பெரியபுராணம்-133 (நிறைவுப் பகுதி)

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

பா. சத்தியமோகன்


13. வெள்ளானைச்சருக்கம்

சுந்தர மூர்த்தி நாயனார் துதி

4227.

திருத்தொண்டரின் வரலாறு கூறும் இந்நூலுக்கு

மூல நூலாகிய திருத்தொண்டத்தொகை
இயற்றி

அருள் செய்தார் சுந்தரமூர்த்தி நாயனார்;

அவர்

தம்பிரானாகிய
சிவபெருமானுக்குத்தோழர்

காலை மலர் எனப்படும்

செந்தாமரைமலர்போன்ற கண்களையுடைய

கழறிற்று அறிவார் நாயனாருடன்

சுந்தரமூர்த்திநாயனார்

நஞ்சினை உண்ட இறைவரின்

திருக்கயிலை சேர்ந்த வரலாற்றை

அறிந்தபடி உரைக்கிறோம்

4228.

பக்தி எனும் சொத்து இவ்வுலகில்

அன்பு நீரில் பரந்து எழுந்தது

அது –

நம்பி ஆருரரின் செம்பொன்போன்ற

வனப்புடைய மேனியினையே

தனது உருவாகக் கொண்டது;

கடிதான ; கொடிதான

இருவினைகள் எனப்படும் களையை
அகற்றியது

ஞானமாகிய கதிர்கள் பரப்பியது

முடிவிலாத அழிவிலாத

சிவபோகம் எனும் பலம் பெற்றது

முதிர்ச்சி பெற்றது ; முறுகி விளைந்தது

4229.

பாம்பினை மாலையாக அணிந்த
சிவபெருமானின்

அன்பர் மட்டுமல்ல ;

அணுக்கம் உடைய வன்தொண்டர்

ஈரத்தேன் கொண்ட மலர்கள் நிறைந்த

சோலைகள் சூழ்ந்த

அழகுமிகு திருவாரூரில் இருக்கும் நாட்களில்

சேரமான் பெருமாள் நாயனாரை
நினைந்தார்;

தெய்வப்பெருமானாகிய

தியாகராஜரை வணங்கி

அருள் பெற்று விடை பெற்றார்

சாரல்களை உடைய மலைநாட்டை அடைய

பெரு விருப்புடன் சென்றார்

4230.

நல்ல நீர் பொருந்திய காவிரித்திருநாடு

அதுதான் சோழத்திருநாடு

அங்கு –

நாதர் மகிழ்ந்து அருளும் தலங்களை
நினைந்தார்

வணங்கி அகன்றார்

பிறகு

முல்லை நிலத்தோட்டங்களில்

மான்கள் துள்ளி விளையாடும்

கொங்கு நாடு அடைந்தார்

துய பிறையும், கங்கையும்

தன் தலையில் அணிந்த இறைவரின்

செல்வம் நிறைந்த திருப்புக்கொளியூர் எனும்

அவிநாசி சென்று சேர்ந்தார்

4231.

அந்தத் தலத்தில்

வேதியர்கள் வாழும் மாடவீதியின்
பக்கத்தில்

நம்பி ஆரூரர் சென்றபோது

நிறையும் செல்வமுள்ள

எதிர் எதிராய் அமைந்த இரு இல்லங்களில்

ஒரு இல்லத்தில் மங்கல ஒலியும்

இன்னொன்றில் அழுகை ஒலியும் எழுந்தன

அதைக் கேட்டு –

அங்குள்ள அந்தணர்களைப் பார்த்து

“மாறுபட்ட இரு ஒலிகள்

அருகருகே வரக்காரணம் என்ன?” என
வினவினார்

4232.

அந்த அந்தணர்கள்

நம்பி ஆரூரரை வணங்கி இவ்வாறு கூறினர்;-

“ஐந்து வயதுடைய அரும் புதல்வர்கள்

இருவரில் ஒருவரை

நீர் நிலையில் குளிக்கும் நேரத்தில்

முதலை விழுங்கிவிட்டது

அதனால்

தப்பிப்பிழைத்த பிள்ளைக்கு

பூநூல் அணியும் கலியாணம் அனுபவம்

இந்த இல்லத்தில் நிகழ்கிறது”

4233.

புதல்வரைப்பறிகொடுத்த

அவ்வீட்டின் வேதியரும் அவர் மனைவியும்

தமது மகனை இழந்த சோகத்தினை
வெளிப்படுத்தாமல்

இரக்கம் மிகுந்த திருவுள்ளம் கொண்ட

பூக்கள் நிறைந்த மாலை சூடிய

சுந்தரரின் திருவடிகளையே வணங்கினர்

4234.

