பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

புதியமாதவி, மும்பை


பூத்தொடுக்கும் கரங்கள்
புறநானுறாய் போர்த்தொடுக்கும் என்று பெண்ணியப்போராளிகள் குறித்து’
நான் எப்போதும் பேசுவதுண்டு. பெண்கள் என்றாலே பூக்களும் மென்மையும்
என் எண்ணங்களிலும் என்னையும் அறியாமல் புதைந்துக் கிடப்பதை நான்
உணர்ந்துக் கொண்ட தருணங்களில் ஆண் மொழியும் ஆணின் ஆதிக்கங்கள்
உருவாக்கிய சொல்லும் அந்தச் சொல்லகராதிகள் புலப்படுத்தும் பொருளும்
நம்மை நம் சிந்தனையை ஆட்சி செய்துக்கொண்டு இருப்பது மட்டுமல்ல,
அந்தச் சொற்களின் மூலமாகவே நம் சிந்தனைகளும் கருக்கொள்கின்றன.
இந்தச் சொற்களை வைத்துக்கொண்டு அந்தச் சொற்களின் மேல் பவனி வரும்
ஆணாதிக்கச் சிந்தனைகளைச் சுமந்துக் கொண்டு பெண் , தன்னை, தன் உணர்வுகளை,
தனக்கே தனக்கான பிரச்சனைகளை முழுமையாகச் சொல்ல முனைவது என்பது
பெண் எதிர்க்கொள்ளும் முதல் பிரச்சனை.
இதை வெற்றிக்கொள்வதில் பெண் மொழி சந்தித்த சந்திக்கின்ற களங்கள்
மொழி எல்லைகளைத் தாண்டி நிற்கின்றன. பெண்ணுக்கு என்று நாடில்லை என்பது
மட்டுமல்ல பெண்ணுக்கு என்று மொழியும் இல்லை. பெண்மொழி மொழிகள் தாண்டி
ஒற்றைப்புள்ளியில் இணையும் மையம் இதுவாகவே இருக்கிறது.

இந்த மையத்தைச் சுற்றியே பெண் படைப்புலகம் உள்வட்டமாகவும் வெளிவட்டமாகவும்
நெருங்கியும் விலகியும் அல்லது விலக்கப்பட்டும். இந்த மையத்தை நோக்கிய பயணத்தில்
படைப்பின் மொழியும் அந்தப் படைப்பை வெளிச்சப்படுத்தும் ஊடகமும் வலிமைமிக்க
கருவிகளாக படைப்புக்கும் அப்பால் ஆட்சி செய்துக்கொண்டிருக்கின்றன.
மிக அதிகமாக விமர்சிக்கப்பட்ட புத்தகம் என்று இணையத்தில் வாசித்துவிட்டு
சுதா மூர்த்தியின் இரு புத்தகங்களை (the old man & his god, Wise and otherwise)
crossword மூலமாக எனக்குப் பரிசாக அனுப்பி இருந்தார். வாசித்துவிட்டீர்களா என்று
அதைப் பற்றிக் கேட்டபோது “எழுதியது சுதா மூர்த்தி அல்லவா..! அதுதான் வாசகர்களின்
மதிப்புரைகளுக்கும் புத்தகமானதற்கும் காரணமாக இருக்க வேண்டும்” என்று மனதில்
பட்டதைச் சொல்லியே ஆகவேண்டி இருந்தது. ஏனேனில் இனிமேலாவது அவர் இந்தமாதிரி
புத்தகங்களை டாலரைச் செலவு செய்து எனக்குப் பரிசாக அனுப்புவதை நிறுத்த வேண்டுமே
என்ற எண்ணத்தில்தான்.
இன்னொரு படைப்பாளர் நான் விரும்பி வாசிக்கும் மாதவிக்குட்டி. அவருடைய பெண்ணுலகம்
ரொம்பவே வித்தியாசமானது. பெண்ணியம் என்றாலே ஆண்களை வெறுக்கும் மேற்கத்திய
பெண்ணியத்திற்கு மாறானது. தனித்துவமானது. she choosed her men. ஆண்களின்றி
பெண்ணின் உலகமும் வறண்டுப் போய்விடும் என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்ட பெண்.
அவர் எதிர்த்ததெல்லாம் சமூக கட்டமைப்பை. மாதவிக்குட்டி மலையாளத்தில் மட்டுமே
எழுதி இருந்தால் இந்தளவு பரந்துப்பட்ட வாசகர் தளத்தை எட்டி இருப்பாரா என்பதையும்
எண்ணிப்பார்க்கத்தான் வேண்டும். இன்னொருவர் இன்றைக்குப் புகழ்ப்பெற்ற அருந்ததிராய்.
அவரும் ஏதேனும் ஒரு இந்திய மொழியில் எழுதிக்கொண்டிருந்தால் இந்திய அரசு அவர்
என்ன எழுதினாலும் கண்டுக்கொள்ளப்போவதில்லை. இன்னொருவர் பத்திகள் எழுதி
எழுதி இப்போதெல்லாம் நம்மை அதிகாமவே போரடிக்கின்ற ஷோபா டி.
இவர்களுக்கெல்லாம் கிடைத்த கிடைக்கின்ற ஊடக வெளிச்சங்கள் படைப்புகளையும்
தாண்டி சில பிரமாண்டங்களை சில பிரம்மைகளை உருவாக்கி இருப்பதை
அவர்களாலும் கூட மறுக்க முடியாது.

ஊடக வெளிச்சங்கள், சந்தைப்படுத்தல் இதெல்லாம் ஒரு படைப்பாளிக்குத் தேவைதானா?
விளம்பரங்களில் தொலைந்துப் போவது ஆபத்தானது. ஆனால் அதை விட ஆபத்தானதும்
வருத்தமானதும் விளம்பரங்கள் இல்லாமல் தொலைந்துப் போவதும் தான்.
எனக்கு என்னவோ புவனேஸ்வரியும் சிறுகதைகள் தொகுப்பை வாசித்தவுடன்
இந்த எண்ணங்கள் எல்லாம் அலைமோதியது. நாயர் சமூகத்தில் பிறந்து வளர்ந்து
மும்பை புறநகர்ப் பகுதியில் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் புவனா
ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நூல் ” a grandmother’s tale”.
புவனாவின் சந்திப்போ புத்தகத்தின் தலைப்போ என்னை எதுவும் செய்துவிடவில்லை.
ஒரு வாரமாக புத்தகம் என் அலமாரியிலும் கணினி மேசையிலும் டீபாயிலும்
மாறி மாறி .. ஒருநாள் அதிகாலையில் தேநீர் அருந்தும் போது புரட்டிய புத்தகத்தை
வாசித்து முடித்தப்பின் எனக்குள் ஏற்பட்ட எண்ணங்கள்..அப்போது தான் எனக்கும் புரியவந்தது
பாட்டியின் கதைகள் என்ற
தலைப்பு எனக்குள் ஏற்படுத்தி இருந்த சம்பிரதாயங்களே என்னை ஆட்சி செய்துக்கொண்டிருந்தது
என்கிற நிதர்சனமான உண்மையும்.
ஆம் புவனா எதற்காக இந்த தலைப்பைக் கொடுத்தீர்கள்?
என்று கேட்கலாம் தான். ஆனால் பாட்டியின் கதைகள் என்றாலே பாட்டி வடைச் சுட்டதும்
ஒற்றைக்கண் அரக்கன் கதையும் பணியாரத்துக்கு ஆசைப்பட்ட வாத்தியார் கதையுமாகத்தான்
இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்தவன் யார் ? பாட்டி கதைச் சொன்னால் இப்படி
எல்லாம் தான் சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?
நாளை நானும் பாட்டி ஆவேனே, அப்போது என் பேரன் பேத்திகளுக்கு என்ன மாதிரிக்
கதைகளைச் சொல்லப்போகிறேன்.. புவனா உங்கள் சிறுகதைகளைச் சொல்லப்போகிறேன்,
பாட்டியின் சிறுகதைகளின் உள்ளடக்கத்தை உங்கள் கதைகள் மாற்றி இருக்கின்றன.

புவனாவின் கதைகளில் புராண இதிகாசக் கதைகள் வருகிறது. அதைச் சொல்லாமல்
என்ன பாட்டிக் கதைகள் என்கிறீர்களா? அதுவும் சரிதான். ஆனால் ராமாயணத்தில்
திருப்புமுனையாக அமையும் சூர்ப்பனகை ஸ்ரீராமன் சந்திப்பு புவனாவின் கதையில்
பெண்ணியத்தின் உச்சக்கட்டமாக ஸ்ரீராமனை மட்டுமல்ல, சீதாப்பிராட்டியையும்
தனக்குள் இழுத்து தன்வசமாக்கி சூர்ப்பனகையின் பெண்ணியப் பிரபஞ்சமாக
விரிகிறது. சூர்ப்பனகையுடன் போரிட்ட களத்தில் தோற்றுப்போனவர்கள்
ஸ்ரீராமனும் இலட்சுமணனும் மட்டுமல்ல, சீதையை சிறைப்பிடித்தவன்
இராவணனும் அல்ல, சீதையே தன்னை தான் இழந்திருக்கும் சுதந்திரத்தை
உணரும் தருணத்தில் சூர்ப்பனகையுடன் கைகோத்து ஆணுலகம் காலம்
காலமாய் போட்டுவைத்திருக்கும் எல்லைக்கோட்டைத் தாண்டி நடக்கிறாள்.

புராண இதிகாச தொன்மங்களை அதிலிருக்கும் முரண்களை தன் படைப்புகளின்
உத்திகளாக்கி வெற்றி பெறுவதாக மட்டுமே இந்தக்கதையை வெறும் உத்திக்குள்
சுருக்கிவிட முடியாது. இரண்டு இனங்களின் பண்பாடுகள், கலாச்சாரங்கள்,
அந்தந்த இனம் சார்ந்த பெண்ணியக் கோட்பாடுகள் என்று கதை முழுக்க
ஒரு வரலாறு பின்புலமாக வாசகனின் நுண்ணியப் பார்வையில் பயணித்துக்
கொண்டே இருக்கிறது. ஒரு கதை முடியும் போது இன்னொரு பிறந்துவிடும்
என்பார்கள் விமர்சகர்கள். ஆனால் புவனாவின் கதைகள் ஒவ்வொன்றும்
முடியும் போது அந்தப் புள்ளி விரிகிறது. மையப்புள்ளியிலிருந்து ஆயிரமாயிரம்
ஒளிச்சுடர்கள் .. சில எரிக்கின்றன, சில இருட்டை வெளிச்சப்படுத்துகின்றன,
ஒற்றைச் சூரியனையும் தாண்டி பிரபஞ்சத்தில் எத்தனையோ சூரியன்கள்
இருக்கிறதாமே! அதை எல்லாம் சன்னல் கதவுகளைத் திறக்கும் வாசகனுக்கு
இழுத்துச் சென்று காட்டுகின்றன.
கதையும் கதை மாந்தர்களும் சமகாலத்தவர்கள், கதை மாந்தர்கள் சந்திக்கும்
அனைத்துவிதமான சவால்களும் சமகாலத்தில் உச்சத்தில் நின்று ஆடிக்கொண்டிருக்கும்
ஆட்டி வைத்துக்கொண்டிருக்கும் நிகழ்வுகளின் பின்னணியில்.
மரம் புவனாவின் கதைக்கான தளமல்ல,. அதுவே புவனாவின் கதைப் பாத்திரமாவது
பெண்ணின் பெருமைமிக்க தொன்மத்தின் எச்சம். ஆனால் இதன் இன்னொரு பக்கமோ
தாய்மையே பெண்ணின் முள்கீரிடமாக இருப்பதை தோலுரித்துக் காட்டும்.
அம்மா என்றால் அவளுக்கு என்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கக் கூடாது,
அதிலும் விதவையாகிவிட்ட வயதான அம்மா என்றால் கேட்கவே வேண்டாம்..
தன் குழந்தைகளை வளர்க்க அம்மாவாக இருந்தவள் அவர்கள் குழந்தைகளை
வளர்க்க ஆயாவாக நிரந்தரமான பேபி சிட்டிங் .. இதைத்தவிர கோவில் குளம்
போகலாம்.. வேறு எதையாவது அவள் செய்வதாக செய்ய விரும்புவதாக
ஏன் காட்டுவதில்லை? ஏன் எழுதுவதில்லை? கணவன் இறந்தவுடன் எல்லாமே
போய்விட்டதாகக் காட்டுவதன் மூலம் ஓகோ அப்படி இருப்பது தான் ஒரு நல்ல
பெண்ணுக்கு நல்ல மனைவிக்கு அடையாளம் என்று பிள்ளைகளையும்
நினைக்க வைத்தது யார்? புவனாவின் ‘வாடகை ” rent கதை முழுக்கவும்
இந்தக் கேள்விகளின் விசவரூபம். கதை இறுதியில் ஒரு பயமுறுத்தல்..
“போங்கடா பசங்களா.. உங்க அம்மா அவள் உடலின் கருப்பையை உங்களுக்காக
கொடுத்தவளாயிற்றே.. அவள் அதற்கு வாடகை கேட்டால்?!!!”

இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கதைகள் அனைத்தையும் உரையாடல்
பாணியில் நகர்த்திச் சென்றிருக்கிறார் புவனா. பெரும்பாலானக் கதைகள்
இந்த உரையாடல்களின் தளத்திலேயே நாடகமாக அரங்கேற முடியும்
என்கிற அளவுக்கு நாடகக்கூறுகள் கொண்டதாக இருப்பதையும் காணலாம்.
இதுவே புவனாவின்
பலமும் பலகீனமாகவும் இருக்கிறது. அழுத்தமான மன உணர்வுகளை
வெளிப்படுத்த வேண்டிய தளத்தில் சிலக் கதை மாந்தர்களின் முகம்
உரையாடல்களில் சிக்குண்டு இருண்டு போகிறது.

புவனாவின் கதைகள் பேசப்பட வேண்டியவை மட்டுமல்ல
பெண்ணிய தளத்தில் விவாதிக்கப்பட வேண்டியவையும் கூட.
பெண்ணியக் கருத்துகளை ஆரவாரமின்றி ஆனால் அழுத்தமாகச் சொல்ல
முடியும் என்று ஒவ்வொரு பக்கத்திலும் உணர்த்தும் வரிகள்,
பெண்ணின் முலை, யோனி என்று உடல் உறுப்புகளைப் பற்றியோ
ஆண்-பெண் உடலுறவு குறித்தோ கூட எதையும் வெளிப்படையாகத்
தொடாமல் பெண்ணின் வேதனைகளை வலிகளை உணர்வுகளை
எள்ளல் கலந்த தொனியில் தனக்கென ஒரு தனி நடையுடன் ஆங்கிலம்
வாசிக்கத் தெரிந்த வாசகர்கள் அனைவரும் புரிந்துக் கொள்ளும்
எளிய நடையில் கொடுத்திருப்பது புவனாவின் தனிச்சிறப்பு.

பாட்டியின் கதை .. இதுவரை சொல்லப்பட்ட நம்பப்பட்ட
பாட்டி கதைகளின் உள்ளடக்கத்தையே மாற்றி இருக்கிறது.
புவனா .. சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள்..
நம் பேரன் பேத்தியருக்கு நாம் சொல்ல வேண்டிய கதைகளையும்
அறிமுகப்படுத்த வேண்டிய கதை மாந்தர்களையும்.

—-
Book – a grandmother’s tale
Author: C V BHUVANESWARI
published by Olive Publications (pvt) ltd
Kozhikode.
18 short stories, 182 pages.
Price Rs: 200/ only
price : Rs

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை