மஞ்சுளா நவநீதன்
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் திருமாவளவன். இவர் ஒரு பட்டதாரி , வழக்கறிஞர்.
ராம்தாஸ் வன்னியர் சங்கத்தை , பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றி வெற்றிகரமாக வன்னியர் மக்களை இணி திரளச் செய்தவர். இவர் ஒரு டாக்டர்.
கிருஷ்ணசாமி தேவேந்திர குல வேளாளர் மக்களின் தலைவர். புதிய தமிழகம் என்று பெயரிட்டு தம்முடைய மக்களுக்கு அரசியல் இயக்கங்களில் மிக முக்கிய இடம் பெற்றுத் தந்திருக்கிறார். இவர் ஒரு டாக்டர்.
அம்பேத்கர் இந்திய தலித் மக்களின் நிகரற்ற தலைவர் இவர் ஒரு பொருளாதார நிபுணர்.
இவர்களுக்கும் இது போன்று தலைமைபீடத்தை அலங்கரிப்பவர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் ஒரு மிக முக்கியமான ஒற்றுமை உள்ளது. இதை இவர்களே முன்வந்து சொல்வதில்லை என்பதால் இங்கே நன் பதிவு செய்கிறேன். இவர்கள் யாருமே இவர்களுக்கு இடப்பட்ட பாரம்பரியமான தொழிலைச் செய்பவர்கள் அல்லர். அதாவது இவர்கள் கொண்டுள்ள விழிப்புணர்வு இவர்கள் தம்முடைய பாரம்பரியமான தொழிலைச் செய்து வருவதால் வருவதில்லை. வர்ணாசிரமதர்மம் என்று எப்போதோ அறியப்பட்ட ஒரு சமூக நடைமுறையின் மிக தீர்க்கமான நிராகரிப்பு இது. இந்த நிராகரிப்புத் தான் புதிய அதிகாரப் படிமுறைகளின் யதார்த்தத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு செய்யப்பட்ட ஒரு அரசியல் செயல்பாட்டின் வெளிப்பாடு . இதில் ஒரு பாடம் இருக்கிறது. இந்தப் பாடத்தை உரத்தும் மீண்டும் மீண்டும் அழுத்தமாய்ச் சொல்லியாக வேண்டும்.
இந்தத் தலைவர்களின் விழிப்புணர்வும், இவர்களது போராட்ட குணமும் இவர்கள் இவர்களது பாரம்பரிய வேலைகளைச் செய்யாமல், அம்பேத்கர் வாங்கிக்கொடுத்த இட ஒதுக்கீட்டில் தொழில்நுட்ப மேல்படிப்பு படித்து, உணர்ந்ததின் விளைவு. பிராம்மணர்களும் சரி, மற்ற பிரிவினரும் சரி, தெளிவாக தங்களது பாரம்பரியமான தொழில்களை விட்டொழித்துவிட்டு, புதிய சமூக அமைப்பை தெளிவாகப் புரிந்து கொண்டு, அங்கு எந்த தொழில்கள் முக்கியத்துவம் பெறுமோ அவைகளை கைக்கொண்டு இருப்பதால்தான் அவர்கள் அதிகார வர்க்கத்தின் அங்கமாகவும், சமூக அமைப்பின் போக்கை நிர்ணயிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த புரிதல் இருந்ததாலேயே, அம்பேத்கார் சட்ட அமைப்பு வரைவு செய்யும் அளவுக்கு உயர முடிந்தது.
தலித் மக்களின் விடுதலையும், அவர்களது சமூக அங்கீகரிப்பும், அவர்களது சமூக முக்கியத்துவமும், அவர்கள் பாரம்பரியமாய்ச் செய்து கொண்டிருக்கும் தொழிலையே தொடர்ந்து செய்வதால் நிச்சயம் வராது. அம்பேத்கர் வேலை வாய்ப்புகளில் 18 சதவீதம் ஒதுக்கீடு கேட்டது, தலித் மக்கள் பாரம்பரியத் தொழில்களிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்கான ஒரு அறைகூவல். நிலம் கேட்டுப் போராட்டம் செய்யவில்லை இவர். பாரம்பரியத் தொழில்களைத் தொடர்ந்து செய்யுமாறு மக்களைத் தூண்டவில்லை இவர். இவர் வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு இவருடைய இந்த அடிப்படையான புரட்சிச் சிந்தனையைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதில் அர்த்தமில்லை. ஆனால் என்ன செய்கிறார்கள் நம் தலித் தலைவர்கள் ? பெயர் மாற்றத் திருவிழா நடத்துகிறார்கள்.
தமிழ்ப் பற்று என்ற பெயரில் உப்புச் சப்பற்ற வெட்டி வேலையில் ஈடுபட்டிருக்கும் தமிழ் வாத்தியார்க் கும்பலில் யாரோ ஒருவர் கொடுத்தற ஆலோசனை போலிருக்கிறது. இந்தப் பெயர் மாற்றத் திருவிழாக்களில் வந்திருந்து ஆசிகள் வழங்கிய பெருஞ்சித்திரனார்களையும், இறைக்குருவனார்களையும் தலித் சகோதரர்கள் மலம் அள்ளும்போது, பிணம் எரிக்கும்போது, தோல் தைக்கும்போது அருகில் வந்து உழைப்பைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லி இவர்களுடைய தலித் ஆதரவை நிரூபிக்கச் சொல்லியிருக்க வேண்டும், திருமா வளவன். அப்போது தெரிந்திருக்கும் இந்தத் தமிழ் வாத்தியார்களின் தலித் பற்று. இசையைப் பற்றி எதுவுமே அறியாமல் தமிழ இசைப் போராட்டமும், தலித் கலாசாரம் பற்றி எதுவுமே அறியாமல் தமிழ்ப் பெயர் மாற்றத் திருவிழாவும் நடத்துவது தான் இவர்களின் வாடிக்கை. இந்தக் கும்பல் பெரியாரையே ஏமாற்றிய கும்பல். பெரியாரின் பிராம்மண எதிர்ப்பை மட்டும் கைக்கொண்டு, மற்றதெல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு, பிராம்மண எதிர்ப்பில் அரசியல் ஆதாயம் கண்டவர்கள். மொழி பற்றியும், பெண் விடுதலை பற்றியும், சமூகம் பற்றியும் பெரியார் சொன்ன அறிவுப்பூர்வமான கருத்துக்கள் யாவும் மண்டையிலும் ஏறாது, புரிந்ததை மேற்கொண்டு முன்னெடுத்துச் சென்று சமூக மாறுதல்களுக்கு ஏற்ப பொறுத்தி நவீனப்படுத்தவும் இயலாது.
பத்தாயிரம் பேர் தலித்துகள் திரண்டிருக்கிறார்கள். திருமாவளவன் என்ற தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்று கேட்டு. இவரிடமிருந்து வரும் ஆணை : பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் . சந்தோஷம் போய் வாருங்கள். தீர்ந்தது தலித்கள் பிரசினை. என்னய்யா இது ?
கராத்தே தியாகராஜன் என்பவர் மேயராக, ஆனதும், பேசியதை திண்ணை வெளியிட்டிருந்தது. தலித் சகோதரர்கள் செய்து கொண்டிருந்த வேலை அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டதாம். அதனை மீண்டும் தருவாராம். அவை எந்த வேலைகள் என்று எல்லோருக்கும் தெரியும். எந்த தலித் தலைவரும், தலித்துகளின் தோழர்களாக காட்டிக்கொள்பவர்களும், அப்பட்டமான இந்த சாதியம் தோய்ந்த இந்த பேச்சை கண்டிக்கவில்லை. திருமாவளவன் போராட்டம் நடத்தவில்லை. கிருஷ்ணசாமி இதனை கண்டிக்கவில்லை. எங்கள் வேலை இது அல்ல இனி எப்போதும் இவற்றைச் செய்யமாட்டோம் என்று சொல்லவில்லை. ஊர் நாறினாலும் பரவாயில்லை, நாங்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை, இந்த அபாயகரமான தொழில்களை நாங்கள் செய்யமாட்டோம் என்று அல்லவா உறுதி பூண வேண்டும் ?
இதுவல்லவா போராட்டம் நடத்த தேவையான விஷயம். நாங்கள் இந்த வேலை செய்யமுடியாது. இது எங்கள் வேலை அல்ல. இதில் கூட பணம் கொடுத்தாலும் செய்யமுடியாது என்றல்லவா இவர்கள் போராட்டம் நடத்தவேண்டும் ? என்ன செய்கிறார்கள் தலித் தலைவர்கள். மதமாற்றம் செய்ய உரிமை வேண்டும் என்று போராடுகிறார்கள். அதுவும் இல்லையென்றால் பெயர் மாற்றும் போராட்டம் நடத்துகிறார்கள்.
தலித்களின் பிரசினை பெயரா ? அருள்ராஜ் அருளரசனாகி, மீண்டும் தன் ஊருக்குப் போய் இதே முன் செய்து கொண்டிருந்த தொழிலைச் செய்து கொண்டிருப்பதால், இரட்டை கிளாஸ் ஒழிந்து விடுமா ? மரியாதை கிட்டுமா ? சாதியம் அழிந்து விடுமா ?
நிச்சயம் ஒழியாது.
ஆனால், இது ஒரு நாளில் நடக்கக்கூடிய வேலை அல்லதான். வேலையில்லாத்திண்டாட்டம் மிகப்பெருமளவில் இருப்பதால், பாரம்பரியத்தொழிலையும் விட்டுவிட்டு எங்கு போவது என்று இவர்களுக்கு இருக்கலாம். ஆனால், நீண்டகாலத்திட்டமாகவாவது இது பேசப்படவேண்டும். இதற்கு கல்வி அமைப்புடன் இணைந்த ஒரு திட்டம் வகுக்கப்படவேண்டும். பதினெட்டு சதவீத ஒதுக்கீடு எல்லா தலித் சாதிகளையும் சென்றடைய நிச்சயம் எவ்வளவோ வருடங்களாகும். நூறு சதவீதம் அரசு வேலை கொடுக்க முடிந்தால்தான் இந்த பதினெட்டு சதவீத ஒதுக்கீட்டின் முழு பயனும் கிட்டும். இப்படி நடக்க எந்த சாத்தியமும் இல்லை. ஆகவே தனியார் துறையில் ஒதுக்கீட்டுக்காக போராட வேண்டும். ஒதுக்கீட்டை மிக அடிமட்ட வேலைகளில் தலித்துகளை அமர்த்திவிட்டு கணக்குக் காண்பிக்கிற கயமை ஒழிய வேண்டும். எல்லா மட்டங்களிலும் 18 சதவீத ஒதுக்கீடு பெறப்படவேண்டும். தனியார் என்று நான் சொல்வது டாக்கடை, பெட்டிக்கடை அல்ல. இங்கே தனியார் துறை என்று நான் சொல்வது, பொதுச்சந்தையில் பங்குப்பத்திரங்கள் விற்கும் பொது நிறுவனங்களையே. குறைந்த பட்சம், இந்த நிறுவனங்கள் ஜாதி மதம் சார்பாக பாரபட்சம் வேலைக்கு ஆள் எடுக்கும்போது பாரபட்சம் காட்டக்கூடாது என்றும், அப்படி பாரபட்சம் காட்டும் நிறுவனங்கள் மீது வேலை மறுக்கப்பட்டவர்கள் வழக்குபோடும் வண்ணம் சட்டம் திருத்தப்படவேண்டும் எனப் போராட வேண்டும். தலித்துகள் அனைவரும் குறைந்த பட்சம் பள்ளி இறுதிவரை படிப்புப் பெறுவதற்காக பள்ளிக்கூடங்கள் ஏராளமானவை திறக்கப்படவேண்டும். தலித் தொழில்முனைவர்கள் உருவாக பல்கலைக்கழகங்கள் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி அவற்றின் சாதனைகளை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.
***
தலித்துகளின் உடனடிப்பிரச்னை எரியும் பிரச்னையாக கிளம்பிக்கொண்டிருக்கும்போது, பெயர் மாற்றப் போராட்டம், மதமாற்ற தடைச்சட்டம் எதிர்ப்புப்போராட்டம் என்று தம்முடைய சக்தியை இவர்கள் விரயம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். தலித்துகளை திசை திருப்பிக்கொண்டிருக்கிறார்கள். மத மாற்றத்தடைச்சட்டம் எதிர்த்துப்போராட வேண்டியதுதான். ஆனால், அது தலித்துகளின் பிரச்னை மட்டும்தான் என்று செய்யப்படும் அசிங்கமான பிரச்சாரத்துக்கு ஆட்பட்டு திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்கள் அட்டைக்கத்தியை சுழற்றிக்கொண்டிருக்கிறார்கள். சங்கராச்சாரியாரை எதிர்த்துப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கிராமத்தில் உடனடியாக எதிரணியில் இருக்கிற ஆட்களை விட்டுவிட்டு, சும்மாவேணும் காலாவதியாகிப்போன பிராம்மண எதிர்ப்பைச் சுமந்துகொண்டு திரிகிறார்கள். இவ்வாறு இவர்கள் திசை திருப்பப்படுவது இவர்களது எதிரிகளின் வேலைதான் என்றுதான் நான் கருதுகிறேன்.
தாமிரபரணிக்குப்பின்னால், முதுகுளத்துக்குப் பின்னால், கீழ வெண்மணிக்குப் பின்னால், திண்ணியத்துக்குப் பின்னால், இன்னமும் இவர்களால் உண்மையான எதிரிகள் யாரென உணரமுடியவில்லை என்றால், இதில் நஷ்டப்படப்போவது தலித் மக்கள்தான்.