துன்பம் நீங்குவதற்காக –

முகம் மலர்ந்து தொழும் அந்த அந்தணர்

மற்றும் அவரது மனைவியையும்

முகம் பார்த்து நோக்கினார் சுந்தரர்

பிறகு –

“ இன்ப மைந்தனை இழந்தது நீங்கள்தானோ”

என வினவியதும்

தொழுதுகொண்டே அவர்கள் –

“ அந்நிகழ்ச்சி முற்காலத்தில் நிகழ்ந்து
முடிந்தது

அதற்கு முன்பிருந்தே

தங்களைக் கண்டு வணங்க நாங்கள்
முயல்கிறோம்

எங்களது அன்பு பழுது இல்லாதது

தாங்கள் இங்கு எழுந்தருளும்

பெருமை பெற்றோம்” என்றனர்

4235.

இவ்வாறு அவர்கள் –

மைந்தனை இழந்த துயரையும் மறந்து

சுந்தரர் வந்ததற்கே மகிழ்ந்தனர் –

இடர் களையும் நம்பி ஆரூரர்

அவர்களிடம் கூறியதாவது :-

“அச்சிறுவனை நான்

முதலை வாயிலிருந்து அழைப்பேன்

அழைத்துக்கொடுத்த பிறகே

அவிநாசி எம்பெருமான் கழல் பணிவேன்”

4236.

இவ்வாறு கூறி அருளிய நம்பிஆரூரர்

“ இவர்களின் புதல்வனைக்

கொடிய கூர்மையான வாயுடைய

முதலை விழுங்கிய மடு எங்கே உள்ளது?”

என்று வினவினார்

ஆழமான பொய்கையின் கரைக்குச் சென்றார்

கூர்வாள் போன்ற பற்களையுடைய முதலை

அந்த மைந்தனை

மறுபடி வெளியில் கொண்டுவருவதற்கான

பதிகம் பாடினார்

( மடு – நீர்நிலை )

4237.

“ உரைப்பார் உரை” எனத்தொடங்கிய
திருப்பதிகம்

முடிவதற்கு முன்பே

உயர்ந்த மலை போன்ற நீண்ட

பெரிய தோள்களை உடைய கூற்றுவன்

அலைகளை உடைய நீரில்

முதலையின் வயிற்றிலிருந்து

மகனின் உயிரைக் கொணர்ந்தான்;

நிலத்தில் இருந்து வளர்ந்ததுபோல் –

இரண்டு ஆண்டுகளுக்குரிய வளர்ச்சியுடன்

முதலை வாயின் வழியே வரவைத்தான்

4238.

தனது பெரிய வாயிலிருந்து

மைந்தனை

கரையில் கொணர்ந்து உமிழ்ந்தது முதலை

அன்பினால் உருகினாள் தாய்

ஓடிப்போய் எடுத்துக் கொண்டுவந்து

உயிரைத் திரும்பவும் அளித்த

திருவாளனாகிய நம்பி ஆரூரரின்

சேவடியில் வீழ்ந்து வணங்கினாள் தாய்;

சைவநெறி மிக்க மறையவனும் விழுந்து
வணங்கினான்

வானிலிருந்து தேவர்கள் மலர்மழை
பொழிந்தனர்.

4239.

மண் உலகில் உள்ளவர்கள் அதிசயித்தனர்

மறை ஓதும் அந்தணர்களெல்லாம் தமது

உத்தரியத்தை வானில் வீசி ஆர்ப்பரித்தனர்

வேத ஒலி மிக அதிகமாக எழுந்தது

அண்ணல் நம்பி ஆரூரரும்

அரிய அந்தணரின் கண்மணி போன்ற மகனுடன்

அவிநாசி சிவபெருமானைப்

பணிவதற்குப் புறப்பட்டார்

4240.

“ஏற்றான்” எனத் தொடங்குகிற

திருப்பதிகம் பாடினார் பணிந்தார்

பிறகு

வெளியே வந்து

தம்மிடம் அன்பு மிகுந்த வேதியர் மகனை

வெண்பூணூல் அணிவித்துப் பூட்டினார் அண்ணலார்.

முரசுகள் ஒலிக்க உபநயனக் கலியாணம்
முடித்தார்

பிறகு

நல்மணம் மிக்க மலர்கள் நிறைந்த

குளிர்ச்சோலைகள் குலவும்

மலைநாடு நோக்கிச் சென்றார்.

4241.

அடியேனின் உள்ளத்தில் ஆழ ஆழமாய்ச்

சென்று குடிபுகுந்த நம்பி ஆரூரர்

மேற்குத்திசையில் உள்ள நாட்டுக்குச்
சென்றார்

சிவபெருமானின் அடியவர் உள்ள தலங்கள்
தோறும்

சென்று மகிழ்ந்தார் இன்பம் அடைந்தார்;

நன்மையுடைய தலங்கள் கடந்து

நிரம்பிய மணிகளுடைய நீர் பொருந்திய

காட்டாறுகள் கடந்து

வளமுடைய மலை நாட்டிற்குள் புகுந்தார்.

4242.

“முன் நாட்களில்

முதலையால் விழுங்கப்பட்டு

முதலையின் வாயுள் புகுந்த மைந்தன்

முன்போலவே உயிர் பெற்று வரச்செய்த

மீட்டுத்தந்த

என் நம்பி ஆரூரர் வருகின்றார்”

என்று சேரமான் பெருமாள் நாயனாருக்கு

அறிவித்தனர் மக்கள்

அவ்விதம் தெரிவித்த அனைவருக்கும்

பொற்கிழி தந்தார் மன்னர்

மணிப்பூண்கள் தந்து மகிழ்ந்தார் மன்னர்.

ஆடைகளும் மழைபோல் வழங்கினார் .

4243.

“செய்வது இன்னதுதான்” என ஒன்றும்
தோன்றாமல்

சேரமான் பெருமாள்

சிந்தை மகிழ்ந்தார் களிப்பு கொண்டார்

“என் ஐயன் வந்தான்

எனை ஆளும் அண்ணல் வந்தான்

திருவாரூரில் மகிழும் சைவன் வந்தான்

என் துணையாம் தலைவன் வந்தான்

தரணியெல்லாம் உய்யச் செய்யும் பொருட்டு

என் நம்பி வந்தான் வந்தான்” என்று சொல்லி
மகிழ்ந்தார்

மகிழ்வுடன் முரசு ஒலிக்கச் செய்தார்.

4244.

மதி மிகுந்த

பல நூல்கள் கற்ற அமைச்சர்களை அழைத்தார்

பெரியவரான நம்பி ஆரூரர்
எழுந்தருள்வதற்காக

நகரம் முழுதும் அலங்கரிக்கச் செய்தார்

அருவிபோல் மதநீர் பாயும் யானை மீது

சேரமான் பெருமாள் நாயனார் அமர்ந்தார்

மன்னர்களுடன் சென்று சுந்தரமூர்த்தி
நாயனாரை

எதிர் கொள்ளப் புறப்பட்டார்.

4245.

வன்தொண்டராகிய சுந்தரர்

மலை நாட்டு எல்லைக்குள் புகுந்து வந்தார்

அவரை

மேருமலை உச்சியில் வில்கொடி நாட்டிய

வெற்றிக்கொடியும் படையும் உடைய சேரர்
பெருமான்

எதிர் கொண்டு வரவேற்றார்

அன்று மலர்ந்த தாமரை மலர் போன்ற

சுந்தரரின் திருவடிகளை வணங்கினர்

குற்றமற்ற அமுதமயமான

பல கலைகள் நாட்டிய சுந்தர மூர்த்தி
நாயனாரும்

எதிர் கொண்டு தொழுதார்

இருவரும் அன்பில் கலந்தனர்.

4246.

உள்ளம் மகிழும்

சேரமான் பெருமாள் நாயனார்

மற்றும் திருவாரூரர் ஆகிய இவர்கள் பெற்ற

“அழகிய மேனிகள் மட்டுமே வேறு வேறு

தன்மை ஒன்றே ஒன்றுதான்!” எனும்படியாக

பெரு விருப்பத்துடன்

முந்தி எழும் காதலுடன்

ஒருவரை ஒருவர் தொழுதனர்

தழுவினர் முயங்கினர்

சேரர் குலத்தின் முதன்மை மிகு வேந்தன்

சேரமான் எம்பெருமான்

திருவாரூரர் சுந்தரரின்

சிறப்புமிகு நன்மைகளை அறிந்து வினவி

இன்பம் அடைந்தார்.

4247.

ஒருவர் உள்ளம் ஒருவரில் கலந்தது

எக்குறைபாடும் இல்லாத உயர் காதலுடன்

இருவர் நட்பின் செயலும் கண்ட

இரு பக்கத்து நட்புகளும் மனிதர்களும்

மகிழ்ச்சி பெருக்கினர்

அவர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பரித்தனர்

தமிழின் பெருமானாகிய சுந்தரரை

தாம் ஏற்றி வந்த யானை மீதுஏற்றி

அமரச் செய்தார் சேரமான் பெருமாள்

சுந்தரர் பின்னே தாம் அமர்ந்து கொண்டு –

முழுமதி போன்ற

அவருக்கு வெண் கொற்றக்குடை பிடித்தார்.

4248.

உதியர் பெருமாளாகிய

சேரமான் பெருமாளின் பெரும் சேனை

கடல் கிளர்ந்தது போல் ஆர்ப்பரித்தது

பகலவனின் ஒளிக்கதிர்போல ஒளி
வீசுகிற

திருநீறு அணிந்த அன்பர் கூட்டம்

கங்கை ஆறு முழுகி எழுந்தது போல
ஆரவாரித்தது

எதிரே வணங்கும் அமைச்சர்களின் குழாம்,

பயணிக்கின்ற குதிரைகளின்

குளம்பு ஏற்படுத்தும் துகள் எங்கும் எழுந்து
பரவிற்று

சந்திரன் தவழ்கிறஅளவு

மேகங்கள் படிகின்ற அளவு

மதில்கள் உடைய வஞ்சி நகர் வாசலை

அழகிய வாசலை இருவரும் அடைந்தனர்.

4249.

மறை மொழிகள் எங்கும் முழங்கியது

மறைகள் ஓதும் அந்தணர்

குணலைக் கூத்தாடினர்

மதநீரை யானைகள் மழைபோல்
பொழிந்தன

குதிரைகள் ஒளி வீசின

எங்கு நோக்கினும் பூரண கலசங்கள் குடங்கள்;

தோரணம் நிறைந்த தெருவில்

மங்கலப் பெண்கள் பூமழை பொழிந்தனர்

தோழர்கள் இருவரும்

யானை மீது ஊர்ந்து வந்தனர் .

4250.

ஆடல்ஆடும் பெண்களின் நடனமாடும் ஒலி

தளிர் போன்ற பாதங்களில் பொருந்திய

சிலம்பொலியை விடவும் அதிகம் கேட்டது;

பெரிய முரசுகளின் ஒலியும் கேட்டது;

சுழியுடைய சங்குகளின் ஒலி

வரிசையாக ஒலித்தது;

அழகு விரிந்த அரண்மனையின் நீண்ட
வாசலில்

தாம் செலுத்தி வந்த யானையை விட்டு

அவர்கள் இருவரும் இறங்கினர்.

4251.

அவர்களிருவரின் முன்பாக

இரு புறங்களிலும்

தூய வாசமிகு மலர்களையும் முத்துக்களையும்

பொரியையும் தூவினர்

நான்கு வேதங்களிலும் வல்லமை மிகு
முனிவர்கள்

மங்கலமுடைய நல்ல சொற்கள் சொல்லினர்

அவர்களுக்கு மேலே

வெண் கொற்றக்குடை நிழல் பரப்பியது

வெண் சாமரங்கள் வீசப்பட்டது

வானவர் தலைவரும் நண்பரும்

அரண்மனை நடுவே புகுந்தனர்.

4252.

வண்டுகள் மொய்த்த

மலர்கள் பரப்பிய அரியணையில்

காளை போன்ற நம்பி ஆரூரரை

மலையர்கள் தலைவர் சேரமான் பெருமாள்

“அமருங்கள்” என

வணங்கிக் கேட்டுக் கொண்டார்

சுந்தரர் அதனை ஏற்றபின்பு

நல்பூசைகளை

சொல்லில் அடங்காதபடி செய்தார்

பரிவாரத்தினர் மகிழும்படியாக

பலவாறாக மணிகளை வாரித் தந்தார்.

4253.

இப்படிப்பட்ட தன்மையுடன்

உதியர்கள் தலைவரான சேரமான் பெருமாள்

திருமுனைப்பாடி நாட்டின் மன்னரான நம்பி
ஆரூரருடன்

மகிழ்வாக

இனிமையாக கூடியிருந்தபோது

நீண்டிருக்கும் பலவித மலைகள் நிறைந்த

அந்நாட்டிலுள்ள

திருத்தலங்கள் பலவும் பணிந்து துதித்தார்
வன் தொண்டர்

பொன்னால் ஆகிய பெரும் மதில் சூழ்ந்த

மகோதை எனும் நகரினை அடைந்தார்.

4254.

இப்படிப்பட்ட செய்கையில்

பலநாட்கள் கழிந்தன;

அரசர்களுள் முதல்வனாக எண்ணப்படும்

“கழறிற்று அறிவார்” எனப்படும்

சேரமான் பெருமாள் நாயனார் ஒருநாள்

இறைவனுக்கு

தூய திருமஞ்சனம் செய்யும் தொழிலில்
ஈடுபட்டார்

கழறிற்று அறிவாரின் துணைவரும்
தோழருமாகிய

வன் தொண்டர் சுந்தரமூர்த்தி நாயனார்

கங்கை சூழ்ந்த நெடுஞ்சடை உடைய பரமரை

முன் காலத்தில் பிரிந்து வந்து

இவ்வுலகில் வாழ நேர்ந்துவிட்ட

துயரமான அந்த நன்னெறி

தூரமான அந்த நன்னெறி குறுகப்போவதை

உணர்ந்து கொண்டார்

குறுகுவதற்கான எல்லை வந்தது

திருவஞ்சைக்களம் அடைந்தார்.

4255.

கருமையான கழுத்துடைய

சிவபெருமானின் கோவிலை வலம் வந்தார்

காதலால் பெருகியது அவர் அன்பு நிலை

அந்நிலையில்

சிந்தனை முழுதும் உள்ளம் முழுதும்

இறைவரின் பூப்போன்ற இணையடிகள் மட்டுமே
போற்றினார்

அரிய செயலால்

நிலத்தில் வீழ்ந்து எழுந்து

அலைப்புறும் மனைவாழ்க்கை நீங்கிட

“தலைக்குத் தலை மாலை” எனும்

தமிழ்மாலையாம் திருப்பதிகம் பாடத்
தொடங்கினார்.

4256.

அவ்வாறு

பாடத் தொடங்கிய திருப்பதிகத்தில்

“இவ்வுலகினில் பாசத் தொடர்புள்ள
வாழ்வை

அறுத்திட வேண்டும்” என்ற உட்குறிப்புடன்

அன்பரான வன் தொண்டர் அன்புடன் பாடினார்

நஞ்சு மிகுந்த கழுத்தினை உடைய
சிவபெருமான்

முன்பு

உலகில் தோன்றும்படி ஆணையிட்ட

செய்கையின் அளவு முடிந்ததால்

திருக்கயிலையில் தமது திருவடிச்சார்பு
அருளினார்

சிவகணத்தவர்களுடன் கூடச் செய்தார்.

4257.

மணமுடைய அழகிய மரங்கள் நெருங்கிய

திருக்கயிலாயத்தில்

மலை வல்லியான உமையுடன்

வெற்றியும் வெண்மையும் உடைய
காளையூர்தியினர்

உமை ஒரு பாகராக வீற்றிருந்தபோது

“நம்முடன் ஒன்றுபட்ட சிந்தை உடைய

நம் சிந்தனையையே உடைய

நம் ஊரனை

நம் நம்பி ஆரூரனை

வெள்ளை யானையுடன் சென்று

அதன் மீது ஏற்றிக் கொண்டு வாருங்கள்”

என்று நான்முகன் முதலிய தேவர்களுக்கு

அருள் ஆணை இட்டார்.

4258.

அதனைக்கேட்ட தேவர்களும்

திருமால், நான்முகன் முதலியவர்களும்

வணங்கிவிடை பெற்றனர்

தூய நலம் விளங்கும் –

சோதி ஒளி விளங்கும் வெள்ளையானையுடன்

தேன் சிந்தும் சோலைகள் சூழ்ந்த

மகோதை நகரில் உள்ள

திருவஞ்சைக்களம் சேர்ந்தனர்

நிலத்தில் கால் பதிய வலமாக வந்தனர்

காவலை உடைய மதிலின்

திருவாசல் அடைந்தனர்.

4259.

தேவர் கூட்டங்கள் அழைக்க நெருங்கின

திருநாவலூர் மன்னவரான சுந்தரரும்

தம் வழிபாடு நிறைவேற்றிவிட்டு

வாயில் வழியே வெளியே வந்தார்

“திருக்கயிலையில் வீற்றிருக்கும்

கொன்றை மலர் அணிந்த

புனல் கங்கை அணிந்த

சிவபெருமான் அருள் இது”எனத் துதித்தனர்

“இ·து அவரது ஏவல்” என்று கூறினார்
சுந்தரர்

பிறகு –

வேறு செயல் ஒன்றுமிலாதவராய்

அனைவரையும் வணங்கினார்

எழுந்தார்

பரமர் ஆணையை எதிர்கொண்டு

ஏற்றுக் கொண்டார்.

4260.

ஆணையினை ஏற்றுக்கொண்ட

தொண்டர் நம்பி ஆரூரரை

எதிர் கொண்ட தேவர்கள் வலம் வந்து அவரை

வெள்ளையானை மீது ஏற்றிக் கொண்டனர்

நான்கு திக்குகளிலும் உள்ள

பெரிய கடல்களின் ஒலிபோல

ஐந்து வகை துந்துபிகளும் ஆர்ப்பரித்தன

வானவர்கள் போற்றினர்

பூமழை பொழிந்திடப்

புறப்பட்டுச்சென்றார் நம்பி ஆரூரர்

எவ்வுயிரும் கழல்கிற மாற்றங்களை

எவ்வுயிரும் சொல்கிற மாற்றங்களை

உணர்கிறவரான தன் துணைவர்

சேரமான் பெருமாளை எண்ணியபடியே

சென்று சேர்ந்தார் சார்ந்தார்.

