பூச்சிகளின் மொழிகள்

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான்


கற்காலத்தில் மனிதர்கள் எப்படி பேசியிருப்பார்கள் ? கண்டிப்பாக மொழி என்பது, பிற்காலத்தில் வந்ததாகத்தான் இருக்க முடியும். ஆக, கற்கால மனிதர்கள், மற்ற விலங்குகளைப் போல, ஒருவிித ஒலி எழுப்பித்தான் தகவல் பரிமாற்றம் செய்திருப்பார்கள். சைகைதான் பிரதான மொழியாக இருந்திருக்கும். கற்காலம் என்ன கற்காலம், தற்காலத்திலும், இந்த தைவானில் சைகைதானே எங்களுக்கெல்லாம் பிரதான மொழியாக இருக்கிறது. நமக்கு மாண்டரின் (Mandarin) சுத்தமாக வராது. தைவானியர்களுக்கு ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது. அப்புறமென்ன, நடிப்புதான்!!

பூச்சிகளும் அப்படிதான்!! என்ன, நாமெல்லாம் ஒலியிலிருந்து மொழிக்குத் தாவிவிட்டோம். ஆனால் பூச்சிகள் ஒலியிலேயே நின்றுவிட்டன. இருந்தாலும், பூச்சிகளுக்கென ஒரு பிரத்யேக மொழி இருக்கிறது.

எறும்புகள் வரிசையாக போவதைப் பார்த்திருக்கிறீர்களா ? அவர்களுக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா, என்ன ? இங்குதான், அவர்களின் மொழியின் சூட்சுமம் வருகிறது. இந்த வரிசையில் முதலில் செல்லும் எறும்பு, ஒருவித வேதிப்பொருளை வைத்துக்கொண்டுி செல்லும். ஜிலேபி போடுவதைப் பார்த்திருக்கிறீர்களா ? அதாவது, மாவை ஒரு சிறிய துணி மூட்டையில் வைத்து, முறுக்கிப் பிழிவார்கள். அப்போது, துணி மூட்டையிலுள்ள சிறிய துளை மூலம் மாவு பிதுங்கிக்கொண்டுி வெளுயில் வரும். அது போல, எறும்புகளின் வரிசையில் முதலில் செல்லும் எறும்பு, தனது அடிவயிற்றை அழுத்திக்கொண்டே செல்லும். அப்போது, அதன் அடிவயிற்றின் நுனியிலிருந்து வெளுவரும் ஒருவிித தூதுவேதியைக்(Trail pheromone) கொண்டுி, ஒரு கோடு போட்டுக்கொண்டே செல்லும். இந்த கோட்டைப் பிடித்துக்கொண்டே மற்ற எல்லா எறும்புகளும் போகும். எப்போதாவது இப்படி போகும் எறும்பு வரிசையில், விரலை வைத்துத் தேய்த்துப் பாருங்கள். பின்னால் வரும் எறும்பு, க்ளு கிடைக்காமல், குழம்பிப்போய், அங்கும் இங்கும் அலையும்.

அது சரி, கலவிக்கு விழையும் பூச்சிகள், அதை எப்படி தன் துணைக்குச் சொல்லும் ? பெரும்பாலும், பெண்பூச்சிகள்தான் முதலில் சமிக்ஞை செய்யும். ஏனெனில் பெண்பூச்சிகள்தான் இனப்பெருக்கத்தில் அதீத ஆர்வம் காட்டும். அது சரி, சந்ததி வளர வேண்டுமல்லவா ? ஆண்களைப் பொறுத்தவரை, அது மற்றுமொரு புணர்ச்சி, அவ்வளவே!!! அதனால், ‘’நீ இல்லாவிட்டால் இன்னொருத்தி’’ என்ற மனப்பாங்குடன் வாளாவிருந்து விடும். ஆனால் பெண்பூச்சிகள் அப்படி இருக்க முடியாதே ? தன்னுள் இருக்கும் ஒவ்வொரு முட்டையையும், மற்றொரு பூச்சியாக மாற்ற வேண்டுமே! எனவே, வெட்கத்தைவிட்டு, ஆண்பூச்சியைக் கலவிக்கு அழைக்கும். இதற்காக, பெண்பூச்சி ஒருவிித பிரத்யேக பால் தூதுவேதியை (Sex pheromone) காற்றில் கலந்துவிடும். இந்த பால் தூதுவேதி, ஒவ்வொரு சிற்றினத்திற்கும் பிரத்யேகமானது (Species specific). இல்லாவிட்டால், இயற்கையில் மிகப்பெரிய குழப்பம் வந்துவிடுமல்லவா ? இந்த பால் தூதுவேதி Signal கிடைத்தவுடன், விருப்பமுள்ள ஆண்பூச்சி, ‘’எங்கே என் ஜோடி…. நான் போறேன் தேடி’’ என்று தேடிக்கொண்டு போகும். அப்புறமென்ன ஜாலிதான்!!!! பெரும்பாலும், முதலில் வருபவருக்குதான் வாய்ப்பு அமையும். அதிலும், அவர் கன்னித்தன்மை மாறாதவராக இருந்தால், பெண்பூச்சி ரொம்ப அதிர்ஷ்டசாலிதான்!!!

உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள அவரையில் ஜாலியாக உண்டு கொண்டு இருக்கும் அசுவினி பூச்சிக்கு, பொறி வண்டால் (Ladybird beetle) ஆபத்து எனும்போது, என்ன செய்வார் தொுயுமா ? சக அசுவினியை எச்சரிக்கை செய்ய ஒருவித பிரத்யேக எச்சரிக்கை தூதுவேதியை (Alarm pheromone) காற்றில் கலந்துவிடுவார். உடனே சக அசுவினிகள் எச்சரிக்கை அடைந்து பதுங்கிக்கொள்ளும். தேனீக்கள் (Honeybees), தேனீயைப் போன் ற மற்ற குளவிகள் (Bees), உண்மையான குளவிகள் (Wasps) எல்லாமே, தனக்கோ, தன்னுடைய கூட்டிற்கோ ஒரு ஆபத்து எனும்போது, உடனடியாக சிலிர்த்தெழுந்து, தாக்குதலைத் தொடங்கிவிிடும். அப்போது, எச்சரிக்கை தூதுவேதியைக் காற்றில் கலந்துவிடும். உடனே சக தோழர்களும் எச்சரிக்கை தூதுவேதி வரும் இடத்தை நோக்கி சென்று தாக்குதலைத் தொடங்குவர்.

மரப்பட்டைகளைத் தின்று வாழும் வண்டுகள் (bark beetles) உணவு இருக்கும் இடத்தை சக தோழர்களுக்குத் தொுவித்து ஒன்றிணைக்க, ஒன்றிணைக்கும் தூதுவேதியைக் (Aggregation pheromone) காற்றில் கலந்துவிடும். உடனே சக தோழர்களும் ஒன்றிணைக்கும் தூதுவேதி வரும் இடத்தை நோக்கி சென்று ஒன்று சேர்வர்.

அது சரி, பூச்சிகள் சுகவீனம் அடைந்தால் என்ன செய்யும் ?

அதைப்பற்றிி…. அடுத்த வாரம்!!

***

Srinivasan Ramasamy amrasca@yahoo.com

Visit the webpage

http://amrasca.tripod.com/sreemaal

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்