***
இந்த தலித் தலைவர்கள் தலித் மக்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்களா ? அல்லது தலித்துகளின் எதிரிகளுக்கு விசுவாசமாக இருக்கிறார்களா ?
பெரியாரும் அம்பேத்காரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தோடு கூட சமரசம் செய்யத்தயாராக இருந்தார்கள். பின்னர் அம்பேத்காரும் இந்திய ஆளும் கட்சியான காங்கிரசுடன் சமரசம் செய்துகொண்டேதான் அங்கு சட்ட அமைச்சராக இருந்தார்.
தலித் மக்களின் முன்னேற்றத்துக்கும் அவர்களது சமூக அந்தஸ்து உயர்வதற்கும் எந்த வழிமுறையும் சரியானதுதான் என்பதுதான் அடிப்படையாக இருக்கமுடியும். அது பெரும்பாலும் ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்துகொண்டுதான் நடக்க முடியும். தெளிவாக பெரியார் எடுத்த நிலைப்பாட்டை வீரமணி தொடர்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாலும் அதற்கு தெளிவாக ஆதரவு தருவதை வெளிப்படையாகச் செய்கிறார். தலித்துகளின் முன்னேற்றமே முக்கியமாக இருந்தால், இவர்கள் அப்போது ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்துத்தானே தலித்துகள் தங்கள் முன்னேற்றத்தை முக்கியப்படுத்திக்கொள்ளவேண்டும் ? அதை விட்டு விட்டு, இன்னமும் வெள்ளைக்காரனே ஆட்சியில் இருக்கிறான் என்பது போல, 50 வருடங்களுக்கு முந்தைய அரசியல் நிலைப்பாட்டை இன்னமும் பிடித்துக்கொண்டிருந்தால் அது எப்படி சரியாகும் ? இன்று ஆட்சியில் யார் இருந்தாலும், அது காங்கிரஸாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் திமுகவாக இருந்தாலும், கம்யூனிஸ்டாக இருந்தாலும் முஸ்லீம் லீகாக இருந்தாலும் அதற்கு அரசியல் ரீதியான ஆதரவை தெளிவாகக் கொடுத்து, கொடுப்பதை பகிரங்கமாகச் சொல்லி, அதன் மூலம் பலன்களைப் பெற்றுதான் தலித்துகளின் முன்னேற்றம் அமைய முடியும். மத வெறியை விட ஜாதிவெறி தீவிரமாக இருக்கும் இந்த நாட்டில், ஆளும் ஜாதிக்கோ, வர்க்கத்துக்கோ, இனத்துக்கோ ஆதரவாக நின்று பொருளாதார முன்னேற்றத்தையும், அதன் மூலமும் சமூக அந்தஸ்தையும் பெறுவதுதான் நடைமுறையாகக் கூடிய செயல்திட்டம்.
***
manjulanavaneedhan@yahoo.com
***
- இணையம் என்றொரு வேடந்தாங்கல்!
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (10, 11 இறுதிப்பகுதிகள்)
- விடியலை நோக்கி
- கொள்ளையின்பம்
- புதுவருடக் கவிதைகள் இரண்டு
- வேர் மனது
- மனசுக்குள் வரலாமா ?
- சி மோகனின் பட்டியல்கள்
- ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.
- கரிசனமும் கடிதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 42 – எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘தபால்கார அப்துல் காதர் ‘)
- ஆங்கில விஞ்ஞான மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)
- டார்வீனியத்திற்கு அப்பாலான உயிரியல் ? (ப்ரிட்ஜாப் கேப்ராவின் நூல் குறித்து)
- அறிவியல் துளிகள்
- ஒரு புல்லாங்குழலின் புதுப்பயணம்…
- நினைவலைகள்
- பச்சை விளக்கு
- எல்லாம் ஆன இசை
- மெளனத்தை நேசித்தல்
- வருக புத்தாண்டே வருக
- கனல்மணக்கும் பூக்கள்.
- சொலவடையின் பொருளாழம்
- புத்தம் புது வருடம்..
- இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 30, 2002) விவசாய வருமானத்துக்கு வருமான வரி, உலக நீதிமன்றம்
- பெயர் மாற்றமல்ல, மதமாற்றமல்ல – தொழில் மாற்றமே தலித் விடுதலைக்கு வழி
- தீவிர பிரச்னையில் இருக்கும் இந்திய விவசாயம்
- கிரிஸ்தவ சர்ச்சும் அடிமை வியாபாரமும்
- ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.
- கிறிஸ்துமஸ் பரிசு
- பலூன்
- ஒழுக்கம்