4261.

தம்பிரான் தோழர் சுந்தரரின்செயல்
அறிந்து

சேரமான் பெருமாள் நாயனார்

அப்போதே

அங்கு நின்ற குதிரையில் ஏறினார்

திருவஞ்சைகளம் சேர்ந்தார்

வீரமுடைய வெள்ளை யானையை செலுத்தி

விண் மீது செல்கிற தனது தோழரை

பரமரின் மெய்த்தொண்டரைக் கண்டார்

நிலத்தில் நிற்க இயலாதவரானார்

தனக்கு முன் விரைவாய் செல்லும் மனதுடன்

குதிரையை முன் செல்லுமாறு விரட்டினார்

விரைந்து செலுத்தினார் சேரமான்பெருமாள்
நாயனார்.

4262.

அவ்வாறு விடப்படும் குதிரையின் செவியில்

நிலவேந்தர்களுள் முதன்மை மன்னராகிய
சேரர்

சிவமந்திரத்தை விதிப்படி ஓதியதுமே –

மிகப்பெரும் வானில் அது எழும்பிப் பாய்ந்தது

மணம் பொருந்திய மலர்களையுடைய

பசுமையான மாலை அணிந்த வன் தொண்டரை

தன் மேல் சுமக்கும் வெள்ளை யானையை

முட்டுமாறு வானில் எய்தியது சேரமான்
குதிரை

அக்குதிரை வலம் வந்து யானை முன் சென்றது.

4263.

உதியர் மன்னவரான சேரமான்பெருமாள்
நாயனாரின்

பெரும் சேனையுடன் சென்ற போர்வீரர்கள்

மிகுந்த வேகத்தில் செல்லும் தம் மன்னரை

தங்களுக்குப்புலப்படும் எல்லைவரை

வானில் கண்டனர்

பிறகு காணவில்லை ; காண இயலவில்லை

ஆதலால் எல்லோரும்

அவரிடம் வைத்த முதிரும் அன்பினால்

மிகுந்த அன்பினால்

தம் உடை வாளினாலே

முறை முறையாய்

தம் உடலைத் தாமே வீழ்த்திக்கொண்டனர்

4264.

அவ்வீரர்கள்

நுண்ணிய தமது வீர உடலை

வில்லவர் பெருமானாகிய

சேரர்பெருமாளிடம்போய்ச் சேர்ப்பித்தனர்

அவர் முன்பு சேவகம் ஏற்றனர்

ஒப்பிலாத பெருந்தொண்டரை

தன்மேல் ஏற்றிக்கொண்ட

மும்மதம் அருவியெனப் பாய்கிற

வெள்ளையா¨னைக்கு முன்னே

குதிரை சென்று கொண்டிருந்தது

அதன் பின் –

அம்பலவாணரின் கயிலைத் திருமலைதிசை
நோக்கி

வீரர்கள் தலைவரான

சேரமான்பெருமாள் நாயனாரும் சென்றார் –

4265.

யானைமீது ஏறிச்செல்கின்றபோது

வானவர் கூட்டமெனும் தானைப்படை

முன் செல்ல –

“தான் எனை முன் படைத்தான்” எனும்
தமிழ்மாலையை

பாடியபடியே வன்தொண்டர் சுந்தரர்
சேர்ந்தார்

மதி – நதி -தேன் அலம்பும் பொதிசடை

இவை மூன்றும் அணிந்த

கொன்றைமலர் சூடிய இறைவரின்

திருமலையின்

தெற்குத்திசை வாசல் முன் அவர்கள்
சேர்ந்தனர்

4266.

குற்றமிலாத வெண்ணிறம் சேர்ந்த

திருநீறுபோன்ற பேரொளி

உலகெலாம் மலர்ந்தது

அழகுமிக்க அம்மலையின் வாசல்

மெய்மை மிகுந்த குற்றமற்ற அன்பரின்

சிந்தைபோல் விளங்கியது

தேஜஸ் மிகுந்த

யானையினையும் குதிரையினையும் விட்டு

இருவரும் இறங்கிச் சென்றனர்

இறைவரின் வெள்ளிமாமலைத் தடம் பல
கடந்தனர்

அழகிய மணிவாசல் அடைந்தனர்

4267.

பொங்கும் மாமத நீர்
பொழிந்தவெள்ளானைமேல்

தேவர்கள் போற்றிட

நம் பெருமானாகிய

நாவலூரர் காவலரான நம்பி ஆரூரர்

இறைவர்முன் சென்று அடைந்தார்

அங்கு

திருஅணுக்கன் வாசலில்

சேரர் பெருமாள் நாயனாரோ

காவலரால் தடைபெற்று நின்றார்

தடுக்கப்பட்டார்

4268.

நெற்றிக்கண் உடைய ஈசர் திருமுன்பு

தாழ்ந்து வீழ்ந்தார் எழுந்தார் நம்பிஆரூரர்

நீண்ட காலம் தனித்து விடப்பட்ட கன்று

தாய்ப்பசுவினைக் கண்டு குழைந்து

அணந்துகொள்வதுபோலே

காதலுடன் விரைந்து அடைந்தார்

நின்று துதிக்கும் அந்த

ஒப்பிலாத தனிப்பெரும்தொண்டரைப்பார்த்து

நம்பிஆரூரரைப் பார்த்து

நேரிழை வலப்பாகரான சிவபெருமான்

“ நம்பி ஆரூர!உலகு உய்ய
வந்தனையோ”என்றார்.

4269.

“ அடியனேன் பிழைபொறுத்தீர்

எனை ஆட்கொண்டீர்

பிழையால் செய்த

உலகத் தொடர்பை நீக்கி

முடிவிலாத நெறிதரும் தங்கள் பெரும்
கருணை

என் சிறிய தகுதிக்கு ஏற்றதுதானா !” என

ஈசர் திரு முன்பு

பலமுறையும் பணிந்து எழுந்தார்

ஆனந்தமே வடிவமாகி நின்றதுபோல்

இன்ப வெள்ளத்தில் மலர்ந்தார் வன்தொண்டர்

4270.

நின்றிருந்த வன்தொண்டர்

கங்கைநீர் அணிந்த சடையுடைய

நிறைந்த மலர் போன்ற

இறைவரின் திருவடி அருகே சென்று

“சேரமான் பெருமாள்

கோவில் மணியால் செய்யப்பட்ட

தங்களது திரு அணுக்கன் வாசலில்
நிற்கின்றான்”

எனச் செப்பியதும்

மேருமலையை வில்லாக உடைய
சிவபெருமான்

நந்திதேவரை நோக்கி

“சென்று அழைத்து வருக ” என்றார்

“ஞானவெற்றி உடைய சேரர்க்கு

உள்ளே வர ஆணை” என்றதும்

இறைவர் கழல் தொழ

விரைந்து வந்தார் சேரமான்பெருமாள்.

4271.

மங்கைபாகராகிய ஈசரின்

திரு உருவம் முன்பு

தொலைவில் நின்று மகிழ்ந்து தொழுதார்

மென்மேலும் பொங்கும் அன்பினால்

சேரமான் பெருமாள் நாயனார் துதித்தார்

புதுமதி அலைகின்ற

கங்கை வார் சடைக் கயிலை நாயகர்

திருமுறுவலின் கதிர்கள் காட்டி

“இங்கு நாம் அழைக்காமல்

நீ வந்த காரணம் யாது” என அருள் செய்தார்.

4272.

சேரமான் பெருமாள் நாயனார் உடனே

தலை மீது கைகள் கூப்பி அஞ்சலி செய்து

“அடியேன்

நம்பி ஆரூரரின் திருவடிகளைப்
போற்றிக்கொண்டு

புரசை அணிந்த யானையின் முன் –

நம்பி ஆரூரரை வணங்கியபடியே வந்தேன்

பொழியும் தங்கள் கருணை வெள்ளத்தின்
அலைகள்

என்னை உந்தித் தள்ளியதால்

இங்கு வந்து புகுத்தப் பெற்றேன்

திருமுன்பு வந்தடையும் பேறு பெற்றேன்

மணமுடைய

கொன்றை மலர்மாலை அணிந்த

சடையுடைய பெருமானே

மேலுமொரு விண்ணப்பமும் உள்ளது” என்றார்

(புரசை – யானைக்கழுத்தில் இடும் கயிறு)

4273.

“பெருகும் வேதங்களும் முனிவர்களும்

துதிப்பதற்கு அரிய பெருமை உடையவரே

அன்பினால் உனை

திருவுலாப் புறப்பாட்டு வகையால்
பாடுகிறேன்

திருச்செவி சாய்த்து கேட்டருள வேண்டும்

பொருந்திய பாசம் விட்டு அகன்றிட

வன் தொண்டர் கூட்டம் சார்ந்திட வைத்தீரே”
என்றதும்

அருள்கின்ற ஈசர் “சொல்லுக” என்றார்

சேரமானும் –

புறப்பாட்டின் வகையுள் ஒன்றான

“கயிலாய ஞான உலா”என்பதைப் பாடினார்

இறைவரைக் கேட்கும்படி செய்தார்.

4274.

சேரமான் பெருமாள் நாயனார்

பரிவுடன் கேட்டுக்கொண்டு

இறைவரைக் கேட்குமாறு செய்த

திருவுலாப்பாட்டை ஏற்றார்

உமைபாகரான இறைவர்

நன்மை மிக்க திருவருளின் விருப்புடன்

“நம்பி ஆரூரரான ஆலால சுந்தரனுடன் இருந்து

நம் கணங்களுக்கு தலைமை ஏற்றுத் தங்குக”

என்று அருள் செய்தார்.

4275.

அவ்விததன்மையில்

அந்த இருவரும் பணிந்தனர்

இறைவரின் திருவருளைத் தலைமீது
ஏற்றனர்

நிலை பெற்ற வன் தொண்டர்

ஆலால சுந்தரர் ஆனார்

நல் வினைத்தொழிலில் நிலை நின்றார்

முதன்மையுடைய சேரமானும்

தலைமையுடைய சிவகணநாதர் ஆனார்

விருப்பத்துடன் திருத்தொண்டு செய்தார்.

4276.

பரவையார் – சங்கிலியார் எனும் பெயர்
கொண்டு

உலகில் வந்து தோன்றிய இருவரும்

வல்வினைப்பாசம் நீங்கிட

அதன் துவக்கத்தினை அறுக்கும் நாயகியான

உமையம்மை திருவருளாலே

கமலினியார் – அனிந்திதையார் எனும்

பெயருடைய தோழியர் ஆகினர்

மலைமகளாகிய பார்வதி அம்மையாரின்
கோயிலிலே

திருத்தொண்டின் வழியே நிலை பெற்றனர்.

4277.

வாழ்வு தரும் மாதவரான ஆலால சுந்தரர்

திருக்கயிலை நோக்கி வருகின்ற வழியில்

பாடி அருளிய ஏழிசைத் திருப்பதிகத்தை

இவ்வுலகில் யாவரும் அறிந்து உய்வதற்காக

அலை எறியும் கடலின் மன்னன்

வருணனுக்கு அளித்தார்

ஆழி வேந்தன் வருணன் அப்பொறுப்பினை
ஏற்றார்

ஊழி வந்தாலும் அழியாத

ஆலால சுந்தரரின் அத்திருப்பதிகத்தை

திருவஞ்சைக்களத்தில் சேர்த்து

உலகுக்கு உணர்வித்தான்.

(இப்பதிகம், திருநொடித்தான் மலையில் ,

சுந்தரர் பாடிய “தான் எனை முன் படைத்தான்”
என்ற தொடக்கம் கொண்டது)

4278.

சேரமான் பெருமாள் நாயனார் பாடிய

அந்த திருவுலாப்புறப்பாட்டை

வெள்ளியங் கயிலையில் கேட்ட
மாசாத்தனார்

அப்பாட்டினை

வேதியர் வாழ்கிற

திருவிடவூர்தனில் சென்று
வெளிப்படுத்தினார்

நீர் மிகுதியாகக் கொண்ட

கடல்சூழ் உலகில்

எங்கும் நன்மையால் விளங்கிப் பெருக

அப்பாடலை நிலைநாட்டினார்.

4279.

என்றும் இன்பம் பெருகும் இயல்பு கொண்ட

ஏகமாகிய சிவனின் இயல்பால்

சிவம் ஒன்றினையே உள்ளமும் காதலித்து

தமது உயிர் சிவனடிக்கீழ்

செம்மைபெறும்படி

சிற்றம்பலத்து அடியார்களின்

சிறந்த வான்புகழ்

எங்கும் எல்லாவற்றிலும் நின்றது உலகெலாம்.

( “உலகெலாம்” என்று தொடங்கிய
இக்காப்பியம்,

“உலகெலாம்” என்று நிறைவுறும் அழகினைக்
காண்க )

(வெள்ளானைச் சருக்கம் முற்றிற்று)

பெரியபுராணம் முற்றுப் பெற்றது.

திருச்சிற்றம்பலம்.

சிவாயநம!

==
தொடர்ந்து தாங்கள் மூன்று வருடங்களாக பெரியபுராணம் தொடருக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி.

இந்த வாரத்துடன் பெரியபுராணம் தொடர் நிறைவுப் பெறுகிறது.

தொடரும் நல் அன்பில்,

பா. சத்தியமோகன்.

29/ 5/ 2007


நவீன நடையில் மூன்றுவருடங்களாக சிறப்பாக பெரிய புராணத்தை அளித்து திண்ணையை பெருமை செய்த பா. சத்தியமோகனுக்கும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
திண்ணை குழு

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்