பூகோள வடிவத்தின் பூர்வீக நாடகம்!யுக யுகங்களாய்ப் பிணைந்து பிரிந்த கண்டங்கள் (4)

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


காலக் குமரி தைக்கும்

பூமகளின் ஆடை

கிழிந்து போன துகிலா ?

காலச் சின்னங்கள் கண்மறைவாய்

கடலடியே கிடப்பது,

ஞாலத்தின்

கோலத்தைப் பாறைகளில் எழுதி

கல்வெட்டு ஏடாக

கதை சொல்லிச் செல்வது,

காலச் சிற்பியின்

கைவேலையடா!

‘பூகோளத்தின் பூர்வீக வளர்ச்சி முறைகள் தெளிவாக அறிய முடியாமல் மங்கி யிருந்தாலும், நவீன விஞ்ஞானம் பூமி எவ்விதம் உருவானது, எத்தனை வயதுடையது, எப்படி உயிரினங்கள் உதித்தன போன்ற புலப்படாத சில புதிர்களை விடுவித்துள்ளது ‘.

ஜெரால்டு ஹாகின்ஸ்

‘ வட தென் அமெரிக்கக் கண்டங்கள் ஐரோப்பா, ஆஃப்பிரிக்கா ஆகிய கண்டங்களிலிருந்து பெரும் பூகம்பங்களாலும், கடல் வெள்ள அடிப்புகளால் கிழித்துக் கொண்டு பிரிந்து சென்றன! அதற்கு மெய்யான சான்று: அம்மூன்று கண்டங்களின் தளவரைப் படங்களை ஊன்றிக் கவனித்தால், அவை கிழிந்து சென்ற தடங்களை எளிதாகக் கண்டு கொள்ளலாம் ‘.

ஆப்ரஹாம் ஆர்டிலியஸ் [டச் பூதளப்பட வரைஞர் (1596)]

‘காகிதம் ஒன்றைக் கிழித்து மறுபடியும் கிழிந்தவற்றை ஒத்த வடிவுகளில் மீண்டும் இணைப்பது போன்றது. தென்னமெரிக்கா கண்டத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியும், ஆஃப்பிரிக்கா கண்டத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியும் அவ்வித ஒருங்கிணைப்புள்ள விளிம்புகளைக் கொண்டவை ‘.

ஆல்பிரெட் வெஜினர் [பூதள விஞ்ஞான மேதை (1915)]

‘டெதிஸ் கடல் (Tethys Ocean) என்பது 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே பெருங்கண்டங்களான கோந்துவானா, லெளரேசியா [Supercontinents: Gondwana, Lauresia] இரண்டுக்கும் இடையில் உண்டானது. யுரேசியா கண்டமும், ஆஃப்பிரிக்கா கண்டமும் 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிணையும் போது, சில பகுதி டெதிஸ் மத்தியதரைக் கடலாகவும், மீதிப் பகுதி இந்து மாக்கடலில் ஒரு பாகமாகவும் சிக்கிக் கொண்டன ‘.

அலெக்ஸாண்டர் துடாய்ட் [பூதளவாதி, தென்னாஃப்பிரிகா (1878-1948)]

‘750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ரொடினியாப் பெருங்கண்டம் (Rodinia Supercontinent) பூமையக் கோடுக்கு [Equator] அருகில் பிளக்க ஆரம்பித்தது. வட அமெரிக்கா பனிமயம் சூழ்ந்த தென்துருவம் நோக்கிச் சுற்றி வந்த போது, வடபாதி ரொடினியா கண்டத்தில் இருந்த அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியா, இந்தியா, அரேபியா பகுதிகள் கடிகார எதிர்ச்சுற்றில் (Anticlockwise) பெயர்ந்தன. அடுத்த பகுதி [Congo Craton] அவ்விரண்டுக்கும் இடையில் சிக்கியது. பிரிகாம்பியன் யுகத்தில் [Precambian Era (575 Million years Ago] அம்மூன்று பகுதிகளும் மோதிக் கொண்டு பன்னோசியா பெருங்கண்டமாக (Pannotia Supercontinent) உருவாகியது ‘.

கிரிஸ்டொபர் ஸ்காடிஸ் [அமெரிக்கன் பூதளவாதி (Paleomap Project: 2000)]

முன்னுரை: 1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவல் கெண்ட் [Immanuel Kant (1724-1804] வெளியிட்ட அண்டக் கோள்களின் கோட்பாடில் [Theory of Heavens] ஆரம்ப காலத்தில் எங்கும் குளிர்மயமாக இருந்து, வாயுக்களும் அண்டத் துணுக்குகளும் கலந்த முகில் மண்டலம் சுழன்று வந்தது என்று கூறுகிறார். 1796 இல் அவரது ஏககாலத்துப் பிரென்ச் கணித மேதையான பியர் சைமன் லாப்பிளாஸ் [Pierre Simon Laplace (1749-1827)] அக்கருத்தை மேம்படுத்தி அந்த வாயுமயமான முகிலிலிருந்து எவ்விதம் பரிதி உண்டானது என்று அனுமானிக்கிறார். அகில விசைகளால் (Cosmic Forces) திரண்ட வாயுக்கோளம் சுற்ற ஆரம்பித்து, தனது ஈர்ப்பு விசையால் கோளம் சுருங்கி, அதன் வாயுத் திணிவு அடர்த்தியானது என்று கூறுகிறார்.

உயிரனங்களின் பிறப்பு, வளர்ச்சி, தளர்ச்சி, இயக்கம், இறப்பு போலவே, உயிரற்ற பிண்ட கோளமான பூமி என்னும் அண்டமும் தோற்றம், வளர்ச்சி, தளர்ச்சி, நகர்ச்சி, முடிவு ஆகிய அகிலவியல் தோற்ற நியதியைப் பின்பற்றி வருகிறது. மனித உடலை இயக்கி வைக்கும் ஆத்மா போன்று, பூமி என்னும் அண்டத்தை பல மில்லியன் ஆண்டுகளாக உட்கருவில் உள்ள கனல்சக்தி, காந்தசக்தி கட்டுப்பாடு செய்து வருகின்றன. எரிமலை, பூகம்பம் போன்ற பூகோளத்தின் கொந்தளிப்புக்கு ஆதிமுதல் தோன்றிய கனல் குழம்பு உலையே காரணமாகிறது. பூகோளக் கண்டங்கள் சேர்ந்து இருந்ததற்கும், புலம்பெயர்ந்து விலகிச் சென்றதற்கும் உட்கரு கனல்குழம்பின் மேல்கீழ் சுற்றியக்கமே [Convection Flow of Magma] காரணம். ஒரு பில்லியன் ஆண்டுகளாக உலகப் பெருங் கண்டங்கள் பல முறை பிணைந்தும், பிரிந்தும் வந்ததாக, அமெரிக்கப் பூதள விஞ்ஞானி கிரிஸ்டொபர் ஸ்காடிஸ் [Christopher Scotese] கூறுகிறார்.

கடற்தளங்களில் நிகழும் கொந்தளிப்பு பிறழ்ச்சிகள்

4 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பூமியின் மலர்ச்சிக்கும், நகர்ச்சிக்கும் ஆற்றல் தரும் உட்கருவின் வெப்பசக்தியே, நாம் வாழும் கண்டங்களை உண்டாக்கி, கடற் குழிகளைத் தோண்டி, நீர் வெள்ளத்தால் நிரப்பி உள்ளது விந்தையிலும் விந்தையாக உள்ளது. கடற்தளங்களில் எரிமலைகளும், பூகம்பங்களும் எல்லை வரைந்து கூறுபடுத்திய 16 கடற்பாறைத் தட்டுகள் [Rocky Crust Slabs] உலகக் கண்டங்களைப் புலப்பெயர்ச்சி செய்து கனல்குழம்பில் ஏற்றிச் செல்லும் கட்டுமரங்களாக மிதந்து வருகின்றன. கடற்தட்டுகள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்லலாம்; அல்லது ஒன்றை ஒன்று நெருங்கிக் கொள்ளலாம்; அல்லது ஒன்றின் மீது ஒன்று குதிரை ஏறிக் கொள்ளலாம்; உட்கருவின் கனல் குழம்பு [Magma from Earth ‘s Interior] துளையிட்டு எரிமலையாய் எழுந்து, பாறை வடிவில் மலைத் தொடராகப் பூகோளத்தின் கடற்தளத்தில் சுமார் 40,000 மைல்கள் நீண்டு, கடல் மையப் புடைப்புகளாய் [Mid Oceanic Ridges] மலைப் பாம்புபோல் கிடக்கிறது.

மேலெழும் கனல் குழம்பு விலகும் தட்டுகளை மேற்கொண்டும் தள்ளுகிறது. சுருங்கும் பகுதிகளில் கீழ்த்திணிப்பு அரங்கங்களை [Subduction Zones] உண்டாக்கி நிலநடுக்கங்களைத் தூண்டிவிட்டு கடல் அலைகளில் சுனாமி அபாயங்களை ஏற்படுத்தும் வல்லமை பெற்றது. அப்போது உந்து விசைகள் எழுவதால்தான் உலகக் கண்டங்கள் ஆண்டுக்கு (0.5-6.0) அங்குல வீதம் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கின்றன. மேலும் அவ்விதக் கடற்தட்டுப் பிறழ்ச்சி இயக்கத்தில் [Plate Tectonics] ஏற்படும் விரிவிலும், திணிப்பிலும் புதிய கடற்பாறைகள் பிறப்பதும், பழைய பாறைகள் மறைவதும் மாறி மாறி நிகழ்ந்து வருகின்றன.

குறுகும் எல்லைப் பகுதிகளில் [Converging Boundaries] கண்டங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதும் போது [Continental Collisions], இமயமலைத் தொடர்கள், திபெத் பீடங்கள் போன்று பூமியில் புடைத்து எழுகின்றன. அத்தகைய மோதல்களில் பேரதிர்ச்சிகள் உண்டாகி ஈரான், சைனாவில் ஏற்பட்ட பூகம்பம் போல் பெருஞ் சேதங்களும் கோர மரணங்களும் விளைகின்றன. எங்கே விலகும் எல்லைப் பகுதிகள் [Diverging Boundaries] உண்டாகுகின்றனவோ அங்கே சுமாத்திராவின் சுந்தா பள்ளம் போல பிறழ்ச்சிக் குழிகள் [Rift Valleys like Sunda Trench] தோன்றிக் கடற்தட்டுகளை மேற்கொண்டும் பிரித்து விடுகின்றன. ஆஃப்பிரிக்காவின் அருகில் உள்ள செங்கடலில் அத்தகைய பெருங்குழி ஒன்று உண்டாகிப் பிள்ளைக்கடல் அரங்கு [Infant Ocean Basin] உருவாகி வருகிறது! அத்துடன் கடற்தட்டுகளைக் கடந்தும் பொதுத் தளங்களில் சங்கிலி போல் எரிமலைகள் உண்டாகிப் புதுத் தீவுகள் எழுகின்றன. ஹவாயி தீவுகள் அவ்விதமே உண்டாகிப் பெருகி வருகின்றன.

ரொடினியா, பன்னோசியா பூதக் கண்டங்களின் பிறப்பும், மறைவும்

650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தில் தோன்றிய பூதப்பெருங் கண்டம் ‘ரொடினியா ‘ (Rodinia) துண்டு துண்டுகளாய்ப் பிளந்து சிறு கண்டங்களாகப் பிரிந்து, பாதிப் பகுதிகள் கடலில் மூழ்கின. பல மில்லியன் ஆண்டுகளாக பிரிந்த துண்டுக் கண்டங்கள் மறுபடியும் பிணைந்து, பிறகு மீண்டும் தனியாய்ப் பிரிந்து பல்லாயிரம் மைல்கள் மெதுவாகப் புலப்பெயர்ச்சியாகி நாம் இப்போது வாழ்ந்து வரும் கலியுகக் கண்டங்களாக காட்சி தருகின்றன. அந்தப் புலப்பெயர்ச்சி சமீபத்தில்தான் புரட்சிகரமான பூதளத்தட்டுப் பிறழ்ச்சி நியதி [Theory of Plate Tectonics] மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதளவாதி, கிரிஸ்டொஃபர் ஸ்காடாஸ் [Christopher Scotese, Paleogeographer] சமீபத்தில் கடற்தட்டு பிறழ்ச்சிகளைப் பற்றி விளக்கினார். அவரும் வெஜினரைப் போலவே நிரூபிக்க பூர்வீகப் படிவங்கள், பாறைகள் [Ancient Fossil Beds & Rocks] போன்ற சான்றுகளை எடுத்துக் கொண்டார். ஆனால் வெஜினரைப் போலின்றி, ஸ்காடாஸ் கதிர்வீசும் ஏகமூல [Radioactive Isotopes] மாதிரிகளை எடுத்துக் கொண்டு, பாறைகளின் தோற்ற காலங்களைக் கணக்கிட்டு, பூர்வீகக் காந்தசக்தியை அளந்து, துருவ முனைகளுக்கு ஏற்ற அமைப்பில் பதிவு செய்தார். அம்முறையில் நவீனக் கணக்கீடுகளைப் பயன்படுத்தி அவர் ஒரு புதிய பெருங்கண்டத்திற்குச் சான்று காண முடிந்தது. 1.1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே பிணைந்திருந்த ‘ரொடினியா ‘ பூத கண்டத்தின் (Rodinia Supercontinent) அமைப்புதான் அது. ரொடினியா பெருங் கண்டத்தில் மைய ஆஃப்பிரிக்காப் பகுதியைத் தவிர மற்றைய கண்டங்கள் அனைத்தும் இணைந்து, வட அமெரிக்கா அதன் நடுவில் இருந்தது.

உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சிக் கருத்து உடன்பாடாகிப் பூதள விஞ்ஞானிகளால் ஒப்புக் கொள்ளப் பட்டது, இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஒரு மகத்தான சாதனை என்று பறைசாற்றப்படுகிறது. பூமி தோன்றியது முதல், கண்டங்கள் தொடர்ந்து கடற்தட்டுகள் மீது ஆமை வேகத்தில் சவாரி செய்து வருகின்றன என்னும் கோட்பாடு பிரபஞ்ச நியதியாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஒரு பில்லியன் ஆண்டுகளாகக் கண்டங்கள் பலமுறை பிணைந்தும், பிரிந்தும் இடம் மாறி மாறி வந்துள்ளன. பாலியோஸோவிக் யுகத்தின் [Paleozoic] இறுதியில் சில கண்டங்கள் இணைந்து, சமீபத்திய பாங்கியா பெருங்கண்டமாக [Pangea Supercontinent] இருந்தது. 1970 இல் பூர்வகாந்த உளவுகளின் [Paleomagnetic Studies] மூலம் நிரூபணமான கிரென்வில் மலைத்தொடர் [Grenville Mountain Belts] கண்டுபிடிக்கப்பட்டு பிரிகாம்பியன் பெருங்கண்டம் [Precambian Supercontinent] ஒன்று ஒரு பில்லியன் ஆண்டுக்கு முன்பு இருந்ததாக அனுமானிக்கப் பட்டது. பல பெயர்களில் அழைக்கப் பட்ட அக்கண்டம் முடிவில் ‘ரொடினியா ‘ என்னும் பெயர் பெற்றது.

750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ரொடினியாப் பெருங்கண்டம் (Rodinia Supercontinent) பூமையக் கோடுக்கு [Equator] அருகில் பிளக்க ஆரம்பித்தது. வட அமெரிக்கா பனிமயம் சூழ்ந்த தென்துருவம் நோக்கிச் சுற்றி வந்த போது, வடபாதி ரொடினியா கண்டத்தில் இருந்த அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியா, இந்தியா, அரேபியா பகுதிகள் கடிகார எதிர்ச்சுற்றில் (Anticlockwise) பெயர்ந்தன. அடுத்த பகுதி [Congo Craton] அவ்விரண்டுக்கும் இடையில் சிக்கியது. பிரிகாம்பியன் யுகத்தில் [Precambian Era (575 Million years Ago] அம்மூன்று பகுதிகளும் மோதிக் கொண்டு பன்னோசியா பெருங்கண்டமாக (Pannotia Supercontinent) உருவாகியது. பிரிகாம்பியன் யுகத்திற்கு இறுதிக் காலத்தில் பன்னோஸியா பெருங்கண்டம் பிளக்க ஆரம்பித்தது. அது துண்டுக் கண்டங்களாகி லெளரென்சியா [Laurentia], கோந்துவானா [Gondwana], பால்டிகா, சைபீரியா ஆகப் பிரிந்தன. அதாவது பென்னோசியா பெருங்கண்டமே பின்னால் பாங்கியா பெருங்கண்ட மானது.

