம் எனும் கழுத்துடைய இறைவரை

உண்மையாகவே எழுந்த காதலினால்

உண்மையாகவே எழுந்த அன்பினால்

வணங்கி விடை பெற்றார்

மென் கரும்பும்

வயல்களில் நெருங்கிய செந்நெல்லும் சூழ்ந்த

திருவாரூருக்கு பெருவிருப்பமுடன் சென்று சேர்ந்தார்.

3918.

நாவலரின் தலைவரான நம்பி ஆரூரரின்

திருவருளால் விடைபெற்றார் சேரமான் மன்னர்

உயிரில் ஒன்றுபட்ட நட்பை உடைய நம்பி ஆரூரரை

இடைவிடாது நினைத்தபடி

வண்டுகள் ஒலிப்பதற்கு இடமான

மலர்ச்சோலைகள் சூழ்ந்த

“மகோதை” நகரில் தங்கியிருந்து

ஆட்சி புரிந்து வந்தார் சேரமான் மன்னர் .

3919.

எம் தலைவராகிய வன் தொண்டர் பெருந்தகை சுந்தரர்

சோழவள நாட்டை நீங்கி

“மகோதை” எனும் நகரில் புகுந்தார்

வருங்காலத்தில்

நிலையான

திருக்கயிலையில் யானை மேல் ஏறி எழுந்தருளியதும்

அப்போது அவர் முன்

சேரமான் தமது குதிரையைச் செலுத்தி

தானும் திருக்கயிலை சென்ற திருச்செயலை

திருத்தொழிலை

பிறகு சொல்கிறோம்

3920.

மலைகள் மிகுந்த

செல்வங்களும் மிகுந்த

பெரிய கடல் போன்ற

வில் எழுதிய கொடி கொண்ட படைகளையுடைய

சேரமன்னவரின் திருவடிகளைத் துதித்து

நிலையினால் உயர்ந்த

அழகிய மாடங்கள் உடைய

நீண்ட தெருக்கள் எங்கும் நான்கு வேதங்களும்

அவற்றை உட்கொண்ட கலைகளும் சூழ்ந்த

புகழ் உடைய சீகாழியில் வாழ்ந்த

கணநாத நாயனாரின் திறம்

இனி உரைப்போம்.

(கழறிற்றறிவார் நாயனார் புராணம் முற்றிற்று )

–இறையருளால் தொடரும்
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்