இமயமலைத் தொடர்களின் பிறப்பும் வளர்ச்சியும்

150 மில்லியன் ஆண்டுகளாக ஆமை வேகத்தில் (2-3 cm per year) நகர்ந்த புலப்பெயர்ச்சியில் இந்திய உப கண்டத்தின் நீண்ட காலக் கடற்பயணம் முடிந்து, 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு யுரேசியப் பெருங் கண்டத்துடன் மோதியது! அப்போது இந்திய உபகண்டம் சற்று விரைவாக (15 cm per year) பூமையக் கோடைக் [Equator] கடந்து, வட திசையை நோக்கிச் சென்று டெதிஸ் கடலை (Tethys Ocean) நசுக்கி யுரேசியா கண்டத்துடன் பிணைத்துக் கொள்ளும் போது, உலக உச்ச சிகரமான மெளண்ட் எவரெஸ்ட் மலை மெதுவாக எழுந்தது. அந்த டெதிஸ் கடல் இப்போது முழுவதும் மறைந்து விட்டதாயினும், அதன் புழுதிப் பாறைகள் கடலடியில் படிந்துள்ளதும், அப்போது குமுறி எழுந்த எரிமலைகள் அவற்றை அரித்துள்ளதும் காலச் சின்னங்களாய்த் தம்மிருக்கையைக் காட்டி வருகின்றன. சிதறித் துண்டுகளாகப் போன பாறைச் செதுகுகள் (Rock Debris) திரண்டு மலைத்தொடராய் பூத வடிவில் எழுந்து மைய ஆசியாவை வரண்ட குளிர்ப் பிரதேச மாக்கியது!

நாம் வாழும் கண்டங்கள் பெரும்பாலும் கடற்தட்டுகள் மீதுள்ள குவார்ட்ஸ் பாறைச் செதுகுகள் [Quartz Rock Debris] கொண்டவை. எளிய திணிவுள்ள குவார்ட்ஸ் செங்கற்கள் பூதள உட்கருக் கனல் குழம்பில் மூழ்காமல் மேலே மிதக்கின்றன. குறைந்தது 80 மில்லியன் ஆண்டுகளாக இந்தியக் கடற்தட்டு, திபெத் உள்பட யுரேசியாவின் தென்பகுதி மீது தொடர்ந்து மோதி வருகிறது. வட இந்தியாவின் கனத்த கடலடித் தட்டு யுரேசியத் தட்டின் கீழ் தணிந்து, திணிக்கப்பட்டு [Subduction Process] உட்கருவின் கனல் குழம்பில் பாய்ந்து மூழ்கிறது. கடற்தட்டுத் திணிப்பால் உட்கருவில் அழுத்தம் மிகையாகித் திபெத் பகுதிகளில் எரிமலைகள் கிளம்புகின்றன. ஆயினும் கடந்த 25 மில்லியன் ஆண்டுகளாக விரைவாக நகரும் இந்திய உப கண்டம் இடைப்பட்ட கடற்பகுதியை அடைத்து, புழுதிப் பாறைகளால் நிரப்பி மூடியது. எளிய பாறைச் செதுகுகள் கீழே திணிக்கப் படாமல், மேலே தள்ளப்பட்டு இமய மலைத் தொடராய் உயர்ந்து கொண்டே போகிறது!

இமயமலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் ? அடுத்து வரப்போகும் 5-10 மில்லியன் ஆண்டுகளுக்கு இந்தியக் கடற்தட்டு அதே வேகத்தில் [வருடம் 15 செ.மீ. வீதம்] வடக்கு நோக்கி நகர்ந்து சிகரத்தின் உயரம் மிகையாகும். பத்து மில்லியன் ஆண்டுகளில், இந்தியத் தட்டு திபெத் அரங்கிற்குள் 100 மைல் [180 கி.மீ] தூரம் உழுது கொண்டு நுழையும். நேபாள தேசத்தின் அகலமே அதுதான் (100 மைல்)! அதாவது விஞ்ஞான முறைப்படி அனுமானித்தால், அந்தக் காலங்களில் நேபாள நாடே மறைந்து போகலாம்! ஆனால் உச்ச சிகரம் கொண்ட இமயமலைத் தொடர், நிச்சயம் அப்போதும் தலைதூக்கிக் கொண்டிருக்கும்!

பூகோளக் கண்டங்களின் பூர்வீகத் தோற்றமும் மறைவும்

துவக்க காலத்தில் எல்லாவற்றுக்கும் முன்னதாகத் தோன்றிய பூதக்கண்டம் ‘ரொடினியா ‘ 750 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு துண்டுகளாகப் பிரிய ஆரம்பித்து, அவற்றின் இடையே பிரம்மாண்டமான கடற்பகுதிகள் எழுந்தன. அப்போது ஒரு பகுதி வட துருவத்தை நோக்கியும், மறுபகுதி தென் துருவத்தை நோக்கியும் நகர்ந்தன. குன்றுகள் உயர்ந்தன. பூமத்திய ரேகைப் பகுதியில் உள்ள மலைச் சிகரங்களில் கூட பனிமூட்டம் பெருகிற்று. வடக்கில் சென்ற துண்டுக் கண்டங்கள் ஆஃப்பிரிக்கா கண்டம் மீது மோதின. 600 மில்லியன் ஆண்டுகளுக்குள் மீண்டும் துண்டுகள் இணைந்து பன்னோசியா [Pannotia] என்னும் பூதக்கண்டம் உருவானது.

550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே பாலியோஸோலிக் யுகத்தில் [Paleozolic Era] வட அமெரிக்காவின் மகத்தான செம்பாறைப் பள்ளத்தாக்கு [Grand Canyon] யூரோ அமெரிக்காவின் [Euroamerica] ஒரு பகுதியாக இருந்தது. 514 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பன்னோசியாவின் ஒரு பகுதி பிரிந்து, கோந்துவானப் பெருங்கண்டம் தென்துருவத்திலே விடப்பட்டது. வட அமெரிக்காவின் மேற்குக்கரை 90 டிகிரி சாய்ந்து, பூமையக் கோடு [Equator] மீது படிந்திருந்தது! அலைகள் உள்நுழைந்தும், வெளியேறியும் கடற்கரைகள் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கின. கடலில் வாழும் டிரைலோபைட்ஸ் பூர்வப் படிவங்கள் [Trilobites Fossils] தோன்ற ஏதுவானது. கடற்தள ஜந்துகளின் [Mollusks] பூர்வ படிவங்களும் காணப்பட்டன. பாலியோஸோலிக் யுகத்தின் இறுதியில் கண்டங்கள் மீண்டும் சேரத் துவங்கி பாங்கியா பெருங்கண்டம் உருவானது.

(தொடரும்)

தகவல்கள்

1. The Continental Mosaic -Reader ‘s Digest Atlas of the World [1987]

2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

3. Earth ‘s Restless Crust -ABC ‘s of Nature, Reader ‘s Digest [1984]

4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader ‘s Digest Publication [1972]

5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia

7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

8. Continental Frift, Geology & Oceanography. [Several Internet Articles]

9. Everyday Geography By: Kevin McKinney (1993)

10 Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia

11 Our Changing Earth By: Tusco Wilson Ph.D. Frontiers of Science, National Geographic Society [1982]

12 This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]

13 Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]

14 Fossils, Annals of Life Written in Rocks By: David Jeffery, National Geographic Society [Aug 1985]

15 The Earth ‘s Fractured Surface By: National Geographic Society [1995]

16 Physical Earth By: National Geographic Society [1998]

17 The Shaping of a Continent, North America ‘s Active West [1995]

18 National Geographic Picture Atlas of our World [1990]

19 Differences Between Continental & Oceanic Islands [www.abdn.ac.uk/zoohons/lecture1]

20 The Evolution of the Sumatran Earthquake Fault System By: Andy McCarthy. [July 9, 2002]

21 Isotopic Dating of Sumatran Fault System By: Imtihanah & MPhil

22 The Sumatran Fault System By Professor Kerry Sieh & Danny Natawidjaja [Nov 1999]

23 Kumari Kandam & Lemuria [http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)

24 Kumari Kandam By: Chitta Ranjan Myilvaganan, Sydney, Australia. [Jan 30, 2005]

25 Reader ‘s Digest Publication: The Living Earth Book of Deserts By: Susan Arritt [1993]

26 Physical Earth, By: National Geographic Society, Millennium in Maps [1998]

27 Birth of the Himalaya By: Roger Bilham. [NOVA PBS Home (Nov 2000)]

28 Rodinia Web Site: http://www.peripatus.gen.nz/paleontology/Rodinia.html (Jan 27, 2005)

29 Historical Geology Rodinia & Pannotia By: Erin McKenna (Spring 2005)

30 Rodinia & Pannotia By: Christopher Scotese (2000)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 9, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா